நியூசிலாந்திடம் தோற்றதால் இந்தியாவின் உலக சாதனை பயணத்தில் சிக்கல் – சிஎஸ்கேவுக்கு ரச்சின் நன்றி

இந்தியா - நியூசிலாந்து

பட மூலாதாரம், Getty Images

இந்திய மண்ணில் 36 ஆண்டுகளுக்குப் பின்னர் நியூசிலாந்து அணி டெஸ்டில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. பெங்களூருவில் நடைபெற்ற இரு நாடுகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்டில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அந்த அணி வெற்றி பெற்றுள்ளது.

முதல் இன்னிங்ஸில் வெறும் 46 ரன்களுக்கு ஆட்டமிழந்த இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் சர்ஃபராஸ் கான், ரிஷப் பந்தின் அபார ஆட்டத்தால் வலுவாக மீண்டு வந்தது. ஆனாலும், நியூசிலாந்துக்கு இந்திய அணி நிர்ணயித்த இலக்கு அது வெற்றி பெற போதுமானதாக இல்லை.

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் மிகக் குறைந்த ரன்களில் தோற்றது ஒட்டுமொத்தமாக இந்த போட்டியையே தாரை வார்த்துவிட்டது.

இந்த தோல்விக்கு இந்திய அணி மேற்கொண்ட தவறான முடிவுகளே காரணமாகிவிட்டன. இதனை கேப்டன் ரோகித் சர்மாவும் ஒப்புக் கொண்டுள்ளார். இந்திய அணி கோட்டை விட்டது எங்கே?

ஆட்ட நாயகன் விருது பெற்ற ரச்சின் ரவீந்திரா, ஐ.பி.எல். தொடரில் தான் ஆடும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். அவர் என்ன சொன்னார்?

இந்த தோல்விக்குப் பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் இந்திய அணியின் நிலை என்ன?

இந்தியா - நியூசிலாந்து

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

கடைசி நாளில் என்ன நடந்தது?

பெங்களூருவில் நடைபெற்ற இந்தியா – நியூசிலாந்து முதல் டெஸ்டின் முதல் நாள் மழையால் கைவிடப்பட்டது. இரண்டாவது நாளில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்தியா சிறிது நேரத்திலேயே அந்த முடிவு தவறானது என்று உணர்ந்தது.

முதல் இன்னிங்ஸில் இந்தியா வெறும் 46 ரன்களில் ஆல் அவுட்டாக, நியூசிலாந்து அணி ரச்சின் ரவீந்திராவின் அபார ஆட்டத்தால் 402 ரன்களைக் குவித்தது. இரண்டாவது இன்னிங்ஸில் சர்ஃபராஸ் கான், ரிஷப் பந்த் ஆகியோரின் அபார ஆட்டத்தால் வலுவாக மீண்டு வந்த இந்திய அணி 462 ரன்களைக் குவித்தது. இதன் மூலம் நியூசிலாந்து அணிக்கு 107 ரன்களை வெற்றி இலக்காக இந்தியா நிர்ணயித்தது. அத்துடன் நான்காவது நாள் ஆட்டம் நிறைவு பெற்றது.

ஐந்தாவது மற்றும் கடைசி நாளில் 107 என்ற எளிய இலக்கைத் துரத்திய நியூசிலாந்து அணியை இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மிரட்டினார். இரண்டாவது பந்திலேயே நியூசிலாந்து கேப்டன் டாம் லாதமை ரன் ஏதும் எடுக்காத நிலையில் அவர் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழக்கச் செய்தார்.

ஒரு முனையில் பும்ரா மிரட்டலாக பந்துவீச, மறுமனையில் முகமது சிராஜூம் நியூசிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுத்தார். இதனால், நியூசிலாந்து அணி தொடக்கத்தில் ரன்களை சேர்க்கவே சிரமப்பட்டது. குறிப்பாக, நியூசிலாந்து வீரர்கள் பும்ராவின் பந்துகளை எதிர்கொள்ளவே மிகவும் சிரமப்பட்டனர். பும்ரா வீசிய 8 ஓவர்களில், அதாவது 48 பந்துகளில் 22 பந்துகளை நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் கணிக்க முடியாமல் தவறான ஷாட் ஆடினர். தனது இரண்டாவது பந்தில் டாம் லாதமை வீழ்த்திய பும்ரா, அடுத்த சிறிது நேரத்தில் டெவோன் கான்வேயையும் பெவிலியனுக்கு அனுப்பி வைத்தார். அவர் 17 ரன்களை எடுத்தார்.

இந்தியா - நியூசிலாந்து

பட மூலாதாரம், Getty Images

எளிதாக ரன்களை சேர்க்க முடியாவிட்டாலும் கூட, குறைவான இலக்கு என்பதால் நியூசிலாந்து வீரர்கள் நெருக்கடியின்றி களத்தில் இருந்தனர். அதேநேரத்தில், முதல் இன்னிங்ஸைப் போலவே மூன்றாவது வேகப்பந்துவீச்சாளர் இல்லாத குறையை இரண்டாவது இன்னிங்ஸிலும் இந்தியா உணர்ந்தது. இதனால், வேகப்பந்துவீச்சைக் கொண்டு நியூசிலாந்து வீரர்களுக்கு தொடக்கத்தில் அளித்த நெருக்கடியை இந்திய அணியால் தொடர முடியவில்லை.

அடுத்து வந்த சுழற்பந்துவீச்சாளர்களை நியூசிலாந்து வீரர்கள் நெருக்கடியின்றி எதிர்கொண்டனர். ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், அஸ்வின் ஆகியோரின் பந்துகளில் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் சிரமமின்றி ரன் சேர்த்தனர். குறிப்பாக, முதல் இன்னிங்ஸைப் போலவே இரண்டாவது இன்னிங்ஸிலும் ரச்சின் ரவீந்திரா அச்சமின்றி ஆடினார். அவரும் வில் யங்கும் சேர்ந்து நியூசிலாந்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர். ரவீந்திரா 39 ரன்களும், வில் யங் 48 ரன்களும் சேர்த்தனர். நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்திய மண்ணில் 1988-ஆம் ஆண்டுக்குப் பிறகு நியூசிலாந்து அணி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறுவது இதுவே முதல் முறையாகும்.

இந்தியா - நியூசிலாந்து

பட மூலாதாரம், Getty Images

“டாஸில் தோற்றது நல்லதாகி விட்டது”

முதல் டெஸ்டில் பெற்ற வெற்றிக்குப் பிறகு பரிசளிப்பு விழாவில் பேசிய நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம்,

“நாங்களும் முதலில் பேட்டிங் செய்யவே விரும்பினோம். டாஸில் தோற்றது ஒரு வகையில் நல்லதாகிவிட்டது. இந்திய அணியின் முதல் இன்னிங்ஸில் எங்களது பந்துவீச்சாளர்கள் சரியான லென்த்தில் பந்துவீசினர். அதற்கான பரிசும் கிடைத்தது. இந்தியா வலுவாக மீண்டும் வரும் என்பது தெரியும். அவர்கள் அதனை செய்தார்கள். ஆனால், இரண்டாவது புதிய பந்தில் எங்கள் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். ஓ ரூர்கி இந்த போட்டியில் மிகச் சிறப்பாக பந்துவீசினார். டிம் சவுத்தி, ஹென்றி ஆகியோரும் சிறப்பாக செயல்பட்டனர். முதல் இன்னிங்ஸில் ரச்சினுடன் சவுத்தி அமைத்த பார்ட்னர்ஷிப் முக்கியமானது. சில போட்டிகளே ஆடியுள்ள ரச்சின் கடந்த ஓராண்டாக அவரது பணியை மிகச்சிறப்பாக நிறைவேற்றுகிறார். ” என்று கூறினார்.

இந்தியா - நியூசிலாந்து

பட மூலாதாரம், Getty Images

சர்ஃபராஸ், ரிஷப் பற்றி ரோகித் கூறியது என்ன?

இந்திய அணியின் தோல்வி குறித்துப் பேசிய கேப்டன் ரோகித் சர்மா, “முதல் இன்னிங்சில் நாங்கள் சரியாக பேட்டிங் செய்யவில்லை. நாங்கள் 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆவோம் என்று எதிர்பார்க்கவில்லை. இருப்பினும் இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டோம் இது ஒரு நல்ல முயற்சி. 350 ரன்கள் பின்தங்கியிருக்கும் போது, அதிகம் யோசிக்க முடியாது. ரிஷப் பண்ட் மற்றும் சர்பராஸ் கான் ஆகியோரின் பேட்டிங்கை பார்க்க மிகவும் உற்சாகமாக இருந்தது. சற்று ரிஸ்க் எடுத்தாலும் கூட ரிஷப் பந்து முதிர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.” என்று கூறினார்.

மேலும் தொடர்ந்த அவர், “நல்ல பந்துகளை தடுத்தாடியும், சில பந்துகளை விட்டும் ஆடிய பந்த், அவரது இயல்பான ஷாட்களையும் ஆடினார். சர்பராஸின் ஆட்டத்தை மறக்க முடியாது. நான்காவது போட்டியில் ஆடும் அவர் சிறந்த, முதிர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். எந்த மாதிரியான ஷாட்களை ஆட வேண்டும் என்ற தெளிவு அவரிடம் இருக்கிறது. நீங்கள் மனதளவில் தெளிவாக இருந்துவிட்டால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதில் தடையேதும் இருக்காது” என்று கூறினார்.

“முதல் போட்டியில் தோற்ற பிறகு பல முறை நாங்கள் மீண்டு வந்திருக்கிறோம். இங்கிலாந்துக்கு எதிராக முதல் போட்டியில் தோற்ற பிறகு அடுத்து வந்த 4 போட்டிகளையும் வென்றோம். இது நடக்கவே செய்யும். இன்னும் 2 போட்டிகள் இருக்கின்றன. நாங்கள் வலுவாக மீண்டு வருவோம்” என்று ரோகித் சர்மா கூறினார்.

இந்தியா - நியூசிலாந்து

பட மூலாதாரம், Getty Images

“சி.எஸ்.கே.வுக்கு நன்றி “

முதல் இன்னிங்ஸில் சதம் அடித்து நியூசிலாந்து அணி வலுவான முன்னிலை பெற உதவிய ரச்சின் ரவீந்திரா ஆட்டநாயகன் விருது பெற்றார். அப்போது பேசிய அவர், “பெங்களூருவில் பேட்டிங் செய்வதற்கு பிட்ச் நன்றாக இருந்தது. என்னுடைய சிறப்பான ஃபார்மும், சரியான முன்தயாரிப்புமே இந்த சிறப்பான ஆட்டத்திற்கு காரணம். என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவு இருக்கும் வரை அனைத்தும் சிறப்பாகவே இருக்கும். இந்த தொடருக்காக நான் கருப்பு மண், செம்மண் போன்ற வித்தியாசமான பிட்ச்களில் வித்தியாசமான பவுலர்களுக்கு எதிராக பயிற்சி எடுக்க முயற்சித்தேன்.” என்று கூறினார்.

“(சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஆடிய போது) ஒவ்வொரு நாளும் வலைப் பயிற்சியின் போது பல வகையான வலைப் பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டேன். அது விலை மதிப்பில்லாத சிறப்பான அனுபவமாக அமைந்தது. இந்த வசதிகளை செய்து தந்த சென்னைக்கு நன்றியுடையவனாக இருப்பேன். பெங்களூருவில் எங்களுடைய குடும்பத்தின் ஆதரவு கிடைத்தது நன்றாக இருந்தது.” என்றும் ரச்சின் ரவீந்திரா கூறினார்.

இந்தியா - நியூசிலாந்து

பட மூலாதாரம், Getty Images

இந்திய அணி கோட்டை விட்டது எங்கே?

இந்த டெஸ்ட் தொடங்கும் முன்பே இந்திய அணி நிர்வாகம் தவறான முடிவுகளை எடுக்கத் தொடங்கிவிட்டது என்பதை ஆட்டத்தின் முடிவு காட்டுகிறது. நியூசிலாந்து அணி 3 வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்க, பெங்களூரு ஆடுகளத்தின் தன்மையை சரிவர கணிக்காமல் இந்திய அணி 2 வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கியது தவறான முடிவாகிவிட்டது. மூன்றாவது வேகப்பந்துவீச்சாளர் இல்லாமல் நியூசிலாந்து பேட்டர்களுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுக்க முடியாமல் போய்விட்டது.

அதேபோல், பெங்களூருவில் பெய்த மழையால் முதல் நாள் ஆட்டம் தடைபட, இரண்டாவது நாளில் டாஸ் வென்றதும் பேட்டிங்கை இந்தியா தேர்வு செய்தது தவறாகிப்போனது. ஆடுகளத்தை சரியாக கணித்து திட்டமிட்டு பந்துவீசிய நியூசிலாந்து அணி, ஓரிரு செஷன்களிலேயே இந்த டெஸ்டின் முடிவை கிட்டத்தட்ட இறுதி செய்துவிட்டது. முதல் இன்னிங்ஸில் இந்தியா மிகக் குறைந்த ரன்களில் சுருண்டதே மீண்டு வர முடியாத நெருக்கடியில் அணியை தள்ளிவிட்டது.

இந்தியா உலக சாதனையை தொடர்வதில் சிக்கல்

இந்திய அணி 2013-ம் ஆண்டுக்குப் பிறகு தொடர்ச்சியாக 18 டெஸ்ட் தொடர்களை வென்று உலக சாதனை படைத்துள்ளது. முதல் டெஸ்டில் நியூசிலாந்து பெற்ற வற்றியால், இந்த சாதனையை இந்திய அணி நீட்டிப்பது இப்போது சவாலாக மாறியுள்ளது. அடுத்து வரும் இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் வென்றால் மட்டுமே இந்திய அணியால் தொடரை வென்று தனது உலக சாதனையை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்த முடியும் என்ற நிலையில் இருக்கிறது.

இந்த வகையில், ஆஸ்திரேலியா இருமுறை தொடர்ந்து 10 தொடர்களை வென்று இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் – அணிகளின் நிலை

இந்தியா - நியூசிலாந்து

பட மூலாதாரம், X/ICC

இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்ற பின் புதிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் நியூசிலாந்துக்கு எதிராக தோல்வி கண்ட இந்திய அணி (68.06 சதவீதம்) முதல் இடத்தில் நீடிக்கிறது. ஆஸ்திரேலியா (62.50 சதவீதம்) 2ம் இடத்திலும், இலங்கை (55.56 சதவீதம்) 3ம் இடத்திலும் உள்ளன.

இந்தியாவுக்கு எதிராக வெற்றி பெற்ற நியூசிலாந்து (44.44 சதவீதம்) 6வது இடத்தில் இருந்து 4வது இடத்திற்கு வந்துள்ளது. இதைத்தொடர்ந்து இங்கிலாந்து (43.06 சதவீதம்) 5வது இடத்திலும், தென் ஆப்பிரிக்கா (38.89 சதவீதம்) 6வது இடத்திலும் உள்ளன. இதையடுத்து 7 முதல் 9 இடங்களில் முறையே வங்காளதேசம் (34.38 சதவீதம்), பாகிஸ்தான் (25.93 சதவீதம்), வெஸ்ட் இண்டீஸ் (18.52 சதவீதம்) அணிகள் உள்ளன.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு