‘நீங்கள் எங்கள் அரசர் அல்ல’ – பிரிட்டன் அரசர் சார்ல்ஸை நோக்கி கூச்சலிட்ட ஆஸ்திரேலிய செனட்டர்

லிடியா தோர்ப், பிரிட்டன் அரசர் சார்ல்ஸ்,  ஆஸ்திரேலியா,

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, செனட்டர் லிடியா தோர்ப்
  • எழுதியவர், கேட்டி வாட்சன் மற்றும் டேனிலா ரெல்ஃப்
  • பதவி, பிபிசிக்காக

பிரிட்டன் அரசர் சார்ல்ஸ் ஆஸ்திரேலியாவுக்கு அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அந்த பயணத்தின் இரண்டாம் நாளில் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்திய பின்னர் செனட்டர் ஒருவர் அரசரை கேள்வி எழுப்பிய சம்பவம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரசர் சார்ல்ஸின் உரையை தொடர்ந்து, ஆஸ்திரேலிய பெண் செனட்டரான லிடியா தோர்ப் என்பவர் `நீங்கள் எங்கள் அரசர் அல்ல’ என்று கூச்சலிட்டார்.

செனட்டர் லிடியா தோர்ப் ஒரு பழங்குடியின ஆஸ்திரேலியப் பெண், தலைநகர் கான்பெராவில் நடந்த விழாவில் சுமார் ஒரு நிமிடத்திற்கு அரசர் சார்லஸுக்கு எதிராக கூச்சலிட்டார். அதன் பின்னர் அவரை காவலர்கள் அழைத்து சென்றனர்.

“எங்கள் மக்களுக்கு எதிராக இனப்படுகொலை செய்யப்பட்டது” என்று குறிப்பிட்டு கூச்சலிட்ட லிடியா, “இது உங்கள் நிலம் அல்ல, நீங்கள் எங்களின் அரசர் அல்ல” என்றார்.

லிடியா தோர்ப், பிரிட்டன் அரசர் சார்ல்ஸ்,  ஆஸ்திரேலியா,

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ஆனால், நிகழ்வின் தொடக்கத்தில் மூத்த பழங்குடியினப் பெண் ஆன்டி வயலட் ஷெரிடன், அரசர் சார்ல்ஸ் மற்றும் ராணி கமிலாவை வரவேற்றார். அவர் லிடியாவின் எதிர்ப்பு “அவமரியாதை செயல். லிடியா எனக்காக பேசவில்லை” என்று கூறினார்.

லிடியா தோர்ப், பிரிட்டன் அரசர் சார்ல்ஸ்,  ஆஸ்திரேலியா,

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, 2022 செப்டம்பரில் பதவியேற்ற பிறகு, அரசர் சார்ல்ஸ் முதல்முறையாக ஆஸ்திரேலியா வந்துள்ளார்

திங்கட்கிழமை ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் மன்னர் சார்லஸ் உரை நிகழ்த்தினார். அவர் வெள்ளை நிற சட்டை, நீல நிற டை மற்றும் சூட் அணிந்திருந்தார். அவரது கோட்டில் பல பதக்கங்கள் இருந்தன. கழுத்தில் ஒரு தங்க நெக்லஸ் அணிந்திருந்தார். அவருக்கு பின்னால் ஒரு ஆஸ்திரேலியக் கொடி வைக்கப்பட்டிருந்தது.

2022 ஆம் ஆண்டு செப்டம்பரில் பதவியேற்ற பிறகு, அரசர் சார்ல்ஸ் முதல்முறையாக ஆஸ்திரேலியா வந்துள்ளார்.

ஆஸ்திரேலியா ஒரு காமன்வெல்த் நாடு, இதில் பிரிட்டன் அரசர் தலைவராக இருக்கிறார். ஆனால் சமீபக் காலமாக அந்த பதவியில் இருந்து பிரிட்டன் அரசரை நீக்குவது குறித்து விவாதம் நடந்து வருகிறது.

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா பிராந்தியத்தைச் சேர்ந்த சுயேச்சையான செனட்டர் லிடியா தோர்ப், ஆஸ்திரேலிய அரசாங்கத்திற்கும் அதன் பழங்குடி மக்களுக்கும் இடையே ஒரு ஒப்பந்தத்திற்கு அழைப்பு விடுத்தவர்களில் முக்கியமான நபர்.

நியூசிலாந்து மற்றும் பிற முன்னாள் பிரிட்டன் காலனிகளைப் போலல்லாமல், ஆஸ்திரேலியாவில் பழங்குடி மக்களுடன் எந்த ஒப்பந்தமும் செய்யப்படவில்லை. பல பழங்குடியினர் மற்றும் டோரஸ் ஜலசந்தி தீவு மக்கள் தங்கள் இறையாண்மையையோ அல்லது நிலங்களையோ பிரிட்டன் மகுடத்திற்கு ஒருபோதும் விட்டுக்கொடுக்கவில்லை என்று கூறுகின்றனர்.

அரசருக்கு எதிராக கூச்சலிட்டு தனது எதிர்ப்பை பதிவு செய்த பின்னர் பிபிசியிடம் பேசிய லிடியா தோர்ப் “அரசருக்கு நான் தெளிவான செய்தியை அனுப்ப விரும்புகிறேன்” என்று கூறினார்.

“இறையாண்மையாக இருக்க, நீங்கள் இந்த நிலத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும். அவர் இந்த நாட்டைச் சேர்ந்தவர் அல்ல,” என்று அவர் மேலும் கூறினார்.

பழங்குடி மக்களுடன் சமாதான உடன்படிக்கை பற்றி விவாதிக்க நாடாளுமன்றத்திற்கு அரசர் அறிவுறுத்த வேண்டும் என்றும் லிடியா விளக்கினார்.

“எங்களால் அந்த செயல்முறையை வழிநடத்த முடியும், அதைச் செய்ய முடியும், ஒரு சிறந்த நாடாக இருக்க முடியும் . ஆனால் ஒருபோதும் காலனித்துவத்திற்கு தலைவணங்க முடியாது. அரசர் குறிப்பிட்ட அவரின் மூதாதையர்கள், இனப் படுகொலைக்கு காரணமானவர்கள்” என்று அவர் கூறினார்.

நாடாளுமன்றத்தில் அரசர் சார்ல்ஸ் உரையாற்றிய நிகழ்வில் பங்கேற்ற லிடியா, பாரம்பரிய தோல் ஆடையை அணிந்திருந்தார், மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத் ஒரு “காலனித்துவவாதி” என்று விமர்சித்தார். அவர் 2022 ஆம் ஆண்டு செனட்டராக பதவியேற்ற போது சொன்ன அரசியலமைப்பு உறுதிமொழியை மீண்டும் கூறினார்.

மற்றவர்களை ஒப்பிடுகையில் பழங்குடியின மக்களுக்கு வழங்கப்படும் மோசமான சுகாதார சேவைகள், வசதியற்ற வாழ்க்கை, தரமற்ற கல்வி சேவை ஆகிய ஏற்றத்தாழ்வுகளை எவ்வாறு நிவர்த்தி செய்வது என்பது பற்றி நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வருகின்றன.

லிடியா தோர்ப், பிரிட்டன் அரசர் சார்ல்ஸ்,  ஆஸ்திரேலியா,

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, நாடாளுமன்றத்தில் அரசர் சார்ல்ஸ் உரையாற்றிய நிகழ்வில் பங்கேற்ற லிடியா, பாரம்பரிய தோல் ஆடையை அணிந்திருந்தார்

அரசர் சார்ல்ஸுக்கு சில இடங்களில் எதிர்ப்பு இருந்த போதிலும், அரச குடும்ப உறுப்பினர்களைப் பார்த்து பலர் மகிழ்ச்சியடைந்தனர். மக்கள் நாடாளுமன்ற மாளிகைக்கு வெளியே காலை முழுவதும் வெயிலை பொருட்படுத்தாமல் வரிசையாக நின்று கொண்டு ஆஸ்திரேலிய கொடிகளை அசைத்தனர்.

“போன முறை ஹாரி மற்றும் மேகன் கடைசியாக இங்கு வந்திருந்தபோது அவர்களை நான் பார்த்தேன். மிகவும் உற்சாகமாக உணர்ந்தேன்” என்று 20 வயதான ஜேமி கார்பாஸ் கூறினார்.

“திங்களன்று அரச தம்பதியினர் நகரத்திற்கு வருவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. என் கருத்துப்படி, அரசக் குடும்பத்தினர் ஆஸ்திரேலிய கலாசாரத்தின் ஒரு பகுதி. அவர்கள் எங்கள் வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கின்றனர்” என்றார் அவர்.

இதற்கிடையில், ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் அமெரிக்க-ஆஸ்திரேலிய மாணவர் சிஜே.ஆடம்ஸ் கூறுகையில் “அவர் பிரிட்டன் சாம்ராஜ்யத்தின் தலைவர், அவர் கான்பெராவில் இருக்கும் போது உங்களுக்கு கிடைக்கும் எந்த வாய்ப்பையும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.” என்றார்.

நாடாளுமன்ற கட்டடத்திற்கு முன்பாக உள்ள பூங்காவில் குறைந்த எண்ணிக்கையிலான எதிர்ப்பாளர்கள் ஒன்றுகூடியிருந்தனர்.

லிடியா தோர்ப், பிரிட்டன் அரசர் சார்ல்ஸ்,  ஆஸ்திரேலியா,

படக்குறிப்பு, ஆஸ்திரேலியக் கொடிகளை ஏந்தியபடி நிற்கும் பெண்கள்

கான்பெராவிற்கு அரசர் வருகை தருகையில், ஆஸ்திரேலியாவின் பழங்குடி மக்களுடனான வரலாற்றை ஞாபகப்படுத்தும், தாக்கத்தை ஏற்படுத்தும் நிகழ்வுகள் நடக்கும் என்பது எதிர்பார்க்கப்பட்டது தான். ஆனால் லிடியாவின் செயல், அரச தம்பதியர் எதிர்ப்புகளை நேரடியாக எதிர்கொள்ளும் சூழலை ஏற்ப்படுத்தியது.

அரச தம்பதியர் திங்கட்கிழமை கான்பெராவிற்கு வந்து சேர்ந்தனர், அவர்களை அரசியல் தலைவர்கள், பள்ளி குழந்தைகள் மற்றும் உள்ளூர் பிரதிநிதியான நுன்வாலின் மூத்த பெண் செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் வரவேற்றனர்.

கான்பெராவில் உள்ள நாடாளுமன்ற மாளிகையின் கிரேட் ஹாலில் அவர்களுக்கு டிஜெரிடூ இசைக்கருவி முழங்க பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டது.

அரசர் பழங்குடி சமூகங்களைப் பற்றியும் அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டதைப் பற்றியும் பேசினார். “தனது சொந்த அனுபவம் இந்த பாரம்பரிய அறிவால் வடிவமைக்கப்பட்டு பலப்படுத்தப்பட்டது” என்று கூறினார்.

“ஆஸ்திரேலியாவிற்கு எனது பல பயணங்களின் போது, நல்லிணக்கத்தை நோக்கிய நாட்டின் நீண்ட, கடினமான பயணத்தை வழிநடத்திய தைரியத்தையும் நம்பிக்கையையும் நான் கண்டேன்” என்று அவர் பாராட்டினார்.

இவ்வாறு பேசி முடித்துவிட்டு அவர் உட்கார்ந்ததும், லிடியாவின் எதிர்ப்புக் குரல் கூட்டத்தில் ஒலித்தது.

லிடியா இவ்வாறு செய்ததை சில பழங்குடி நிர்வாகிகள் விரும்பவில்லை. பழங்குடியின மூத்த பெண் ஷெரிடன், லிடியாவின் செயலை விமர்சித்தார்.

“இது அவமரியாதையான செயல். இதுபோன்ற விஷயங்களைச் சொல்வதற்கான இடம் இது இல்லை. லிடியா எனக்காக பேசவில்லை,” என்று ஷெரிடன் கூறினார்.

லிடியா தோர்ப், பிரிட்டன் அரசர் சார்ல்ஸ்,  ஆஸ்திரேலியா,

பட மூலாதாரம், PA Media

படக்குறிப்பு, அரச தம்பதியர் கான்பெராவில் உள்ள அரசு இல்லத்தின் மைதானத்தில் மரங்களை நட்டனர்

“அரசருக்கு உடல்நிலை சரியில்லை. அவருக்கு கீமோதெரபி செய்யப்பட்டு வருகிறது. அவர் இதுபோன்ற சூழலை சந்தித்திருக்கக் கூடாது. அவர் இங்கு வந்ததை நிச்சயமாகப் பாராட்டுகிறேன். அவர் ஆஸ்திரேலியா வருவது கடைசியாகக் கூட இருக்கலாம். அவரை பார்க்கதான் மக்கள் கூடியுள்ளனர்” என்றார்.

பக்கிங்ஹாம் அரண்மனை லிடியா தோர்ப்பின் எதிர்ப்பு குறித்து அதிகாரப்பூர்வமாக கருத்து எதையும் தெரிவிக்கவில்லை. மாறாக கான்பெராவில் அரச தம்பதியைப் பார்க்க வந்த கூட்டத்தின் மீது கவனம் செலுத்தியது.

அரண்மனை வட்டாரத்தின் கூற்றுப்படி, அரச தம்பதியர் தங்களுக்கு ஆதரவாக வந்த பல ஆயிரக்கணக்கான மக்களால் ஈர்க்கப்பட்டனர். நெகிழ்ச்சியடைந்தனர்.

காமன்வெல்த் நாடான ஆஸ்திரேலியாவில் பிரிட்டன் மன்னர் அரச தலைவராக இருக்கிறார்.

பல ஆண்டுகளாக, ஆஸ்திரேலியா முடியாட்சியைக் கைவிட்டு குடியரசாக வேண்டும் என்று விவாதம் ஆங்காங்கே எழுந்து வருகிறது. 1999 ஆம் ஆண்டு, இந்தக் கேள்வி பொது வாக்கெடுப்பில் வைக்கப்பட்டது. பலரும் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதால் தோல்வியடைந்தது.

கருத்துக் கணிப்புகளின் படி, ஆஸ்திரேலியாவில் சுதந்திரம் மற்றும் குடியரசாக மாறுவதற்கான இயக்கத்திற்கு ஆதரவு அதிகரித்துள்ளது.

செனட்டர் லிடியா எதிர்ப்பு தெரிவிப்பதற்கு முன்னதாக அரசருடன் கைகுலுக்கிய நாட்டின் தற்போதைய பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் நீண்ட காலமாக குடியரசுக் கட்சியில் இருந்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரிட்டன் அரசராக பதவியேற்ற பிறகு சார்ல்ஸின் முதல் ஆஸ்திரேலிய பயணம் இது. புற்றுநோய்க்கான சிகிச்சையில் இருப்பதால், அவரது உடல்நிலை காரணமாக கடந்த அரச வருகைகளை விட இந்த சுற்றுப்பயணம் குறுகியதாக இருந்தது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு