உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நாளையுடன் நிறைவு ! on Sunday, October 20, 2024
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான வௌியிடப்படாமல் இருந்த இரண்டு அறிக்கைகளை வெளியிடுவதற்கு ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நாளை (21) காலை 10 மணியுடன் நிறைவடைவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இன்று (20) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி வெளியிடத் தயங்கும் இரண்டு அறிக்கைகளை வெளியிடுமாறு நான் ஜனாதிபதிக்கு வழங்கியிருந்த நேரம் நாளை காலை 10 மணியுடன் முடிவடைகிறது. இந்த அறிக்கைகளை பகிரங்கப்படுத்துவதன் மூலம், அரசியலமைப்பில் அவருக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பை நிறைவேற்றி, அவருக்கு எதிராக குற்றஞ்சாட்டப்படும் அபாயத்தைத் தவிர்க்கவும் நாளை காலை 10 மணி வரை அவகாசம் உள்ளது. எவ்வாறாயினும், ஜனாதிபதி அரசியலமைப்பின் 38 ஆவது சரத்தை மீறி, நாளை காலைக்குள் இந்த அறிக்கையை வழங்கத் தவறினால், நான் நிச்சயமாக அந்த அறிக்கைகளை முன்வைப்பேன்” என்றார்.