திமுகவுடன் கூட்டணிக் கட்சிகள் முரண்பட்டு நிற்கின்றனவா? எடப்பாடி பேச்சு பற்றி திமுக கூறுவது என்ன?

திமுக - அதிமுக

பட மூலாதாரம், EDAPPADI PALANISAMY/FACEBOOK

படக்குறிப்பு, எடப்பாடி கே. பழனிச்சாமி, அ.தி.மு.கவின் பொதுச் செயலாளர்
  • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பதவி, பிபிசி தமிழ்

தி.மு.க. எப்போதுமே சொந்தக் கட்சியை நம்பியதில்லை என்றும் கூட்டணியை நம்பித்தான் இருந்தது என்றும் தற்போது கூட்டணிக் கட்சிகளே தி.மு.கவை கடுமையாக எதிர்க்க ஆரம்பிப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிச்சாமி.

உண்மையிலேயே, தி.மு.கவின் கூட்டணிக் கட்சிகள் சமீப காலமாக திமுகவை எதிர்க்க ஆரம்பித்துள்ளனவா? தமிழ்நாட்டு அரசியலில் என்ன நடக்கிறது?

திமுக மீது எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில், அ.தி.மு.கவின் 53வது ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அ.தி.மு.கவின் பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிச்சாமி, தி.மு.கவைக் கடுமையாகச் சாடினார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலோடு ஒப்பிட்டால் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.கவின் வாக்கு சதவீதம் உயர்ந்திருப்பதாகவும் தி.மு.கவின் வாக்கு சதவீதம் குறைந்திருப்பதாகவும் குறிப்பிட்டார். அதேபோல, தி.மு.க. சொந்தக் கட்சியை நம்பாமல் கூட்டணிக் கட்சிகளையே நம்பியிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், “கூட்டணிக்குள் புகைந்து கொண்டிருக்கிறது. விரைவில் நெருப்பு பற்றும். எவ்வளவு நாளைக்குத்தான் தி.மு.கவைத் தாங்கிப் பிடிப்பார்கள். தி.மு.க. செய்கிற தவறுகளையெல்லாம் தாங்கிப்பிடித்தால், அந்தக் கட்சிகள் செல்வாக்கை இழந்துவிடும்.

இதையெல்லாம் எண்ணித்தான் தி.மு.கவை எதிர்க்க ஆரம்பித்துள்ளனர். எவ்வளவோ பிரச்னை வந்த போதும் அவர்கள் தி.மு.கவை எதிர்த்ததில்லை. ஆனால், இப்போது எதிர்க்க ஆரம்பித்துள்ளனர். மக்கள் பிரச்னை அதிகமாகியிருப்பதால், செல்வாக்கு சரிந்திருப்பதால் கூட்டணி கட்சிகள் எதிர்க்க ஆரம்பித்துள்ளனர்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

திமுக - அதிமுக

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

திமுக தலைமையில் மெகா கூட்டணி

தி.மு.க. தலைமையில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளோடு மெகா கூட்டணி உருவாகி கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போது இந்தக் கூட்டணியில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி ஆகிய கட்சிகள் இருக்கின்றன. 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக இந்தக் கூட்டணி இந்தியா கூட்டணியாக பெயர் மாற்றம் பெற்றது.

தமிழ்நாட்டில் திமுக தலைமையில் மெகா கூட்டணி உருவான பிறகு நடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல், 2024 நாடாளுமன்றத் தேர்தல் என மூன்று முக்கியத் தேர்தல்களிலும் இந்தக் கூட்டணியே வெற்றிபெற்றுள்ளது.

தேர்தல்கள் நெருங்கும் தருணத்தில் தொகுதி ஒதுக்கீடு குறித்த முரண்பாடுகள் எழுந்தாலும், கூட்டணியில் இதுவரை பிளவு ஏற்படவில்லை.

அ.தி.மு.க. கூட்டணியைப் பொருத்தவரை தொடர்ந்து மாற்றம் கண்டுவந்திருக்கிறது. 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை பா.ம.க., பா.ஜ.க., தே.மு.தி.க., புதிய தமிழகம், புதிய நீதி கட்சி, த.மா.கா. ஆகிய கட்சிகளுடன் இணைந்து அக்கட்சி எதிர்கொண்டது.

2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது தே.மு.தி.க. இந்தக் கூட்டணியில் இருந்து விலகியது. வேறு சில சிறிய கட்சிகள் கூட்டணியில் இணைந்தன.

2024 நாடாளுமன்றத் தேர்தலின் போது, தே.மு.தி.க., புதிய தமிழகம், எஸ்டிபிஐ ஆகிய கட்சிகளுடன் எதிர்கொண்டது அக்கட்சி.

திமுக - அதிமுக

பட மூலாதாரம், Facebook/thirumaofficial

படக்குறிப்பு, திருமாவளவன், விசிக தலைவர்

திமுக – விசிக இடையே விரிசல் என சர்ச்சை

இந்நிலையில், தி.மு.கவின் தொடர் வெற்றிகளுக்கு தி.மு.க. அமைத்துள்ள கூட்டணி ஒரு முக்கியக் காரணமாகக் கருதப்படும் நிலையில், அந்தக் கூட்டணியில் உள்ள கட்சிகள் தெரிவிக்கும் ஒவ்வொரு கருத்தும், அவை நடத்தும் ஒவ்வொரு பொதுக்கூட்டமும் கூர்ந்து கவனிக்கப்படுகின்றன.

இந்த நிலையில்தான், கடந்த சில மாதங்களில் தி.மு.க. கூட்டணியில் உள்ள சில கட்சிகள் எடுத்த நிலைப்பாடுகள், தெரிவித்த கருத்துகளை வைத்து, கூட்டணிக்குள் முரண்பாடுகள் ஏற்பட்டிருப்பதாக தமிழ்நாட்டு அரசியல் அரங்கில் பேசப்படுகிறது.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 69 பேர் உயிரிழந்த விவகாரம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மாநாட்டை நடத்தப் போவதாக வி.சி.க. அறிவித்தது.

அதில் அ.தி.மு.கவும் விரும்பினால் கலந்துகொள்ளலாம் எனவும் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் பேட்டியளித்தார். மேலும் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளரான ஆதவ் அர்ஜுன், ‘ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு’ என பேச ஆரம்பித்தார்.

மேலும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை விமர்சிக்கும் வகையிலும் சிலவற்றைப் பேசினார். இது தி.மு.க. – வி.சி.க. கூட்டணியிலேயே விரிசலை ஏற்படுத்திவிடுமோ என்று பேசும் அளவுக்குச் சென்றது. ஆனால், தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினின் தலையீட்டிற்குப் பிறகு, இந்த விவகாரம் சற்றுத் தணிந்தது. மது மற்றும் போதை ஒழிப்பு மாநாட்டில் தி.மு.கவும் கலந்துகொண்டது.

திமுக - அதிமுக

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சாம்சங் இந்தியா நிறுவன தொழிலாளர்கள் போராட்டத்தின் ஒரு காட்சி

திமுக – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சர்ச்சை

அடுத்ததாக, சாம்சங் நிறுவனத்தில் சிஐடியு தொழிற்சங்கம் அமைக்க அனுமதி அளிக்கப்படாத விவகாரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அரசுடன் கடுமையாக முரண்பட்டது. இந்தப் போராட்டம் ஒரு கட்டத்தில் தீவிரமடைந்த நிலையில், அக்டோபர் எட்டாம் தேதி பலரை வீடு புகுந்து காவல்துறை கைதுசெய்தது.

இதற்கு சி.ஐ.டி.யு. கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ‘பிரச்னையை பெரிதாக்காதீர்கள், இந்தப் பிரச்னை சாம்சங்கில் மட்டுமா இருக்கிறது’ என தி.மு.கவின் தொழிற்சங்கமான தொ.மு.சவின் சார்பில் அறிக்கை வெளிவந்தது. தற்போது, இந்தப் விவகாரம் தற்காலிகமாக முடிவுக்கு வந்திருக்கிறது.

திமுக – காங்கிரஸ் சர்ச்சை

காங்கிரசைப் பொறுத்தவரை, கு. செல்வப்பெருந்தகை மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்றவுடன், “திமுகவை காங்கிரஸ் ஆதரிக்கிறது. ஆனால் தோழமை என்பது வேறு, சார்ந்திருத்தல் என்பது வேறு. எத்தனை நாட்களுக்கு நாம் சார்ந்திருக்கப் போகிறோம்?” என்று குறிப்பிட்டார்.

இது ஒரு சர்ச்சையான நிலையில், இதற்கு விளக்கமளித்து பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவந்தார் செல்வப்பெருந்தகை.

கூட்டணியில் உள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவரான வேல்முருகன், சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு நீண்ட காலமாகவே அதிருப்தியில் இருந்துவருகிறது. அவர் அவ்வப்போது அளிக்கும் பேட்டிகளில் அது வெளிப்பட்டுவருகிறது.

திமுக - அதிமுக

பட மூலாதாரம், X/AIADMK

படக்குறிப்பு, திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில், அ.தி.மு.கவின் 53வது ஆண்டு துவக்க விழா நடைபெற்றது.

அதிமுக வாக்கு வங்கி அதிகரித்துள்ளதா?

இந்தப் பின்னணியில்தான் எடப்பாடி கே. பழனிச்சாமி, கூட்டணிக்குள் புகைந்துகொண்டிருப்பதாக கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.

“எடப்பாடி கே. பழனிசாமி சொல்வதைப்போல நடப்பதற்கான எந்த வாய்ப்பும் தற்போது தெரியவில்லை. சில சம்பவங்களைச் சுட்டிக்காட்டி பா.ஜ.கவும் தி.மு.கவும் நெருங்குவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயற்சித்தார்கள்.

ஆனால், இந்தி மாத விழா, தமிழ்த் தாய் வாழ்த்து போன்ற விவகாரங்களில் கடுமையான கருத்துகளைத் தெரிவித்து, இந்த விஷயத்திற்கு தி.மு.க. முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. இதை தவிர இன்னொரு விஷயத்தையும் கருத்தில்கொள்ள வேண்டும்.

தி.மு.கவில் உள்ள கூட்டணி தொடர்ந்து வெற்றிபெற்று வருகிறது. அப்படி ஒரு வெற்றிபெறும் கூட்டணியில் இருப்பவர்கள் எதற்காக வெளியில் வரவேண்டும்? கூட்டணிக்கு கட்சிகளை ஈர்க்க வேண்டும் என்றால் அ.தி.மு.க. ஒரு வலுவான தோற்றத்தை உருவாக்க வேண்டும்” என்கிறார் மூத்த பத்திரிக்கையாளர் ப்ரியன்.

அ.தி.மு.கவின் வாக்கு சதவீதம் அதிகரித்திருக்கிறது என்ற கருத்தும் சரியானதல்ல என்கிறார் ப்ரியன். “2019ஆம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க. 20 இடங்களில் போட்டியிட்டு 19.39 சதவீத வாக்குகளைப் பெற்றது.

2024ஆம் ஆண்டு தேர்தலில் 34 இடங்களில் போட்டியிட்டு 20.46 சதவீத இடங்களைப் பெற்றது. ஆகவே, ஒரு தொகுதிக்கென அ.தி.மு.க. பெற்ற வாக்கு சதவீதம் குறைந்திருக்கிறது” என்கிறார் அவர்.

‘திமுக கூட்டணிக்குள் முரண்பாடு முற்றுகிறது’

ஆனால், தி.மு.க. கூட்டணியில் முரண்பாடுகள் முற்றிவருவதாகச் சொல்கிறார் அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்பப் பிரிவின் இணைச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார்.

“கூட்டணிகள் தேர்தல் நேரத்தில்தான் உருவாகின்றன என்றாலும், அவை ஒவ்வொரு முக்கியமான தருணத்திலும் தொடர வேண்டும். வி.சி.கவும் இடதுசாரிகளும் தி.மு.க. அரசுடன் முரண்படுவதை கடந்த சில மாதங்களில் காட்டிவிட்டார்கள். ஆகவே, இந்தக் கூட்டணியில் விரிசல் இருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

வி.சி.கவின் கொடியை அமைக்க அனுமதி மறுத்தது, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த சாம்சங் ஊழியர்களை கைதுசெய்தது, பந்தலை பிரித்தது போன்றவை இந்த விரிசலைத்தான் காட்டுகின்றன. கூட்டணிகள் என்பவை தேர்தலை ஒட்டி, வாக்குகளுக்காக உருவாக்கப்படுபவை என சில பேட்டிகளில் திருமாவளவன் சுட்டிக்காட்டியிருக்கிறார். அவர் சொல்வதன்படி பார்த்தால், தற்போது கூட்டணியே இல்லை என்றுதான் அர்த்தம். புதிய கூட்டணி எப்படி வேண்டுமானாலும் அமையலாம்” என்கிறார் அவர்.

திமுக - அதிமுக

பட மூலாதாரம், CTR.Nirmalkumar / X

படக்குறிப்பு, சி.டி.ஆர். நிர்மல்குமார், அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்பப் பிரிவு

தமிழ்நாட்டில் கூட்டணி கணக்குகள் மாறுமா?

அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்றாலும் அதனை எதிர்பார்த்து ஒரு பெரிய கட்சி காத்திருக்க முடியாது என்கிறார் ப்ரியன். “எடப்பாடி கே. பழனிச்சாமிதான் பொதுச் செயலாளர், கட்சியின் சின்னம் அவருக்குத்தான் என நீதிமன்றம் கூறிவிட்டது. இருந்தும், தொடர் தோல்விகள்தான் கிடைத்திருக்கின்றன.

2021-ஆம் ஆண்டில் அவர் அமைத்த கூட்டணிக்கு ஒரு சிறிய அளவில் பலன் கிடைத்தது. அதுபோல, எல்லோரையும் இணைத்து கூட்டணியை உருவாக்க வேண்டும். வெற்றிபெற்றுக் காட்ட வேண்டும். அப்போதுதான் அவர் மீது நம்பிக்கை வரும்” என்கிறார் ப்ரியன்.

ஆனால், தி.மு.கவிலிருந்து கட்சிகள் வெளியேறினால், அவற்றின் இயல்பான கூட்டணியாக அ.தி.மு.கவே இருக்கும் என்கிறார் நிர்மல்குமார். “வேறு ஆப்ஷனே தமிழ்நாட்டில் கிடையாது. இந்தக் கட்சிகள் பா.ஜ.க. பக்கம் போக முடியாது. அ.தி.மு.கவும் அப்படித்தான். இருந்தாலும் இது தொடர்பாக, தேர்தல் நேரத்தில் பொதுச்செயலாளர்தான் முடிவெடுப்பார்” என்கிறார் நிர்மல்குமார்.

திமுக சொல்வது என்ன?

ஆனால், ஒட்டுமொத்தமாக இந்த விவகாரத்தைப் புறந்தள்ளியிருக்கிறது தி.மு.க. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, “தி.மு.க. கூட்டணி உடைந்துபோகும் என்பது எடப்பாடி கே. பழனிச்சாமியின் பகல் கனவு. திமுக கூட்டணியை உடைக்கவோ, எரிக்கவோ, கொளுத்தவோ, நொறுக்கவோ, நசுக்கவோ யாராலும் முடியாது. இவையெல்லாம் பழனிசாமியின் கூட்டணிக் கட்சிகளுக்கு வேண்டுமென்றால் ஏற்படுமே தவிர திமுக கூட்டணிக்கு ஏற்படாது” என்று கூறியிருக்கிறார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு