ரவி செனவிரத்ன மற்றும் ஷானி அபேசேகர ஆகியோரை தற்போதைய பதவிகளில் இருந்து எக்காரணம் கொண்டும் நீக்க அரசாங்கம் தயாராக இல்லை என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் குழுவின் அறிக்கையை மேற்கோள்காட்டி குறித்த அதிகாரிகள் இருவரையும் இலக்கு வைத்து, அவர்களை தற்போதைய பதவிகளில் இருந்து நீக்குவதே முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவின் தேவையாக உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
இன்று (22) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர், கடந்த காலங்களில் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக இரு அதிகாரிகளும் மிகவும் பக்கச்சார்பற்ற விசாரணைகளை நடத்தியதாக தெரிவித்தார்.
இரண்டு அதிகாரிகளின் பக்கச்சார்பற்ற தன்மையை ஈஸ்டர் தினத்தில் பாதிக்கப்பட்டவர்கள் கூட நன்கு அறிவார்கள் எனவும், பல்வேறு தேவைகள் உள்ள நபர்களுக்கு அவர்களை பதவியில் இருந்து நீக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.