வாட்ஸ்ஆப் சேவையை இலவசமாக தரும் மெட்டா நிறுவனம் எப்படி வருவாய் ஈட்டுகிறது தெரியுமா?

வாட்ஸ்ஆப், மெட்டா

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், ஜோ கிளெய்ன்மன்
  • பதவி, தொழில்நுட்ப ஆசிரியர்

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் வாட்ஸ்ஆப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட மெசேஜ்களை அனுப்பியுள்ளேன்.

அவை ஒன்றும் உற்சாகமானவை கிடையாது. எனது குடும்பத்துடன் பேசினேன், வேலை தொடர்பாக எனது சகப் பணியாளர்களிடம் காலந்துரையாடினேன், சில செய்திகள் மற்றும் வேடிக்கையான விஷயங்களைப் பற்றி எனது நண்பர்களுடன் பேசினேன்.

ஆனால், இவ்வாறான சலிப்பூட்டும் குறுஞ்செய்திகளைக் கூட வாட்ஸ்ஆப் தானாகவே என்க்ரிப்ஷன் எனும் முறையில் பாதுகாக்கிறது. இதற்காக உலகம் முழுதும் உள்ள அதன் டேட்டா மையங்களில் இருக்கும் அதி ஆற்றல் வாய்ந்த கணினி சர்வர்கள் பயன்படுத்தப்படுகின்றன. இது மலிவாகச் செய்யக்கூடிய ஒரு செயல்முறை இல்லை.

இதைப் பயன்படுத்த நானோ, அல்லது நேற்று என்னுடன் பேசிய யாருமே இதற்கு எந்தக் கட்டணமும் செலுத்தவில்லை. இந்தச் செயலியை உலகம் முழுவதும் 300 கோடி மக்கள் பயன்படுத்துகிறார்கள்.

அப்படியென்றால், வாட்ஸ்ஆப் போன்ற செயலிகள் எவ்வாறு பணம் சம்பாதிக்கின்றன?

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

வணிகக் கணக்குகளின் மூலம் வருமானம்

வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளச் செயலிகளின் பின்னால் அவற்றின் பெரிய தாய் நிறுவனமான ‘மெட்டா’ உள்ளதால் இது சாத்தியம் ஆகிறது.

என்னுடையது போன்ற தனிநபர் வாட்ஸ்ஆப் கணக்குகள் இலவசமானவை. ஏனெனில், என்னைப்போன்ற தனி நபர்களுடன் பேச விரும்பும் வணிகக் கணக்குகளிடமிருந்து வாட்ஸ்ஆப் கட்டணம் வசூலிக்கிறது.

கடந்த ஆண்டு முதல், இந்த நிறுவனங்கள் இலவசமாக வாட்ஸ்ஆப் சேனல்களைத் துவங்கி, அவற்றுக்கு ‘சப்ஸ்கிரைப் செய்பவர்களுக்குச்’ செய்திகளை அனுப்பும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆனால், தனிப்பட்ட வாடிக்கையாளர்களுடன் உரையாடவும், பரிவர்த்தனைகள் செய்யவும் இந்த நிறுவனங்கள் கட்டணம் செலுத்தவேண்டும்.

பிரிட்டன் போன்ற நாடுகளில் இதன் பயன்பாடு குறைவாக இருந்தாலும், இந்தியாவின் பெங்களூரு போன்ற நகரங்களில் பேருந்துப் பயணச்சீட்டு, பேருந்தில் விருப்பப்பட்ட இருக்கை என எல்லாவற்றையுமே வாட்ஸ்ஆப் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

வாட்ஸ்ஆப், மெட்டா

பட மூலாதாரம், meta

படக்குறிப்பு, மெட்டாவின் வணிக மெசேஜிங் துறையின் துணைத்தலைவர் நிகிலா ஸ்ரீநிவாசன்

‘அனைத்தும் ஒரே Chat-இல்’

“ஒரு வாட்ஸ்ஆப் சாட்டின் (chat) மூலம் ஒரு வணிக நிறுவனமும் அதன் வாடிக்கையாளரும் அவர்களுக்குத் தேவையான வேலையை முடித்துக்கொள்ள வேண்டும் என்பதே எங்களது நோக்கம்,” என்கிறார் மெட்டாவின் வணிக மெசேஜிங் துறையின் துணைத்தலைவர் நிகிலா ஸ்ரீநிவாசன்.

“அதாவது, உங்களுக்கு ஒரு டிக்கெட் பதிவு செய்யவோ, பணத்தைத் திரும்பப் பெறும் செயல்முறையைத் துவங்கவோ, பணம் செலுத்தவோ, ஒரு சாட்-ஐ விட்டு வெளியே செல்லாமலேயே செய்து முடிக்க வேண்டும். அதன் பிறகு அவரவர் வாழ்க்கையின் மற்ற உரையாடல்களை கவனித்துக் கொள்ளலாம்,” என்கிறார்.

“ஃபேஸ்புக் அல்லது இன்ஸ்டாகிராமில் உள்ள ஆன்லைன் விளம்பரத்தை கிளிக் செய்பவர்களுக்கு நேரடியாக தனிப்பட்ட வாட்ஸ்ஆப் மெசேஜ்களை அனுப்ப தொழில் நிறுவனங்கள் கட்டணம் செலுத்த வேண்டும். இதில் மட்டுமே பல கோடி டாலர்களை இந்தச் செயலி ஈட்டுகிறது,” என்கிறார் நிகிலா ஸ்ரீநிவாசன்.

வாட்ஸ்ஆப், மெட்டா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வாட்ஸ்ஆப்பில் தனிப்பட்ட வாடிக்கையாளர்களுடன் உரையாடவும், பரிவர்த்தனைகள் செய்யவும் நிறுவனங்கள் கட்டணம் செலுத்தவேண்டும்

சிக்னல், ஸ்னாப்சாட் ஆகியவை என்ன செய்கின்றன?

மற்ற மெசேஜிங் செயலிகள் வேறு வழிகளில் செயல்படுகின்றன.

உதாரணமாக ‘சிக்னல்’ செயலியின் பாதுகாப்பு வழிமுறைகள் பெரிதும் அறியப்பட்டவை. இவை தொழில்முறையில் நேர்த்தியானவை. ஆனால் இது லாப நோக்கமற்ற அமைப்பு. இந்த நிறுவனம் முதலீட்டாளர்களிடம் இருந்து எந்தக் நிதியும் பெறுவதில்லை என்று கூறுகிறது.(ஆனால், டெலிகிராம் செயலி முதலீட்டார்களிடம் இருந்து வரும் நிதியை எதிர்பார்த்து இருக்கிறது.)

மாறாக, சிக்னல் செயலி நன்கொடைகளின் மூலம் செயல்படுகிறது. இதில், 2018-ஆம் ஆண்டு வாட்ஸ்ஆப்-இன் துணை நிறுவனர்களில் ஒருவரான ரையன் ஆக்டன் வழங்கிய 50 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 420 கோடி ரூபாய்) நிதியும் அடங்கும்.

“எங்களது நோக்கமே, சிக்னலின் மீது அக்கறை உள்ள சிறிய நன்கொடையாளர்கள் கொடுக்கும் பங்களிப்புகளைக் கொண்டு முழுமையாகச் செயல்படுவதே,” என்று கடந்த ஆண்டு தன்னுடைய வலைப்பூவில் பதிவிட்டார் சிக்னல் நிறுவனத்தின் தலைவர் மெரிடித் விட்டேக்கர்.

கேம் விளையாடும் இளைஞர்களால் அதிகம் பயன்படுத்தப்படும் மெசெஜிங் செயலி ‘டிஸ்கார்ட்’.

இதை இலவசமாகவும் பயன்படுத்தலாம். ஆனால் இதன் சிறப்பம்சங்களைப் பெற, சில ‘கேம்’களை விளையாடப் பணம் செலுத்த வேண்டியுள்ளது. மேலும் இது ‘நைட்ரோ’ (Nitro) என்னும் சந்தா வசதியையும் வழங்குகிறது. இதில் மாதம் 9.99 டாலர்களைச் செலுத்தி (இந்திய மதிப்பில் சுமார் 840 ரூபாய்) உயர் தர வீடியோக்களையும், நமக்கேற்ற எமோஜிக்களையும் பெறலாம்.

‘ஸ்னாப்சாட்’ செயலியின் நிறுவனமான ‘ஸ்னாப்’, இந்த வழிமுறைகளில் பலவற்றை ஒருசேரப் பயன்படுத்துகிறது. இதில் விளம்பரங்கள் உள்ளன, இதற்கு 1.1 கோடி சந்தாதாரர்கள் உள்ளனர் (ஆகஸ்ட் 2024-இன் படி). மேலும் இது மெய்நிகர் கண்ணாடிகளை (augmented reality glasses) ஸ்னாப்சாட் ஸ்பேக்டகல்ஸ் என்ற பெயரில் விற்பனை செய்கிறது.

இதனிடம் மேலும் ஒரு தந்திரம் உள்ளது. ஃபோர்ப்ஸ் வலைதளத்தின் அறிக்கைபடி 2016-2023 ஆண்டுகளில், இந்த நிறுவனம் கிட்டதட்ட 300 மில்லியன் டாலர்களை (இந்திய மதிப்பில் சுமார் 2,500 கோடி ரூபாய்) வட்டியின் மூலம் மட்டுமே சம்பாதித்துள்ளது. ஆனால், இதன் முக்கிய வருமானம் விளம்பரங்கள் மூலம்தான் வருகிறது. அதாவது ஆண்டுக்கு 4 பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 33,600 கோடி ரூபாய்) ஈட்டுகிறது.

வாட்ஸ்ஆப், மெட்டா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளச் செயலிகளின் பின்னால் அவற்றின் பெரிய தாய் நிறுவனமான ‘மெட்டா’ (Meta) உள்ளது

விளம்பரங்கள் எப்படி அனுப்பப் படுகின்றன?

பிரிட்டனைச் சேர்ந்த நிறுவனமான எலிமெண்ட் அதனுடைய பாதுகாக்கப்பட்டத் தகவல் பரிமாற்றச் செயலியைப் பயன்படுத்த அரசாங்கங்களிடமும், பெரிய நிறுவனங்களிடமும் பணம் வசூலிக்கிறது.

அதன் வாடிக்கையாளர்கள் இந்தத் தொழில்நுட்பத்தைத் தங்கள் தனிப்பட்ட சர்வர்களில் பயன்படுத்துகிறார்கள். 10 ஆண்டுகள் முன் துவங்கப்பட இந்த நிறுவனம், தற்பொழுது ‘பல கோடிகளில் வருமானம் ஈட்டுகிறது’ என்றும் ‘லாபம் அடையும் நிலையை நெருங்குகிறது’ என்றும் அதன் இணை நிறுவனர் மேத்தியூ ஹாஜ்சன் என்னிடம் கூறினார்.

விளம்பரங்கள் மூலமே ஒரு வெற்றிகரமான தகவல் பரிமாற்று செயலியை இயக்க முடியும் என்று அவர் நம்புகிறார்.

“பெரும்பாலான மெசேஜிங் செயலிகளில் ஒருவர் என்ன செய்கிறார், யாரிடம் பேசுகிறார் என்று ஆராய்ந்த பிறகே அவர்களுக்கு ஏற்றார் போல விளம்பரங்கள் அனுப்பப்படுகின்றன,” என்கிறார் அவர்.

‘என்கிரிப்ஷன்’ பாதுகாப்பு, அடையாளம் வெளியிடப்படாமல் இருப்பது ஆகியவை இருந்தாலும், இந்தச் செயலிகள் பயனர்களைப் பற்றித் தெரிந்துகொள்ள அவர்களது மெசேஜ்களின் உள்ளடக்கத்தைப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்களது தரவுகளை (டேட்டா) வைத்தே விளம்பரங்களை விற்கலாம்.

“வழக்கம் போல்தான். நீங்கள் ஒரு சேவையைப் பெறக் கட்டணம் செலுத்தவில்லை என்றால், அங்கு நீங்கள்தான் விற்கப்படுகிறீர்கள்,” என்கிறார் ஹாட்சன்.