தமிழ்நாடு காவல்துறை என்கவுன்டர்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்
  • எழுதியவர், சேவியர் செல்வக்குமார்
  • பதவி, பிபிசி தமிழ்

இந்தியா முழுவதும், 2017 ஜனவரி முதல் 2022 ஜனவரி வரையிலான 5 ஆண்டுகளில், 655 என்கவுன்டர் மரணங்கள் நடந்துள்ளன என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதிலும் சத்தீஸ்கர், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிகபட்ச மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும், அசாம், ஜார்க்கண்ட், ஒடிஷா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் இருப்பதாகவும் மத்திய உள்துறை அமைச்சகம், நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு தரவுகளை வெளியிட்டது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம், உத்தர பிரதேச அரசு, அம்மாநில சட்டப் பேரவையில் தாக்கல் செய்த அறிக்கையில், 2017இல் இருந்து 2023 வரை, 10,713 என்கவுன்டர்கள் நடந்திருப்பதாகவும், பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட 164 பேர் அதில் கொல்லப்பட்டதாகவும் புள்ளிவிவரம் வெளியிட்டது.

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு ஜூலை முதல் செப்டம்பர் வரை மட்டும் வெவ்வேறு வழக்குகளில் 5 என்கவுன்டர்களில் 5 பேரை காவல்துறையினர் சுட்டுக்கொன்றனர்.

இந்நிலையில், என்கவுன்டர்கள் தொடர்பாக உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்த 16 வழிகாட்டு நெறிமுறைகளை காவல்துறையினர் பின்பற்றுவதில்லை என்று மனித உரிமை செயற்பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால், சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கவும், மக்களிடம் இருக்கும் அச்சத்தைப் போக்கவும் என்கவுன்டர் நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவதாக காவல்துறை தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

என்கவுன்டர் குறித்த மனித உரிமை ஆர்வலர்களின் குற்றச்சாட்டுகள் குறித்து தமிழ்நாடு காவல்துறையின் விளக்கத்தை அறிய, டிஜிபி சங்கர் ஜிவாலை தொடர்புகொள்ள பிபிசி தமிழ் முயன்றது. ஆனால், அவர் பதிலளிக்கவில்லை.

தமிழ்நாடு காவல்துறையில் என்ன நடக்கிறது? என்கவுன்டர்கள் நடப்பது ஏன்? இந்தச் சம்பவங்களில் உச்சநீதிமன்ற நெறிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா?

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

தமிழகத்தில் சமீபத்தில் நடந்த என்கவுன்டர்கள்

கடந்த ஜூலை 5ஆம் தேதி, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், சென்னையில் படுகொலை செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து, மாநில அளவிலும், தேசிய அளவிலும் தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு பற்றிக் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. உடனடியாக சென்னை காவல் ஆணையராக இருந்த சந்தீப் ராய் ரத்தோரை மாற்றிவிட்டு, அந்த இடத்தில் அருணை அமர்த்தியது தமிழக அரசு. உளவுத்துறை கூடுதல் டி.ஜி.பி-யாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதத்தை சட்டம்-ஒழுங்கு பொறுப்புக்கு மாற்றியது.

புதிய ஆணையராகப் பொறுப்பேற்ற அருண், “குற்றங்களில் ஈடுபடுபவர்களைக் கட்டுப்படுத்துவதே முதன்மைப் பணி. அவர்களுக்கு எந்த மொழி புரியுமோ அதில் புரிய வைக்கப்படும்,” என்று தெரிவித்தார்.

இதுதொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து தொடர்ந்த வழக்கில், அருண் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி. வில்சன், குற்றங்களில் ஈடுபடுபவர்களின் சொந்த மொழியில் பேசுவதையே அவ்வாறு சென்னை ஆணையர் குறிப்பிட்டதாகத் தெரிவித்ததாக, ஊடகங்களில் வெளியான செய்திகள் தெரிவித்தன.

இதைத் தொடர்ந்து, ஜூலை 14ஆம் தேதி, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட திருவேங்கடம், போலீசாரால் என்கவுன்டர் செய்யப்பட்டார். அடுத்து, பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட காக்கா தோப்பு பாலாஜி, செப்டெம்பர் 18ஆம் தேதியன்று, என்கவுன்டரில் உயிரிழந்தார். கடந்த செப்டெம்பர் 23ஆம் தேதியன்று, 8 கொலை வழக்குகள் உள்பட 40 வழக்குகள் கொண்ட தென் சென்னையைச் சேர்ந்த ‘சீசிங்’ ராஜாவும், என்கவுன்டரில் கொல்லப்பட்டார்.

இதற்கெல்லாம் முன்பே, ஜூலை 11ஆம் தேதியன்று, திருச்சியைச் சேர்ந்த, தொடர் குற்றங்களில் ஈடுபட்ட துரை, புதுக்கோட்டையில் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இறுதியாக, செப்டம்பர் 27ஆம் தேதி நாமக்கல் அருகே வெப்படை பகுதியில், ஹரியாணாவை சேர்ந்த ஏ.டி.எம் கொள்ளையர்களுடன் நடந்த மோதலில், ஜூமான் என்பவர் போலீசார் சுட்டதில் உயிரிழந்தார்.

சிறு குற்றங்களுக்கும் என்கவுன்டரா?

போலீஸ் என்கவுன்டர், தமிழ்நாடு

பட மூலாதாரம், Henri Tiphagne

படக்குறிப்பு, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், தானாக சரணடைந்த திருவேங்கடம் எதற்காகத் தப்பிச் செல்ல வேண்டும் என கேள்வி எழுப்புகிறார், மக்கள் கண்காணிப்பகம் அமைப்பின் இயக்குநர் ஹென்றி திபேன்

தமிழ்நாடு முழுவதும் சமீபகாலமாக, ‘சிறு குற்றங்களில் ஈடுபடுபவர்களையும் கை, கால்களை உடைப்பது, என்கவுன்டர் செய்வது போன்ற செயல்கள் அரங்கேறுவதாக’ கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 210 வழக்கறிஞர்கள் இணைந்து, மாவட்ட நீதிபதியிடம், கடந்த மாதத்தில் ஒரு புகார் மனுவைச் சமர்ப்பித்தார்கள்.

காவல் நிலைய சித்ரவதைகளுக்கு எதிரான கூட்டியக்கம், தமிழ்நாட்டில் நடக்கும் என்கவுன்டர்கள் குறித்து விசாரிக்க வேண்டுமென்று, மாநில மனித உரிமை ஆணையத்திடம் செப்டெம்பர் 27 அன்று மனு கொடுத்தது.

பல்வேறு அமைப்புகளும் இதைப் பற்றி மனு கொடுப்பதும், பொது வெளியில் பேசுவதும், தமிழ்நாட்டில் நடக்கும் என்கவுன்டர்கள் மற்றும் காவல் நிலைய சித்ரவதைகளை, சமூக ஊடகங்களில் பேசுபொருளாக்கியுள்ளது. இந்தச் சம்பவங்கள் அனைத்திலுமே தற்காப்புக்காக என்கவுன்டர் செய்யப்பட்டதாக போலீசார் கூறினர்.

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய மக்கள் கண்காணிப்பகம் அமைப்பின் இயக்குநர் ஹென்றி திபேன், கடந்த ஆண்டில் நடைமுறைக்கு வந்த பாரதிய நியாய சம்ஹிதாவின் புதிய குற்றவியல் சட்டப் பிரிவுகளின்படி, குற்றவாளிக்கு கைவிலங்கு, சங்கிலி போட்டு அழைத்துச் செல்ல அனுமதியிருக்கும்போது, ஒவ்வொரு என்கவுன்டரிலும், ‘தப்பிக்கப் பார்த்தார், துப்பாக்கியை எடுத்து எங்களைச் சுட்டார்’ என்று போலீசார் சொல்வது புரியாத புதிராக இருப்பதாகத் தெரிவித்தார்.

போலீஸ் என்கவுன்டர், தமிழ்நாடு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

“ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், தானாக சரணடைந்த திருவேங்கடம் எதற்காகத் தப்பிச் செல்ல வேண்டும்? எதற்காக போலீசாரை சுட வேண்டும்?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

ஆனால், அதெல்லாம் சூழ்நிலையைப் பொறுத்தது என்கிறார் ஓய்வுபெற்ற காவல்துறை கண்காணிப்பாளர் கருணாநிதி.

“குற்றங்கள் அதிகமாவதைக் கணக்கில் எடுக்காமல், இதை மட்டும் கணக்கில் கொண்டால், போலீசாரின் உரிமைகள் பாதிக்கப்படும். அவர்கள் முடியாத பட்சத்தில்தான் இப்படிச் செய்கிறார்கள்.

இதைப் பெரிதாகப் பேச ஆரம்பித்தால், அதன் பிறகு போலீசார் நடவடிக்கை எடுக்கவே தயங்குவார்கள். இதுபோன்ற நிகழ்வுகள் ஒன்றிரண்டு நடந்தால் மட்டுமே குற்றங்கள் குறையும்,” என்று கூறினார் கருணாநிதி.

இதுபற்றி தமிழ்நாடு காவல்துறை சட்டம்–ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதத்திடம் பிபிசி தமிழ் கேட்டபோது, ‘‘புதிய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில், அப்படி ஓர் அனுமதி இருப்பதாகவே தெரிகிறது. காவல்துறையினருக்கு இதுகுறித்து அறிவுறுத்தல் வழங்குவது பற்றி சட்டத்துறையிடம் கலந்து பேசுகிறேன்,” என்று தெரிவித்தார்.

இருவேறு கருத்துகள்

போலீஸ் என்கவுன்டர், தமிழ்நாடு

பட மூலாதாரம், Karunanidhi

படக்குறிப்பு, ஓய்வுபெற்ற காவல்துறை கண்காணிப்பாளர் கருணாநிதி

தமிழகத்தில் எந்தக் கட்சியின் ஆட்சியானாலும், ஆண்டுக்கு ஒன்றிரண்டு என்கவுன்டர்கள் நடப்பதும், ஓரிருவர் கொல்லப்படுவதும் வழக்கமாகிவிட்டது, என்கிறார் முன்னாள் நீதிபதி ஹரி பரந்தாமன்.

அதேவேளையில், சமீபத்திய சம்பவங்களைப் பார்க்கும்போது, சராசரி அளவைவிடக் கூடுதலாக என்கவுன்டர்கள் நடப்பதாகத் தெரிவதாகவும் அவர் தெரிவித்தார்.

அவரது கூற்றை ஆமோதிக்கும் சிறைக் கைதிகள் உரிமை மையத்தின் நிர்வாகியான வழக்கறிஞர் புகழேந்தி, “தமிழ்நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு என்கவுன்டர் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக” குற்றம் சாட்டுகிறார்.

காவல்துறையினர் மேற்கொள்ளும் என்கவுன்டர்கள் அனைத்துமே நீதிமன்றங்களின் மீது நடத்தப்படும் மறைமுகத் தாக்குதல்களே என்கிறார், மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் செயலாளரும் எழுத்தாளருமான ச.பாலமுருகன்.

“நீதிமன்றத்திற்குச் சென்றால் நீதி கிடைக்கத் தாமதமாகும் என்று மக்களை நம்ப வைத்து, என்கவுன்டர்களை நியாயப்படுத்துவதன் மூலம் நீதித்துறையின் மீதான நம்பகத்தன்மை குலைக்கப்படுகிறது” என அவர் குற்றம் சாட்டுகிறார்.

ஆனால், சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கவும், மக்களிடம் இருக்கும் அச்சத்தைப் போக்கவும் என்கவுன்டர் நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு போலீசார் தள்ளப்படுவதாக, சமச்சீர் வளர்ச்சிக்கான கூட்டமைப்பின் தலைவரும், வழக்கறிஞருமான லோகநாதன் கூறுகிறார்.

உச்சநீதிமன்ற நடைமுறைகள்

போலீஸ் என்கவுன்டர், தமிழ்நாடு

பட மூலாதாரம், Balamurugan

படக்குறிப்பு, தமிழ்நாட்டில் தற்போது நடக்கும் என்கவுன்டர்கள் பெரும்பாலும் திட்டமிட்ட போலி என்கவுன்டர்கள் எனக் குற்றம் சாட்டுகிறார் மக்கள் சிவில் உரிமைக் கழகத்தைச் சேர்ந்தவரும் எழுத்தாளாருமான ச. பாலமுருகன்

‘தமிழ்நாட்டில் தற்போது நடக்கும் என்கவுன்டர்கள் பெரும்பாலும் திட்டமிட்ட போலி என்கவுன்டர்கள்’ என்று குற்றம் சாட்டுகிறார் மக்கள் சிவில் உரிமைக் கழகத்தைச் சேர்ந்த ச.பாலமுருகன்.

இந்திய தண்டனைச் சட்டத்தின் 96 முதல் 106 வரையிலான பிரிவுகளின்படி, இந்தியாவில் போலீஸ் என்கவுன்டரில் மரணம் நிகழ்வது ஒரு குற்றமாகக் கருதப்படாத சில சூழ்நிலைகள் இருப்பதைக் காட்டி, பி.யு.சி.எல் தாக்கல் செய்த வழக்கில், உச்சநீதிமன்றம் தெரிவித்த 16 வழிகாட்டுதல் நெறிமுறைகளை போலீசார் கடைபிடிப்பதே இல்லை என்று பாலமுருகன் குற்றம் சாட்டுகிறார்.

உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கும் நெறிமுறைகளில் கீழ்வருவன முக்கியமானவையாக இருக்கின்றன.

  • குற்றவியல் விசாரணை தொடர்பான உளவுத்துறை மற்றும் அவை சார்ந்த குறிப்புகள், ஏதாவது ஒரு மின்னணு வடிவத்தில் பதிவு செய்யப்பட வேண்டும்
  • என்கவுன்டர் மரணம் குறித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும்
  • உளவுப்பிரிவு விசாரணை, தடயவியல் குழு ஆய்வு, இறந்தவர் குறித்த ரசாயன ஆய்வு ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும்
  • இரு மருத்துவர்களால் உடற்கூறாய்வு செய்யப்பட்டு, அது வீடியோவாக பதிவு செய்யப்பட வேண்டும்
  • என்கவுன்டர் குறித்து பிரிவு 176இன் கீழ் ஒரு மாஜிஸ்திரேட் விசாரணை நடத்த வேண்டும்
  • மாநில, தேசிய மனித உரிமை ஆணையத்திற்குத் தகவல் அனுப்ப வேண்டும்
  • இறந்தவரின் உறவினருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்
  • இறந்தவரது குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குவது பற்றி குற்றவியல் நடைமுறையின் பகுதி 357-Aஐ ஆலோசித்து முடிவு செய்யப்பட வேண்டும்

போலீஸ் என்கவுன்டர், தமிழ்நாடு

பட மூலாதாரம், Pugazhendhi

படக்குறிப்பு, நீதிமன்றங்கள் இந்த என்கவுன்டர்கள் குறித்து, தானாக முன் வந்து வழக்குகளைப் பதிவு செய்திருக்க வேண்டும் என்கிறார், சிறைக் கைதிகள் உரிமை மையத்தின் நிர்வாகி வழக்கறிஞர் புகழேந்தி

இவற்றில், மிக முக்கியமாக என்கவுன்டர் சம்பவத்திற்குப் பிறகு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விரைவான பதவி உயர்வு அல்லது உடனடி வெகுமதி எதுவும் வழங்கப்படக்கூடாது என்று குறிப்பிட்ட உச்சநீதிமன்றம், இந்த நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று அறிய வரும்பட்சத்தில், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் செஷன்ஸ் நீதிபதியிடம் புகார் செய்யலாம் என்றும் கூறியிருந்தது.

இதற்கெல்லாம் பல ஆண்டுகளுக்கு முன்பே, 1997ஆம் ஆண்டில், இந்தியாவின் அனைத்து மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேச நிர்வாகங்களுக்கும் தேசிய மனித உரிமை ஆணையம், என்கவுன்டர் தொடர்பான சில வழிகாட்டுதல் நெறிமுறைகளைக் கூறியுள்ளது. அதிலும் ஏறத்தாழ இதே நெறிமுறைகள் வெவ்வேறு விதங்களில், வேறு சில வார்த்தைகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.

நடைமுறைகள் என்னவாயின?

ஆனால் இந்த நடைமுறைகள் எவையுமே இப்போது நடக்கும் என்கவுன்டர்களில் பின்பற்றப்படுவதில்லை, எனக் குற்றம் சாட்டுகிறார் மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் பொதுச் செயலாளார் சுரேஷ்.

இந்த நெறிமுறைகள் மதிக்கப்படாமல், மனித உரிமைகள் மறுக்கப்படும்போது, நீதிமன்றங்கள் இந்த என்கவுன்டர்கள் குறித்து, தானாக முன் வந்து வழக்குகளைப் பதிவு செய்திருக்க வேண்டும் என்கிறார் வழக்கறிஞர் புகழேந்தி.

ஹைதராபாத்தில் 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம், பெண் கால்நடை மருத்துவர் கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு, எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில், நான்கு குற்றவாளிகளை என்கவுன்டர் செய்தது தொடர்பாக அமைக்கப்பட்ட நீதிபதி சிர்புர்கர் கமிட்டி, 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் உச்சநீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தது.

அது திட்டமிட்ட போலி என்கவுன்டர் என்று கூறிய கமிட்டி, அதில் தொடர்புடைய 10 போலீஸ் அதிகாரிகள் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யுமாறு பரிந்துரைத்தது. அதன்படி, கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், மற்ற மாநிலங்களில் உள்ள போலீசாருக்கு அது எச்சரிக்கையாக இருக்கும் என்று மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

போலீசாருக்கு எதிரான வழக்குகளில் தாமதமா?

தமிழ்நாடு காவல்துறை

அதேவேளையில், போலீசார் மீதான புகாரை விசாரிப்பதில் தாமதம் நிலவுவதாக வழக்கறிஞர்களும், மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் குற்றம் சாட்டுகின்றனர்.

“காவல்துறை போடும் வழக்குகளை விசாரிக்க நுாற்றுக்கணக்கான மாஜிஸ்திரேட் நீதிமன்றங்கள் உள்ளன. ஆனால் காவல்துறையினர் மீதான புகாரை விசாரிக்க மூன்று பேர் அடங்கிய மாநில மனித உரிமை ஆணையம் மட்டுமே உள்ளது,” என்கிறார் வழக்கறிஞர் புகழேந்தி.

என்கவுண்டர் வழக்குகளில் தண்டனை கிடைக்காமல் போவது பற்றிப் பேசும் மக்கள் கண்காணிப்பகத்தின் ஒருங்கிணைப்பாளர் ஹென்றி திபேன், “என்கவுன்டர்களுக்கு எதிரான வழக்குகள் மிகவும் தாமதமாவதால்தான் இது தொடர்வதாக,” கூறுகிறார்.

எடுத்துக்காட்டாக, 2010ஆம் ஆண்டு பிப்ரவரி 16ஆம் தேதி, போலீஸ் அதிகாரி வெள்ளைத்துரையால் இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தைக் குறிப்பிடுகிறார்.

“சம்பவம் நடந்து இரண்டு நாட்களிலேயே நாங்கள் வழக்கு தாக்கல் செய்தோம். அந்த வழக்கின் விசாரணை, 2024இல் தான் வந்தது. வாதாடி முடித்துவிட்டுத் தீர்ப்புக்குக் காத்திருக்கிறோம். அதற்குள் அவர் ஓய்வு பெற்றுவிட்டார். ஓய்வுக்கு முன் அவரைப் பணியிடை நீக்கம் செய்த உத்தரவும் அரசால் உடனே திருப்பிக்கொள்ளப்பட்டது. இப்படி நடக்கும்போது, என்கவுன்டரில் ஈடுபடும் எந்த போலீஸ் அதிகாரிக்கு அச்சம் ஏற்படும்?” என்று கேள்வி எழுப்புகிறார்.

இதுவரை என்கவுன்டர் தொடர்பாகத் தங்களின் அமைப்பு தாக்கல் செய்த வழக்குகளில் காவல்துறைக்கு ஆதரவாகவே தீர்ப்புகள் வந்துள்ளதாக புகழேந்தி கூறுகிறார்.

‘போலீசார் தண்டனை பெற்றதே இல்லை’

போலீஸ் என்கவுன்டர், தமிழ்நாடு

படக்குறிப்பு, தனக்குத் தெரிந்து தமிழ்நாட்டில் எந்தவொரு போலீஸ் அதிகாரி மீதும் வழக்குப்பதிவு செய்து தண்டனை வழங்கப்பட்டதில்லை என்கிறார், ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ரவி.

என்கவுன்டர் வழக்குகளின் நிலை என்னவாகிறது, காவல்துறை அதை எப்படிக் கையாள வேண்டும் என்பது பற்றி பிபிசி தமிழிடம் பேசினார் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி ரவி.

“இதுபோன்ற வழக்குகளில் முன்பு, ஆர்.டி.ஓ விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இப்போது, மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தப்படுகிறது.

அவர் மாவட்ட நீதிபதிக்கு இதுகுறித்து அறிக்கை அனுப்புவார். முன்பு இருந்த இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302-க்கு இணையான இன்றைய பி.என்.எஸ் சட்டப்படி, என்கவுன்டரில் ஈடுபட்ட போலீசார் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும். வழக்கு முறைப்படி நடத்தப்பட வேண்டும்,” என்றார்.

ஆனால், “தனக்குத் தெரிந்து தமிழ்நாட்டில் எந்தவொரு போலீஸ் அதிகாரி மீதும் இப்படி வழக்குப்பதிவு செய்து தண்டனை வழங்கப்பட்டதில்லை,” என்றும் அவர் கூறுகிறார்.

‘நீதித்துறையை குறை கூறுவது சரியல்ல’

போலீஸ் என்கவுன்டர், தமிழ்நாடு

பட மூலாதாரம், Facebook/Hari Paranthaman

படக்குறிப்பு, நீதித்துறையை மட்டும் குறை சொல்லக்கூடாது என்கிறார், முன்னாள் நீதிபதி ஹரி பரந்தாமன்

என்கவுன்டர்களுக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் உள்ள இரு தரப்பினருமே, நீதித்துறை மீது வைக்கும் குற்றச்சாட்டுகள் பற்றி முன்னாள் நீதிபதி ஹரி பரந்தாமன் பிபிசி தமிழிடம் பேசுகையில், “நீதித்துறையை மட்டும் குறை சொல்லக்கூடாது,” என்கிறார்.

சமூகத்தின் மனநிலையிலேயே சிக்கல் இருப்பதாகக் கூறும் அவர், தமிழ்நாட்டில் என்கவுன்டருக்கு எதிராக எப்போதுமே பெரிதாக எதிர்ப்புக் குரல் எழுந்ததில்லை என்று கூறுகிறார்.

“சமூக மனநிலையே அப்படித்தான் மாறிக்கொண்டிருக்கிறது. அடிப்படையில் சமூகத்திற்கு இது சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்,” என்று தெரிவித்தார்.

மேலும், இதைத் தடுப்பதில் நீதித்துறைக்கும் ஒரு குறிப்பிட்ட பங்கு இருப்பதாகக் கூறும் அவர், இருப்பினும் நீதித்துறை மட்டுமே அதைச் செய்ய முடியாது என்கிறார். மேலும், “இது சமூகத்தின் எல்லா தரப்பும் இணைந்து செய்ய வேண்டிய விஷயம். எல்லாவற்றுக்கும் நீதித்துறை மருந்தாக முடியாது,” என்றார்.

இந்தியாவில் கடந்த ஆண்டில் அமலுக்கு வந்த புதிய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி (Bharatiya Nyaya Sanhita), காவல் துறையினரால் கைது செய்யப்படும் குற்றவாளிகளை விசாரணை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு வெளியில் அழைத்துச் செல்லும்போது, கைவிலங்குகள், சங்கிலி போன்றவற்றைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த நடைமுறைகள் பின்பற்றப்படுவது குறித்து மனித உரிமை ஆர்வலர்கள் சந்தேகம் தெரிவித்தனர். அதேவேளையில், என்கவுன்டர் என்ற பெயரில் பல போலி என்கவுன்டர்கள் நடப்பதாகவும், என்கவுன்டர்களை அரங்கேற்ற தப்பிக்கப் பார்த்தார், தாக்க முயன்றார் என்று காரணங்கள் கூறுவதாகவும் மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து காவல்துறை தரப்பு விளக்கத்தை அறிய, தமிழ்நாடு காவல்துறை தலைவர் (டிஜிபி) சங்கர் ஜிவாலை தொடர்புகொள்ள முயன்றோம். அவருக்கு மின்னஞ்சலும் அனுப்பப்பட்டது. ஆனால் அவரிடமிருந்து பதில் எதுவும் வரவில்லை.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு