இஸ்ரேல்: பிரதமர் நெதன்யாகு வீடு மீது தாக்குதல் நடத்தியது யார்? பின்னணி என்ன?
நேற்று (அக்டோபர் 19) இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வீடு மீது ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்நாட்டு பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.
பிரதமர் நெதன்யாகுவின் வீடு, செசரியா என்ற கடற்கரை நகரத்தில் அமைந்துள்ளது. லெபனானில் இருந்து இந்த ஆளில்லா விமானம் அனுப்பப்பட்டதாகவும் பிரதமர் அலுவலக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல் தொடர்பாகப் பேசிய நெதன்யாகு, ஹெஸ்பொலா அவரைக் கொல்ல முயற்சி செய்து பெரிய தவறிழைத்துவிட்டதாகக் கூறினார்.
பிரதமர் அலுவலகத்தில் இருந்து வெளியிட்டப்பட்ட அறிக்கையில், “தாக்குதல் நடைபெற்ற நேரத்தில் பிரதமரும் அவருடைய மனைவியும் அந்த வீட்டில் இல்லை. மேலும் இந்தத் தாக்குதலில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை,” எனக் குறிப்பிட்டிருந்தது.
இஸ்ரேல் ராணுவம் சனிக்கிழமை அன்று, மூன்று ஆளில்லா விமானங்கள் லெபனான் நாட்டில் இருந்து இஸ்ரேலுக்குள் அனுப்பப்பட்டது என்றும், அதில் ஒரு ஆளில்லா விமானம் செசரியாவில் உள்ள கட்டடத்தைத் தாக்கியதாகவும் அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கை வெளியிட்ட சில மணிநேரங்களில் பிரதமர் அலுவலகத்தில் இருந்து பிரதமர் வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டது.
நெதன்யாகுவின் பதில் என்ன?
என் மீதும் என் மனைவி மீதும் கொலை முயற்சி மேற்கொண்டு, இரானின் கூட்டாளிகள் பெரும் தவறிழைத்துவிட்டதாக நெதன்யாகு பேசியுள்ளார்.
மேலும், “இஸ்ரேலின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் வகையில் எங்கள் எதிராளிகள் மீது நாங்கள் நடத்தி வரும் போரை இந்தத் தாக்குதல் தடுக்காது,” என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
“இரான் மற்றும் அதன் கூட்டாளிகளுக்கு இதை கூறிக் கொள்கிறேன். என்னுடைய மக்களைக் காயப்படுத்த யாராவது முயற்சி செய்தால் அதற்கு அவர்கள் பெரும் விலையைத் தர நேரிடும்.
நாங்கள் பயங்கரவாதிகளைத் தொடர்ந்து அழித்து வருகிறோம். காஸாவில் பணயக் கைதிகளாக இருக்கும் இஸ்ரேல் மக்களைத் திருப்பி அழைத்து வருவோம்.
கடவுளின் உதவியுடன் நாங்கள் சண்டையிட்டு அதில் வெற்றி அடைவோம்,” என்று அவருடைய பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
ஹமாஸுக்கு எதிரான போரில் வெற்றி கிடைக்கும் வரை போர் தொடர்வதை செசரியா தாக்குதல் மூலம் தடுத்து நிறுத்திவிட இயலாது என்றும் அவர் தெரிவித்தார்.
சமீபத்தில், “யாஹ்யா சின்வாரை நாங்கள் கொன்றுவிட்டோம்,” என்று கூறி வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டிருந்தார். அதில், மீண்டு எழுவதற்காக நாங்கள் போரிடுகிறோம், அதன் முடிவு வரை நாங்கள் போராடுவோம் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
பிபிசி செய்தியாளர் டாம் பென்னெட்டை பொறுத்தவரை நெதன்யாகு இரண்டு வீடுகளில் வசித்து வருகிறார். ஒன்று செசரியாவில் அமைந்துள்ளது. மற்றொன்று ஜெருசலேமில் அமைந்துள்ளது.
சில நேரங்களில் ஜெருசலேமில் அமைந்துள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான பைட் அகியனிலும் அவர் வசிப்பதுண்டு. தற்போது அந்த இல்லத்தைப் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த விவகாரம் குறித்து ராணுவம் என்ன கூறுகிறது?
அக்டோபர் 19ஆம் தேதி, காலை 8.19 உள்ளூர் நேரப்படி, இஸ்ரேல் ராணுவம், “லெபனானில் இருந்து கடந்த ஒரு மணிநேரத்தில் மூன்று ஆளில்லா விமானங்கள் இஸ்ரேலுக்குள் நுழைந்துள்ளன.
அவற்றில் இரண்டு வெற்றிகரமாகத் தடுத்து நிறுத்தப்பட்டது. மூன்றாவது ஆளில்லா விமானம் செசரியாவில் உள்ள கட்டடம் ஒன்றில் மோதி தாக்குதல் நடத்தியது. இதில் யாரும் காயமடையவில்லை,” என்று குறிப்பிட்டிருந்தது.
சனிக்கிழமை (அக்டோபர் 19) அன்று வடக்கு இஸ்ரேல் பகுதியில் 55 ராக்கெட்டுகள் லெபனான் பகுதியில் இருந்து ஏவப்பட்டதாக ராணுவம் கூறியுள்ளது. இந்தத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். 9 நபர்கள் காயம் அடைந்துள்ளனர்.
இரான் ஆதரவளித்து வரும் ஹெஸ்பொலா அமைப்பு மறைந்திருக்கும் என்று இஸ்ரேலால் நம்பப்படும் பெய்ரூட்டில் தொடர்ச்சியாகத் தாக்குதலை நடத்தி வருகிறது இஸ்ரேல்.
லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்
பிபிசியின் மத்திய கிழக்கு ஆசிரியர் செபஸ்டியன் உஷெர், “நெதன்யாகு வீட்டின் மீது தாக்குதல் நடந்த பிறகு, இஸ்ரேல் ராணுவத்தினர் தெற்கு பெய்ரூட்டில் அமைந்திருக்கும் நகரங்களின் மீது தாக்குதல் நடத்தி வருவதாக,” குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தாக்குதல் நடைபெற்ற ஒரு மணிநேரத்துக்குள், தெற்கு பெய்ரூட்டில் இருந்து மக்கள் வெளியேறுமாறு மூன்று முறை இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை அனுப்பியது.
சனிக்கிழமை அன்று இஸ்ரேல் ராணுவம் லெபனானின் தலைநகரான பெய்ரூட்டிற்கு அருகே 12 வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதுமட்டுமின்றி, இஸ்ரேல் ராணுவம் லெபனான் மற்றும் பெக்கா சமவெளியின் இதர பகுதிகளிலும் தாக்குதல்களை நடத்தியது.
இந்தத் தாக்குதலில் பெய்ரூட்டுக்கு வடக்கே, கிறிஸ்துவ பெரும்பான்மையை கொண்டுள்ள ஜோனியா நகரில் இருவர் கொல்லப்பட்டதாக லெபனானின் சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த வாகனம் ஒன்று தாக்குதலுக்கு ஆளானதாக உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேலின் முந்தைய தாக்குதல்களில் இருந்து இது முற்றிலும் மாறுபட்டது. இஸ்ரேல் இதுவரை ஷியா மக்கள் அதிகம் வாழும் நகரங்களில் மட்டுமே தாக்குதல் நடத்தியது. இந்தப் பகுதிகளில் ஹெஸ்பொலாவின் நடமாட்டம் இருந்தது.
இரான் அரசு ஊடகம் சொல்வது என்ன?
நெதன்யாகு வீடு மீது நடைபெற்ற தாக்குதலை ஹெஸ்பொலாதான் நடத்தியது என்று இரான் அரசின் செய்தி முகமையான ஐ.ஆர்.என்.ஏ. செய்தி வெளியிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபைக்கான இரான் இஸ்லாமிய குடியரசின் நிரந்தர தூதுக் குழுவின் (Iran’s mission to the UN) கருத்து அந்தச் செய்தியில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. “கேள்விக்குரிய இந்த நடவடிக்கை லெபனானில் உள்ள ஹெஸ்பொலாவால் நடத்தப்பட்டது,” என்று கூறியுள்ளது.
இரானின் நிதி மற்றும் ஆயுத ஆதரவைப் பெற்ற ஹெஸ்பொலா அமைப்பு இதுவரை இந்தத் தாக்குதல் தொடர்பாக எந்தவிதமான கருத்தையும் தெரிவிக்கவில்லை.
அக்டோபர் 1ஆம் தேதியன்று இஸ்ரேல் மீது இரான் ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியதற்கு இஸ்ரேல் பதிலடி தரத் தயாராகி வரும் சூழலில் இந்த ஆளில்லா விமான தாக்குதல் நடைபெற்றுள்ளது. அக்டோபர் 1 தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர், பதிலடி மிகவும் மோசமானதாக, துல்லியமாக இருக்கும் என்று கூறியிருந்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு