பண்டிகை, திருமணம், வேலையிழப்புக்கும் காப்பீடு – இவற்றை எடுப்பதால் கிடைக்கும் பயன்கள்

குறுகிய கால காப்பீடுகள்

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், போடா நவீன்
  • பதவி, பிபிசி செய்தியாளர்

டெர்ம் இன்சூரன்ஸ் குறித்து நம் அனைவருக்கும் ஓரளவுக்குத் தெரியும். அதாவது, பாலிசிதாரர் இறந்துவிடும் சூழலில் அவரது குடும்பத்தினர் அல்லது அவரைச் சார்ந்திருப்போருக்கு பாதுகாப்பு வழங்க டெர்ம் இன்சூரன்ஸ் உதவுகிறது.

அத்தகைய நீண்டகால காப்பீடுகளைத் தாண்டி, சமீப காலமாக சில குறுகிய கால காப்பீடு வகைகள் அறிமுகமாகி வருகின்றன.

உதாரணத்திற்கு, நாளை தீபாவளி பண்டிகை என வைத்துக்கொள்வோம். அதற்கு, 9 ரூபாய் பிரீமியத்தில் பட்டாசு காப்பீட்டை ஃபோன்பே செயலி அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது, தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிக்கையில் காயம் ஏற்பட்டால், இந்தக் காப்பீடு மூலம் ரூ. 25,000 ரூபாய் வரை பெற முடியும்.

ஆனால், இந்தக் காப்பீட்டின் கால அளவு 10 தினங்கள் மட்டுமே. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே பலன் பெற முடியும் என்ற இவ்வகை காப்பீடுகள்தான் குறுகிய கால காப்பீடுகள். ஃபோன்பே அறிமுகப்படுத்தியுள்ள காப்பீடு மூலம், மருத்துவமனை செலவுகள், சிகிச்சை வசதிகள் ஆகியவற்றுக்கான செலவுகளைப் பெறலாம். அதேபோன்று, இறப்பு நேரிட்டால் அதற்கான காப்பீட்டுத் தொகையையும் பெறலாம்.

“ஒன்பது ரூபாய்க்கு இத்தகைய சிறப்பான பலன்களை வழங்குகின்றனர். ஆனால், நம்முடைய பாதுகாப்புக்கு இத்தகைய குறுகிய கால காப்பீடுகள் சிறப்பானவை எனச் சொல்ல முடியாது,” என்கிறார், காப்பீடு ஆலோசகராக இருக்கும் ஹெச்.சதீஷ் குமார்.

“மருத்துவக் காப்பீடு, டெர்ம் இன்சூரன்ஸ் ஆகியவை குறித்து பெரும்பாலானோருக்குத் தெரியும். ஆனால், குறுகிய கால காப்பீடுகள் குறித்து வெகு சிலர் மட்டுமே அறிவர். ஒவ்வொரு காப்பீடு குறித்து நன்றாக அறிந்துகொண்ட பின்னரே அதை எடுக்க வேண்டும்,” என்கிறார் சதீஷ்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

குறுகிய கால காப்பீடுகள் என்பது என்ன?

ஒரு வாரம் அல்லது ஓர் ஆண்டுக்கும் குறைவான கால அளவில் எடுக்கப்படும் காப்பீடுகள், ‘குறுகிய கால காப்பீடுகள்’ என்று அழைக்கப்படுகின்றன. இவை தற்காலிக காப்பீடுகள் என்றும் அறியப்படுகின்றன.

குறுகிய கால மருத்துவக் காப்பீடு

பொதுவாக, மருத்துவக் காப்பீடுகள் ஓராண்டு காலத்திற்கு எடுக்கப்படும். ஃபோன் பே போன்ற சில நிறுவனங்கள் 3 முதல் 6 மாத காலத்திற்குக் காப்பீடு வழங்குகின்றன. அதன் பிரீமியம் தொகை குறைவாக இருக்கும் என்பதால் சிலர் அவற்றை எடுக்க விரும்புகின்றனர்.

மேலும், ஒரு காப்பீட்டில் இருந்து மற்றொரு காப்பீட்டிற்கு மாறுவதற்காக, இத்தகைய குறுகிய கால காப்பீடுகளை நாடுகின்றனர்.

பயணக் காப்பீடு

ஐஆர்சிடிசி பயண காப்பீடுகளை வழங்குகின்றது

பட மூலாதாரம், @RailMinIndia/X

படக்குறிப்பு, ஐஆர்சிடிசி வழங்கும் பயணக் காப்பீடுகள், வேறு எந்தக் காப்பீடும் எடுக்காதவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்கிறார் காப்பீடு ஆலோசகர் சதீஷ் குமார்.

ஐ.ஆர்.சி.டி.சி மூலமாக முன்பதிவு செய்யும்போது பயணக் காப்பீடு வழங்கப்படுகிறது. முன்பதிவு செய்யும்போது அதனுடன் 45 பைசா செலுத்தினால், பயணத்தின்போது விபத்து காரணமாக இறந்தாலோ அல்லது உடலுறுப்புகள் செயலிழந்தாலோ 10 லட்ச ரூபாய் வரை காப்பீடு பெற முடியும்.

அதேபோன்று, ரேபிடோ, உபெர், ஓலா ஆகிய நிறுவனங்களும் சிறிய தொகைக்கு இத்தகைய காப்பீடுகளை வழங்குகின்றன. ஆனால், இத்தகைய காப்பீடுகளை எடுக்க வேண்டும் என்பது கட்டாயம் அல்ல.

“ஐ.ஆர்.சி.டி.சி மற்றும் சில நிறுவனங்கள் பயண காப்பீடுக்காக மிகக் குறைவான தொகையையே கட்டணமாக விதிக்கின்றன. ஆனால், பெரிய தொகை கொண்ட டெர்ம் இன்சூரன்ஸ் மற்றும் மருத்துவக் காப்பீட்டைத் தனியாக எடுப்பவர்கள், இத்தகைய காப்பீடுகளில் இருந்து பெரும் பலன்களைப் பெற முடியாது. எனினும், வேறு எந்தக் காப்பீடும் எடுக்காதவர்களுக்கு இத்தகைய காப்பீடுகள் சிறந்தவை,” என்று விளக்குகிறார் சதீஷ் குமார்.

விபத்து காப்பீடு கட்டாயம்

ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான பிரீமியம் தொகையில் விபத்து காப்பீடுகள் உள்ளன

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான பிரீமியம் தொகையில் விபத்துக் காப்பீடுகள் உள்ளன

விபத்து காப்பீடு மூலம் ஏதேனும் விபத்து ஏற்பட்டால், மருத்துவ செலவுகள், உறுப்புகள் செயலிழப்பு, இறப்பு போன்ற சூழல்களில் அவற்றில் இருந்து பாதுகாப்பு பெற முடியும். இதுவும் குறுகிய கால காப்பீடு பிரிவில்தான் வருகிறது.

“ரயில்கள், விமானங்களில் பயணிக்கும்போது மட்டும்தான் விபத்து ஏற்படுமா? விபத்துகள் எங்கு வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் ஏற்படலாம். எனவே, குறுகிய கால காப்பீடுகளைவிட, தனிநபர் விபத்துக் காப்பீடுகளை எடுப்பது சிறந்தது,” என்கிறார், தொழில் ஆலோசகர் நாகேந்திர சாய் குண்டாவரம்.

“ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான பிரீமியம் கொண்ட விபத்துக் காப்பீடுகள் உள்ளன. விபத்தால் உடலுறுப்புகள் செயலிழந்தாலோ, பல நாட்களுக்கு ஓய்வு தேவைப்பட்டாலோ, அல்லது அதனால் பொருளாதார இழப்பு ஏற்பட்டாலோ இந்தக் காப்பீடு மூலம் பலன்பெற முடியும். இது, மருத்துவக் காப்பீட்டுக்குள் வராது. எனவே, தனியாக விபத்துக் காப்பீடு அவசியம் எடுக்க வேண்டும். தினமும் வெளியே பயணிப்பவர்கள் இந்தக் காப்பீட்டை நிச்சயம் எடுக்க வேண்டும்,” என்று நாகேந்திர சாய் வலியுறுத்துகிறார்.

உடல் உறுப்புகளுக்கு சிறப்புக் காப்பீடு

அமிதாப் பச்சன்

பட மூலாதாரம், @SrBachchan/X

சில பிரபலங்கள் தங்களின் அழகு மற்றும் குரலுக்காக அறியப்படுகின்றனர். விளையாட்டு வீரர்களுக்கு ஒவ்வொரு வித விளையாட்டிற்கும் ஒவ்வொரு உடலுறுப்பும் மிக முக்கியமானதாக இருக்கும்.

அத்தகைய உடல் உறுப்புகளை விபத்தில் இழக்க நேரிட்டால், அவர்களின் வருமானமும் நின்றுவிடும். எனவேதான், உடல் உறுப்புகளுக்கென தனியாக காப்பீடு எடுக்கப்படுகிறது.

“உலகம் முழுவதிலும் ஏராளமான பிரபலங்கள் தங்களின் உடல் உறுப்புகளைக் காப்பீடு செய்துள்ளனர். உதாரணமாக, அமிதாப் பச்சன் தனது குரலுக்கு காப்பீடு எடுத்துள்ளார், சானியா மிர்சா தனது கைகளுக்கு காப்பீடு எடுத்துள்ளார்,” என்கிறார் சதீஷ் குமார். இருப்பினும், இந்தத் தகவல்களை பிபிசியால் சுயாதீனமாகச் சரிபார்க்க முடியவில்லை.

“எந்தவொரு பிரபலமும் தன்னுடைய தனித்துவத்திற்காக காப்பீடு எடுக்க முடியும். அந்த பிரபலத்தின் செல்வாக்கு மற்றும் அந்த உறுப்புகளுக்கான ஆபத்து காரணிகளைப் பொறுத்து காப்பீட்டு நிறுவனம் பிரீமியம் தொகையை நிர்ணயிக்கும்,” என்றும் சதீஷ் விளக்கினார்.

அதிகம் அறியப்படாத காப்பீடுகள்

காப்பீடு வகைகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, உங்களின் செல்லப் பிராணிகளுக்கும் விபத்து, உடல்நலம் போன்றவற்றுக்காக காப்பீடு எடுக்கலாம்.
  • பணி காப்பீடு: லே ஆஃப் எனப்படும் திடீர் பணி நீக்கம், பணியாற்றிய நிறுவனம் திடீரென மூடப்படுவது போன்ற எதிர்பாராத சம்பவங்கள் நிகழக்கூடும். அந்தச் சூழலில் இந்தக் காப்பீடு பயனுள்ளதாக இருக்கும்.
  • திருமண காப்பீடு: இயற்கைப் பேரிடர் அல்லது திடீர் இறப்பால் திருமணம் நிற்கும்போது, திருமணத்திற்காக அதுவரை ஆன செலவுகளை இந்தக் காப்பீட்டின் மூலம் பெற முடியும்.
  • பயணக் காப்பீடு: பயணத்தின்போது திடீர் உடல்நலப் பிரச்னைகள் ஏற்பட்டாலோ அல்லது உடைமைகள் திருடு போனாலோ இந்தக் காப்பீட்டு தொகையைப் பெற முடியும். மேலும், திடீரென பயணத்தை நீங்கள் ரத்து செய்தாலும், அதற்கான பயணக் கட்டணத்தை மீண்டும் பெற முடியும். அந்நிறுவனம் பயணத்தை ரத்து செய்தாலும் கட்டணத்தைத் திரும்பி பெற முடியும்.
  • செல்லப் பிராணிகளுக்கான காப்பீடு: உங்களின் செல்லப் பிராணிகளுக்கும் காப்பீடு எடுக்கலாம். அவற்றுக்கு உடல்நலம் சரியில்லாமல் போனாலோ அல்லது விபத்து ஏற்பட்டாலோ காப்பீட்டின் பலனைப் பெற முடியும்.

சைபர் அபாயம் குறித்த எச்சரிக்கை அவசியம்

“இணைய யுகத்தில் ஒரு ‘க்ளிக்கில்’ காப்பீடு எடுக்க முடியும். ஆனால், அதற்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் படித்த பின்னரே காப்பீடு எடுக்க வேண்டும்.

சைபர் மோசடிகள் அதிகமாகி வரும் நிலையில், காப்பீட்டுக்கான பணத்தை நம்பத்தகுந்த செயலிகள் மற்றும் இணையதளங்கள் வாயிலாக மட்டுமே செலுத்த வேண்டும்,” என்று காப்பீடு ஆலோசகர் சதீஷ் அறிவுறுத்துகிறார்.

மேலும், “காப்பீட்டிற்கான பிரீமியம் குறைவு எனக் கூறும் இணையத்தின் உள்ளே சென்றால், வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை இழக்க நேரிடலாம்,” என்றும் அவர் எச்சரிக்கிறார்.

(குறிப்பு: இந்த தகவல்கள் புரிதலுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. நிதி சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பாக அதற்கான நிபுணர்களை அணுகலாம்)

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு