வங்கதேசத்தில் கைது வாரண்ட்: ஷேக் ஹசீனாவுக்கு இந்தியா அரசியல் புகலிடம் தருமா?

ஷேக் ஹசீனா, இந்தியா - வங்கதேசம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஷேக் ஹசீனா இந்தியாவில் இருப்பதாக இந்திய அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது
  • எழுதியவர், சுப்ஜோதி கோஷ்
  • பதவி, பிபிசி பங்களா

வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, வன்முறைப் போராட்டம் எதிரொலியாக இரண்டரை மாதங்களுக்கு முன்பு தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அந்த நாட்டைவிட்டு வெளியேறி ராணுவ விமானம் மூலம் இந்தியா வந்தார்.

அதன் பிறகு அவர் பொது வெளிக்கு வரவில்லை.

சமூக வலைதளங்களில் அவரது புகைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை. அவரது தொலைபேசி உரையாடல்கள் என்று கூறப்பட்ட சில ஆடியோக்கள் வெளிவந்த போதிலும், அது ஹசீனாவின் குரலா என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

ஷேக் ஹசீனா மற்றும் அவரது தங்கையான ஷேக் ரிஹானா இருவரும் இந்திய தலைநகரம் டெல்லி வந்தடைந்த பிறகு எங்கே, எப்படி இருக்கிறார்கள் என்பது பற்றி இந்திய அரசின் செய்தித் தொடர்பாளர்களோ அல்லது அமைச்சர்களோ எந்த தகவலும் வெளியிடவில்லை. இதுபற்றி எந்த செய்தியாளர் சந்திப்பிலும், பேட்டியிலும் யாரும் கருத்து தெரிவிக்கவில்லை.

ஆனால் அக்டோபர் 17-ஆம் தேதி மாலை, ஹசீனா இன்னும் இந்தியாவில் இருப்பதாக இந்திய அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

ஷேக் ஹசீனா ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அல்லது மத்திய கிழக்கில் உள்ள ஏதோ ஒரு நாட்டிற்கு செல்கிறார் என்ற செய்தி முற்றிலும் ஆதாரமற்றது என்று பிபிசி பங்களா கடந்த வாரம் தெரிவித்திருந்தது. தற்போது இந்திய அரசும் இதை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது.

ஷேக் ஹசீனா, இந்தியா - வங்கதேசம்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ஷேக் ஹசீனா இந்தியாவில் தங்கியிருக்கும் விவகாரத்தில் மத்திய அரசு முழுக்கமுழுக்க ரகசியம் காத்தது உண்மைதான். ஆனால், அவர் இந்தியாவில் எத்தனை நாட்கள் தங்க வேண்டியிருக்கும் என்பது அரசுக்குத் தெரியவில்லை.

டெல்லியின் சவுத் பிளாக்கில் உள்ள ஒரு உயர் அதிகாரி தனது தனிப்பட்ட கருத்தை கூறுகையில், “அவர் நீண்ட காலத்திற்கு தங்க வேண்டியிருக்கும்” என்று கூறுகிறார்.

அவரது கருத்துப்படி, ஷேக் ஹசீனாவை இந்தியாவில் நீண்ட காலம் தங்க அனுமதிக்க வேண்டும் என்ற யதார்த்தத்திற்கு அரசாங்கம் தயாராகி வருகிறது.

இதற்கு முன்னர் இந்தியாவில் திபெத்திய ஆன்மிகத் தலைவர் தலாய் லாமா மற்றும் ஆப்கானிஸ்தான் அதிபர் முகமது நஜிபுல்லா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அரசியல் புகலிடம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே அதே போன்று நடைமுறைகள் ஷேக் ஹசீனா விஷயத்திலும் பின்பற்றப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்தக் கேள்விக்கான பதிலுக்காக, பிபிசி பங்களா, இந்திய அரசாங்கத்தின் பல்வேறு மட்டங்களிலும் பல்வேறு அமைச்சகங்களிலும் நியமிக்கப்பட்ட அதிகாரிகளிடம் பேசியுள்ளது. அந்த அடிப்படையில் பெறப்பட்ட பதில்கள் இங்கே பகிரப்பட்டுள்ளன.

விருந்தினராக பார்க்கப்படும் ஹசீனா

ஷேக் ஹசீனா, இந்தியா - வங்கதேசம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஷேக் ஹசீனா ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அல்லது மத்திய கிழக்கில் உள்ள ஏதோ ஒரு நாட்டிற்கு செல்கிறார் என்ற செய்தி முற்றிலும் ஆதாரமற்றது

தற்போது இந்தியாவின் பார்வையில், ஷேக் ஹசீனா இந்தியாவின் ‘விருந்தாளி’, ஆனால் `சில நிபந்தனைகளின் கீழ்’. அதாவது, சில குறிப்பிட்ட சூழ்நிலையில் இந்தியாவிற்கு வர வேண்டிய கட்டாயத்தில் இருந்த நாட்டின் மரியாதைக்குரிய விருந்தினர்.

ஹசீனா தனது நாட்டில் உள்ள பாதுகாப்பு அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு இந்தியா வந்துள்ளார் என்பது இந்திய அரசுக்கு நன்றாகத் தெரியும்.

இப்போது, ​​இந்த விருந்தினர் அந்தஸ்து அடிப்படையில், அவரை நீண்ட காலமாக இந்தியாவில் வைத்திருக்க முடியும். இதில் இந்திய அரசுக்கு எந்த பிரச்னையும் இல்லை. நாட்டின் விருந்தாளி என்ற முறையில் எல்லா மரியாதையும் வசதியும் அவருக்கு கிடைக்கும்.

தற்போது ஷேக் ஹசீனாவுக்கு அரசியல் புகலிடம் அளிக்கும் திட்டம் இந்தியாவிடம் இல்லை. இதில் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம், ஹசீனா அரசியல் புகலிடம் கோரி இன்னும் விண்ணப்பிக்கவில்லை என்பது தான்.

ஆனால், எதிர்காலத்தில் அப்படியொரு கோரிக்கை முன்வைக்கப்பட்டால், அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த விவகாரத்தில் ஒத்துப்போகும். ஷேக் ஹசீனாவுக்கு அரசியல் புகலிடம் அளிக்கும் விவகாரத்தில் அரசியல் ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவதில் எந்தப் பிரச்னையும் இருக்காது என்பது இந்திய அரசுக்குத் தெரியும்.

தற்போது இந்தியா ஷேக் ஹசீனாவை விருந்தினராக வைத்திருக்க விரும்புவதாகவும், ஆனால் அவருக்கு அரசியல் புகலிடம் கொடுக்க விரும்பவில்லை என்றும் தெரிகிறது.

ஷேக் ஹசீனா, இந்தியா - வங்கதேசம்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, ஷேக் ஹசீனாவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட கைது வாரண்ட் குறித்து ரந்தீர் ஜெய்ஸ்வால் பதில் அளிக்கவில்லை

இந்த நிலை எதிர்காலத்தில் மாறுமா?

அக்டோபர் 17 அன்று டெல்லியில் வெளியுறவு அமைச்சகத்தின் வழக்கமான வாராந்திர மாநாட்டில், செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், “வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் இந்தியாவில் தங்கியிருப்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். அவர் பாதுகாப்பு காரணங்களுக்காக அவசர நிலையில் இந்தியாவுக்கு வர வேண்டியிருந்தது.” என்றார்.

ஷேக் ஹசீனா இன்னும் இந்தியாவில் தான் இருக்கிறார் என்பது ரந்தீர் ஜெய்ஸ்வால் பேச்சின் மூலம் தெளிவாகிறது. ஆனாலும், ஹசீனா தொடர்பான பல கேள்விகளுக்கு இன்னும் பதில் தெரியவில்லை.

கடந்த இரண்டரை மாதங்களில் ஷேக் ஹசீனாவின் செயல்பாடுகள் குறித்து வெளியான தகவல்களில் எது ஊகம், எது வதந்தி எது உண்மை என்ற கேள்வி எழுகிறது.

ஷேக் ஹசீனா, இந்தியா - வங்கதேசம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஷேக் ஹசீனாவும் பிரதமர் மோதியும் ஜூன் 2024 இல் சந்தித்தனர்

பிபிசி பங்களா கண்டறிந்த உண்மைகள்

  • ஷேக் ஹசீனா இந்தியாவில் இருக்கிறார், மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லவில்லை. அவர் இந்தியாவை விட்டு வெளியேறியதாக வெளியான செய்தி ஆதாரமற்றது.
  • ஹசீனா ஆகஸ்ட் 5 ஆம் தேதி ஹிண்டன் விமான தளத்தில் வந்திறங்கினார். 2-3 நாட்களுக்குப் பிறகு அவர் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டார்.
  • ஷேக் ஹசீனாவுக்கு இந்தியா பயண ஆவணங்களை (travel documents -TD) வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அவர் தேவைப்பட்டால் வேறு நாட்டிற்குச் செல்லலாம். இந்த தகவலை இந்தியா உறுதிப்படுத்தவோ மறுக்கவோ இல்லை.
  • ஷேக் ஹசீனா இந்தியாவில் இருப்பதை அரசு உறுதி செய்துள்ளது ஆனால் அவர் டெல்லியில் இருக்கிறாரா இல்லையா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஷேக் ஹசீனா இருக்கும் இடம் குறித்து இரண்டு வகையான ஊகங்கள் உள்ளன.
  • முதலாவது ஊகம், அவர் உலக சுகாதார அமைப்பின் பிராந்திய இயக்குநராகப் பணிபுரியும் தனது மகள் சைமா வாஜித்தின் இல்லத்தில் தங்கியுள்ளார்.
  • இரண்டாவது , அவர் உத்தரபிரதேசத்தில் உள்ள மீரட் அல்லது டெல்லி அருகே ஹரியாணாவில் உள்ள மானேசரில் துணை ராணுவப் படை விருந்தினர் இல்லம் அல்லது பாதுகாப்பு இல்லத்தில் தங்கியுள்ளார்.
  • முதல் ஊகத்திற்கு எந்த அடிப்படையும் இல்லை, ஆனால் இரண்டாவது ஊகம் உண்மையாக இருக்கலாம் என்று பிபிசி பங்களா அறிந்துள்ளது.
  • ஷேக் ஹசீனா பலத்த பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டுள்ளார். ஆனால் அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது உண்மையல்ல.
  • அவர் சுதந்திரமாக அதே சமயம் பாதுகாப்பாக இருக்கிறார் என்பதற்கு ஆதரமாக ஷேக் ஹசீனாவின் தனிப்பட்ட தொலைபேசி வேலை செய்யும் நிலையில் இருப்பதாகவும், அமெரிக்கா மற்றும் டெல்லியில் வசிக்கும் தனது மகன் மற்றும் மகளுடன் அவர் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் தெரிகிறது.
  • அவரது கட்சியான அவாமி லீக் தலைவர்கள் பலர் ஹசீனாவுடன் அவரது தனிப்பட்ட மொபைலில் பேசியுள்ளனர்.
  • ஷேக் ஹசீனா போன்று நெருக்கடியான சூழலில் இந்தியாவுக்கு வரும் எந்த விருந்தினரும் ‘டிபிரீஃபிங் செஷன்’ என்னும் நிகழ்வில் பங்கேற்க வேண்டும், இதற்கு ஹசீனா விதிவிலக்கல்ல.

‘டிபிரீஃபிங் செஷன் (debriefing session) பற்றி பிபிசி பங்களாவுக்கு கிடைத்த உறுதியான தகவலின் படி, இந்திய உயர் பாதுகாப்பு அதிகாரிகள் ஹசீனாவிடம் சில நடைமுறைகளை விளக்கியுள்ளனர்.

அதாவது, அவர்கள் என்ன பேச வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுடனான உரையாடலின் அடிப்படையில் இந்திய அதிகாரிகளால் சில குறிப்புகள் எடுக்கப்பட்டுள்ளன.

டெல்லியில் சமீபத்தில் முடிவடைந்த துர்கா பூஜை பந்தல்களில் பெங்காலி கூட்டத்தில் மிகப்பெரிய கேள்வி என்னவென்றால், ஷேக் ஹசீனா இந்த சீசனில் வங்கதேச ஹில்சா சாப்பிட முடியுமா? ஆனால் அவரைப் பற்றிய பல கேள்விகளைப் போலவே, இந்த கேள்விக்கான பதிலும் மர்மத்தில் மறைக்கப்பட்டுள்ளது.

ஷேக் ஹசீனா அழையா விருந்தாளியா?

ஷேக் ஹசீனா, இந்தியா - வங்கதேசம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நெருக்கடியான சூழலில் ஷேக் ஹசீனாவுடன் இந்தியா துணை நிற்க வேண்டும் என்பதில் ஒருமித்த கருத்து உள்ளது.

ஹிந்தியில் ‘பின் புலே மெஹ்மான்’ (‘Bin Bulay Mehman’) என்று ஒரு பழமொழி உண்டு, அதாவது அழையா விருந்தாளி.

இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் உயர் அதிகாரி ஒருவர் பிபிசி பங்களாவிடம் பேசுகையில், “ஷேக் ஹசீனா அழைப்பு இல்லாமல் டெல்லிக்கு வந்திருக்கலாம், ஆனால் அவர் நம் விருந்தினர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.” என்றார்.

அத்தகைய சூழ்நிலையில், இந்தியா தனது விருந்தோம்பலில் குறை வைக்க முடியாது.

வங்கதேசத்திற்கான முன்னாள் இந்திய தூதர் அஜய் பிசாரியா, ஷேக் ஹசீனாவை டெல்லியில் தங்க அனுமதிப்பது இந்தியாவுக்கு மிகவும் முக்கியமான பிரச்னைகளை ஏற்படுத்தும் என்று நம்புகிறார். ஆனால் உண்மையைச் சொல்வதென்றால், அவரை இந்த நாட்டில் உரிய மரியாதையுடன் வைத்திருப்பதைத் தவிர இந்தியாவுக்கு வேறு வழியில்லை.

இந்த நெருக்கடியான சூழலில் ஷேக் ஹசீனாவுடன் இந்தியா துணை நிற்க வேண்டும் என்பதில் நாட்டின் இராஜதந்திரிகள் மற்றும் சர்வதேச உறவுளுக்கான நிபுணர்கள் மத்தியில் ஒருமித்த கருத்து உள்ளது. இதைச் செய்யாவிட்டால், எதிர்காலத்தில் தெற்காசியாவின் எந்தத் தலைவரும் அல்லது எந்த அண்டை நாடும் இந்தியாவின் நட்பை நம்ப முடியாது.

இந்தியா-வங்கதேசத்தின் பழைய நட்பின் கண்ணியத்தைக் காப்பாற்றுவதற்கான மிகவும் மரியாதைக்குரிய வழி, ஷேக் ஹசீனாவை இந்தியாவில் தேசிய விருந்தினராக தேவைப்படும் வரை வைத்திருப்பதுதான்.

1975 இல் ஷேக் முஜிபுர் ரஹ்மான் படுகொலைக்குப் பிறகு ஷேக் ஹசீனாவும் அவரது குடும்பத்தினரும் இந்தியாவில் தஞ்சம் அடைந்தனர். அந்த சமயத்தில் அவருக்கு அரசியல் புகலிடம் வழங்கப்படவில்லை என்பதை டெல்லியை தளமாகக் கொண்ட சிந்தனைக் குழுவான IDSA இன் மூத்த சக ஊழியர் ஸ்மிருதி பட்நாயக் நினைவுபடுத்துகிறார்.

அந்த சமயத்தில், ஹசீனாவின் அடையாளம் ரகசியமாக வைக்கப்பட்டு, அவர் தேசிய விருந்தினராக வைக்கப்பட்டார்.

அப்போது, ​​இந்த முடிவுக்கு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி ஒப்புதல் அளித்திருந்தார். அந்தச் சம்பவத்திற்குப் பிறகு கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்குப் பிறகு, தற்போதைய நரேந்திர மோதி அரசாங்கமும் அதே பாதையைப் பின்பற்றுகிறது.

1975 ஆம் ஆண்டு முதல் 1981 ஆம் ஆண்டு வரை சுமார் ஆறு வருடங்கள் ஹசீனா மற்றும் அவரது குடும்பத்தாரின் அடையாளத்தை ரகசியமாகவும், ஊடகங்களின் பார்வையில் இருந்து விலக்கியும் வைத்திருந்தனர். ஆனால் தற்போதைய கால கட்டத்தில் அது சாத்தியமில்லை.

ஷேக் ஹசீனா, இந்தியா - வங்கதேசம்

பட மூலாதாரம், Getty Images

இம்முறை விருந்தோம்பலின் தன்மை மாறியுள்ளது. இந்தியாவின் கருத்துப்படி, ஷேக் ஹசீனாவை விருந்தினராக இங்கு தங்க அனுமதிப்பது தற்போதுள்ள பிரச்னைக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு.

இருப்பினும், ஷேக் ஹசீனா இந்தியாவில் இருப்பது இந்தியாவிற்கும் வங்கதேசத்தின் புதிய அரசாங்கத்திற்கும் இடையிலான பரஸ்பர உறவுகளில் ஒரு தடையாக மாறும் என்று பல நிபுணர்கள் நம்புகின்றனர்.

லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் பேராசிரியரும், தெற்காசிய அரசியல் ஆராய்ச்சியாளருமான அவினாஷ் பாலிவால், ஷேக் ஹசீனா இந்தியாவில் தங்கினால், இரு நாடுகளுக்கும் இடையேயான பரஸ்பர உறவுகளில் ஒப்பந்தம் முறியாமல் இருக்கலாம், ஆனால் இருதரப்பு இராஜதந்திர நடவடிக்கைகளில் நிச்சயமாக சிக்கல் ஏற்படும்” என்கிறார்.

“வங்கதேசத்தில் யாருக்கு எதிராக போராட்டம் மற்றும் ஆட்சிக்கவிழ்ப்பு நடந்ததோ, அவர் இந்தியாவில் தஞ்சம் அடைந்தால், அது இருநாடுகளுக்கு இடையேயான உறவில் அசௌகரியத்தை ஏற்படுத்தும். ஹசீனாவுக்கு அரசியல் புகலிடம் கொடுக்கும் சூழல் ஏற்பட்டால் அது இராஜதந்திர குழப்பத்தை மேலும் அதிகரிக்கும்.” என்று அவர் கூறினார்.

இந்தியாவின் கருத்துப்படி, ஷேக் ஹசீனா இந்தியாவில் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் நாட்டின் விருந்தாளியாக தங்கலாம். அதுவரை எந்த பிரச்னையும் ஏற்படாது.

அரசியல் புகலிடம் தருவதில் உள்ள சாதக, பாதகங்கள்

ஷேக் ஹசீனா, இந்தியா - வங்கதேசம்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, ஷேக் ஹசீனா ஜூன் மாதம் காந்தி குடும்பத்தைச் சந்தித்தார்

இதையெல்லாம் மீறி, எதிர்காலத்தில் ஷேக் ஹசீனாவுக்கு அரசியல் புகலிடம் வழங்குவது குறித்து இந்தியா பரிசீலிக்க வேண்டியிருக்கும்.

முன்னதாக, திபெத்தின் தலாய் லாமா, மாலத்தீவின் முகமது நஷீத், ஆப்கானிஸ்தானின் முகமது நஜிபுல்லா போன்ற பல வெளிநாட்டு தலைவர்களுக்கு இந்தியா அரசியல் புகலிடம் அளித்துள்ளது.

புகலிடம் பெற்ற போதிலும், நஜிபுல்லாவால் இந்தியாவுக்கு வர முடியவில்லை. ஆனால் அவரது மனைவியும் குழந்தைகளும் நீண்ட காலம் டெல்லியில் தங்கியிருந்தனர்.

உயர்மட்ட வெளிநாட்டுத் தலைவருக்கு அடைக்கலம் கொடுத்தால், அதை நாடாளுமன்றத்தில் அறிவிக்க வேண்டும். முடிவெடுப்பதற்கு முன், பல்வேறு அரசியல் கட்சிகளுடன் இந்த விவகாரம் விவாதிக்கப்படும். இருப்பினும், அவ்வாறு செய்ய வேண்டியது கட்டாயமில்லை.

தலாய் லாமா விஷயத்தில், அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவே 1959-ல் இந்த முடிவை நாடாளுமன்றத்தில் அறிவித்தார். சில ஆண்டுகளுக்குப் பிறகு, முகமது நஜிபுல்லாவின் குடும்பத்திற்கு அரசியல் புகலிடம் அளிப்பது குறித்து வெளியுறவு அமைச்சர் ஐ.கே.குஜ்ரால் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஷேக் ஹசீனா முதன் முதலில் 1975 மற்றும் 1981 க்கு இடையில் இந்தியாவில் தங்கியிருந்த போது, ​​அவர் விருந்தினராக தான் தங்கினார். எனவே நாடாளுமன்றத்தில் அறிவிக்க வேண்டிய நிலை ஏற்படவில்லை.

ஆனால் அந்த நேரத்தில் அவர் மறைந்த ஷேக் முஜிபுர் ரஹ்மானின் மகளாக இருந்தார், இப்போது அவர் முன்னாள் பிரதமராக உள்ளார். சுதந்திர வங்கதேச வரலாற்றில் சுமார் 21 ஆண்டுகளாக ஹசீனா பிரதமராக இருந்துள்ளார்.

இத்தகைய அரசியல் ஆளுமையை இந்தியாவில் நீண்டகாலம் வைத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால், அவருக்கு ‘புகலிடம்’ வழங்குவது எதிர்காலத்தில் பரிசீலிக்கப்படலாம் என்று சில பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

ஷேக் ஹசீனாவுக்கு அரசியல் புகலிடம் வழங்குவதில் உள்ள ஒரு சாதகமான விஷயம் என்னவென்றால், இந்தியாவில் எந்த அரசியல் கட்சியும் இந்த திட்டத்தை எதிர்க்காது.

ஆளும் பாஜக மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுடனும் ஹசீனா நல்லுறவைக் கொண்டுள்ளார். அவர் நரேந்திர மோதி மற்றும் காந்தி குடும்பத்தைச் சேர்ந்த சோனியா காந்தி, ராகுல் காந்தியுடன் ‘தனிப்பட்ட உறவையும்’ உருவாக்கியுள்ளார்.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் தெற்காசிய ஆய்வுப் பேராசிரியர் சஞ்சய் பரத்வாஜ் கூறுகையில், “தலாய் லாமாவுக்கு புகலிடம் அளிக்கும் முடிவை இந்தியாவில் இடதுசாரிகள் எதிர்த்ததை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அப்போது அவர்கள் சீனாவுடன் மிகவும் நெருக்கமாக இருந்தனர்.” என்றார்.

ஆனால், ஷேக் ஹசீனாவுக்கு புகலிடம் கொடுக்க முன்வந்தால், அதை அனைத்துத் தரப்பினரும் வரவேற்பார்கள் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

ஷேக் ஹசீனாவுக்கு அரசியல் புகலிடம் வழங்குவதில் உள்ள மற்றொரு நன்மை என்னவென்றால், இந்த அடிப்படையில் மட்டுமே, அவரை நாடு கடத்த வேண்டும் அல்லது வங்கதேசத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரிக்க முடியும்.

அதாவது சொந்த நாட்டிலேயே அரசியல் பழிவாங்கலுக்கு ஆளாக நேரிடும் என்ற அச்சம் காரணமாக இந்தியாவில் அரசியல் புகலிடம் தர முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனவே, அவர்களை நீதிக்காக அந்நாட்டிடம் ஒப்படைப்பது குறித்த கேள்வி எழவில்லை.

ஆனால் இதில் உள்ள மற்றுமொரு சிரமமான அம்சம் என்னவென்றால், ஹசீனா இந்தியாவில் அரசியல் தஞ்சம் பெற்றால், அது வங்கதேசம் அரசாங்கத்துடனான இந்தியாவின் உறவில் சிக்கலை உருவாக்கும்.

வங்கதேசத்தில் உள்ள ஒரு பிரிவினரிடையே இந்தியாவுக்கு எதிரான உணர்வுகளும் தூண்டப்படும்.

தற்போது வங்கதேசத்தில் இந்தியாவின் முதலீடும், அங்கு நடக்கும் திட்டங்களில் அதன் பங்கும் பல நூறு கோடி டாலர் மதிப்புடையவை என்பதால் டெல்லி இந்த `ரிஸ்க்கை’ எடுக்குமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஷேக் ஹசீனா, இந்தியா - வங்கதேசம்

பட மூலாதாரம், SIRAJUDDIN AHMED

படக்குறிப்பு, தனது சகோதரி ரெஹானாவுடன் ஷேக் ஹசீனா

வங்கதேசத்தில் ஹசீனாவுக்கு பிடிவாரண்ட்

வங்கதேச நீதிமன்றம் அக்டோபர் 17-ஆம் தேதியன்று ‘தப்பியோடிய’ ஷேக் ஹசீனாவுக்கு எதிராக கைது உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை உடனடியாக அமல்படுத்த நடவடிக்கை எடுப்பதாக வங்கதேச அரசும் தெரிவித்துள்ளது.

இந்த வாரண்ட் ஒரு மாத காலத்திற்குள் நிறைவேற்றப்பட வேண்டும் என்றால், ஷேக் ஹசீனாவை ஒப்படைக்க வங்கதேச அரசு விரைவில் இந்தியாவிடம் எழுத்துப்பூர்வ கோரிக்கையை எழுப்பும் வாய்ப்புகள் அதிகம்.

ஆனால், அக்டோபர் 17-ஆம் தேதியன்று இதைப் பற்றி கேட்டபோது, ​ இந்திய அரசு கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது. செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், “நாங்களும் இதுபோன்ற செய்திகளைப் பார்த்தோம். ஆனால் தற்போது இந்த விவகாரத்தில் நாங்கள் எதுவும் கூற முடியாது” என்று கூறினார்.

டெல்லியில் உள்ள பல முன்னாள் இராஜதந்திரிகள் மற்றும் ஆய்வாளர்கள் ஏற்கனவே பிபிசி பங்களாவிடம், “இரு நாடுகளுக்கு இடையிலான நாடு கடத்தல் ஒப்பந்தத்தின் கீழ் ஷேக் ஹசீனாவை திருப்பி அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை எழுந்தால், அதை இந்தியா எந்த சூழ்நிலையிலும் ஏற்காது என்பது உறுதி. தேவைப்பட்டால் ஆயிரக்கணக்கான வாதங்களை முன்வைத்து வருடக்கணக்கில் இந்த விவகாரம் இழுத்தடிக்கப்படலாம்.” என்று கூறினர்.

நாடு கடத்தும் கோரிக்கையை நிராகரிக்க முறைப்படி அரசியல் புகலிடம் வழங்குவது மட்டுமே ஒரே வழி அல்ல; வேறு பல வழிகளும் உள்ளன.

ஷேக் ஹசீனாவை ஒரு தேசிய விருந்தினராக இந்தியாவில் வைத்திருப்பதன் மூலம் கூட நாடு கடத்தல் கோரிக்கையை நிராகரிக்க முடியும்.

அதனால்தான் ஷேக் ஹசீனாவை எந்த அடிப்படையில் வைத்திருக்கிறார்கள் என்பது முக்கியமல்ல, அவரை நீண்ட காலம் இங்கு வைத்திருக்க இந்தியா தயாராக உள்ளது என்பதை டெல்லியில் உள்ள நிபுணர்கள் நம்புகிறார்கள்.

டாக்காவிற்கான முன்னாள் இந்திய உயர் ஆணையர் ரிவா கங்குலி தாஸ் கூறுகையில், “அவர் விருந்தினராக தங்குகிறாரா அல்லது புகலிடம் பெறுகிறாரா என்பது முக்கியம் அல்ல. அவர் சரியான மரியாதையுடன் இந்தியாவில் தங்க வைக்கப்பட்டிருக்கிறாரா என்பதே முக்கியம்” என்றார்.

அவர்மேலும் கூறுகையில், “ஆங்கிலத்தில் `a rose is a rose’ என்று ஒரு பழமொழி உண்டு, அதாவது ரோஜாவை எந்த பெயரில் அழைத்தாலும் அது ரோஜாவாகவே இருக்கும். அதேபோல் ஷேக் ஹசீனா இந்தியாவில் எப்படி வசிக்கிறார் என்பது முக்கியமில்லை. ஒரு புகலிடம் கோரியோ அல்லது விருந்தாளியாகவோ, அவர் எப்படி இருந்தாலும் அவர் ஷேக் ஹசீனாவாகவே இருப்பார்.” என்று கூறினார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு