ஒரே நேரத்தில் அமெரிக்கா மற்றும் கனடாவை இருவேறு விதங்களில் கையாளும் இந்தியா – எப்படி?

இந்தியா - அமெரிக்கா, கனடா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்திய பிரதமர் மோதி

காலிஸ்தான் ஆதரவாளர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கு விவகாரம் தற்போது தீவிரம் அடைந்துள்ளது.

கடந்த ஆண்டு, இந்த கொலையில் இந்திய தூதரக அதிகாரிகளின் தலையீடு உள்ளது என்று குற்றம் சுமத்தினார் கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.

இந்த கருத்து காரணமாக இரண்டு நாடுகளிலும் இருந்த தூதரக அதிகாரிகள் வெளியேற்றப்பட்டனர்.

இந்தியா கனடாவின் உறவு இப்படி சிக்கல் மிக்கதாக இருக்க, காலிஸ்தானுக்கு ஆதரவாகச் செயல்பட்ட அமெரிக்க குடிமகனான குர்பத்வந்த் சிங் பன்னுவை படுகொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக, முன்னாள் இந்திய உளவுத்துறை அதிகாரி மீது அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பாக இந்திய அரசு அதிகாரியான விகாஸ் யாதவ் மீது கொலைத்திட்டம் தீட்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

விகாஸுடன் இணைந்து திட்டம் தீட்டியதாக ஏற்கனவே இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள 53 வயதான நிகில் குப்தா அமெரிக்காவுக்கு அழைத்துவரப்பட்டுள்ளார். விகாஸ் யாதவ் தற்போது தலைமறைவாக இருப்பதாக அமெரிக்கா தெரிவிக்கிறது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

அமெரிக்கா மற்றும் கனடாவுடனான இந்த விவகாரத்தை இந்தியா எவ்வாறு கையாள்கிறது என்று பிபிசி ஹிந்தியின் சிறப்பு வார நிகழ்வான தி லென்ஸில் விவாதிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கலெக்டிவ் நியூஸ்ரூமின் ஊடகத்துறை இயக்குநர் முகேஷ் ஷர்மா, பிபிசி பஞ்சாபின் துணை ஆசிரியர் குஷால் லாலி (ப்ராம்ப்டன்), மூத்த ஊடகவியலாளர் ஜூபைர் அகமது (லண்டன்), மற்றும் ஸ்வஸ்தி ராவ் ஆகியோர் பங்கேற்றனர்.

ஸ்வஸ்தி ராவ் சர்வதேச விவகாரங்கள் பிரிவில் நிபுணராக இருக்கிறார். அவர் பாதுகாப்பு பிரிவு படிப்புகளுக்கான மனோகர் பரிக்கர் கல்வி நிறுவனத்தோடு சேர்ந்து பணியாற்றுகிறார்.

இந்தியா கனடா அமெரிக்கா ராஜ்ஜிய விவகாரம்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, இந்தியாவில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் பங்கேற்ற ட்ரூடோ

ஒரே நேரத்தில் அமெரிக்கா, கனடாவை இருவேறு விதங்களில் கையாளும் இந்தியா

அமெரிக்கா மற்றும் கனடா வைக்கும் குற்றச்சாட்டுகளை இந்தியா கையாளும் விதத்தில் இரண்டு கோணங்கள் இருப்பதாக இந்த நிகழ்வில் பங்கேற்ற நிபுணர்கள் நம்புகின்றனர்.

கனடா வைக்கும் குற்றச்சாட்டை இந்தியா கோபத்துடன் எதிர்க்கிறது. ஆனால் அமெரிக்கா சுமத்தும் குற்றச்சாட்டுகளை கையாளும் போது அந்த நாட்டுடனான உறவை மனதில் கொண்டு ராஜ்ஜிய ரீதியில் கையாளுகிறது.

மூத்த ஊடகவியலாளர் ஜூபைர் இந்த மொத்த விவகாரமும் தீவிரமான ராஜ்ஜிய சூழலை உள்ளடக்கியது என்று கூறுகிறார். கனடாவுடனான இந்தியாவின் உறவு மோசமான நிலையில் உள்ளது என்றும் இது மேலும் மோசமடையக்கூடும் என்றும் அவர் கூறினார்.

கனடாவுடனான விவகாரத்தை சிறப்பாக இந்தியா கையாண்டு இருக்கலாம் என்றும் அவர் நம்புகிறார்.

“பக்குவமாக இந்த விவகாரத்தை இந்தியா கையாண்டிருக்க வேண்டும் என்று பலரும் கருகின்றனர். கடந்த ஆண்டு ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவின் பெயரை நீக்கி இருந்திருக்கலாம் என்று சிலர் கூறுகிறனர். இந்தியாவின் பெயரை பயன்படுத்தியது ராஜ்ஜிய ரீதியிலான தீர்வாக அமையாது. ஜஸ்டின் திங்கள் மற்றும் புதன் கிழமைகளில் வெளியிட்ட அறிக்கைகள் இந்த விவகாரத்தில் சண்டையிட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதை உணர முடிகிறது. ராஜ்ஜிய ரீதியான மொழியில் அவரின் அறிக்கைகள் இல்லாத காரணத்தால் இந்தியாவின் பதிலும் அதே வகையில் அமைந்திருக்கிறது,” என்று கூறுகிறார் ஜூபைர்.

அதே நேரத்தில், இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே ஏற்பட்டுள்ள பிரச்னையை இரண்டு நாடுகளும் பக்குவமாக கையாண்டுள்ளன என்றும் அவர் நம்புகிறார்.

நிகழ்வில் மேலும் பேசிய ஜூபைர், “அமெரிக்கா மற்றும் கனடா வைத்திருக்கும் குற்றச்சாட்டுகளை இந்தியா அணுகும் விதத்தில் இருக்கும் வித்தியாசம் எளிதில் தெரியக் கூடியது. கனடாவின் குற்றச்சாட்டுகளை கோபத்துடன் எதிர்க்கும் இந்தியா, அமெரிக்கா வைக்கும் குற்றச்சாட்டுகளை மென்மையாக கையாளுகிறது. ஒத்துழைப்பும் தருகிறது. அமெரிக்க நிர்வாகத்திற்கு தேவையான முழுமையான ஒத்துழைப்பை இந்தியா வழங்குவதால் இவ்விரு நாடுகளுக்கும் இடையே எந்தவிதமான பதற்றமும் எழவில்லை,” என்று அவர் மேற்கோள் காட்டினார்.

இந்தியா இதனை நடைமுறைக்குரிய வகையில் கையாண்டிருக்கலாம். ஆனால் அதற்கு காரணம் இருக்கிறது என்று கூறுகிறார் ஸ்வஸ்தி ராவ்.

அதே நேரத்தில் இந்தியா அந்த நாடுகளால் எவ்வாறு நடத்தப்படுகிறதோ அதற்கேற்ற வகையிலேயே எதிர்வினையாற்றுவதாக ஸ்வஸ்தி கூறுகிறார்.

“அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளையும் இந்தியா சமீபத்தில் எதிர்கொண்டது. ஆனால் அதற்கு மரியாதையுடனும் பக்குவத்துடனும் எதிர்வினையாற்றியது இந்தியா. அமெரிக்காவும் இதனை ராஜ்ஜிய முறையில் கையாண்டது. இந்தியாவும் அதற்கேற்ற வகையில் எதிர்வினையாற்றியது. கனடாவின் விவகாரம் முற்றிலும் மாறானது. குறிப்பாக இந்திய தூதரை அவர்கள் கையாண்ட விதம் முற்றிலும் வேறானது,” என்று கூறுகிறார் ஸ்வஸ்தி.

ராஜ்ஜிய ரீதியிலான தீர்வுகளுக்கு பதிலாக “எதிர்கொள்ளுதல் & சச்சரவு” முறையில் இந்த விவகாரத்தை அணுகியது கனடா என்று கூறுகிறார் ஸ்வஸ்தி.

“சவாலான ஒரு விவகாரத்தை அமெரிக்கா ராஜ்ஜிய ரீதியில் கையாண்டது. மற்றொரு புறம் கனடா ராஜ்ஜிய ரீதியிலான பேச்சுவார்த்தைகளுக்கு பதிலாக மோதலை கையாண்டது. இந்திய விசாரணை முகமையால் (NIA) பட்டியலிடப்பட்ட பயங்கரவாதிகள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று இந்தியா நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகிறது. ஆனால், கனடா இந்த கோரிக்கைகளுக்கு செவிமெடுக்கவில்லை. திடீரென கோபமான ஒரு போக்கை கையாடு இரு நாட்டு உறவுகளுக்கும் இடையே பதற்றமான சூழலை உருவாக்கியுள்ளது” என்று விவரிக்கிறார் ஸ்வஸ்தி.

“இது ட்ரூடோ சம்பந்தப்பட்ட விவகாரம் மட்டுமல்ல. அந்த நாட்டில் வாழும் 30 லட்சம் இந்தியர்கள் பற்றியது. அவர்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்,” என்று மேற்கோள் காட்டும் ஸ்வஸ்தி. இந்த விவகாரத்தை இந்தியா கொஞ்சம் சிறப்பாக கையாண்டிருக்கலாம் என்று தெரிவித்தார்.

இந்தியா கனடா அமெரிக்கா ராஜ்ஜிய விவகாரம்

பட மூலாதாரம், Justice Department

படக்குறிப்பு, அமெரிக்காவில் ஒருவரை கொலை செய்வதற்காக திட்டம் தீட்டியதாக விகாஸ் யாதவ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது

இந்தியா – கனடா விவகாரம் சர்வதேச பிரச்னையாக மாறியுள்ளதா?

இந்தியா – கனடா விவகாரம் குறித்து பல்வேறு நாடுகள் தங்களின் கருத்துகளை வெளியிட்டு வருகின்றன.

ஃபைவ் ஐஸ் (Five Eyes Allaince) கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகள் மத்தியில் இந்த விவகாரம் சிறப்பு கவனம் பெற்றுள்ளது.

இந்த கூட்டமைப்பில் கனடாவை தவிர்த்து இந்த விவகாரத்தில் வேறெந்த நாடுகளும் இந்தியாவுக்கு எதிராக பலமான கருத்துகளை முன்வைக்கவில்லை. இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் இந்தியாவிற்கான முக்கியத்துவமே இதற்கு காரணம் என்று கூறுகிறார் ஸ்வஸ்தி.

“கனடா இந்தியா விவகாரத்தில் பயன்படுத்திய மொழியைப் போன்று வேறெந்த நாடும் பயன்படுத்தியதில்லை. சட்டங்களை பின்பற்ற வேண்டும். நாடு கடந்த கொலைகளில் ஈடுபடுவது சரியல்ல என்று அனைவரும் கூறுகின்றனர். ஆனால் ஃபைவ் ஐஸ் நாடுகள் மட்டுமே மிகவும் கட்டுப்பாடான எதிர்வினையை (Controlled response)நிகழ்த்தியுள்ளன என்று நான் கூறுவேன்,” என்று மேலும் விவரிக்கிறார் ஸ்வஸ்தி.

ஃபைவ் ஐஸ் கூட்டமைப்பில் அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகள் உறுப்பு நாடுகளாக இருக்கின்றன. இவர்களுக்குள் உளவுத்துறை தகவல்களை பகிர்ந்து கொள்ள ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.

“இன்றைய சூழலில் இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் இந்தியாவின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. இந்தியா இல்லாமல் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இந்த நாடுகள் எந்தவிதமான உத்திகளையும் கையாள இயலாது,” என்றும் ஸ்வஸ்தி கூறினார்.

ஆனால், ஜூபைர் அகமது “இது கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் உள் நாட்டு அரசியலோடு நின்றுவிடும் விவகாரம் அல்ல. இதனை சர்வதேச அளவில் குறிப்பாக அமெரிக்கா தீவிரமாக எடுத்துள்ளது” என்று கூறுகிறார்.

“சில நாட்களுக்கு முன் அமெரிக்கா உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இந்தியா கனடாவிற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கூறினார். இங்கிலாந்தின் வெளியுறவுத்துறை அமைச்சகமும் இதையே வலியுறுத்தியது. தற்போது இந்த ஃபைவ் ஐஸ் நாடுகளில் இரண்டு நாடுகள் இந்தியாவை ஒத்துழைக்குமாறு கூறுகின்றன. இது கனடாவின் உள்நாட்டு விவகாரம் அல்ல என்பதையே சுட்டிக்காட்டுகிறது,” என்று கூறினார் அவர்.

“1985-ஆம் ஆண்டு ஏற்பட்ட ஏர் இந்தியா வெடிகுண்டு விபத்திற்கு பிறகு இரு நாட்டு உறவும் மோசம் அடைந்தன. அதில் ஈடுபட்ட குற்றவாளிகளை இந்தியாவுக்கு ஒப்படைக்க கனடா பல தருணங்களில் மறுத்துவிட்டது. பிரிட்டனிலும் தேடப்பட்டு வரும் நபர்களின் பட்டியல் இந்தியாவால் வழங்கப்பட்டது. ஆனால் பிரிட்டனும் ஆக்கப்பூர்வமாக நடவடிக்கை எதையும் மேற்கொள்ளவில்லை. கனடாவில் மட்டுமல்ல, இங்கிலாந்து, பாகிஸ்தான் போன்ற நாடுகளிலும் இந்த பிரச்னை பரவியுள்ளது,” என்று மேலும் விவரிக்கிறார் ஜூபைர்.

இந்தியா கனடா விவகாரம்

படக்குறிப்பு, இந்தியா இந்த விவகாரத்தை எவ்வாறு கையாளுகிறது என்று பிபிசி ஹிந்தியின் சிறப்பு வார நிகழ்வான தி லென்ஸில் விவாதிக்கப்பட்டது

ட்ரூடோவின் நிலைப்பாடும் கனடாவின் உள்நாட்டு அரசியலும்

கனடா முன்வைக்கும் குற்றச்சாட்டுகளும் கடந்த ஓராண்டாக இந்தியாவுடனான உறவில் ஏற்பட்டிருக்கும் கசப்பும் கனடாவின் உள்நாட்டு அரசியலோடு நெருங்கிய தொடர்புடையது என்று நம்புகின்றனர் இந்த நிகழ்வில் பங்கேற்ற நிபுணர்கள்.

பிபிசி பஞ்சாபின் துணை ஆசிரியர் குஷால் லாலி இதுகுறித்து பேசும் போது, “ட்ரூடோ முதன்முறையாக இதுகுறித்து அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இந்தியாவை குற்றம் சாட்டும் போது, இந்தியா போதுமான ஆதாரங்கள் ஏதும் இல்லை என்று கூறி மறுத்தது. அப்போதும் கூட, ட்ரூடோ ஏன் இந்த அறிக்கையை திடீரென வெளியிடுகிறார் என்ற கேள்விகள் எழுந்தன.” என்றார்.

வெளிநாட்டு தலையீடுகள் தொடர்பான பொது விசாரணை நடைபெற இருக்கின்ற நேரத்தில் அவர் மீண்டும் இந்தியா மீது குற்றம் சுமத்தினார். உள்நாட்டு விவகாரங்களில் மக்களை திசை திருப்ப சந்தர்ப்பங்களை பயன்படுத்தி இதுபோன்ற குற்றச்சாட்டுகளை அவர் வேண்டுமென்றே முன்வைப்பதாக ஊடகங்களிலும் அரசியல் கட்சிகள் மத்தியிலும் விவாதிக்கப்பட்டு வருகின்றன.

இந்த விவகாரத்தை ட்ரூடோவின் மைனாரிட்டி ஆட்சியுடன் அவர் இணைத்துப் பார்க்கிறார். “ட்ரூடோவின் அரசு ஒரு மைனாரிட்டி அரசு. இரண்டு முறை நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்ளும் சூழலுக்கு அவர் ஆளானார். இது அவரின் அரசியல் நிலைப்பாட்டை மேலும் சிக்கலாக்கியது. வெளிநாட்டு தலையீடுகள் தொடர்பான விவகாரத்தில் ட்ரூடோ அரசு முழுமையாக தோல்வி அடைந்துவிட்டதாக எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அவருக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். அரசியல் கோணத்தில் இருந்து இதை அணுகும் போது, அவரின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் எதிர்க்கட்சியின் அழுத்தத்தில் இருந்தும் தேர்தலை மையமிட்டதாகவும் வருபவையாக இருக்கும்.” என்றார் அவர்.

ஸ்வஸ்தியும் இந்த கருத்தையே கிட்டத்தட்ட நம்புகிறார். “காலிஸ்தானி ஆதரவு கட்சியான புதிய ஜனநாயகக் கட்சியை (NDP) ட்ரூடோ நம்பியுள்ளார். அந்தக் கட்சி ட்ரூடோவின் ஆட்சிக்கு வழங்கி வரும் ஆதரவை நிறுத்திக் கொண்டால் அவரின் ஆட்சி கவிழும். அவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கவே இந்த அரசியலை முன்னோக்கி எடுத்துச் செல்கிறார் ட்ரூடோ,” என்று ஸ்வஸ்தி குறிப்பிட்டார்.

கனடா நாடாளுமன்றத்தில் இந்தியா மீதான குற்றச்சாட்டுகளை முன்வைத்த போது உளவுத்துறை அளித்த தகவல்கள் இல்லாமல் வேறெந்த ஆதாரமும் அவரிடம் இல்லை என்று விவரிக்கிறார் ஸ்வஸ்தி. ட்ரூடோ பிரதமராக பதவி வகிக்கும் காலம் வரை அவருடைய உள்நாட்டு அரசியல் பிரச்னைகள் ஆழமானதாகவே இருக்கும். இந்தியா தரப்பில் இருந்து வரும் முயற்சிகள் எதுவும் அவருக்கு பெரிய அளவில் உதவாது. “அதனால் தான் ட்ரூடோவுக்கு பதில் அளிப்பதற்கு பதிலாக ட்ரூடோவின் ஆட்சிக்கு பிறகான காலத்திற்கு இந்தியா தன்னை தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும்,” என்று அவர் தெரிவித்தார்.

இந்தியா கனடா விவகாரம்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, காலிஸ்தானி ஆதரவு கட்சியான என்.டி.பி. ட்ரூடோவின் ஆட்சிக்கு ஆதரவு வழங்கி வருகிறது

கனடாவில் வாழும் இந்தியர்கள் மத்தியில் நிலவும் பதற்றம்

இரு நாடுகளும் இடையே ஏற்பட்டுள்ள இந்த பிரச்னை அங்கு வாழும் இந்தியர்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரசியல் கட்சிகளின் கருத்துகளும் காலிஸ்தான் ஆதரவு செயற்பாட்டாளர்களின் கருத்துகளும் நிலைமையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

தற்போது கனடாவின் ப்ராம்ப்டன் பகுதியில் இருக்கும் குஷால் லாலி, அந்த நாட்டில் இரண்டு விதமான தாக்கங்களை உணர்வதாக கூறுகிறார். “ஒன்று அரசியல் தாக்கம். அரசியல் கட்சிகள், கட்சியினரின் கருத்துகள். மற்றொன்று தற்போது செய்திகளில் அதிகமாக வரும் காலிஸ்தான் ஆதரவாளர்களின் செல்வாக்கு. இதற்கு மத்தியில் இரு நாட்டு உறவுகள் மேலும் மோசம் அடையும் பட்சத்தில் பிரச்னைகளை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்று இந்திய வம்சாவளி மக்கள் அஞ்சுகின்றனர்,” என்று கூறுகிறார் குஷால்.

பொதுவெளியில் இந்தியர்கள் இதுகுறித்து பேச தயங்குகின்றனர் என்று தெரிவிக்கும் குஷால், இதுதொடர்பாக கேமராக்கள் முன்பு நின்று பேசினால் இந்தியா திரும்பிச் செல்லும் போது பிரச்னைகளை சந்திக்க நேரிடலாம் என்று அஞ்சுவதாக நிகழ்ச்சியில் குறிப்பிட்டார். “கனடா அரசுக்கு இப்படியாக ஊடங்களில் பேசும் இந்தியர்களின் கருத்துகள் பிடிக்கவில்லை என்றால் வேலைக்கான ஒப்புதல், நிரந்தர குடியிருப்பு மற்றும் இதர ஆவணங்கள் தொடர்பான பணிகளில் பிரச்னைகளை சந்திக்க நேரிடும்,” என்று கூறுகிறார்.

கனடாவில் வாழும் இந்தியர்களின் நிலையும் தற்போது மாறியுள்ளது. அதிக அளவு சீக்கியர்களே முன்பு இருந்த சூழலில் தற்போது இதர சமூகத்தை சேர்ந்த இந்தியர்களும் அதிக அளவில் கனடாவில் வசிக்க துவங்கியுள்ளனர்.

இதுவும் அங்கு வாழும் இந்தியர்களை சிந்திக்க வைத்துள்ளது.

“குஜராத், அரியாணா மற்றும் இதர மாநிலங்களில் இருந்தும் மக்கள் இங்கே வருகின்றனர். தற்போது காலிஸ்தான் ஆதரவு போராட்டங்கள் நடப்பது போன்றே அதனை எதிர்த்தும் போராட்டங்கள் இந்தியர்களால் நடத்தப்படுகிறது. காலிஸ்தான் கோரிக்கை வைக்கும் நபர்கள் அனைவரும் இந்தியாவுக்கு எதிரானவர்கள் என்ற கருத்தும் தற்போது மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது” என்று குஷால் கூறுகிறார்.

இந்தியா - அமெரிக்கா, கனடா

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை எந்த திசையில் செல்கிறது?

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையும் ராஜ்ஜிய நடவடிக்கைகளும் எதை நோக்கி செல்கின்றன? இந்தியாவின் கோபமான நடவடிக்கை ராஜ்ஜிய நடவடிக்கைகளை தாண்டி செல்கிறதா அல்லது உலக அரங்கில் உயரும் அதன் நிலையின் குறியீடா?

சமீபத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் காரணமாக வங்கதேசம் மற்றும் இலங்கையுடனான உறவில் ஒரு இடைவெளியை இந்தியா கடைபிடிக்கிறது என்று பேசப்பட்டு வருகிறது.

நேபாளம், பாகிஸ்தானுடனான உறவு வழக்கம் போல் பிரச்னைக்குரியதாகவே உள்ளது. தற்போது, அமெரிக்கா, கனடாவுடனான பிரச்னைகளுக்கு மத்தியில் இந்தியாவின் வெளியுறவு தொடர்பான கேள்விகள் மீண்டும் எழுந்துள்ளன.

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை, ராஜ்ஜிய நடவடிக்கைகளில் நம்பிக்கையும் முக்கியத்துவமும் அதிகரித்திருப்பதால் கோபமும் அதிகரித்து வருகிறது என்கிறார் ஸ்வஸ்தி.

இந்த போக்கை எங்கே காட்ட வேண்டும் எந்த அளவிற்கு காட்ட வேண்டும் என்று தீர்மானிப்பது மிகவும் முக்கியமானது. இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் இந்தியாவின் நம்பிக்கை அதிகரித்து வருகிறது. இந்தியாவுக்கு ஒரு பலமான பக்கத்தை அது கொடுத்துள்ளது என்று கூறுகிறார் ஸ்வஸ்தி.

ஆனால், அண்டை நாடுகள் மத்தியில் சில சவால்களை இந்தியா சந்தித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

“வங்கதேசத்தை எடுத்துக் கொள்வோம். அங்கு என்ன நடக்கிறது என்று நம் அனைவருக்கும் தெரியும். இந்தியா அதற்கு தயாராகவே இல்லை. ஆனால் இன்று ஷேக் ஹசீனா இந்தியாவில் இருக்கிறார். ஷேக் ஹசீனாவின் ஆட்சிக்கு பிந்தைய சூழலில் வங்கதேசத்துடனான உறவை இயல்பாக்க இந்தியா முயன்று வருகிறது,” என்று கூறுகிறார் ஸ்வஸ்தி.

பல நாடுகளுடனான உறவை காக்க இந்தியா முயற்சி செய்து வருகிறது என்றால், கடந்த கால நிகழ்வுகள், சர்ச்சையை ஏற்படுத்தும் அரசியல் அல்லது சதித்திட்டங்கள் போன்றவற்றை தவிர்த்து நிகழ்கால உத்திகள் மூலமாக அதனை சமன் செய்ய முயற்சிக்க வேண்டும்.

“சமீபத்திய நடப்புகளுக்கு பிறகு உலகம் வெகு விரைவாக மாறிவருகிறது. கொரோனா ஊரடங்காக இருக்கட்டும், யுக்ரேன் போராகட்டும், இஸ்ரேல் – ஹமாஸ் விவகாரமாகட்டும் அல்லது பூதாகரமாகிவரும் தைவான் விவகாரமாக இருக்கட்டும், இவை அனைத்தும் உலக நாடுகளின் மூலோபய சிந்தனைகளில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.

“இந்தியா பலதுருவ உறவுகளை மேம்படுத்த முயன்று வருவது நல்லது தான். வடக்கு, தெற்கு, மேற்கு மற்றும் கிழக்கத்திய நாடுகளில் பேச்சுவார்த்தை மூலம் சுமூகமான உறவை மேம்படுத்திய நாடாக இந்தியா திகழ்கிறது. இது இந்தியாவின் பலம். இதனை தொடர வேண்டும் என்கிற பட்சத்தில் அதிகாரத்திற்கும் ஆட்சிக்கும் இடையே ஏற்படும் குழப்பங்களை தவிர்க்க வேண்டும்” என்று ஸ்வஸ்தி கூறுகிறார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு