‘முடி உதிராது, கருப்பாக நீளமாக வளரும்’ என விளம்பரம் – இந்த எண்ணெயை பழங்குடியினர் எவ்வாறு தயாரிக்கின்றனர்?
- எழுதியவர், துளசி பிரசாத் ரெட்டி
- பதவி, பிபிசி செய்தியாளர்
ஒரு படத்தில் இரண்டு பெண்கள் தலையை ஒரு பக்கமாக சாய்த்து தங்களின் இடுப்புக்கும் கீழே நீண்டுள்ள கூந்தலை பெருமிதத்துடன் காட்டுகிறார்கள். அவர்களின் கைகளில் கருப்பு நிற எண்ணெய் கொண்ட ஒரு பாட்டில் உள்ளது.
இதுபோன்ற படங்கள் கொண்ட விளம்பரங்கள், சமூக ஊடகங்கள் மற்றும் ஆன்லைன் விற்பனை தளங்களில் தொடர்ந்து அதிகமாக நாம் காணலாம்.
ஆன்லைன் விற்பனை தளங்களில் ஆயுர்வேத எண்ணெய் என்று தேடும் போது, இதுபோன்ற படங்கள் இருக்கும் பல பாட்டில்களை நாம் பார்க்கலாம். இப்படியான பாட்டிலில் உள்ள எண்ணெய் பற்றி நிறைய விவாதங்கள் மற்றும் ஆய்வுகள் உள்ளன.
பல்வேறு திரைத்துறை பிரபலங்களும் மற்றும் சமூக ஊடக பிரபலங்களும் இந்த எண்ணெயைப் பாராட்டி புகழ்கிறார்கள். இதுவே மக்கள் பலர் இந்த எண்ணையை வாங்க ஈர்க்கின்றது.
இந்த எண்ணையின் பெயர் ‘ஹக்கிபிக்கி ஹேர் ஆயில்’.
இந்த எண்ணெய் ஹக்கிபிக்கி பழங்குடியினரால் தயாரிக்கப்படுவதால், இதற்கு ‘ஹக்கிபிக்கி எண்ணெய்’ என்று பெயர். 100-க்கும் மேற்பட்ட மூலிகைகளிலிருந்து எண்ணெய் தயாரிக்கப்படுவதாக ஹக்கிபிக்கி பழங்குடியினர் கூறுகின்றனர்.
ஆனால் இந்த பழங்குடியினர் வனப்பகுதியில் இருந்து எந்த மூலிகையையும் கொண்டு இதனை தயாரிப்பதில்லை என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஹக்கிபிக்கி எண்ணெய் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது மற்றும் அதன் வரலாறு என்ன என்பதை பற்றி பார்க்கலாம்.
ஹக்கிபிக்கி பழங்குடியினர் யார்?
கர்நாடகா மாநிலத்தின் ஷிவமோகா, ஹாசன், மாண்டியா மற்றும் மைசூர் மாவட்டங்களில் ஹக்கிபிக்கி பழங்குடியினர் வாழ்கின்றனர். 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்த பழங்குடியினரின் எண்ணிக்கை 12 ஆயிரம் ஆகும்.
கன்னட மொழியில் ‘ஹக்கிபிக்கி’ என்றால் ‘பறவையை வேட்டையாடுபவர்கள்’ என்று பொருள்.
“ஹக்கிபிக்கி பழங்குடியினரின் வம்சாவளி குஜராத் மாநிலத்துடன் தொடர்பு கொண்டவை. வரலாற்று தரவுகளின்படி இந்த மக்கள் முதலில் மேவார் பிரதேசத்தில் வாழ்ந்து வந்தனர், அப்போது ராணா பிரதாப் சிங் மேவார் அரசராக இருந்தார். போர் மற்றும் வறட்சி காரணமாக அவர்கள் ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டுக்கு இடம்பெயர்ந்தனர்”, என்று கர்நாடக ஆதிவாசி ரக்ஷா பரிஷத்தின் மாநிலத் தலைவர் எம்.கிருஷ்ணையா கூறுகிறார்.
தற்போது இந்த பழங்குடியினர் கல்வி கற்பதில் ஆர்வம் காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.
“ஹக்கிபக்கி பழங்குடியினர் பேசும் மொழி குஜராத்தியிலிருந்து வந்தது”, என்று மைசூர் பல்கலைக் கழகத்தில் மானுடவியலாளராக பணியாற்றும் டி.சி.நஞ்சுங்கா கூறுகிறார்.
இந்த எண்ணெயின் வரலாறு என்ன?
ஹக்கிபிக்கி பழங்குடியினர் தங்களது வாழ்வாதாரத்திற்காக பறவைகளை வேட்டையாடி வந்தனர். பறவைகளை வேட்டையாடுவது தடை செய்யப்பட்டதால், அவர்களில் சிலர் முடிக்கான எண்ணெய் தயாரிக்கத் தொடங்கினர்.
பக்ஷிராஜ்பூர் கிராமத்தில் வசிக்கும் சுதீஷ் கார்கே, ஹக்கிபக்கி பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்தவர்.
“எங்களது சமூகத்தை சேர்ந்தவர்கள் பல நூற்றாண்டுகளாக இந்த எண்ணெய் தயாரித்து வருகிறார்கள். எங்களது முந்தைய தலைமுறையினர் மைசூர் மகாராஜாவுக்கு இந்த மூலிகை எண்ணெயை தயாரித்து கொடுத்துள்ளனர். அவர்களிடம் இருந்து இந்த மூலிகை எண்ணெயை தயாரிப்பது எப்படி என்பதை நாங்கள் கற்றுக்கொண்டோம்”, என்று அவர் தெரிவித்தார்.
“நான் 60களில் இந்த எண்ணெயை தயாரித்து விற்பனை செய்ய ஆரம்பித்தேன். தொடக்கத்தில் குறைந்த அளவிலே தயாரித்தோம். இந்த எண்ணெயை விற்க நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் செல்ல வேண்டியிருந்தது. இதைப் பயன்படுத்தினால் தலைமுடி உதிராது மற்றும் முடி நீளமாக இருக்கும் என்று மக்களிடம் கூறுவோம். ஆரம்பத்தில், எண்ணெய் விற்பனை மூலம் அதிக வருமானம் இல்லை”. என்றார்.
அதன் பிறகு, சுதீஷ் வெளிநாடு சென்று இந்த மூலிகை எண்ணையை விற்கத் தொடங்கியுள்ளார். தற்போது இந்த எண்ணெய் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
“இந்த எண்ணெய் சூடான், சிங்கப்பூர் மற்றும் மலேசியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது”, என்று நஞ்சுங்கா கூறுகிறார்.
இந்த எண்ணெய் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?
இந்த எண்ணெய் 100-க்கும் மேற்பட்ட மூலிகைப் பொருட்களால் தயாரிக்கப்படுகின்றது என்று சுதீஷ் கார்கே தெரிவித்தார். ஆனால் அந்த மூலிகைகளின் பெயர்களையும் எண்ணெய் தயாரிக்கும் முறையையும் பற்றி கூற அவர் மறுத்துவிட்டார்.
“உங்களுக்காக வெறும் 10 மூலிகைகளின் பெயர்களை மட்டும் சொல்கிறேன். அவை சிகைக்காய், பூந்திக்கொட்டை, திரிமுகி, துளசி, பிராமி, வேப்பிலை, பிருங்கராஜா, மந்தாரம் பூ, ஆவாரம் பூ போன்ற மூலிகைகள்”, என்று அவர் கூறுகிறார்.
“எல்லா மூலிகைகளும் ஒரு வாரம் வெயிலில் காயவைக்கப்படுகின்றன. பின்னர் இரண்டு வகை எண்ணெயை கொதிக்க வைத்து அதில் காய்ந்த மூலிகைகளை போட்டு குறைவான தீயில் 24 மணி நேரம் கொதிக்க வைக்கப்படுகிறது”, என்று ஹக்கிபிக்கி எண்ணெய் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள அபிலாஷா ஜெயக்குமார் பிபிசியிடம் கூறினார்.
“இந்த எண்ணெயைப் பயன்படுத்துவது முடி உதிர்வைத் தடுக்கிறது, முடி நீளமாகிறது. மற்றும் இந்த இந்த எண்ணெயால் எந்தப் பக்கவிளைவுகளும் இல்லை”, என்றும் அவர் கூறுகிறார்.
எண்ணெய் தயாரிப்பவர்களின் இந்த கூற்று இதுவரை அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.
“இவை அனைத்தும் எண்ணெயில் பயன்படுத்தப்படும் மூலிகைகளை பொருத்தே அமையும். இந்த மூலிகை எண்ணெய் பயன்படுத்தினால் பலன் என்ன என்பதை பற்றி அறிவியல்பூர்வமாக உரிய ஆதாரங்களை வழங்க வேண்டும். ஒரு பொருளைப் பயன்படுத்தும் போது, அதன் நன்மை, தீமைகள் குறித்து வாடிக்கையாளர்களுக்குத் தெரிவிக்க வேண்டும்”, என்று மருத்துவர் ஜிதேந்திரா கூறுகிறார்.
பழங்குடியினரின் வாழ்வாதாரம்
இந்த எண்ணெய் தயாரிப்பு 1,000 குடும்பங்களுக்கு வாழ்வாதாரம் வழங்குவதாக இருக்கிறது என்று உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர். இந்த எண்ணெயை நீண்ட காலமாக விற்பனை செய்து வருவதாகவும், கடந்த சில ஆண்டுகளாகவே மக்கள் மத்தியில் இதற்கான தேவை அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர். கோவிட் பெருந்தொற்று காலத்தில், இந்த மூலிகை எண்ணெய்க்கான ஆன்லைன் ஆர்டர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்ததாக எண்ணெய் தயாரிக்கும் குடும்பங்கள் கூறுகின்றனர்.
2023 ஆம் ஆண்டு சூடானில் ஏற்பட்ட உள்நாட்டுப் போர் காரணமாக 100 ஹக்கிபிக்கி பழங்குடியினர் அங்கு சிக்கிக்கொண்டனர்.
அவர்கள் இந்திய அரசின் உதவியோடு பத்திரமாக நாடு திரும்பினர். பிறகு பிரதமர் நரேந்திர மோதி இவர்களை சந்தித்தார். அதற்கு பிறகே இந்த பழங்குடி சமூகம் பற்றி நம் நாட்டு மக்கள் அனைவரும் அறிந்துகொண்டனர்.
பிரதமர் மோதியை சந்தித்த ஹக்கிபிக்கி பழங்குடியினரில் ராஜேஸ்வரியும் ஒருவர்.
“பிரதமர் எங்களைச் சந்தித்த போது, நாங்கள் ஏன் சூடானுக்குச் சென்றோம் என்று அவர் கேட்டார். அவரிடம் உண்மையைச் சொன்ன போது அவரும் மகிழ்ச்சியடைந்தார்”, என்று ராஜேஸ்வரி பிபிசியிடம் தெரிவித்தார்.
பிரதமருடனான அவரது சந்திப்புக்குப் பிறகு ஹக்கிபிக்கி மூலிகை எண்ணெய் மிகவும் பிரபலமானது. திரைப்பட பிரபலங்கள், யூடியூபர்கள் மற்றும் சமூக ஊடக பிரபலங்கள் என பலரும் இந்த எண்ணெய்க்காக விளம்பரம் செய்துவருகின்றனர். அதற்கு பிறகு இந்த எண்ணெய்க்கான தேவை கடுமையாக அதிகரித்துள்ளது. அரை லிட்டர் மூலிகை எண்ணையின் விலை 1,500 ரூபாய்.
இன்று மைசூரு மாவட்டத்தில் ஹன்சூர் அருகே உள்ள பல கிராமங்களில் ஹக்கிபிக்கி மூலிகை எண்ணெய் ஒரு முக்கிய வணிகமாக மாறியுள்ளது. ஹன்சூரிலிருந்து குர்புரா செல்லும் வழியில், பங்கிராஜ்புரா 1 மற்றும் பக்ஷிராஜ்புரா 2 போன்ற கிராமங்களில் இந்த மூலிகை எண்ணெயை மட்டுமே உற்பத்தி செய்யும் பல குடும்பங்கள் உள்ளன. சிவமோகா மாவட்டத்திலும் இந்த எண்ணெய் உற்பத்தி செய்யப்படும் சில கிராமங்கள் உள்ளன.
பிரபலங்களின் விளம்பரம்
ஹக்கிபிக்கி பழங்குடியினர், இந்த மூலிகை எண்ணையை மிக தீவிரமாக ஊக்குவித்து வருகின்றனர்.
சில சமூக ஊடக பிரபலங்கள் மூலிகை எண்ணெய் பற்றி விளம்பரம் செய்வதற்காக பணம் பெறுகிறார்கள். எண்ணெய் உற்பத்தி மற்றும் விற்பனையில் உள்ள போட்டியே இதற்குக் காரணம் என்று உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர்.
சில பிரபலங்களுக்கு பணம் கொடுக்கப்படுகிறது, சிலர் இலவசமாக விளம்பரம் செய்கிறார்கள் என்கிறார் எம். கிருஷ்ணையா.
பாலிவுட் திரைப்பிரபலங்களான சோனு சூட் மற்றும் ஃபரா கான் ஆகியோரும் இந்த மூலிகை எண்ணெயை விளம்பரப்படுத்தியுள்ளனர். இதுபோன்ற பிரபலங்கள் இருக்கும் புகைப்படங்கள் பின்னர் விளம்பரங்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன.
“சோனு சூட் மற்றும் கிரேட் காளி ஆகிய இருவரும் எங்களிடம் வந்து இந்த மூலிகை எண்ணெய் பற்றி தெரிந்துகொண்டனர். நாங்கள் எந்த பிரபலங்களுக்கும் விளம்பரம் செய்ய சொல்லி அதிகம் செலவு செய்வதில்லை, அவர்களே இதன் மீது ஆர்வம் காட்டி வருவார்கள்”, என்கிறார் எம். கிருஷ்ணையா.
இதுபோல பிரபலங்களின் விளம்பரங்களால் இந்தியா முழுவதிலும் இருந்து ஆர்டர்கள் வருகின்றன என்று எண்ணெய் தயாரிப்பாளர் ஒருவர் கூறுகின்றனர்.
“நான் ஆன்லைனில் ஆர்டர் செய்தேன், போலி எண்ணெயே கிடைத்தது. எனவே உண்மையான எண்ணெய் வாங்கவே இங்கு வந்துள்ளேன். இன்ஸ்டாகிராமில் சோனு சூட்டின் வீடியோக்களை பார்த்தேன். பல பிரபலங்கள் இங்கு வந்து எண்ணெய் வாங்கியிருக்கிறார்கள் என்று தெரியவந்தது. அதனால் நானும் இந்த எண்ணெயை வாங்கி பயன்படுத்தலாம் என்று இங்கு வந்துள்ளேன்”, என்கிறார் ரஞ்சித். அவர் பீகாரில் இருந்து இந்த எண்ணெய் வாங்குவதற்காக கர்நாடகா சென்றுள்ளார்.
இந்த எண்ணெய் விற்பனையினால் பழங்குடியினரின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது.
தற்போது தலைமுடி எண்ணெய் வியாபாரம் நன்றாக நடக்கிறது. மாதம்தோறும் 2-3 கோடி ரூபாய் மதிப்பிலான எண்ணெய் விற்பனை செய்யப்படுகின்றது என்கிறார் எம்.கிருஷ்ணையா.
ஹக்கிபிக்கி பழங்குடியினரின் சிலர் கல்வியறிவு பெற்றவர்கள், கணினி சார்ந்த வேலை அல்லது வாடிக்கையாளர் சேவை போன்ற வேலை செய்கிறார்கள்.
“இங்கு வரும் ஃபோன் அழைப்புகளை மேற்பார்வை செய்வது தான் எனது வேலை. இதற்காக மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் வாங்குகிறேன்”, என்கிறார் கவுரி பித்தனூர் கிராமத்தைச் சேர்ந்த தாரு.
படித்தவர்கள் சிலரும் இந்த மூலிகை எண்ணெய் தயாரிப்பில் ஈடுபடிக்கின்றனர். இதில் என்ஜினியரிங் படித்த சாந்தி குமாரும் ஈடுபட்டுள்ளார்.
“நான் பெங்களூருவில் மூன்றாண்டுகள் பணிபுரிந்தேன், அங்கு சம்பளம் போதவில்லை. அதனால், வேலையை விட்டுவிட்டு, மூலிகை எண்ணெய் தயாரிப்பில் இறங்கினேன். ஹக்கிபிக்கி பழங்குடியினரின் கிராமத்திற்குச் சென்ற போது, அவர்களின் மாற்றத்தைக் கண்டு மிகவும் ஆச்சரியமடைந்தேன். பல குடும்பங்கள் பெரிய வீடுகளை கட்டியுள்ளனர்”, என்று சாந்தி குமார் தெரிவித்துள்ளார்.
மூலிகை எண்ணெய் தயாரிப்பில் இருந்து வரும் வருமானம் இங்குள்ள பழங்குடியினரின் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. பலர் விலை உயர்ந்த கார்களை வாங்கியுள்ளனர். திருமண விழாக்களுக்கும் நிறைய பணம் செலவழிக்கிறார்கள்.
காடுகளில் இருந்து மூலிகைகளை எடுப்பதில்லை
ஹக்கிபிக்கி எண்ணெய் மூலிகைகளில் இருந்து தயாரிக்கப்படுவதாக அதன் உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர். ஆனால் கர்நாடக வனத்துறை அதிகாரிகள் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்கள்.
“ஹக்கிபிக்கி பழங்குடியினர் காடுகளில் இருந்து மூலிகைகளை எடுப்பதில்லை. அந்த எண்ணெய் பற்றி எங்களுக்கு எந்த தகவலும் இல்லை”, பிபிசியிடம் பேசிய மைசூர் DCFO சீமா கூறுகிறார்.
கர்நாடக மாநில பழங்குடியினர் துறையும் இதே பதிலை கூறியுள்ளது.
“நாங்கள் எந்த ஹக்கிபிக்கி பழங்குடியினருக்கும் எந்தவிதமான பயிற்சியும் அளிக்கவில்லை. அவர்கள் தயாரிக்கும் எண்ணெய் பற்றி எங்களுக்குத் தெரியாது”, என்று கங்காதர் என்ற அதிகாரி பிபிசியிடம் கூறினார்.
அரசு இந்த எண்ணெய்க்கு சரியான அங்கீகாரத்துடன், மக்களிடம் அதை பற்றி விளம்பரப்படுத்தவும் வேண்டும் என்கிறார் எம். கிருஷ்ணையா.
“மூலிகைகளை பெற அரசு நிதி உதவி வழங்க வேண்டும். இதற்கு முறையாக உரிமம் வழங்க வேண்டும். ஆயுஷ் துறை சான்றிதழ் வழங்க வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.