இந்தியா- சீனா இடையே எல்லை ரோந்து ஒப்பந்தம் – உறவுகள் சுமுகம் ஆகின்றனவா?
- எழுதியவர், சந்தீப் ராய்
- பதவி, பிபிசி நிருபர்
இந்தியாவும் சீனாவும் எல்லை கட்டுப்பாடு கோடு (Line of Actual Control – LAC) பகுதிகளில் ரோந்து பணிகளை மேற்கொள்வது தொடர்பாக ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளன.
அக்டோபர் 22, 23 ஆகிய தேதிகளில் ரஷ்யாவில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோதி புறப்படுவதற்கு முன்னதாக, திங்களன்று (அக்டோபர் 21) இந்திய வெளியுறவு அமைச்சகம் இந்த அறிவிப்பை வெளியிட்டது.
இந்தியா-சீனா உறவுகளைக் கண்காணித்து வரும் சில வல்லுநர்கள், கடந்த காலங்களிலும் சீனாவுடன் இதுபோன்ற ஒப்பந்தங்கள் செய்யப்பட்டிருப்பதாகக் கருதுகின்றனர்.
இந்த ஒப்பந்தம் தொடர்பான விரிவான தகவல்கள் இன்னும் வழங்கப்படவில்லை. இதுகுறித்து சீனாவில் இருந்து எந்த அறிக்கையும் வரவில்லை என்றாலும், இந்த முயற்சி இந்திய – சீன உறவுகளை இயல்பாக்குவதற்கான ஒரு முக்கியமான படியாகச் சில நிபுணர்கள் கருதுகின்றனர்.
திங்களன்று (அக்டோபர் 21), இந்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி, ஒரு செய்தியாளர் சந்திப்பில், ”கடந்த பல வாரங்களாக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே ராஜ்ஜீய மற்றும் ராணுவ மட்டங்களில் நடந்த பேச்சுவார்த்தையின் விளைவாக இந்த ‘ராணுவ விலகல்’ உடன்பாடு எட்டப்பட்டது” என்றார்
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரும் திங்களன்று தனியார் செய்தி சேனலான என்.டி.டி.வி-யின் நிகழ்ச்சியில், “2020-ஆம் ஆண்டு, சீன எல்லையில் இந்திய வீரர்கள் எல்லையில் எதுவரை சென்றனரோ, மீண்டும் அதுவரை சென்று ரோந்துப் பணியில் ஈடுபட முடியும்,” என்று கூறினார்.
மேலும், “பதற்றத்தைக் குறைக்கும் வகையில், இந்தியா-சீனா இடையேயான பேச்சு வார்த்தை நிறைவடைந்துள்ளது. இரு தரப்பினரும் இன்று பரஸ்பர உடன்படிக்கைக்கு வந்துள்ளனர். இது குறித்த கூடுதல் தகவல்கள் வரும் நாட்களில் வெளிவரும்,” என்றார்.
இருப்பினும், “எல்லை கட்டுப்பாடு கோட்டில் 2020-க்கு முந்தைய நிலைமை மீண்டும் கொண்டுவரப்படும். இது ஒரு முக்கியமான முன்னேற்றம். ஆனால் இதன் முழு தாக்கத்தை இப்போது மதிப்பிட முடியாது. அதற்குக் காத்திருக்க வேண்டும்,” என்றார்.
இந்தியா-சீனா ஒப்பந்தம் குறித்து நிபுணர்கள் சொல்வது என்ன?
இந்தியா-சீனா விவகாரங்களில் நிபுணரும், கலிங்கா இன்ஸ்டிட்யூட் ஆப் இந்தோ-பசிபிக் ஸ்டடீஸின் நிறுவனர்-தலைவருமான பேராசிரியர் சிந்தாமணி மொஹபத்ரா இதுகுறித்து பிபிசி இந்தியிடம் பேசினார்.
“இது ஒரு நல்ல தொடக்கமாகும். ஏனெனில், கடந்த சில மாதங்களாக ராஜ்ஜீய மற்றும் ராணுவ மட்டங்களில் நடந்த பேச்சுவார்த்தைகள் பதற்றத்தைக் குறைப்பதற்கான ஒப்பந்தம் பற்றி விவாதித்தன,” என்றார்.
“ஒரே ஒரு ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையிலான அனைத்து பதட்டங்களையும் தீர்த்துவிடாது. ஆனால் இந்த ஒப்பந்தத்தை, உறவுகளை இயல்பாக்குவதற்கான முதல் படியாகக் கருதலாம்,” என்றார்.
அவர் மேலும் பேசுகையில், “இப்போது ‘ராணுவ விலகல்’ ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. அதாவது இது சில பகுதிகளில் ஏற்கனவே நடந்துள்ளது. மேலும் சில பகுதிகளில் நடக்க வேண்டும். கடந்த மாதம், இந்திய ராணுவத் தளபதி, ‘எளிதான பிரச்னைகள் தீர்க்கப்பட்டுவிட்டன. இனி வரும் காலங்களில் சிக்கலான பிரச்னைகள் தீர்க்கப்பட வாய்ப்புள்ளது’ என்று கூறியிருந்தார்” என்றார்.
சில வல்லுநர்கள் இந்த அறிவிப்பை எச்சரிக்கையாகப் பார்க்க வேண்டும் என்கின்றனர்.
ப்ரூக்கிங்ஸ் இன்ஸ்டிட்யூட்டின் மூத்த ஆராய்ச்சியாளரான தன்வி மதன், தனது எக்ஸ் சமூக ஊடகத் தளத்தில், “2017-ஆம் ஆண்டின் டோக்லாம் பிரச்னையும் பிரிக்ஸ் மாநாட்டிற்கு முன்புதான் தீர்க்கப்பட்டது. அதுதான் பிரதமர் மோதி சீனாவுக்குச் செல்ல வழிவகுத்தது. அப்போதும் சீனா புவிசார் அரசியல் பிரச்னைகளைச் சந்தித்தது,” என்று பதிவிட்டிருக்கிறார்.
தக்ஷிலா இன்ஸ்டிடியூட்டின் இயக்குநர் நிதின் பாய், தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில், “இந்தியா – சீனா எல்லையில் அமைதியை ஏற்படுத்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. ஆனால் உடனே மகிழ்ச்சியடைய வேண்டாம். ஏனெனில் சீனாவின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதைக் காட்டுவதற்கு அதன் கொள்கைகளில் எதுவும் மாறியதாகத் தெரியவில்லை,” என்று பதிவிட்டுள்ளார்.
வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி திங்கள்கிழமை அன்று, ராணுவ விலகல் குறித்து உடன்பாடு எட்டப்பட்டதாக மட்டுமே கூறியுள்ளார்.
இந்த ஒப்பந்தம் மீதமிருக்கும் சர்ச்சைகளில் என்ன விளைவை ஏற்படுத்தும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
இருப்பினும், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், எல்லையில் இருக்கும் டெப்சாங் பகுதி பற்றி குறிப்பிடும் விதமாக, மற்ற பகுதிகளிலும் ராணுவ ரோந்து இருக்கும் என்று கூறினார்.
சமீபத்திய அறிவிப்பில் பல விஷயங்களில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டதாகத் தெரிகிறது என்று பேராசிரியர் சிந்தாமணி மொகபத்ரா கூறுகிறார். “இந்தியா, சீனா மற்றும் பசிபிக் பிராந்தியத்திற்கு இது மிகவும் நல்ல செய்தி,” என்கிறார் அவர்.
இப்போது ஏன் இந்த ஒப்பந்தம்?
இதற்குமுன், ஆகஸ்ட் 2023-இல் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற பிரிக்ஸ் கூட்டத்தின் போது பிரதமர் மோதி மற்றும் ஷி ஜின்பிங் இடையே கடைசி பேச்சுவார்த்தை நடந்தது.
அப்போது, இரு நாடுகளும் பரஸ்பர உறவை மேம்படுத்த விரும்புவதாகக் கூறப்பட்டது.
இரு நாடுகளுக்கும் இடையே 3,488கி.மீ., தொலைவுக்குப் பொதுவான எல்லை உள்ளது. இப்பகுதியிலிருந்து ராணுவத்தை அகற்றிப் பதற்றத்தைக் குறைப்பது இரு நாடுகளுக்கும் நல்லது.
முன்னதாக, 2022-இல், இரு தலைவர்களும் ஜி20 உச்சிமாநாட்டில் பங்கேற்றனர். ஆனால் அவர்களுக்கு இடையே பேச்சுவார்த்தை நடக்கவில்லை.
சமீபத்திய மாதங்களில் உலக அரசியலில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. சீனாவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் அவ்வளவு சுமுகமாக இல்லை.
ஷிவ் நாடார் பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியரும், சீன விவகாரங்களில் நிபுணருமான பேராசிரியர் ஜபின் டி ஜேக்கப், இதுகுறித்து பிபிசி ஹிந்தியிடம் பேசினார்.
“இந்தியாவுடனான உறவைச் சீர்படுத்துவதற்கான முயற்சிக்கு சீனாவின் சூழ்நிலைகளும் ஓரளவு காரணமாகும். அமெரிக்காவுடனான சீனாவின் உறவுகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. அடுத்த மாதம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடக்கவுள்ளது,” என்கிறார்.
“அடுத்த அமெரிக்க அதிபர் யாராக இருந்தாலும் அவருடனான உறவில் எந்த வித்தியாசமும் இருக்காது என்பதை சீனா ஏற்றுக்கொண்டுள்ளது. யுக்ரேன் போரின் போது ரஷ்யாவுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க சீனா செய்த ஒப்பந்தம், சீனாவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையிலான மோதலையும் அதிகரித்துள்ளது,” என்கிறார் அவர்.
சீனா தற்போது சர்வதேச அளவில் சிக்கலில் உள்ளதாகவும், உள்நாட்டிலும் அதன் பொருளாதார முன்னேற்றம் குறைந்துள்ளது என்றும் அவர் கூறுகிறார்.
“இந்தச் சூழ்நிலையில், சீனாவுக்குத் தனது வெளியுறவுக் கொள்கையில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டிய அவசரத் தேவை இருப்பதுடன், வளைந்து கொடுக்கும் மனப்பான்மையைக் காட்டுவதும் அவசியமாகும்,” என்கிறார் அவர்.
பேராசிரியர் ஜேக்கப் மேலும் கூறுகையில், “இந்த அறிவிப்பு திடீரென வந்ததல்ல. இதற்கு முன் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்தன. இதை அறிவிப்பதற்காக பிரிக்ஸ் மாநாட்டின் சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது,” என்கிறார்.
கடந்த காலங்களிலும் இது போன்ற பல ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, அவற்றைச் சீனா மீறியதால், இந்த ஒப்பந்தத்தை சீனா நிறைவேற்றுகிறதா இல்லையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும், என்கிறார் அவர்.
வணிகத்தில் என்ன தாக்கம் இருக்கும்?
2020-இல் கிழக்கு லடாக்கில் உள்ள கல்வானில் நடந்த வன்முறை மோதலில், 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். பல சீன வீரர்களும் இறந்தனர்.
எனினும், இதனால் இரு நாடுகளின் வர்த்தகம் பாதிக்கப்படவில்லை. 2022-இல் 135.98 பில்லியன் டாலர்களாக இருந்த இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், 2023-இல் 136 பில்லியன் டாலராக இருந்தது. (இந்திய மதிப்பில் சுமார் 11.4 லட்சம் கோடி ரூபாய்).
பேராசிரியர் ஜேக்கப், “மேம்பட்ட உறவுகள் வர்த்தகத்தின் மீதும் தாக்கம் செலுத்தும். சீன முதலீடு தொடர்பாக இந்தியா வளைந்துகொடுக்க வாய்ப்புள்ளது. தற்போது சீனாவின் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மேற்கத்திய நாடுகளில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது,” என்கிறார்.
மேலும், “இந்தியா எதிர்பார்த்தது போல் மேற்கு நாடுகளில் இருந்து முதலீடு வரவில்லை. ஆனால் சீனாவில் இருந்து முதலீடு வருகிறது. உதாரணமாக, மின்சார வாகனங்கள், அதிநவீன தொழில்நுட்பம், அரிய கனிமங்கள். இந்தியாவுக்குத் தேவையான அத்தியாவசிய இறக்குமதிகள் சீனாவிலிருந்து மட்டுமே வரும், மேற்கு நாடுகளிலிருந்து அல்ல,” என்கிறார்.
இது, மேற்கத்திய நாடுகளுடனான இந்தியாவின் உறவு மாறப்போகிறது என்று இது அர்த்தப்படாது, என்று பேராசிரியர் ஜேக்கப் கூறுகிறார். “இந்தியா தனது சொந்த நலன்களுக்கு ஏற்ப தனது கொள்கைகளை நிர்ணயித்து வருகிறது,” என்கிறார்.
ஒப்பந்தத்தில் என்ன இருக்கிறது?
இந்தியா வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்த ஒப்பந்தம் குறித்த விரிவான தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் ஒப்பந்தத்தின் சில முக்கிய விஷயங்களை ‘தி பிரிண்ட்’ செய்தி இணையதளம் தெரிவித்துள்ளது.
“ஒப்பந்தத்தின்படி, 2020-க்கு முன்பு எந்தெந்தப் பகுதிகளில் ரோந்துப் பணி மேற்கொள்ளப்பட்டதோ அந்தப் பகுதிகளில் ரோந்துப் பணி மேற்கொள்ளப்படும். டெப்சாங்கைத் தவிர, இதில் PP10 முதல் PP13 வரையிலான பகுதியும் அடங்கும். மேலும், மாதம் இருமுறை ரோந்துப் பணி மேற்கொள்ளப்படும். மோதல்களைத் தவிர்க்கும் வகையில் ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 15 ஆகக் குறைக்கப்படும்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“ரோந்துப் பணியைத் தொடங்குவதற்கு முன், இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் தகவல்களை வழங்க ஒப்புக்கொண்டனர். இந்தக் காலகட்டத்தில், நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, ஒவ்வொரு மாதமும் கட்டளை அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்படும்,” என்றும் அந்தச் செய்தி தெரிவிக்கிறது.
‘தி பிரிண்ட்’ செய்தியின்படி, சீன வீரர்கள் முந்தைய நிலைக்குத் திரும்புவார்கள், இந்திய வீரர்கள் ‘ஒய்’ சந்திப்பில் ரோந்து செல்வதை அவர்கள் தடுக்க மாட்டார்கள்.
“ராணுவ விலகல் முடிந்த பாங்கோங் த்சோ, கால்வான், ஹாட் ஸ்பிரிங்ஸ், கோக்ராவின் வடக்குக் கரைகள் ஆகிய பகுதிகளில் இருபுறமும் ரோந்துப் பணியை மீண்டும் தொடங்குவர்,” என்றும் அந்தச் செய்தி தெரிவிக்கிறது.
அக்டோபர் 22, 23 ஆகிய தேதிகளில், ரஷ்யாவின் கசான் நகரில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெறுகிறது. அங்கு சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் கலந்து கொள்வார். அவர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியைச் சந்திக்க வாய்ப்புள்ளது.
சிந்தாமணி, “இந்த ஒப்பந்தத்தின் அறிவிப்பால், இரு தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு இயல்பாகவே நடக்கும் என்பதுபோலத் தெரிகிறது. அது நடக்கக் கூடும். ஆனால், பிரிக்ஸ் மாநாடு காரணமாக ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டது என்று கூற முடியாது. அது தற்செயலானது,” என்கிறார்.
அவர் மேலும், “பிரிக்ஸ் விரிவடைந்து வரும் ஒரு அமைப்பு. இந்தியாவும் சீனாவும் அதன் முக்கிய உறுப்பினர்களாக உள்ளன. மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றத்தைக் குறைப்பது பிரிக்ஸ் அமைப்புக்கு ஒரு நல்ல செய்தி. இது பிரிக்ஸ் அமைப்பை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கு பெரிதும் உதவும்.
பிரிக்ஸ் முன்னேற வேண்டுமானால், அதன் முக்கிய உறுப்பினர்களிடையே சிறந்த ஒருங்கிணைப்பு அவசியம்,” என்கிறார் அவர்.