அக்டோபர் 7 2023.
ஹமாஸ் இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய தினம். அந்த தாக்குதலில் 1200 பேர் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, இஸ்ரேல் போரை அறிவித்தது. சுமார் ஒரு வருடக் காலமாக இன்னும் போர் நடந்து கொண்டிருக்கிறது.
ஒரு வருடத்தில், காஸாவின் பல பகுதிகள் அழிக்கப்பட்டன. 40,000க்கும் அதிகமான பாலத்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர், 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளனர். சில முக்கிய ஹமாஸ் தலைவர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த பட்டியலில் சமீபத்திய இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்ட யாஹ்யா சின்வார் மற்றும் இஸ்மாயில் ஹனியே போன்ற முக்கிய ஹமாஸ் தலைவர்களின் பெயரும் அடக்கம்.
ஹமாஸின் முக்கிய தலைவர்கள் யார்? இஸ்ரேல் தாக்குதலுக்குப் பிறகு அவர்கள் என்ன ஆனார்கள்?
யாஹ்யா சின்வார்
கடந்த ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதியன்று இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவர் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார்.
இந்த தாக்குதலில் சுமார் 1200 பேர் பலியாகினர். மேலும் 200க்கும் மேற்பட்டோர் பணயக்கைதிகளாக காஸாவுக்கு கொண்டு செல்லப்பட்டனர். தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேல் சின்வாரை குறிவைத்தது.
சின்வார் காஸாவில் ஹமாஸின் முக்கிய தலைவராக இருந்தார். இந்த ஆண்டு ஜூலை மாதம் இஸ்மாயில் ஹனியே இறந்த பிறகு, அவர் ஹமாஸின் தலைவரானார்.
1962 ஆம் ஆண்டு காஸாவில் பிறந்த யாஹ்யா சின்வார், சிறு வயதிலேயே காஸா போரில் கலந்து கொண்டார்.
சின்வார், ஹமாஸின் அல்-மஜ்த் (al-Majd) என்னும் பாதுகாப்பு அமைப்பை உருவாக்கினார். இது உள் பாதுகாப்பு விஷயங்களை நிர்வகிக்கிறது. இந்த சேவை இஸ்ரேலுக்கு உளவு பார்ப்பதாக சந்தேகிப்பவர்களை விசாரிக்கிறது. இஸ்ரேலிய உளவுத்துறை அதிகாரிகளையும் கண்காணிக்கிறது.
சின்வார் மூன்று முறை இஸ்ரேலால் கைது செய்யப்பட்டார். 1988-இல் அவர் மூன்றாவது முறையாக கைது செய்யப்பட்ட பிறகு, அவருக்கு நான்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இருப்பினும், ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஹமாஸால் சிறைபிடிக்கப்பட்டிருந்த ஒரு இஸ்ரேலிய ராணுவ வீரருக்கு ஈடாக 1,027 பாலத்தீன மற்றும் இஸ்ரேலிய அரபு கைதிகளை இஸ்ரேல் விடுவித்தது. அவர்களில் சின்வாரும் ஒருவர்.
சின்வார் பின்னர் ஹமாஸில் ஒரு முக்கிய தலைவராக தனது பதவியை மீண்டும் பெற்றார். 2015ல் சின்வாரை “சர்வதேச பயங்கரவாதிகள்” பட்டியலில் அமெரிக்கா சேர்த்தது. கடந்த அக்டோபர் 16-ஆம் தேதி ரஃபாவில் இஸ்ரேலியப் படைகளால் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டார்.
இஸ்மாயில் ஹனியே
ஹமாஸின் மிகப்பெரிய தலைவராக இருந்த இஸ்மாயில் ஹனியேவின் மரணம் 31 ஜூலை 2024 அன்று இரானில் உறுதி செய்யப்பட்டது. இவர் பாலத்தீன அகதிகள் முகாமில் பிறந்தவர்.
இஸ்ரேல் 1989 இல் அவரை சிறையில் அடைத்து, மூன்று வருடங்கள் வரை வைத்திருந்தது. பின்னர் அவர் பல ஹமாஸ் தலைவர்களுடன் சேர்த்து, இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையில் ஆள் நடமாட்டம் இல்லாத மார்ஜ் அல்-ஜுஹூர் என்னும் பகுதிக்கு நாடு கடத்தப்பட்டார். ஹனியே அங்கே ஒரு வருடம் தங்கியிருந்தார்.
அதன் பிறகு அவர் காஸா திரும்பினார். 1997-இல், அவர் ஹமாஸ் இயக்கத்தின் ஆன்மீகத் தலைவரான ஷேக் அகமது யாசின் அலுவலகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். இதனால் அவரது அந்தஸ்து உயர்ந்தது.
பாலத்தீன அரசாங்கத்தின்(Palestinian Authority government) பத்தாவது பிரதமராக 2006-ஆம் ஆண்டில் வகித்தார். ஒராண்டுக்கு பிறகு அவர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார். பாலத்தீன அதிகார சபை தலைவர் மஹ்மூத் அப்பாஸ், ஹனியேவை பதவியில் இருந்து நீக்கினார். தனது பதவி நீக்கம் அரசியலமைப்புக்கு எதிரானது என ஹனியே நிராகரித்தார். தனது அரசாங்கம் தனது கடமைகளைத் தொடரும் என்றும் பாலத்தீன மக்கள் மீதான தனது பொறுப்புகளை கைவிடாது என்றும் அவர் கூறினார்.
அவர் 2017-இல் ஹமாஸின் அரசியல் பிரிவு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அமெரிக்க வெளியுறவுத்துறை அவரை 2018 இல் பயங்கரவாதியாக அறிவித்தது. இஸ்மாயில் ஹனியே பல வருடங்களாக கத்தாரில் வசித்து வந்தார்.
முகமது டெய்ஃப்
ஹமாஸ் இயக்கத்தின் ராணுவப் பிரிவான இஸ்ஸெடின் அல்-கஸ்ஸாம் பிரிகேட்ஸின் (Izzedine al-Qassam Brigades) தலைவராக முகமது டெய்ஃப் இருந்தார். அவர் 1965 இல் காஸாவில் பிறந்தார்.
பாலத்தீனர்கள் அவரை ஹமாஸின் முக்கிய தலைவராக கருதினார். பல தாக்குதல் நடவடிக்கைகளுக்கு மூளையாக இவர் செயல்பட்டார். இஸ்ரேலியர்கள் அவரை ‘மரணத்தின் மனிதன்’ என்று அழைத்தார்கள்.
ஹமாஸ் படையினர் காஸாவில் இருந்து இஸ்ரேலுக்குள் நுழையும் சுரங்கப் பாதைகளை நிர்மாணிக்க முகமது டெய்ஃப் திட்டமிட்டார். அவரது உண்மையான பெயர் முகமது தீப் அல்-மஸ்ரி, ஆனால் அவர் அபு கலீத் மற்றும் `அல் டெயிஃப்’ என்றும் அறியப்பட்டார்.
முகமது டெய்ஃப் காஸா இஸ்லாமிய பல்கலைக் கழகத்தில் உயிரியலில் இளங்கலை பட்டம் பெற்றவர். பல்கலைக் கழகத்தில், அவர் நடிப்பு மற்றும் நாடகத்தின் மீதான அவரது ஆர்வத்திற்காக பிரபலமாக அறியப்பட்டார். அங்கு கலைஞர்கள் குழுவை உருவாக்கினார்.
ஹமாஸ் அமைப்பதாக அறிவிக்கப்பட்ட போது தயக்கமின்றி அதில் இணைந்தார். இஸ்ரேலிய அதிகாரிகள் அவரை 1989 இல் கைது செய்தனர். அவர் 16 மாதங்கள் காவலில் இருந்தார்.
சிறையில் இருந்த போது, ஜகாரியா அல்-ஷோர்பாகி மற்றும் சலா ஷெஹாதே ஆகியோருடன் பேசி, ஹமாஸிலிருந்து ஒரு தனி இயக்கத்தை நிறுவ திட்டமிட்டார்.
சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, டெய்ஃப் திட்டமிட்டப்படி இஸ்ரேலிய வீரர்களை சிறைபிடிக்கும் நோக்கில் அல்-காசிம் படையணியை சிலருடன் சேர்ந்து உருவாக்கினார். படைப்பிரிவின் முக்கிய தலைவராக உருவெடுத்தார்.
ஹமாஸ் படையினர் காஸாவில் இருந்து இஸ்ரேலுக்குள் நுழையப் பயன்படுத்தும் சுரங்கப்பாதைகளை கட்டிய பொறியாளர் இவர்தான். அதிக எண்ணிக்கையிலான ராக்கெட்டுகளை ஏவுவதற்கான உத்தியை ஊக்குவித்தவர்களில் அவரும் ஒருவர்.
கடந்த 1996இல் பல இஸ்ரேலியர்களைக் கொன்ற பேருந்து குண்டுவெடிப்புகளைத் திட்டமிட்டு மேற்பார்வையிட்டதாக இஸ்ரேல் அவர் மீது குற்றம் சாட்டியது, மேலும் 1990களின் நடுப்பகுதியில் மூன்று இஸ்ரேலிய வீரர்களைச் சிறைபிடித்துக் கொன்றதில் அவருக்கு பங்கு இருந்ததாகக் கூறப்பட்டது. இஸ்ரேலால் தேடப்படும் நபர்களில் ஒருவராக டெய்ஃப் இருந்தார்.
இஸ்ரேல் அவரை 2000-இல் சிறையில் அடைத்தது. ஆனால் இரண்டாவது பாலத்தீன எழுச்சி அல்லது `இன்டிஃபதா’ என்று அழைக்கப்பட்ட காலக்கட்டத்தின் போது அவர் சிறையில் இருந்து தப்பினார்.
பல படுகொலை முயற்சிகளில் இருந்து அவர் உயிர் பிழைத்துள்ளார். 2002இல் நடந்த அத்தகைய ஒரு முயற்சியில் அவர் ஒரு கண்ணை இழந்தார். அப்போது அவர் ஒரு கால் மற்றும் கையை இழந்துவிட்டதாகவும், பேசுவதில் சிரமம் இருப்பதாகவும் இஸ்ரேல் கூறியது.
2014 ஆம் ஆண்டு காஸா மீதான தாக்குதலின் போது, இஸ்ரேலிய ராணுவம் மீண்டும் டெய்ஃப்பை கொல்ல குறிவைத்தது. ஆனால் அவர் தப்பிவிட்டார். ஆனால் அவர்கள் அவரது மனைவி மற்றும் 2 குழந்தைகள் கொல்லப்பட்டனர்.
இந்த ஆண்டு ஜூலை மாதம் கான் யூனிஸில் வான்வழித் தாக்குதலில் டெய்ஃப் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் கூறியது.
மர்வான் இசா
ஹமாஸ் ராணுவப் பிரிவான அல்-கஸ்ஸாமின் துணைத் தலைவராக இருந்த மர்வான் இசா, அக்டோபர் 7-ஆம் தேதி தாக்குதலுக்குப் பின்னால் இருந்த முக்கிய நபர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். அவர் பல ஆண்டுகளாக இஸ்ரேலின் மிகவும் தேடப்படும் நபர்கள் பட்டியலில் இருந்தார். 2006 இல் ஒரு படுகொலை முயற்சியில் காயமடைந்தார்.
சிறுவயதிலேயே ஹமாஸுடன் இணைந்து செயல்பட்டதன் காரணமாக, “முதல் இன்டிஃபதா” என அழைக்கப்பட்ட காலகட்டத்தின் போது, இஸ்ரேலிய ராணுவத்தினர் இவரை ஐந்து ஆண்டுகள் சிறை வைத்திருந்தனர்.
அதன் பிறகு அவர் 1997 இல் பாலத்தீன அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார், ஆனால் 2000 ஆம் ஆண்டில் இரண்டாவது இன்டிஃபதா காலக்கட்டத்தின் தொடக்கத்தில் விடுவிக்கப்பட்டார்.
பாலத்தீன நிர்வாக சபையால் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, அல்-கஸ்ஸாம் படைப்பிரிவுகளில் ராணுவ பிரிவை மேம்படுத்துவதில் இவர் முக்கியப் பங்கு வகித்தார்.
ஹமாஸ் இயக்கத்தில் இவர் முக்கியப் பங்காற்றியதால், இவர் இஸ்ரேலின் மிகவும் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் இடம்பெற்றார்.
அவரது சகோதரிகள் 2014 மற்றும் 2021 இல் காஸா மீதான இஸ்ரேலிய படையெடுப்பின் போது உயிரிழந்தனர். இஸ்ரேலிய போர் விமானங்கள் அவரது வீட்டை இரண்டு முறை தாக்கியுள்ளன.
2011-ஆம் ஆண்டு பிணைக்கைதியாகப் பிடிக்கப்பட்டிருந்த இஸ்ரேல் ராணுவ வீரர் கிலாத் ஷாலித் என்பவர் விடுதலை செய்யப்பட்ட போது அதற்கு ஈடாக இஸ்ரேலின் பிடியில் இருந்த 1,000க்கும் மேற்பட்ட பாலத்தீன கைதிகள் விடுவிக்கப்பட்டனர். அதில் மர்வான் இசாவும் ஒருவர்.
2011 வரை இவருடைய முகத்தை யாரும் பார்த்ததில்லை. கிலாத் ஷாலித் விடுவிக்கப்பட்டதற்கு ஈடாக விடுவிக்கப்பட்ட பாலத்தீன கைதிகளின் வரவேற்பு விழாவின் போது ஒரு குரூப் போட்டோ வெளியானது. அதில் இசாவும் இருந்தார்.
மார்ச் 2024 இல் காஸாவில் உள்ள அகதிகள் முகாமுக்கு கீழே நிலத்தடியில் இருந்த சுரங்கப்பாதையில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் இசா கொல்லப்பட்டதாக இஸ்ரேல் கூறுகிறது.
கலீத் மஷால்
மேற்குக் கரையில் 1965 ஆம் ஆண்டு பிறந்த கலீத் மஷால், ஹமாஸின் நிறுவனர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். 1997 இல், இஸ்ரேலிய பிரதமரின் அறிவுறுத்தலின் பேரில், இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட், ஜோர்டானில் மஷால் வாழ்ந்த போது அவரைக் கொல்ல முயன்றது.
மொசாட் முகவர்கள் போலி கனேடிய பாஸ்போர்டுடன் ஜோர்டானுக்குள் நுழைந்தனர். அந்த நேரத்தில் ஜோர்டானிய குடியுரிமை பெற்ற கலீத் மஷால், தலைநகர் அம்மானில் ஒரு தெருவில் நடந்து சென்றபோது மொசாட் முகவர்கள் அவர் மீது விஷ ஊசியை செலுத்தினர்.
கலீத் மஷால் மீதான படுகொலை முயற்சியைக் கண்டுபிடித்த ஜோர்டானிய அதிகாரிகள் இரண்டு மொசாட் உறுப்பினர்களைக் கைது செய்தனர்.
ஜோர்டானின் மறைந்த மன்னர் ஹுசைன் இஸ்ரேலிய பிரதமரிடம் மஷாலுக்கு கொடுக்கப்பட்ட விஷ ஊசிக்கு மாற்று மருந்தைக் கேட்டிருந்தார்.
அப்போதைய அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனின் அழுத்தத்தை எதிர்கொண்ட நெதன்யாகு, முதலில் கோரிக்கையை நிராகரித்த பிறகு, அதன் பிறகு மாற்று மருந்தை வழங்கினார்.
கத்தாரில் வசித்த மஷால், 2012 ஆம் ஆண்டு முதல் முறையாக காஸாவிற்குள் பயணம் செய்தார். இந்த பயணத்தின் போது, அவரை பாலத்தீன அதிகாரிகள் வரவேற்றனர். அவரை வரவேற்க பாலத்தீனர்கள் திரண்டிருந்தனர்.
ஹமாஸ் 2017 இல் அதன் அரசியல் பணியகத்தின் தலைவராக மஷாலுக்குப் பதிலாக இஸ்மாயில் ஹனியேவைத் தேர்ந்தெடுத்தது. மஷால் அரசியல் பணியகத்தின் வெளிநாட்டு பிரிவுத் தலைவரானார்.
மஹ்மூத் ஜஹர்
ஹமாஸ் இயக்கம் நிறுவப்பட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு மஹ்மூத் ஜஹர் இஸ்ரேலால் கைது செய்யப்பட்டார்.
ஜஹர் 1945 இல் காஸாவில் பிறந்தார். அவரது தந்தை பாலத்தீனர் மற்றும் அவரது தாயார் எகிப்தியர். அவர் தனது குழந்தைப் பருவத்தை எகிப்திய நகரமான இஸ்மாலியாவில் கழித்தார். அவர் தனது ஆரம்ப, இடைநிலை கல்வியை காஸாவில் பெற்றார்.
கெய்ரோவில் உள்ள ஐன் ஷம்ஸ் பல்கலைக்கழகத்தில் 1971 இல் பொது மருத்துவத்தில் பட்டம் பெற்றார். பின்னர் 1976 இல் பொது அறுவை சிகிச்சையில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
காஸா மற்றும் கான் யூனிஸில் உள்ள மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரிந்தார். அவரது அரசியல் செயல்பாடுகள் காரணமாக இஸ்ரேல் வெளியேற்றும் வரை அவர் அங்கு பணியாற்றினார்.
ஹமாஸின் முக்கிய தலைவர்களில் ஒருவராக ஜஹர் கருதப்படுகிறார். அவர் ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் தலைமையின் உறுப்பினராகக் கருதப்படுகிறார். 1988 இல், ஹமாஸ் நிறுவப்பட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு, மஹ்மூத் ஜஹார் ஆறு மாதங்கள் இஸ்ரேலிய சிறையில் அடைக்கப்பட்டார். 1992-இல் மற்ற தலைவர்களுடன் இஸ்ரேல் அவரை நாடு கடத்தியது. அவர் ஒரு வருடம் அங்கேயே இருந்தார்.
2005 இல் நடைபெற்ற தேர்தலில் ஹமாஸ் பெரும்பான்மையைப் பெற்றது. பிரதமர் இஸ்மாயில் ஹனியேவின் அரசாங்கத்தில் ஜஹர் வெளியுறவு அமைச்சராகப் பணியாற்றினார். இதையடுத்து, பாலத்தீன அதிகார சபை தலைவராக இருந்த மஹ்மூத் அப்பாஸ், இந்த அரசை கவிழ்த்தார். இது பாலத்தீனர்களிடையே பிளவை ஏற்படுத்தியது.
இஸ்ரேல் 2003 ஆம் ஆண்டு ஜஹரை படுகொலை செய்ய முயற்சித்தது. காஸா நகருக்கு அருகில் ரிமாலில் உள்ள ஜஹரின் வீட்டின் மீது F-16 விமானம் மூலம் வெடிகுண்டு வீசப்பட்டது. வெடிகுண்டு ஐந்து குவிண்டால் எடை கொண்டதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. ஆனால் அவரது மூத்த மகன் காலித் இறந்துவிட்டார்.
கடந்த 2008 ஜனவரி 15 அன்று காஸாவின் கிழக்குப் பகுதியில் இஸ்ரேலிய ராணுவ நடவடிக்கையில் அவரது மற்றொரு மகன் ஹொசாம் கொல்லப்பட்டார். இந்த தாக்குதலில் ஹொசாம் உட்பட 18 பேர் கொல்லப்பட்டனர். ஹொசாம் காசிம் படைப்பிரிவின் உறுப்பினராகவும் இருந்தார்.
ஜாஹர் அறிவுசார், அரசியல் மற்றும் இலக்கியப் படைப்புகளை எழுதியுள்ளார். ‘நமது சமகால சமூகத்தின் பிரச்னை… ஒரு குர்ஆனிய ஆய்வு’, ‘சூரியனுக்குக் கீழே இடம் இல்லை’ போன்றவை இதில் அடங்கும். இந்த புத்தகங்கள் பெஞ்சமின் நெதன்யாகுவின் புத்தகத்திற்கு பதிலளிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளன. இதுதவிர ‘On the Pavement’ என்ற நாவலையும் எழுதியுள்ளார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு