ஈஸ்டர் தாக்குதல் விசாரணையை முடக்க ரணில் சதி!

by guasw2

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான அறிக்கை அனுர அரசிற்கு எதிராக திரும்பியுள்ள நிலையில் முறையான விசாரணைகளை ஆரம்பிக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கடந்த 5 வருடங்களாக சுயநினைவின்றி கோமா நிலையில் இருந்தவர்கள் தற்போது ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைகள் குறித்து கேள்வி கேட்க ஆரம்பித்துள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இரண்டு அறிக்கைகளும் சட்டமா அதிபர், பாதுகாப்புச் செயலாளர், பொது பாதுகாப்பு அமைச்சு செயலாளர், கொழும்பு பேராயரின்  செயலாளர் ஆகியோரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் தமக்கு அறிவித்ததாகத் ஜனாதிபதி தெரிவித்தார். எனவே அவை இரகசிய அறிக்கைகள் அல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் அந்தக் குழுக்கள் விசாரணைக் குழுக்கள் அல்ல என்று கூறிய ஜனாதிபதி, விசாரணைகளை நசுக்குவதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சில குழுக்களை அமைத்தார் என்றும் கூறினார்.

”இந்த இரண்டு குழுக்களும் ரணில் விக்கிரமசிங்கவினால் அமைக்கப்பட்டவை. இவை விசாரணைக் குழுக்கள் அல்ல. ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான சனல்-4 காணொளியின் அறிக்கையை ஆராய ஒரு குழுவும், பாதுகாப்புப் படையினருக்கு தொடர்பு உள்ளதா என ஆராய இரண்டாவது குழுவும் அமைக்கப்பட்டது. இந்த தாக்குதல்களுடன் தொடர்புடைய விசாரணைகளை நசுக்க ரணில் விக்கிரமசிங்க இவ்வாறான சில குழுக்களை அமைத்தார்” எனவும் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்