புலமைப்பரிசில் வினாத்தாள் விவகாரம்; மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு சி.ஐ.டி.அறிக்கை ! on Wednesday, October 23, 2024
சர்ச்சையை ஏற்படுத்திய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாத்தாள் தொடர்பான தமது பரிந்துரைகளை விரைவில் முன்வைக்கவுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
குறித்த வினாத்தாளின் சில வினாக்கள் கசிந்தமை தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மேற்கொண்ட விசாரணை அறிக்கை ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக ஆணையாளர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டார்.
குறித்த அறிக்கையை ஆராய்ந்ததன் பின்னர் தமது ஆணைக்குழுவின் பரிந்துரைகளை பரீட்சைகள் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கவுள்ளதாக அவர் கூறினார்.
இதனிடையே, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் கிடைக்கப் பெறும் வரை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் முன்னெடுக்கப்பட மாட்டாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாத்தாளின் சில வினாக்கள் கசிந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அண்மையில் விசாரணைகளை முன்னெடுத்திருந்தது.
இதனையடுத்து, குறித்த வினாத்தாளின் 3 வினாக்கள் கசிந்துள்ளதாகவும் அதற்கான புள்ளிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்திருந்தது.
இதனிடையே, சர்ச்சையை ஏற்படுத்திய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வௌியிடப்படுவதைத் தடுக்கும் இடைக்காலத் தடையுத்தரவை பிறப்பிக்குமாறு கோரி, உயர் நீதிமன்றத்தில் அண்மையில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.