ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில், ஜனாதிபதி முறையான விசாரணைகளை மேற்கொள்வார் என நம்பிக்கை ! on Wednesday, October 23, 2024
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முறையான விசாரணைகளை மேற்கொள்வார் என்ற நம்பிக்கை தமக்குள்ளதாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் நேற்று முன்தினம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில வெளியிட்ட அறிக்கை தொடர்பில், நேற்று கொழும்பு பேராயர் இல்லத்தில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, பேராயர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இக்குண்டுத் தாக்குதல் தொடர்பில் நீதி நிலைநாட்டப்பட வேண்டியது அவசியம் என்பதைச் சுட்டிக்காட்டிய பேராயர், இதற்கு கட்சியோ நபர்களோ முக்கியமில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் நீதியை பெற்றுத்தருமாறு நாம் தற்போதைய ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம். அதனை ஏற்றுக் கொண்டுள்ள அவர், தாக்குதலின் உண்மைகளை மறைப்பதற்கு ஒரு போதும் இடமளிக்கப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
எமக்கு வழங்கிய வாக்குறுதியை ஜனாதிபதி நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை எமக்குள்ளது.
இவ்விடயத்தில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில நாடகமாடியுள்ளமை கவலையளிப்பதாகவும் பேராயர் தெரிவித்துள்ளார்.
தமக்கு மேலதிக பாதுகாப்பு அவசியம் இல்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ள பேராயர், எமது பாதுகாப்பு மேலே இருந்து எம்மைப் பார்த்துக் கொள்ளும் கடவுளால் மேற்கொள்ளப்படுகிறது.நாம் சாதாரண வாழ்க்கை வாழ்பவர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் விளக்கமளித்த பேராயரின் செயலாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ;
ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற நீதிபதி ஏ எம். ஜே டி அல்விஸ் அறிக்கையை நாம் முற்றாக நிராகரிக்கிறோம். படுகொலை விசாரணையில் சாட்சியங்களை மறைத்தமை மற்றும் அழித்தமை தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பிரசன்ன அல்விஸின் சகோதரியான ஏ.எம்.ஜே. டி அல்விஸ்,இக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.இதன் மூலம் உறவினர்களுக்கிடையே மோதல் உடனடியாக உருவாகும் என்பது தெளிவான உண்மை.
எனவே,இவ்வாறானவர் தலைமையிலான குழு சமர்ப்பித்த அறிக்கையை பக்கச்சார்பற்ற மற்றும் சுதந்திரமான அறிக்கை என, எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.இதனால், இந்த அறிக்கையை முழுமையாக நிராகரிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.