ஷபூர்ஜி சக்லத்வாலா: டாடா குடும்ப வாரிசு ஒரு கம்யூனிஸ்டாக மாறியது எப்படி? காந்தியுடன் முரண்பட்டது ஏன்?
- எழுதியவர், செரிலன் மோல்லன்
- பதவி, பிபிசி நியூஸ், மும்பை
‘ஷபூர்ஜி சக்லத்வாலா’ என்ற மனிதரின் பெயர் பெரும்பாலான மக்களுக்குப் பரிச்சயமில்லாமல் இருக்கலாம். ஆனால் இந்தியாவின் பெரும் செல்வமிக்க டாடா குடும்பத்தின் உறுப்பினரான இவரைப் பற்றிச் சொல்ல நிறைய கதைகள் உள்ளன.
ஷபூர்ஜி சக்லத்வாலாவின் வாழ்க்கை பல்வேறு திருப்பங்களைக் கொண்டது. அவரது வாழ்க்கை தொடர்ச்சியான போராட்டம் மற்றும் விடாமுயற்சியால் நிறைந்திருந்தது. எந்தச் சூழலிலும் அவர் தனது வசதியான உறவினர்களின் குடும்பப் பெயரையோ, அவர்களது செல்வாக்கையோ பயன்படுத்திக் கொள்ளவில்லை.
அந்தக் குடும்ப உறுப்பினர்களைப் போல, உலகின் மிகப்பெரிய வணிக ஜாம்பவான்களில் ஒன்றாக உள்ள டாடா குழுமத்தை நிர்வகிக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருந்ததில்லை. அவர் அந்தப் போட்டிக்கும் வரவில்லை.
அதற்குப் பதிலாக அவர் ஒரு செல்வாக்குமிக்க அரசியல்வாதியாக உருவெடுத்தார். இந்தியாவில் காலனித்துவ ஆதிக்கம் செய்த பிரிட்டிஷ் அரசின் மையமான பிரிட்டன் நாடாளுமன்றத்தில், இந்திய சுதந்திரத்திற்காக அவர் பேசினார். இதில் அவர் மகாத்மா காந்தியுடன் கூட மோதினார்.
மிகப்பெரிய தொழிலதிபர்களின் குடும்பத்தில் பிறந்த சக்லத்வாலா தனது உறவினர்களிடமிருந்து வேறுபட்ட பாதையை தேர்ந்தெடுத்தது ஏன்? அவர் எப்படி பிரிட்டனின் முதல் ஆசிய நாடாளுமன்ற உறுப்பினராக உயர்ந்தார்?
சக்லத்வாலா தனது குடும்பத்துடன் வைத்திருந்த உறவைப் போலவே இதற்கான பதிலும் சிக்கலானது.
யார் இந்த ஷபூர்ஜி சக்லத்வாலா?
பருத்தி வணிகம் செய்த வியாபாரியான டோராப்ஜி, மற்றும் டாடா குழுமத்தை நிறுவிய நுசர்வாஞ்சி டாடாவின் இளைய மகள் ஜெர்பாய் ஆகியோரின் மகன்தான் சக்லத்வாலா.
அவருக்கு 14 வயதாக இருந்தபோது, ஜெர்பாயின் சகோதரர் ஜம்ஷெட்ஜி டாடா குடும்பத்தினருடன் வாழ அவரது குடும்பம் பம்பாயில் உள்ள எஸ்பிளனேட் ஹவுஸுக்குக் குடிபெயர்ந்தது.
சக்லத்வாலாவின் பள்ளிப் பருவத்தின் போதே அவரது பெற்றோர்கள் பிரிந்துவிட்டனர். எனவே, சக்லத்வாலாவின் தாயின் சகோதரர் ஜம்செட்ஜி அவரது வாழ்க்கையில் ஒரு தந்தையின் பொறுப்பில் இருந்து அவரை கவனித்துக்கொண்டார்.
சக்லத்வாலாவின் அன்பு மாமா
சக்லத்வாலாவின் மகள் செஹ்ரி, ‘தி ஃபிப்த் கமாண்ட்மென்ட்’ (The Fifth Commandment) என்னும் பெயரில் அவரின் தந்தையின் வாழ்க்கை வரலாற்றை எழுதினார்.
அந்தப் புத்தகத்தில், “ஜம்ஷெட்ஜி, சக்லத்வாலா மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தார். சிறுவயதிலிருந்தே அவருக்குப் பல திறமைகள் இருந்ததை ஜம்ஷெட்ஜி கவனித்தார். அவருடைய திறமைகளில் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார்,” என்று எழுதியுள்ளார்.
ஜம்ஷெட்ஜிக்கு சக்லத்வாலா மீது இருந்த பாசம், அவரது மூத்த மகன் டோராப்பை வெறுப்படையச் செய்தது.
“சிறுவர்களாக இருந்த போதும் வளர்ந்த பின்பும், அவர்கள் எப்போதும் ஒருவருக்கொருவர் விரோதமாக இருந்தனர்,” என்று செஹ்ரி தன் புத்தகத்தில் எழுதியிருக்கிறார்.
இந்த வெறுப்புணர்வு காரணமாக டோராப், குடும்ப வணிகங்களில் சக்லத்வாலாவின் பங்கைக் குறைத்தார். இது அவரை வேறு பாதையில் செல்லத் தூண்டியது.
குடும்பச் சூழல்களுக்கு அப்பால், 1890-களின் பிற்பகுதியில் பம்பாயில் புபோனிக் பிளேக்கால் (bubonic plague) ஏற்பட்ட அழிவால் சக்லத்வாலா ஆழமாக பாதிக்கப்பட்டார்.
தொழிலாளி வர்க்கம் மற்றும் ஏழ்மையான மக்கள் தொற்றுநோயால் அதிகம் பாதிக்கப்பட்டது அவரை பாதித்தது. அதேநேரத்தில், அவரது குடும்பத்தினர் உட்பட மேல்தட்டு வர்க்கம் ஒப்பீட்டளவில் பாதிப்பில்லாமல் தப்பியது.
இந்த நேரத்தில், கல்லூரி மாணவராக இருந்த சக்லத்வாலா, வால்டெமர் ஹாஃப்கினுடன் நெருக்கமாக பணியாற்றினார். அவர் ஒரு ரஷ்ய விஞ்ஞானி. தனது புரட்சிகர, அரச-எதிர்ப்புக் கருத்துக்களால் நாட்டை விட்டு வெளியேறியவர்.
பிளேக் நோயை எதிர்த்துப் போராட ஹாஃப்கின் ஒரு தடுப்பூசியை உருவாக்கினார். சக்லத்வாலா வீடு வீடாகச் சென்று, தடுப்பூசி போட்டுக் கொள்ளும்படி மக்களைக் கேட்டுக் கொண்டார்.
“அவர்களது கண்ணோட்டங்கள் ஒரே மாதிரியாக இருந்தன. ஒரு லட்சியவாத மூத்த விஞ்ஞானி மற்றும் இரக்கமுள்ள கல்லூரி மாணவருக்கு இடையேயான இந்த நெருங்கிய தொடர்பு, சக்லத்வாலாவின் நம்பிக்கைகளை உருவாக்குவதற்கு உதவியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை,” என்று செஹ்ரி தன் புத்தகத்தில் எழுதியுள்ளார்.
ஏழை பணிப் பெண்ணை திருமணம் செய்த சக்லத்வாலா
சக்லத்வாலாவின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்திய மற்றொரு முக்கியமான நபர் சாலி மார்ஷ். பணிப்பெண்ணான அவரை சக்லத்வாலா1907-இல் திருமணம் செய்து கொண்டார்.
ஏழைக் குடும்பத்தில், 12 குழந்தைகளில் நான்காவது குழந்தையாகப் பிறந்தவர் மார்ஷ். தனது இளமைக் காலத்திலேயே தந்தையை இழந்தார். மார்ஷ் குடும்பத்தில் வாழ்க்கை கடினமாக இருந்தது. ஒவ்வொருவரும் கடினமாக உழைக்க வேண்டியிருந்தது.
வசதியான குடும்பப் பின்னணி கொண்ட சக்லத்வாலா மார்ஷால் ஈர்க்கப்பட்டார். அவர்களது திருமண வாழ்க்கையின் போது, பிரிட்டனின் தொழிலாளர் வர்க்கத்தின் கஷ்டங்களை மார்ஷின் வாழ்க்கையின் மூலமாகச் சக்லத்வாலா தெரிந்து கொண்டார்.
தனது புத்தகத்தில், செஹ்ரி, தனது தந்தை பள்ளி மற்றும் கல்லூரி காலக்கட்டத்தில் அவர் படித்த பள்ளியை நிர்வகித்த ஜேசுட் பாதிரியார்கள் மற்றும் கன்னியாஸ்திரிகளின் தன்னலமற்ற வாழ்க்கையால் ஈர்க்கப்பட்டார் என்று குறிப்பிடுகிறார்.
சக்லத்வாலா 1905-இல் பிரிட்டனுக்குப் பயணம் செய்த பிறகு, ஏழைகள் மற்றும் விளிம்புநிலை மக்களுக்கு உதவும் நோக்கத்துடன் அரசியலில் களமிறங்கினார். அவர் 1909-இல் தொழிலாளர் கட்சியிலும், அதற்கு 12 ஆண்டுகளுக்குப் பிறகு கம்யூனிஸ்ட் கட்சியிலும் சேர்ந்தார்.
அவர் இந்தியாவிலும் பிரிட்டனிலும் உள்ள தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகள் பற்றி ஆழ்ந்த அக்கறை கொண்டிருந்தார். ஏகாதிபத்திய ஆட்சியை வெறுத்தார். சோசலிசத்தால் மட்டுமே வறுமையை ஒழிக்க முடியும் என்று நம்பினார்.
சக்லத்வாலாவின் பேச்சுக்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. விரைவில் அவர் பிரபலமான முகமானார். 1922-இல், அவர் பிரிட்டன் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஏறக்குறைய ஏழு ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார்.
‘தீவிர கம்யூனிஸ்ட்’
இந்தச் சமயத்தில், சக்லத்வாலா இந்தியாவின் சுதந்திரத்திற்காக தீவிரமாக ஆதரவளித்தார். கன்சர்வேடிவ் (பழமைவாத) கட்சியைச் சேர்ந்த பிரிட்டிஷ்-இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் சக்லத்வாலாவை ஆபத்தான ‘தீவிர கம்யூனிஸ்ட்’ என்று குறிப்பிட்டார். அந்த அளவுக்கு அவருடைய கருத்துக்கள் உறுதியாக இருந்தன.
சக்லத்வாலா நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில், அவர் இந்தியாவிற்கு பயணங்களை மேற்கொண்டார். அங்கு அவர் தொழிலாளர் வர்க்கம் மற்றும் இளம் தேசியவாதிகள் தங்களை உறுதிப்படுத்திக் கொள்ளவும், சுதந்திர இயக்கத்திற்குத் தங்கள் ஆதரவை உறுதியளிக்கவும் பரப்புரை நடத்தினார். அவர் சென்ற பகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை ஒழுங்கமைக்கவும் கட்டமைக்கவும் உதவினார்.
சக்லத்வாலாவின் தீவிர கம்யூனிசக் கருத்துக்கள், மகாத்மா காந்தியின் அகிம்சை அணுகுமுறையுடன் அடிக்கடி மோதியது.
அவர் காந்திக்கு எழுதிய கடிதம் ஒன்றில், “அன்புள்ள தோழர் காந்தி, சுதந்திரமாகவும் துல்லியமாகவும் நம்மை வெளிப்படுத்திக் கொள்ள ஏதுவாக, தீவிரமாக செயல்பட நாம் இருவரும் ஒருவருக்கொருவர் அனுமதிக்க வேண்டும்” என்று எழுதினார். மேலும் அந்த கடிதத்தில் காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் அவருக்கு இருந்த அதிருப்தி பற்றி குறிப்பிடவில்லை.
இருவரும் எந்த உடன்பாட்டையும் எட்டவில்லை என்றாலும், அவர்கள் ஒருவருக்கொருவர் அன்பாக இருந்தனர் மற்றும் பிரிட்டிஷ் ஆட்சியை நீக்குவதற்கான பொதுவான இலக்கில் ஒற்றுமையாக இருந்தனர்.
இந்தியாவில் சக்லத்வாலாவின் அனல் பறக்கும் பேச்சுக்கள் பிரிட்டிஷ் அதிகாரிகளை வருத்தமடையச் செய்ததால், 1927-இல் அவர் தனது தாய்நாட்டிற்குச் செல்ல தடை விதிக்கப்பட்டது. 1929-இல் அவர் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் தனது பதவியை இழந்தார். ஆனால் அவர் இந்தியாவின் சுதந்திரத்திற்காகத் தொடர்ந்து போராடினார்.
சக்லத்வாலா, 1936-இல் தான் இறக்கும் வரை பிரிட்டிஷ் அரசியலிலும் இந்திய தேசியவாத இயக்கத்திலும் ஒரு முக்கிய நபராகத் திகழ்ந்தார். அவரது இறப்புக்குப் பிறகு அவர் தகனம் செய்யப்பட்டார். அவரது அஸ்தி லண்டன் கல்லறையில் அவரது பெற்றோர், மற்றும் ஜாம்செட்ஜி டாடாவுக்கு அருகே புதைக்கப்பட்டது. இது அவரை மீண்டும் ஒருமுறை டாடா குடும்பத்துடனும் அவர்களது பாரம்பரியத்துடனும் இணைத்தது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு