யாழ்ப்பாணம் தவிர்ந்த நாட்டின் வேறு எந்தவொரு நீதிமன்றிலும் சாட்சியம் வழங்கத் தயார் என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மனித உரிமை செயற்பாட்டாளர்களான லலித் மற்றும் குகன் ஆகியோர் காணாமல் போன சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகளின் போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு விசாரணைகளின் ஓர் சாட்சியாளராக கோட்டாபய ராஜபக்ச குறிப்பிடப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் தவிர்ந்த நாட்டின் வேறு எந்தவொரு நீதிமன்றிலும் சாட்சியமளிக்கத் தயார் என கோட்டாபய, சட்டத்தரணி ஊடாக தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிர் அச்சுறுத்தல்கள் காரணமாக யாழ்ப்பாண நீதிமன்றிற்கு சென்று சாட்சியமளிக்க முடியாது என கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு எதிர்வரும் ஆண்டு மார்ச் மாதம் 18ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2011ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ம் திகதி லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் காணாமல் போனதாக அவர்களது உறவினர்கள் யாழ்ப்பாண நீதிமன்றில் ஆட்கொணர்வு மனுவொன்றை தாக்கல் செய்திருந்தனர்.
இந்த சம்பவம் இடம்பெற்ற காலத்தில் நாட்டின் பாதுகாப்புச் செயலாளராக கோட்டாபய ராஜபக்ச கடமையாற்றியிருந்தார்.