தமிழ் மக்கள் தென்னிலங்கை கட்சிகளுக்கு வாக்கு அளித்து எமது இறையாண்மைக்கு முற்று புள்ளி வைத்துவிட கூடாது என சுயேச்சை குழு 13 இல் கரும்பலகை சின்னத்தில் போட்டியிடும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய முன்னாள் தலைவர் கி.கிருஸ்ணமீனன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்
மேலும் தெரிவிக்கையில்,
இளைஞர்கள் தமிழ் தேசிய பரப்பிற்கு வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு தமிழ் மக்கள் சார்பில் பலரிடம் இருக்கிறது. அந்த வகையில் தான் நாங்களும் தமிழ் தேசிய பரப்பில் பயணிக்கிறோம்.
நாம், வடக்கு கிழக்கு மாகாணம் தமிழர்களின் மரபு வழி தாயகமாக அங்கீகரிக்கப்பட்ட வேண்டும். சுயநிர்ணய அடிப்படையில் அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும். என்பவற்றை முன்னிறுத்தியே பயணிக்கிறோம்.
தெற்கிலே மாற்றம் ஏற்பட்டது போல வடக்கிலும் மாற்றம் தேவை என தமிழர்கள் சிந்திக்கின்றது எங்களுக்கும் புரிகிறது. வடக்கில் உள்ள சில அரசியல்வாதிகள் மீது பலருக்கும் வெறுப்புக்கள் உண்டு என்பதும் எங்களுக்கு தெரியும்.
அந்த விருப்பு வெறுப்புக்களை தென்னிலங்கை கட்சிகளுக்கு வாக்கு அளித்து எமது இறையாண்மைக்கு முற்று புள்ளி வைத்துவிட கூடாது. பழையவர்கள் மீது உங்களுக்கு வெறுப்பு இருக்கும். மாற்றம் வேண்டும் என விரும்புவோர் எங்களுக்கு வாக்களியுங்கள்
நாங்கள் சோரம் போக மாட்டோம். விலை போக மாட்டோம் நாங்கள் பல்கலைக்கழக காலத்தில் இருந்து தமிழ் தேசியத்தோடு பயணிக்கிறோம் என தெரிவித்தார்.