பாப் இசை பாடகி டெய்லர் ஸ்விஃப்ட் அமெரிக்க தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துவாரா?- அவரது ரசிகர்கள் செய்வது என்ன?
- எழுதியவர், மாரியான்னா ஸ்ப்ரிங்
- பதவி, டிஸ்இன்பர்மேஷன் & சமூக ஊடக செய்தியாளர்
அமெரிக்காவில் அதிபர் தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடித்து வருகின்றன. இந்த சூழலில் பாடகி டெய்லர் ஸ்விஃப்ட்டின் ரசிகர் பட்டாளம் ஒருவருக்கு ஒருவர் அரசியல் பற்றிய புரிதலையும் அமெரிக்க தேர்தல் களம் குறித்த அறிவையும் பரிமாறிக் கொள்கின்றனர்.
29 வயதான நோயல் ட்ரேக் யுடாவில் வசிக்கிறார். சென்ற வருடம் வரை அவருக்கு அரசியல் பற்றிய அபிப்ராயம் குறைவாகவே இருந்துள்ளது.
2020-ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் அவர் பெரிய ஆர்வத்துடன் வாக்கு செலுத்தவில்லை.
“ஆனால் ஸ்விஃப்டிகள் (Swifties – அமெரிக்கப் பாடகி டெய்லர் ஸ்விஃப்ட்டின் ரசிகர்கள் தங்களை இவ்வாறு அடையாளப்படுத்திக் கொள்கின்றனர்) நாங்கள் அரசியல் குறித்து ஆன்லைனில் ஒருவருடன் மற்றொருவர் உரையாடுகிறோம். இந்தத் தேர்தல் காலத்தில் நான் அரசியல் குறித்து பேசும் விதத்தை இந்த உரையாடல்கள் மாற்றியுள்ளன,” என்று பிபிசியிடம் கூறினார் நோயல்.
ஒரு மாதத்திற்கு முன்பு பாப் இசைப் பாடகியும் பாடலாசிரியருமான டெய்லர் ஸ்விஃப்ட் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளரான கமலா ஹாரிஸிற்கு இந்தத் தேர்தலில் ஆதரவு அளிப்பதாக அறிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து நோயல், ‘கமலாவுக்காக ஸ்விஃப்டிகள்’ (Swifties for Kamala) என்ற குழுவை சமூக வலைதளத்தில் பின் தொடர ஆரம்பித்தார்.
கமலாவுக்கு அதிகாரப்பூர்வமாக பரப்புரையை மேற்கொண்டு வரும் குழுவுக்கும் இந்த குழுவுக்கும் சம்பந்தமில்லை என்றாலும் கூட, இந்த குழுவினர் தொடர்ச்சியாக பரப்புரை குழுவின் உறுப்பினர்களுடன் பேசி வருகிறனர்.
ஒரே எண்ண ஓட்டத்துடன் இருக்கும் ஸ்விஃப்டிகளுடன் பேச ஆரம்பித்த பிறகு நோயல் தன்னுடைய மாகாணத்தில் நடைபெற்று வரும் தேர்தல் பரப்புரையை உன்னிப்பாகக் கவனிக்கத் துவங்கினார்.
நோயல் மட்டுமல்ல, நோயலைப் போன்று கிட்டத்தட்ட ஒரு டஜன் ஸ்விஃப்டிகளை அடையாளம் கண்டுள்ளது பிபிசி. டெய்லர் ஸ்விஃப்ட் மற்றும் அவருடைய மிகப்பெரிய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவுகளைப் பார்த்து ஊக்கம் அடைந்து வாக்களிக்கச் செல்வதாகவும், தேர்தல் தொடர்பான செயல்பாடுகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதாகவும் அவர்கள் சொல்கிறார்கள்.
ஆனால், நீங்கள் டெய்லர் ஸ்விஃப்டின் ரசிகராக இருக்கின்ற ஒரே காரணத்திற்காக அவரைப் போன்று வாக்களிக்கப்பீர்கள் என்று அர்த்தமில்லை என்பதையும் நான் உணர்ந்து கொண்டேன்.
கமலாவுக்கு ஆதரவாக ஸ்விஃப்டிகள்
பிபிசி ரேடியோ 4-இன் ‘ஒய் டூ யூ ஹேட் மீ யூ.எஸ்.ஏ’ (Why Do You Hate Me USA) என்ற நிகழ்ச்சிக்காக நான் சில ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறேன்.
மீம்களை ஆர்வத்துடன் சமூகவலைதளங்களில் பகிரும், டெய்லர் ஸ்விஃப்ட்டின் ரசிகையான ஐரின் கிம் ஒரு ரசிகையில் இருந்து ஒரு அரசியல் வியூக வகுப்பாளராக மாறியிருக்கிறார்.
இது எப்படிச் சாத்தியம் என்று நான் ஆய்வு செய்து வந்தேன். ஐரின் கிம் ‘ஸ்விஃடிஸ் ஃபார் கமலா’ (Swifties for Kamala) என்ற சமூக வலைதள பிரசாரக் குழுவின் இணை நிறுவனர்.
கிம் அல்லது அவரைப் பின்தொடரும் நபர்கள் பயன்படுத்திய வியூகங்கள் ஏதேனும் உண்மையாகவே மாற்றங்களை ஏற்படுத்தினவா?
கடந்த ஒரு மாதமாக ஸ்விஃப்டிஸ் ஃபார் கமலா பக்கத்தில் பகிரப்படும் பதிவுகளை ‘லைக்’ செய்து ‘கமெண்ட்’ செய்யும் ஒரு சிலருக்கு நான் குறுஞ்செய்திகளை அனுப்பினேன். ஒரு சிலர் ஏற்கனவே ஜனநாயகக் கட்சியின் ஆதரவாளர்களாக இருக்கின்றனர். ஒரு சிலர் அவ்வாறு இல்லை.
27 வயதான டெஸ்டினியை எடுத்துக் கொள்ளுங்கள். தன்னுடைய முழுப் பெயரைக் கூற விரும்பாத அவரும் அவருடைய ஆண் நண்பரும் ‘அரசியல் ஆர்வமில்லாதவர்கள்’ என்று கூறுகிறார்.
ஆனால் இந்த ஸ்விஃப்டிஸ் ஃபார் கமலா பக்கத்தில் பதிவு செய்யப்படும் பதிவுகள் இந்த தேர்தலில் ஜனநாயகக் கட்சிக்கு வாக்களிக்க அவர்கள் எடுத்த ஆதரிக்கும் வகையில் அமைந்துள்ளன என்று கூறுகிறார்.
“என்னைப் போன்ற கொள்கைகளைக் கொண்ட பெண் ஒருவர் அதிபராக வர வேண்டும் என்று நான் விரும்புகிறேன். உண்மையில் இந்த ஒரு காரணம்தான் தேர்தலில் வாக்களிக்கத் தேவையான உத்வேகத்தை முதன்முறையாக கொடுத்துள்ளது,” என்று கூறுகிறார் டெஸ்டினி.
இதே பதிவுகளை பயன்படுத்தி, ‘மிதமான பழமைவாத’ அரசியல் பார்வையைக் கொண்ட அவருடைய ஆண் நண்பரையும் கமலா ஹாரிஸுக்கு வாக்களிக்கும் படி மாற்றிவிட்டதாக அவர் தெரிவிக்கிறார்.
கமலா-டிரம்ப் பிரபலங்கள் யாரை ஆதரிக்கின்றனர்?
பிரபலங்கள் அறிவிக்கும் ஆதரவு மற்றும் அவர்களின் ரசிகர்கள் உருவாக்கும் அரசியல் உள்ளடக்கங்கள், பணம் செலுத்தி செய்யப்படும் விளம்பரங்கள் போன்று இல்லாமல் நம்பத்தகுந்தவையாக இருக்கின்றன.
மக்களை வெளியே சென்று வாக்களிக்க வைக்கும் வகையில் தாக்கத்தை ஏற்படுத்துவதில் பிரபலங்களின் ‘உண்மைத்தன்மை’ பங்காற்றுகிறது என்கிறது ஹார்வர்ட் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஒரு ஆய்வு.
சரியான தகவல்கள் இல்லாதது, நம்பிக்கையின்மை, ஊக்கமின்மை ஆகிய காரணங்களால் மக்கள் வாக்களிக்காமல் இருக்கின்றனர். இந்தப் பிரச்னையைத் தீர்க்க, பிரபலங்களின் ‘சமூக அந்தஸ்து’ உதவுவதாக இந்த ஆய்வின் ஆசிரியர் ஆஷ்லி ஸ்பில்லேன் கூறூகிறார்.
கமலா ஹாரிஸுக்கு ஸ்விஃப்ட் மட்டுமின்றி பியான்ஸ் மற்றும் இதர பிரபலங்கள் ஆதரவை வழங்கியுள்ளனர்.
டொனால்ட் டிரம்பிற்கும் பிரபலங்கள் ஆதரவை வழங்கி வருகின்றனர். கிட் ராக், ஈலோன் மஸ்க், ஜான் வொய்ட், யூடியூப் பிரபலங்களும் ஆதரவு அளித்துள்ளனர்.
இளம் பெண்கள் மத்தியில் கமலா ஹாரிஸின் அரசியல் கொள்கைகளை டெய்லர் ஸ்விஃப்டின் ஆதரவு கொண்டு போய் சேர்த்தது போன்றே, நெல்க் பாய்ஸ் போன்ற பிரபலங்களின் ஆதரவு டொனால்ட் டிரம்பை இளம் ஆண்கள் மத்தியில் கொண்டு போய் சேர்த்திருக்கிறது. டிரம்பின் உண்மையான ஆதரவாளர்களும் ஒரு ரசிகர் பட்டாளம் போலவே செயல்படுகின்றனர்.
இந்த ஆதரவு எதிர்மறைத் தாக்கதையும் ஏற்படுத்தக் கூடும். கருத்துக் கணிப்பு முடிவுகள் கூறுவது என்ன?
செப்டம்பரின் பிற்பாதியில், குயின்னிபியாக் பல்கலைக்கழகம் சார்பில் கமலா ஹாரிஸுக்கு ஸ்விஃப்ட் ஆதரவு அளித்தது தொடர்பாக கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.
அதில் பங்கேற்றவர்களில் 9% நபர்கள், ஸ்விஃப்டின் ஆதரவு கமலாவின் போட்டியை உற்சாகமாக்கியுள்ளது என்று கூறியுள்ளனர். 13% நபர்கள் குறைவான உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது என்று கூறியுள்ளனர்.
ஈலோன் மஸ்கின் ட்ரம்ப் ஆதரவு குறித்த கருத்துக் கணிப்பில் 13% பேர் அதிக உற்சாகமாக உணர்ந்தனர் என்றும் 21% பேர் குறைவான உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் கூறியுள்ளனர்.
நவம்பர் மாத இறுதியில்தான் இந்த தேர்தலில், பிரபலங்கள் மற்றும் அவர்களின் ரசிகர்கள் பட்டாளம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர் என்பதை அறிந்து கொள்ள முடியும்.
கமலாவுக்கான பரப்புரையில் புதிய அம்சம்
கடுமையான போட்டியாக பார்க்கப்படும் இந்த தேர்தலில் இது போன்ற ஆன்லைன் ஆதரவு குழுவினர் மக்களை வாக்களிக்க ஊக்குவிக்க இயலும்.
குறிப்பாக சில ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் வெற்றி தோல்வியை உறுதி செய்யும் மாகாணங்களில் இவர்களின் வாக்குகள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
இத்தகைய மாகாணங்களை கவனத்தில் கொண்டு செயல்பட்டு வருவதாக கூறுகிறார் ‘ஸ்விஃப்டிஸ் ஃபார் கமலா’ குழுவின் இணை நிறுவனர் கிம்.
இந்த தேர்தலில் அதிகமாக கவனிக்கப்பட்ட மாகாணங்களில் ஒன்றாக இருக்கும் அரிசோனாவை சேர்ந்தவர் பெக்கி ரோவ்.
பிபிசியிடம் பேசும் போது அவர், “கருக்கலைப்பு உரிமைகளுக்கான கமலா ஹாரிஸின் நிலைப்பாடுதான் நான் அவருக்கு ஆதரவு அளிக்க காரணமாக அமைந்தது,” என்று தெரிவிக்கிறார்.
அமெரிக்காவில் நடைபெறும் தேர்தல் பரப்புரைகள் அனைத்தும் பாரம்பரிய முறைகளை பின்பற்றுகின்ற சூழலில், ‘ஸ்விஃப்டிஸ் ஃபார் கமலா’ அதில் ‘ஒரு ட்விஸ்ட்டை’ வைத்திருக்கின்றனர்.
அவர்கள் எப்போதெல்லாம் நிகழ்வுகளை நடத்துகின்றனரோ, அப்போதெல்லாம் அரசியல் கருத்துகளை உள்ளடக்கிய ‘ஃப்ரெண்ட்ஷிப் ப்ரேஸ்லெட்களை’ (கைப்பட்டை) வழங்குகின்றனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் மக்களை நேருக்கு நேர் சந்தித்து பரப்புரை நிகழ்வுகளை ஆரம்பித்ததாக கூறுகிறார் ஐரின் கிம். அவர்கள் ரசிகர்களை நேரடியாக அலைபேசி அழைப்புகள் மூலமாகவும் குறுஞ்செய்திகள் மூலமாகவும் தொடர்பு கொண்டனர். தேர்தல் நாளுக்குள் 2.2 கோடி வாக்காளர்களை நேரடியாகத் தொடர்பு கொள்ளவதை இலக்காக வைத்துள்ளதாகவும் கிம் கூறுகிறார்.
‘ஸ்விஃப்டிஸ் ஃபார் கமலா’ குழு இதுவரை 2 லட்சம் அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் சுமார் 1.7 கோடி ரூபாய்) கமலா ஹாரிஸின் பரப்புரைக்காக நிதியாக பெற்றுள்ளனர் என்று கூறுகிறார் கிம்.
தங்களின் ஆதரவை மாற்றிக் கொள்ளாத சில ரசிகர்கள்
இருப்பினும், சில ஸ்விஃப்ட் ரசிகர்கள் தங்களின் மனதை மாற்றிக் கொள்ளவில்லை. குடியரசுக்கட்சி மற்றும் டிரம்ப் ஆதரவாளர்கள் பலரும் ‘ஸ்விஃப்டிஸ் ஃபார் கமலா’ பக்கத்தில் பதிவிட்ட பதிவுகளில் ‘கமெண்ட்; செய்திருப்பதை நான் பார்த்தேன்.
அவர்களுக்கு பிடித்த இசைக் கலைஞர் இந்த தேர்தலில் எடுத்த நிலைப்பாட்டை மீறி தங்களின் அரசியல் ஆதரவு யாருக்கு என்பது குறித்து தெளிவான முடிவை அவர்கள் எடுத்திருக்கின்றனர். அவர்களுக்கும் நான் குறுஞ்செய்திகளை அனுப்பினேன்.
குடியரசுக் கட்சிக்கு வாக்களிக்க இருப்பதாக ப்ரி கூறுகிறார். “மக்களுக்கு சிறப்பானதை யார் செய்வார்களோ அவர்களைத் தான் மக்கள் தேர்வு செய்வார்கள்,” என்று கூறுகிறார்.
ஸ்விஃப்டுக்கு நம்பிக்கையான ஒரு ரசிகர் வட்டம் உள்ளது. அனைத்து தரப்பினருக்கும் நியாயமாக நடந்து கொள்ள வேண்டுமென்றால் அவர் அரசியல் விவகாரங்களில் இருந்து விலகியே இருக்க வேண்டும் என்று என்னிடம் கூறினார் ப்ரி.
டொனால்ட் டிரம்ப் ஸ்விஃப்டின் ஆதரவைப் பெறவில்லை என்றாலும் அவரின் ரசிகர் பட்டாளங்களின் வாக்குகளைப் பெற, ஸ்விஃப்ட் டிரம்பை ஆதரிக்கும் ஏ.ஐ. மீமை அவரின் ஆதரவாளர்கள் பதிவு செய்தனர்.
உண்மையில் டிரம்ப் அந்த மீமை பகிர்ந்த பின்பு தான், தன்னுடைய ஆதரவு கமலாவுக்கு என்று வெளிப்படையாக ஸ்விஃப்ட் பதிவு செய்ய நேரிட்டது.
கமலா ஹாரிஸுக்கு ஆதரவு வழங்கும் ‘ஸ்விஃப்டிஸ் ஃபார் கமலா ‘குழுவினர் உட்பட ஒருவரின் அரசியல் கொள்கைகளுக்காக நான் அவரை ஒரு போதும் வெறுக்கமாட்டேன் என்று கூறுகிறார் ப்ரி.
ஆனால் சமூக வலைதளங்களில் நடைபெறும் விவாதங்கள் அனைத்தும் நட்பு ரீதியில் மட்டுமே நடைபெறும் என்று கூற இயலாது.
சூடான விவாதங்கள் ஸ்விஃப்டின் ரசிகர்கள் எப்போதும் காணும் ஒன்று தான் என்று குறிப்பிடும் கிம், இந்த பரப்புரையில் நெறிமுறைகளை கொண்டுள்ளதாக கூறுகிறார்.
“இடைவெளியை நிரப்புவது என்றுமே நல்லது,” என்கிறார் கிம்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு