6 ஆண்டுகளில் ரூ.21 சரிவு: டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு சரிவதால் சாமானியருக்கு என்ன பாதிப்பு?
- எழுதியவர், நாகேந்திர சாய் குந்தவரம்
- பதவி, பிபிசிக்காக வணிக ஆய்வாளர்
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. சரியாக 6 ஆண்டுகளுக்கு முன்பு டாலருக்கு ரூ.63 ஆக இருந்த மாற்று விகிதம் 2024 ஆம் ஆண்டு அக்டோபர் 15 ஆம் தேதி அன்று, ரூ.84.07 என்னும் மதிப்பில் உள்ளது. இது ரூபாயின் மதிப்பில் இதுவரை கண்டிராத சரிவு.
ரூபாய் மதிப்பின் சரிவு, சாமானியர்கள் மத்தியில் அதிக முக்கியத்துவம் பெறவில்லை என்ற போதிலும், நிச்சயமாக அனைத்து இந்தியர்களின் வாழ்விலும் இது தாக்கத்தை ஏற்படுத்தும்.
அதைப் புரிந்து கொள்ள ஒரு உதாரணம்..
ரவி, சுரேஷ் இருவரும் சகோதரர்கள். ரவி இந்தியாவில் இருக்கிறார். சுரேஷ் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்கா சென்று அங்கு குடியேறினார். சுரேஷ் டாலரில் சம்பாதிப்பதால், ரவியை விட அவருக்கு சிறந்த பேங்க் பேலன்ஸ் இருக்கிறது. ரவியும் இந்தியாவில் பணத்தைச் சேமித்து நலமுடன் இருக்கிறார்.
அமெரிக்காவில் தங்கியுள்ள அண்ணன் சுரேஷ், சம்பளத்தில் பெரிய மாற்றம் இல்லாத போதிலும், இந்தியாவில் சொத்துகளை வாங்கி வருகிறார். முதலில் அவர் தங்கள் தாய்வழி தாத்தாவின் பெயரில் ஒரு வீட்டையும், பின்னர் தங்கள் உறவினர்களின் பெயரில் பண்ணைகளையும் வாங்குகிறார். ரியல் எஸ்டேட்டிலும் கவனம் செலுத்துகிறார்.
ஏன் இப்படி நடக்கிறது என்று ரவிக்கு வெகு காலமாகப் புரியவில்லை. ஆனால், சமீபத்தில்தான் ரவி உண்மையை உணர்கிறார். ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைவது தன் மூத்த சகோதரருக்கு உகந்த சூழலை உருவாக்குகிறது. அதனால் ரவியை விட சுரேஷ் பலமடங்கு சொத்துகளுக்கு அதிபதியாக மாறுகிறார். ஆனால் ரவி அப்படியே இருக்கிறார்.
ரூபாய் வீழ்ச்சிக்கு காரணம் என்ன?
பத்து வருடங்களுக்கு முன் வெளிநாடுவாழ் இந்தியர் ஒருவர் இந்தியாவுக்கு ஒரு லட்சம் டாலர் அனுப்பினார் என்று வைத்துக் கொள்வோம். அப்போதைய மதிப்புப்படி நமது பண மதிப்பில் ரூ.65 லட்சம் வந்திருக்கும். ஆனால் இன்றைய மதிப்பின்படி அதே ஒரு லட்சம் டாலருக்கு ரூ.84 லட்சம் ஆகிறது. சுமார் ரூ.21 லட்சம் அதிகம்.
இன்னொரு உதாரணத்தைப் பார்ப்போம். ஸ்ரீராம் வல்லபாய் சுரேந்திரா அமெரிக்காவில் உள்ள பிரபல பல்கலைக் கழகம் ஒன்றிற்கு எம்.எஸ்., படிப்பதற்காக இரண்டு வருடங்களுக்கு முன் சென்றார். படிப்பிற்கான கட்டணம் முதல் ஆண்டு 50 ஆயிரம் டாலர் என்பதால், ஸ்ரீராம் ரூ. 37.50 லட்சம் கட்டினார்.
இப்போது அவருக்கு அதே கட்டணமான 50 ஆயிரம் டாலர்களை செலுத்த இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.42 லட்சம் செலுத்த வேண்டியிருக்கும். அதாவது இரண்டு ஆண்டுகளில் ரூ.4.50 லட்சம் அதிகமாகச் செலவிட வேண்டியுள்ளது.
இப்படியாக பல உதாரணங்களை சொல்ல முடியும். இதற்கெல்லாம் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி ஒரு முக்கிய காரணம்.
ரூபாய் மதிப்பு வீழ்ச்சி நம் அனைவரின் வாழ்க்கையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது. பெட்ரோல்-டீசல் விலை, மருந்துகள், தங்கம், பிளாஸ்டிக் பொருட்கள், ரசாயனங்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் என இவையனைத்தும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியுடன் நேரடித் தொடர்பு கொண்டவை.
ஆனால், சுமார் 7 சதவீத ஜிடிபி வளர்ச்சி விகிதத்தை எட்டி, பல நாடுகளை பின்னுக்கு தள்ளி இந்தியா முன்னேறி வருகிறது என்றாலும், ரூபாயின் மதிப்பு ஏன் சரிகிறது என்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
பணமாற்று விகிதத்தின் மதிப்பில் ஏற்ற இறக்கங்கள் இருப்பது இயல்பானது. ஆனால் அது தொடர்ந்து இறங்குமுகத்தில் இருந்தால், அதற்கான காரணங்களை நாம் ஆராய வேண்டும். வளரும் நாடுகளில் இது வழக்கமாக நடப்பது தான். ஆனால் பண மதிப்பு குறையும் விகிதத்தைக் கவனிக்கவும்.
ஏற்றுமதி, இறக்குமதி, ரிசர்வ் வங்கியின் கொள்கைகள், பண வீக்கம், அந்நியச் செலாவணி கையிருப்பு, நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை, கொள்கை முடிவுகள், பங்குச் சந்தையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள், வட்டி விகிதங்கள், உலக நாடுகளின் நிச்சயமற்ற தன்மை என இவைதான் பொதுவாக நாட்டின் பண மதிப்பில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களுக்கு முக்கியக் காரணம்.
கச்சா எண்ணெய்
இந்தியாவைப் பொருத்தவரையில், இங்கு பயன்படுத்தப்படும் மொத்த எண்ணெயில் 88 சதவீதம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. அதாவது, இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் எண்ணெய், நம் தேவையில் 12 சதவீதத்தை மட்டுமே பூர்த்தி செய்கிறது.
சர்வதேச அளவில் நிச்சயமற்ற நிலை ஏற்பட்டால் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும். உதாரணமாக, யுக்ரேன்-ரஷ்யா போர், சமீபத்திய லெபனான்-இஸ்ரேல் மோதல், ஒபெக் பிளஸ் (OPEC plus) நாடுகள் ஒன்றிணைந்து உற்பத்தியைக் குறைத்து செயற்கையாக தேவையை அதிகரிக்கும் போக்கு ஆகியவை கச்சா எண்ணெய் விலையை பாதிக்கும்.
இருப்பினும், இம்முறை கச்சா எண்ணெய் விலை முன்பை விட குறைந்துள்ளது. இந்த ஆண்டு ஏப்ரலில் 89 டாலராக இருந்த ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை, அக்டோபரில் 76 டாலரை நெருங்கியது.
இது உண்மையில் நமக்கு சாதகமான செய்தி என்றாலும், மற்ற காரணங்களால் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்ததால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறையவில்லை.
`வர்த்தகப் பற்றாக்குறை’ (trade deficit)
உள்நாட்டில் இருந்து எத்தனை பொருட்கள் மற்றும் சேவைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறோம்?
மற்ற நாடுகளில் இருந்து எந்த அளவுக்கு இறக்குமதி செய்கிறோம்?
வர்த்தக பற்றாக்குறை என்பது இந்த இரண்டிற்கும் உள்ள வித்தியாசம்.
அதாவது ரூ.100 ஏற்றுமதி செய்து ரூ.110 இறக்குமதி செய்தால் ரூ.10 வர்த்தகப் பற்றாக்குறை உள்ளது என்று அர்த்தம்.
தற்போது இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை செப்டம்பர் மாதத்தில் 20.78 பில்லியன் டாலர்களாக உள்ளது.
இதுவே ஆகஸ்ட் மாதத்தில் 29.6 பில்லியன் டாலராக இருந்தது. ஒப்பீட்டளவில் வர்த்தகப் பற்றாக்குறை வெகுவாகக் குறைந்துள்ளது. இருப்பினும், இது கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று.
டாலர் மதிப்பு உயர்வு
ரூபாய் வீழ்ச்சிக்கு அமெரிக்க டாலர் மதிப்பும் ஒரு காரணம். அமெரிக்க டாலர் உலக வர்த்தகத்தில் ‘பொது நாணயமாகக்’ (reserve currency of the world) கருதப்படுகிறது. அதாவது, ஏதேனும் நிச்சயமற்ற சூழல் ஏற்படும் போது, எந்த நாட்டில் அதிக அமெரிக்க நாணயம் மற்றும் தங்கம் இருப்பு உள்ளதோ, அவர்களின் பண மதிப்பு அதிக மதிப்புடையது என்று கருதலாம்.
பொதுவாக, அமெரிக்க நாணயம் அதிக அளவில் ஏற்ற இறக்கங்களை சந்திக்காது. அமெரிக்கா ஒரு நிலையான பொருளாதாரம் கொண்ட நாடு என்பதால், ஒவ்வொரு நாடும் அமெரிக்க டாலரை தனது கருவூலத்தில் வைத்திருக்கிறது.
இருப்பினும், சமீபத்திய ஆண்டுகளில் அமெரிக்கா அதன் வட்டி விகிதங்களை பூஜ்ஜியத்திற்கு அருகில் இருந்து 5 சதவீதமாக உயர்த்தியுள்ளது. அதிகரித்து வரும் பணவீக்கத்தை சமாளிக்கும் நடவடிக்கையாக அமெரிக்கா வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது.
மேலே உள்ள தரவை பார்க்கும் போது, அமெரிக்காவில் 2021 இல் பூஜ்ஜியத்திற்கு அருகில் இருந்த வட்டி விகிதம் செப்டம்பர் 2024 இல் 5.3 சதவீதமாக அதிகரித்துள்ளது. அமெரிக்க மத்திய வங்கி சமீபத்தில் வட்டி விகிதங்களைக் குறைத்துள்ளது.
அமெரிக்காவில் கடந்த பதினாறு ஆண்டுகளில் வட்டி விகிதம் இந்த அளவில் இருந்ததில்லை. கடன் பத்திரங்களுக்கான வட்டி விகிதமும் கணிசமான அளவு உயர்ந்துள்ளதால், சமீப காலமாக டாலர் மதிப்பு வலுவாக உள்ளது. இது மறைமுகமாக ரூபாயின் மதிப்பை மேலும் வலுவிழக்கச் செய்கிறது.
பங்குச் சந்தைகள்
பங்குச் சந்தைகள் சாதனை உச்சத்தில் இருந்து சுமார் 5 சதவீத சரிவைச் சந்தித்துள்ளன.
சீனாவின் விரிவாக்கப்பட்ட பொருளாதார ஊக்கத் திட்டங்கள் காரணமாக இந்திய பங்குச் சந்தைகளில் பங்குகள் அதிகமாக விற்கப்படுகின்றன. (sell-off)
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் (FPIs) சீன சந்தைகளை நோக்கி நகர்கின்றனர். சீன பங்குச் சந்தைகள் இந்திய பங்குச் சந்தைகளை விட லாபகரமானதாக இருக்கும் என்று அவர்கள் கருதுகின்றனர்.
அக்டோபர் 20 வரையிலான தேசிய பத்திர சேமிப்பு நிறுவன (National Securities Depository Limited) தரவுகளின்படி, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சுமார் ரூ.77,701 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளனர்.
கோவிட் காலத்தில் அதாவது மார்ச் 2020 இல், அவர்கள் விற்ற பங்குகளின் மொத்த மதிப்பு ரூ.61,972 கோடிகள் மட்டுமே. இதை வைத்து பார்க்கும் போது, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய சந்தைகளில் இருந்து வெளியேறி, லாபகரமான சந்தையாக கருதி சீனாவை நோக்கி செல்கின்றனர்.
‘இந்திய பங்குகளை விற்கவும், சீனாவில் வாங்கவும்’ ( ‘Sell India, Buy China’) என்ற கோஷம் இப்போது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மத்தியில் உலகளாவிய அளவில் அதிகமாகக் கேட்கப்பட்டாலும், சீனாவின் புள்ளிவிவரங்களில் இது பிரதிபலிக்கவில்லை.
இந்தியாவின் உள்நாட்டு முதலீட்டாளர்கள் சுமார் ரூ.2 லட்சம் கோடி பணத்துடன் தயாராக உள்ளனர்.
சந்தையில் அப்படி நிச்சயமற்ற நிலை ஏற்பட்டால், நிதியை முதலீடு செய்ய அவர்கள் தயாராக இருக்கிறார்கள். இருப்பினும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வெளியேறுவது ரூபாயை பலவீனப்படுத்தும்.
ரூபாய் மதிப்பு சரிந்தால் யாருக்கு லாபம்?
இந்தியாவில் வெளிநாடுகளுக்கு பொருட்கள் மற்றும் சேவைகளை ஏற்றுமதி செய்பவர்கள் அனைவரும் பயனடைவார்கள். குறிப்பாக ஐடி நிறுவனங்கள், மருந்து நிறுவனங்கள் மற்றும் உற்பத்தி நிறுவனங்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இவர்கள் எல்லாம் டாலரில் பணம் சம்பாதிப்பதால் ரூபாய் மதிப்பு குறையும் அளவுக்கு அவர்களுக்கு லாபம் வரும். ஏற்றுமதியாளர்களுடன், வெளிநாடுகளில் உள்ள வெளிநாட்டுவாழ் இந்தியர்களும் பயனடைவார்கள். குறிப்பாக அமெரிக்காவில் இருப்பவர்கள் இந்தியாவுக்கு பணம் அனுப்பும்போது பெரிதும் பயனடைவார்கள்.
ரூபாய் மதிப்பு சரிந்தால், இந்தியாவில் நிதிப் புழக்கம் மீண்டும் அதிகரிக்கலாம். சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். ஏற்றுமதியாளர்கள் அதிக போட்டி விலையில் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பொருட்கள் மற்றும் சேவைகளை விற்பதன் மூலம் தங்கள் சந்தையை விரிவுபடுத்த வாய்ப்பாக அமையும்.
சாமானியருக்கு என்ன பாதிப்பு?
ரூபாயின் வீழ்ச்சி ஆரம்பமாகி விட்டது. அதனால் தெரிந்தோ தெரியாமலோ நாட்டில் உள்ள சாமானியர்கள் மத்தியில் அதன் தாக்கம் நிச்சயமாக இருக்கும்.
உதாரணத்திற்கு, கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு டாலரில் பணம் செலுத்த வேண்டும், அதனால் ரூபாய் மதிப்பு எவ்வளவு வீழ்ச்சியடைகிறதோ, அவ்வளவு பணம் செலுத்த வேண்டும். இது நிறுவனங்களுக்கு நஷ்டத்தை அதிகரிப்பதோடு, கட்டணத்தை உயர்த்துவதற்கு அரசுக்கு அழுத்தம் கொடுக்கிறது. நஷ்டத்தை அரசு தாங்க முடியாவிட்டால் பெட்ரோல், டீசல், கேஸ் விலை கிடுகிடுவென உயரும். அதன் பின்னர் காய்கறிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரிக்கும்.
அதனால் சாமானியர் மீதுதான் முதல் அடி விழும். இது மறைமுகமாக வட்டி விகிதத்தையும் உயர்த்துகிறது. கடன் வாங்கியவர்கள் அனைவரும் இந்த வட்டி விகித சுமையை சுமக்க வேண்டும்.
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் போன், கேமரா மற்றும் இதர பொருட்களின் விலை உயரும். வெளியூர் பயணங்களுக்கு அதிக செலவாகும். வெளிநாட்டில் படிப்பது சுமையாக மாறும். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ரசாயனங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் விலை உயரும்.
மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் இதை சரி செய்ய முடியுமா?
உலகமயமாக்கப்பட்ட பொருளாதாரத்தை கொண்ட நாடுகளில் தேவை-சப்ளையே முதன்மையானது. அந்தந்த நாடுகளின் மத்திய வங்கிகளின் பங்கு ஓரளவுக்கு குறைவாகவே இருக்கும். அதாவது சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் ஏற்படும் மாற்றத்தின் தாக்கம் அந்த நாடுகளில் இருக்கவே செய்யும்.
பொருளாதார ரீதியில் இந்தியா கடந்த காலத்துடன் ஒப்பிடும் போது தற்போது ஓரளவு நல்ல நிலையில் இருந்தாலும், ரூபாயின் மதிப்பு எழுச்சி அடையும் அளவுக்கு உயரவில்லை.
குறிப்பாக அந்நிய செலாவணி கையிருப்பு இந்தியாவில் 700 பில்லியன் டாலர் வரை உள்ளது. ஏதேனும் நிச்சயமற்ற நிலை ஏற்பட்டால், இந்த நிதி இந்தியாவிற்கு பேருதவியாக இருக்கும்.
சந்தையில் டாலருக்கான தேவை வலுப்பெற்று ரூபாய் மதிப்பு சிக்கலில் இருக்கும் போது மட்டுமே நிலைமை மோசமடையாமல் இருக்க ரிசர்வ் வங்கி டாலரை விற்பனை செய்யும். ஆனால் இது அந்நிய செலாவணி இருப்புகளை விரைவாக கரைந்துப்போகச் செய்யும்.
முதலீடுகள், பொருட்கள் மற்றும் சேவைகளின் ஏற்றுமதி மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களின் தொடர்ச்சி போன்றவற்றின் மூலம் முடிந்தவரை வெளிநாட்டு நிதியை இந்தியாவுக்குள் கொண்டு வர வேண்டும். கச்சா எண்ணெய் இறக்குமதியை சார்ந்திருப்பதை இந்தியா குறைக்க வேண்டும்.
அதனால்தான் பணவீக்கம் மற்றும் நாணய ஏற்ற இறக்கங்களை மனதில் வைத்து முதலீடுகளை திட்டமிட வேண்டும்.
நீங்கள் கடந்த காலத்தைப் போல பெரிதாக கவனம் செலுத்தாத முதலீட்டாளராக இருந்தால், இந்த சூழலில் போராட வேண்டியிருக்கும். சுறுசுறுப்பான ஸ்மார்ட் முதலீட்டாளராக இருக்கும் போது நிதி ரீதியாக வெற்றிகரமான வாழ்க்கையை நடத்த முடியும்.
(குறிப்பு : இவை அனைத்தும் தகவலுக்காக மட்டுமே. எந்தவொரு நிதி முடிவுகளும் நிதி நிபுணர்களுடன் கலந்தாலோசித்து மட்டுமே எடுக்கப்பட வேண்டும்.)
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு