ரஷ்யா, யுக்ரேன், கருத்துச் சுதந்திரம்

  • எழுதியவர், நேதன் வில்லியம்ஸ்
  • பதவி, பிபிசி செய்திகள்

ஒரு ரஷ்யச் சிறுமி, ரஷ்யா யுக்ரேன் மீது போர் தொடுப்பதை எதிர்க்கும், சமாதானச் செய்தியுடனான ஒரு ஓவியத்தை வரைந்தார். அதற்கு அவரது தந்தை சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்தச் சம்பவம் உலகளாவிய செய்தியானது. இப்போது அந்தத் தந்தை, ‘தண்டனை காலனி’ என்றழைக்கப்படும் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார்.

அலெக்ஸி மொஸ்கலேவ் என்ற அந்த நபரின் மகள் மாஷா வரைந்த அந்த ஓவியத்தில் ‘போர் வேண்டாம்’ என்றும் ‘யுக்ரேன் புகழ் ஓங்குக’ என்றும் எழுதப்பட்டிருந்தது. இந்த ஓவியத்தைக் குறித்து 2022-ஆம் ஆண்டு காவல்துறையில் புகார் செய்யப்பட்டது.

அதன்பின்னர், மொஸ்கலேவ் மீது சமூக ஊடகங்களில் ரஷ்ய ராணுவத்தைப் பலமுறை விமர்சித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. மேலும் 2023-ஆம் ஆண்டு மார்ச் மாதம், ராணுவத்தை இழிவுபடுத்தியதற்காக அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், அக்டோபர் 15-ஆம் தேதி இணையத்தில் சில காட்சிகள் பகிரப்பட்டன. அவற்றில் ரஷ்யாவின் துலா பிராந்தியத்தில் உள்ள ஒரு தண்டனைக் காலனியை (சிறை) விட்டு வெளியேறிய பிறகு, சிறைச் சீருடையில் இருக்கும் மொஸ்கலேவ் தனது, மகளைத் தழுவிக்கொள்வதைக் காட்டுகிறது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

‘அது ஒரு சித்திரவதைக் கூடம்’

மோஸ்கலேவ் தனது இரண்டு மாதச் சிறை அனுபவத்தைக் குறித்து விவரித்தார்.

“அது ஒரு சித்திரவதைக் கூடம். அது சித்திரவதைக் கூடம்தான். எனது அறை இரண்டு மீட்டர் நீளமும் ஒரு மீட்டர் அகலமும் கொண்டது. உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?” என்றார்.

“முதலில், நான் எனது அறையில் தனியாக அமர்ந்திருந்தேன். பின்னர் அவர்கள் இரண்டாவது நபரை உள்ளே அனுப்பினார்கள். நாங்கள் இருவரும் இரண்டு மீட்டருக்கு ஒரு மீட்டர் அளவுள்ள ஒரு செல்லில் அமர்ந்திருந்தோம்,” என்கிறார் மோஸ்கலேவ்.

“தரை அழுக்கடைந்திருந்தது. எங்கும் எலிகள் இருந்தன. சாக்கடைகளில் இருந்தும் மற்ற எல்லா இடங்களில் இருந்தும் பெரிய எலிகள் வந்தன,” என்றார் அவர்.

இதுகுறித்து ரஷ்யாவின் மத்திய சிறைத் துறை கருத்து தெரிவிக்கவில்லை. ராய்ட்டர்ஸ் செய்தி முகமை விளக்கம் கேட்டதற்கும் பதிலளிக்கவில்லை.

ரஷ்யா, யுக்ரேன், கருத்துச் சுதந்திரம்

பட மூலாதாரம், Olga Podolskaya

படக்குறிப்பு, மாஷா வரைந்த ஓவியத்தில் ‘யுக்ரேன் புகழ் ஓங்குக’ என்றும், ‘போர் வேண்டாம்’ என்றும் வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன

12 வயதுப் பெண் வரைந்த படம்

2022-ஆம் ஆண்டு, 12 வயதான மாஷா, யுக்ரேன் கொடியை வரைந்து ‘யுக்ரேன் புகழ் ஓங்குக’ என்றும், ரஷ்ய கொடி மற்றும் ராக்கெட்டுகளை வரைந்து ‘போர் வேண்டாம்’ என்றும் எழுதியிருந்தார்.

அப்போது துவங்கின இந்தக் குடும்பத்தின் பிரச்னைகள்.

தனது மகள் வரைந்த ஓவியத்தைப் பற்றி அவரது பள்ளி காவல்துறையிடம் புகார் அளித்ததாக மொஸ்கலேவ் கூறினார். அதன் பிறகு, போருக்கு எதிரான அவர் சமூக ஊடகத்தில் ஒரு பதிவு இட்டதற்காக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

ஆனால், அந்த ஆண்டு டிசம்பர் மாதம் அவரது வீட்டில் சோதனை செய்யப்பட்டது. மேலும், அதற்கு முன்னரே இதேபோன்ற மற்றொரு வழக்கில் அவருக்கு எதிராகத் தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது. அதனால் அவர் மீது மீண்டும் ரஷ்யாவின் குற்றவியல் சட்டத்தின்கீழ் குற்றம் சாட்டப்பட்டது.

அதிகாரிகள், மாஷாவை அவரது தந்தையிடமிருந்து பிரித்து ஒரு குழந்தைகள் இல்லத்தில் சேர்த்தனர். பின்னர் பிரிந்த போன அவரது தாயிடம் ஒப்படைத்தனர்.

மொஸ்கலேவுக்கு 2023-ஆம் ஆண்டு மார்ச் மாதம் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

தண்டனை அறிவிக்கப்படும்போது அவர் ஆஜராகவில்லை. வீட்டுக்காவலில் இருந்து அவர் தப்பி அண்டை நாடான பெலாரூஸுக்கு சென்றதாக OVD-Info தெரிவித்துள்ளது.

பின்னர், அவர் கைது செய்யப்பட்டு, அடுத்த மாதம் ரஷ்யாவிற்குத் திருப்பி அனுப்பப்பட்டார், என்று அக்குழு மேலும் கூறியது.

மொஸ்கலேவ் வசிக்கும் பகுதியின் கவுன்சிலர் ஓல்கா பொடோல்ஸ்கயா கடந்த ஆண்டு பிபிசியிடம் பேசினார். அப்போது அவர் மொஸ்கலேவின் கைது குறித்து ‘அதிர்ச்சியில்’ இருப்பதாகக் கூறினார்.

“உங்கள் கருத்தை வெளிப்படுத்தியதற்காகச் சிறை தண்டனை விதிக்கப்படுவது என்பது ஒரு கொடுமையான விஷயம். இரண்டு வருட சிறைத்தண்டனை என்பது ஒரு கொடுங்கனவு.”

ரஷ்யா, யுக்ரேன், கருத்துச் சுதந்திரம்

பட மூலாதாரம், OVD-Info

படக்குறிப்பு, ரஷ்யாவின் துலா பிராந்தியத்தில் உள்ள ஒரு தண்டனைக் காலனியை (சிறை) விட்டு வெளியேறிய பிறகு, சிறைச் சீருடையில் இருக்கும் அலெக்ஸி மொஸ்கலேவ்

ரஷ்யாவில் ஒடுக்கப்படும் கருத்துச் சுதந்திரம்

2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் யுக்ரேன் மீது ரஷ்யா முழு அளவிலான போரை துவங்கியது.

அப்போதிருந்து ரஷ்யாவில் மனித உரிமைகள் மோசமடைந்து வருகின்றன, என்று ஐ.நா-வின் ஒரு சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது. மொஸ்கலேவின் வழக்கு இந்தப் பின்னணியில்தான் நிகழ்ந்திருக்கிறது.

அந்த அறிக்கையில் காவல்துறையின் வன்முறை, சுதந்திர ஊடகங்கள் மீதான பரவலான அடக்குமுறை, மற்றும் புதிய சட்டங்களைப் பயன்படுத்தி ரஷ்ய அரசை விமர்சிப்பவர்களை ஒடுக்குவது ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

அந்த அறிக்கையில் ஆர்டியோம் கமர்டின் என்பவரது வழக்கும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. பொது இடத்தில் போர் எதிர்ப்புக் கவிதையைப் படித்ததற்காக அவருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அவரது செயல் ‘வெறுப்பைத் தூண்டுவதாக’ அதிகாரிகளால் கருதப்பட்டது.

பள்ளிப் பாடங்கள் மூலம் யுக்ரேன் மோதல் குறித்த அரசாங்கத்தின் கருத்துக்களை குழந்தைகளிடையே பரப்புவதற்கு ரஷ்ய அரசாங்கம் முயல்வதாக அந்த அறிக்கை குற்றம் சாட்டுகிறது. இந்தப் பாடங்கள் ‘முக்கியமான உரையாடல்கள்’ என்று அழைக்கப்படுகின்றன.

“அத்தகைய வகுப்புகளில் கலந்துகொள்ள மறுக்கும் குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் அழுத்தம் மற்றும் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர்,” என்று அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.