உத்தரபிரதேசம்: இந்து – முஸ்லிம் கலவரத்தின் தொடர்ச்சியாக நடந்த என்கவுன்டரால் சர்ச்சை

பஹ்ரைச் என்கவுன்டர்

படக்குறிப்பு, அக்டோபர் 13ஆம் தேதி மாலை, துர்கா சிலை கரைக்கும் நிகழ்வின் போது, ​​இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, ராம் கோபால் மிஸ்ரா என்ற இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
  • எழுதியவர், சையத் மோஜிஸ் இமாம்
  • பதவி, பிபிசிக்காக

உத்தரபிரதேச மாநிலம் பஹ்ரைச் நகரில் அண்மையில் துர்கா சிலை கரைப்பு ஊர்வலத்தின் போது வன்முறை வெடித்தது. இந்த வன்முறையின் போது ராம் கோபால் மிஸ்ரா என்ற இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டார். இவ்வழக்கில் தற்போது புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

ராம் கோபால் மிஸ்ரா கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் இருவர் என்கவுண்டரில் சுடப்பட்டதாகவும் பஹ்ரைச் போலீசார் கூறியுள்ளனர்.

என்கவுன்டர் சம்பவம் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர். குற்றம் சாட்டப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களும் இந்த என்கவுன்டர் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளனர். ஆனால் காவல்துறை உயர் அதிகாரிகள் இதுகுறித்து மவுனம் காக்கின்றனர்.

ராம் கோபால் மிஸ்ரா கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 5 பேரை நேபாளத்திற்குத் தப்பிச் செல்ல முயன்றபோது காவல்துறை கைது செய்ததாக பஹ்ரைச் காவல்துறை கண்காணிப்பாளர் விருந்தா சுக்லா கூறினார்.

பஹ்ரைச் என்கவுன்டர்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை கைப்பற்றுவதற்காக குற்றம்சாட்டப்பட்ட நபர்களுடன் காவல்துறை சென்ற போது, ​​அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை எடுத்து போலீஸாரை தாக்கிவிட்டு அவர்கள் அங்கிருந்து தப்பிச் செல்ல முற்பட்டதாக காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

அவரது கூற்றுப்படி, தற்காப்புக்காக போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டி இருந்தது. இதில் இரண்டு பேர் காயமடைந்தனர். காவல்துறை அதிகாரிகள் குற்றம்சாட்டப்பட்டவர்களின் கால்களை நோக்கி சுட்டனர். சர்ஃபராஸ் மற்றும் தாலிப் மீது தூப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

வெள்ளிக்கிழமை, பஹ்ரைச் போலீசார் குற்றம் சாட்டப்பட்டவர்களை மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர்கள் நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

துர்கா சிலை கரைப்பு ஊர்வலத்தில் என்ன நடந்தது?

பஹ்ரைச் என்கவுன்டர்

படக்குறிப்பு, பல முஸ்லிம்களின் வீடுகள் மற்றும் கடைகள் தீக்கிரையாக்கப்பட்டன.

அக்டோபர் 13 ஆம் தேதி மாலை, பஹ்ரைச் பகுதியில் இருக்கும் மஹராஜ்கஞ்ச் என்ற இடத்தில் துர்கா சிலையை கரைக்கும் போது இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது ராம் கோபால் மிஸ்ரா என்ற இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த சம்பவத்திற்குப் பிறகு, பல முஸ்லிம்களின் வீடுகள் மற்றும் கடைகள் தீக்கிரையாக்கப்பட்டன.

துர்கா சிலை கரைப்பின் போது பாடல்கள் ஒலிபரப்பும் டிஜே சர்ச்சையூட்டும் பாடல்களை இசைத்ததால் பிரச்னை தொடங்கியுள்ளது. இதற்கு முஸ்லிம் தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்து தரப்பு டி.ஜே. பாடல்களை நிறுத்த மறுத்ததால் தகராறு அதிகரித்ததாகவும், பாடல் ஓடுவதை நிறுத்த சாதனங்களின் வயரை முஸ்லிம் தரப்பு அகற்றியதாகவும் சம்பவத்தன்று அங்கிருந்த போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்படத் தொடங்கியது.

“அப்போது சிலை கரைக்கும் ஊர்வலத்தில் கலந்து கொண்ட ராம் கோபால் மிஸ்ரா, சர்ச்சையான பாடல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த சர்ஃபராஸின் வீட்டின் மீது ஏறி பச்சைக் கொடியை அகற்றிவிட்டு, காவிக்கொடியை ஏற்ற முற்பட்டார்” என்று போலீஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தின் வீடியோவும் வைரலானது. இந்த வீடியோவில், ராம் கோபால் மிஸ்ரா பச்சைக் கொடியை அகற்றி, காவி கொடியை ஏற்றியதைக் காண முடிகிறது.

அப்போது, வீட்டிற்குள் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது, அதில் ராம் கோபால் மிஸ்ரா உயிரிழந்தார்.

போலீஸ் தரப்பு சொல்வது என்ன?

பஹ்ரைச் என்கவுன்டர்

படக்குறிப்பு, பிஏசி 35 பட்டாலியன் கமாண்டன்ட் அஜய் குமார்.

என்கவுன்டர் குறித்து போலீசார் தரப்பு, “சர்ஃபராஸ் என்கிற ரிங்கு, முகமது தலிப் என்கிற ஷப்லு ஆகியோருடன் போலீஸ் குழு, நன்பரா காவல் நிலையத்தின் குர்மிபூர்வா பைபாஸ் வழியாகச் செல்லும் கால்வாய்ப் பாதையில் 400 மீட்டர் தூரம் வந்து ஆயுதத்தை (கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட ஆயுதம்) மீட்டனர். பின்னர் குற்றம் சாட்டப்பட்ட இருவரும் போலீஸ் குழுவை தள்ளிவிட்டு புதர்களுக்குள் ஒளிந்து கொண்டனர். அவர்கள் அங்கு மறைத்து வைத்திருந்த மற்றும் மீட்டு கொண்டு வந்த அதே ஆயுதங்களால் போலீஸ் குழுவை நோக்கி சுடத் தொடங்கினர்.” என்று கூறியது.

பஹ்ரைச் எஸ்.பி. விருந்தா சுக்லா கூறுகையில், தற்காப்புக்காக போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டின் போது, ​​குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சர்ஃபராஸின் இடது காலிலும், மற்ற குற்றவாளி முகமது தாலிப்பின் வலது காலிலும் சுடப்பட்டது.

காயமடைந்தவர்கள் பஹ்ரைச் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

“மஹராஜ்கஞ்சில் வன்முறை தொடங்கிய பின்னர், மொத்தம் 14 எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன, அதில் மொத்தம் 57 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்று எஸ்பி விருந்தா சுக்லா கூறினார்.

கைது செய்யப்பட்டவர்களில் 34 பேர் முஸ்லிம் தரப்பையும், 23 பேர் இந்து தரப்பையும் சேர்ந்தவர்கள். இதில் பெரும்பாலானவை வன்முறை மற்றும் கலவரம் தொடர்பானது.

குற்றம் சாட்டப்பட்டவர்களின் குடும்பத்தினர் சொல்வது என்ன?

பஹ்ரைச் என்கவுன்டர்

படக்குறிப்பு, குற்றம் சாட்டப்பட்ட சர்ஃப்ராஸின் சகோதரி ருக்சார்

குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சர்ஃபராஸின் சகோதரி ருக்சார் புதன்கிழமை ஒரு வீடியோவை வெளியிட்டு தனது குடும்ப உறுப்பினர்களின் என்கவுன்டர் குறித்து அச்சத்தை வெளிப்படுத்தினார்.

அக்டோபர் 14 அன்று, தனது கணவர் மற்றும் மைத்துனரை பஹ்ரைச் போலீசார் வீட்டிலிருந்து அழைத்துச் சென்றதாகவும், ஆனால் இப்போது அவர்கள் பற்றிய எந்த தடயமும் இல்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

இந்த வழக்கில் ருக்சாரின் தந்தை அப்துல் ஹமீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். ருக்சார் சொன்ன தகவல்கள் காவல்துறையின் அறிக்கைக்கு முற்றிலும் மாறானதாக இருக்கிறது.

மஹராஜ்கஞ்ச் அருகே உள்ள தர்ம் காந்தா என்ற இடத்தில் போலீசார் கைது செய்த போது, ​​அவரது தந்தையும் சகோதரரும் சரணடைய இருந்ததாக ருக்சார் பிபிசியிடம் தெரிவித்தார்.

ருக்சாரின் கூற்றுப்படி, அந்த நேரத்தில் நடந்த சலசலப்புக்குப் பிறகு குடும்பத்தினரால் அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை.

மஹராஜ்கஞ்சிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பஹ்ரைச் என்ற இடத்தில் ருக்சார் வசிக்கிறார்.

அவரது கூற்றுப்படி, அக்டோபர் 14 அன்று போலீசார் அவரது கணவர் மற்றும் மைத்துனரையும் அழைத்துச் சென்றனர், ஆனால் தற்போது அவர்கள் பற்றி எந்த தகவலும் இல்லை.

புதன்கிழமை அவர் வெளியிட்ட வீடியோவில், காவல்துறை தனது குடும்ப உறுப்பினர்களையும் என்கவுன்டர் செய்யக்கூடும் என்று அச்சத்தை வெளிப்படுத்தினார்.

இதற்கிடையில், குற்றம் சாட்டப்பட்டவரின் வழக்கறிஞர் முகமது கலீம் ஹஷ்மி இந்த என்கவுன்டர் போலியானது என்று குற்றம் சாட்டினார்.

முதற்கட்ட தகவல்களை வைத்து பார்க்கும் போது, “மத பாகுபாடு காரணமாக இது நடந்ததாக தெரிகிறது” என்றார். மேலும் இது தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மகாராஜ்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த சிலர், (பெயர் வெளியிட விரும்பாதோர்) அருகில் ஒரு ஆறு இருக்கும் போது, ​​​​துப்பாக்கியை மறைக்க ஏன் இவ்வளவு தூரம் செல்ல வேண்டும் என்று கூறினார்.

ஞாயிற்றுக்கிழமை நடந்த சம்பவத்திற்குப் பிறகு, மக்கள் தற்போது தங்கள் வீடுகளுக்குத் திரும்புகிறார்கள், ஆனால் மக்கள் இன்னமும் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வரத் தயங்குகிறார்கள்.

பிபிசி குழு வெள்ளிக்கிழமை பல வீடுகளின் கதவுகளைத் தட்டியது. ஒரு சிலர் மட்டும் வெளியில் வந்தனர். சம்பவத்தன்று டி.ஜே பாடல்களால் விஷயம் பெரிதாகிவிட்டதாகச் சொன்னார்கள்.

அப்துல் ஹமீது, ஜஸ்கர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்றும், பொற்கொல்லராக வேலை பார்ப்பதாகவும் அந்த ஊரில் வசிக்கும் பப்லு கூறுகிறார். பல ஆண்டுகளாக பொற்கொல்லராகப் பணியாற்றி வருகிறார். அவருடைய மகனும் சகோதரனும் அதே வேலையைச் செய்கிறார்கள்.

பப்லுவின் கூற்றுப்படி, ஹமீது அல்லது அவரது குடும்பத்தைச் சேர்ந்த எவரும் சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டதாக இதுவரை கேள்விப்படவில்லை.

மஹராஜ்கஞ்சில் வசிக்கும் சிராஜ் கூறுகையில், ஹமீதின் குடும்பத்தினர் யாருடனும் தகராறு செய்ததாக இதுவரை கேள்விப்பட்டதில்லை. அவர் திருமணத்தின் போது தங்க நகைகளை கடனாகக் கொடுத்து இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் இருவருக்கும் உதவி செய்வார், பின்னர் மக்கள் மெதுவாக பணத்தை திருப்பிச் செலுத்துவார்கள்.

வன்முறையின் போது ஹமீதின் நகைக் கடையும் சூறையாடப்பட்டதாக சிராஜ் கூறுகிறார். பிபிசியும் சம்பவ இடத்திற்குச் சென்று, சாலையில் சிதறிக் கிடந்த பொருட்களைக் கண்டது.

வெள்ளிக்கிழமையன்று, ஹமீதின் வீடு சாலையில் கட்டப்பட்டிருப்பதாக பொதுப்பணித் துறை நோட்டீசும் ஒட்டியுள்ளது. சிவப்பு குறி போடப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். அந்த அறிவிப்பின்படி, சாலையின் நடுவில் இருந்து 60 அடிக்கு கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள முடியாது.

அடையாளம் தெரியாத நபர்கள் மீது போலீசார் பல எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளதால் போலீசார் யாரை வேண்டுமானாலும் கைது செய்து விடுவார்களோ என்ற அச்சம் அப்பகுதி மக்களிடையே நிலவுவதாக ஹமீதின் உறவினர்கள் கூறுகின்றனர்.

மஹராஜ்கஞ்சில் உள்ள சிலரையும் பிபிசி கண்டறிந்தது, அவர்களது குடும்ப உறுப்பினர்கள் இன்னும் சிறைக்கு அனுப்பப்படவில்லை, ஆனால் போலீஸ் காவலில் உள்ளனர்.

இமாம்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த மேராஜ் குரேஷி, மஹராஜ்கஞ்ச் வந்திருந்தார். போலீஸார் அவரைக் கைது செய்தனர். தற்போது அவரது மனைவி அவரை தேடி வருகிறார்.

ராம் கோபால் மிஸ்ராவின் கிராமத்தினர் கூறுவது என்ன?

பஹ்ரைச் என்கவுன்டர்

படக்குறிப்பு, துர்கா சிலை கரைப்பின் போது பாடல்கள் ஒலிபரப்பும் டிஜே சர்ச்சையூட்டும் பாடல்களை இசைத்ததால் பிரச்னை தொடங்கியது

மஹராஜ்கஞ்சில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், இறந்த ராம் கோபால் மிஸ்ராவின் ஊரான ரெஹுவா மன்சூர்பூர் கிராமத்தில் உள்ள மக்களும் மிகவும் கோபமாக காணப்பட்டனர்.

இது மிகவும் தவறு என்று அங்கிருந்த பலர் பிபிசி குழுவிடம் தெரிவித்தனர்.

ராம் கோபாலின் மனைவி ரோலி மிஸ்ரா கூறுகையில், “தனது கணவர் கொல்லப்பட்ட விதத்துடன் ஒப்பிடுகையில் இந்த என்கவுன்டர் சம்பவம் எல்லாம் ஒன்றுமே இல்லை.” என்றார் .

ரோலி மிஸ்ரா, “குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.” என்றார்.

இறந்த ராம் கோபால் மிஸ்ராவின் சகோதரி, தாய் மற்றும் தந்தையும் அரசாங்கத்தின் நடவடிக்கையால் திருப்தியடையவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது காவல்துறை வேண்டுமென்றே கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லை என்று அவரது சகோதரி ப்ரீத்தி மிஸ்ரா குற்றம் சாட்டினார்.

மூன்று நாட்களுக்கு முன்பு குற்றம்சாட்டவரின் (சர்ஃப்ராஸ்) சகோதரியின் வீட்டில் இருந்து சிலர் அழைத்துச் செல்லப்பட்டதாக ஒரு வீடியோ இருப்பதாகவும், அதனால் மக்கள் மனதில் சந்தேகம் இருப்பதாகவும், இங்குள்ள மக்கள் இந்த நடவடிக்கையில் திருப்தி அடையவில்லை என்றும் முன்னாள் கிராமத் தலைவர் மாதவ்தீன் மிஸ்ரா கூறுகிறார்.

மாதவ்தீன் கூறுகையில் தன் கிராமத்தினர் மஹராஜ்கஞ்சிற்கு அடிக்கடி செல்வதால் ஹமீதை நன்கு தெரியும் என்று கூறுகிறார்.

ராம் கோபால் மிஸ்ரா கேட்டரிங் வேலை பார்த்து வந்ததாக மாதவ்தீன் கூறுகிறார். சம்பவத்தன்று மதியம் 2:30 மணியளவில் சிலை கரைப்பதற்காக கிராமத்தை விட்டு வெளியேறியதாக அவர் கூறினார். “மதம் சார்ந்த பாடல்கள்தான் டிஜேயில் ஒலிக்கப்பட்டன. ஆனால் அன்றைய டிஜே ஒலித்த பாடல்களால் விஷயம் பெரிதாகிவிட்டது” என்றார்.

கேள்வி எழுப்பும் அரசியல் கட்சிகள்

அகிலேஷ் யாதவ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அரசு தனது தோல்விகளை மறைக்க என்கவுன்டர்களை நடத்துகிறது என்று அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.

சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், காவல்துறை வேண்டுமென்றே என்கவுன்டர்களை நடத்துவதாக பலமுறை குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த என்கவுன்டர் குறித்து அகிலேஷ் யாதவ், “இது ஸ்பான்சர் செய்யப்பட்ட முறையில் நடைபெறுகிறது. இது என்கவுன்டர் அல்ல, இது கொலை, ஒட்டுமொத்த பொதுமக்களும் இதைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்” என்றார்.

மஜ்லிஸ் கட்சி (AIMIM) தலைவர் அசாதுதீன் ஒவைசி கூறுகையில், “மாநில பாஜக அரசு அரசியல் சாசனத்தின்படி செயல்பட வேண்டும், துப்பாக்கியால் ஆட்சி செய்யக்கூடாது. பழிவாங்கும் அரசியலை அரசு நிறுத்த வேண்டும்” என்றார்.

இவ்வளவு துல்லியமாக கால்களை குறிவைக்கும் காவலர்களை ஒலிம்பிக்கிற்கு அனுப்ப வேண்டும் என்றும் ஒவைசி கூறினார்.

ஆனால், இந்த என்கவுன்டர் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு உயர் அதிகாரிகள் மவுனம் காத்து வருகின்றனர். பஹ்ரைச்சில் முகாமிட்டுள்ள கோரக்பூர் மண்டலத்தின் ஏடிஜி கே.எஸ்.பிரதாப் குமாரை பிபிசி தொடர்பு கொண்டது. இந்த விவகாரத்தில் உரிய நேரத்தில் உரிய தகவல் தெரிவிக்கப்படும் என்றார்.

பஹ்ரைச் எஸ்.பி. விருந்தா சுக்லாவை பிபிசி தொடர்பு கொண்ட போது, ​​இந்தப் பிரச்னை குறித்து இப்போது பேசமாட்டேன் என்று கூறினார். மற்ற வழக்குகளிலும், குற்றவியல் நீதி அமைப்பின் படி போலீசார் அடுத்த நடவடிக்கை எடுப்பார்கள் என்றார்.

பாஜகவின் நிலைப்பாடு என்ன?

கிரிராஜ் சிங்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான கிரிராஜ் சிங்

இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பாஜக பதிலளித்துள்ளது.

அகிலேஷ் யாதவ் கருத்து குறித்து மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான கிரிராஜ் சிங் கூறுகையில், “பஹ்ரைச் சம்பவம் குறித்து அகிலேஷ் யாதவ் ஒரு வார்த்தை கூட பேசவில்லை, முஸ்லிம் வாக்குகளுக்காக மட்டுமே அவர் இப்படி செய்கிறார். அவரது டிஎன்ஏவே இந்துக்களுக்கு எதிரானது” என்று கூறியுள்ளார்.

சுகால்தேவ் பாரதிய சமாஜ் கட்சியின் தலைவரும், உ.பி., அரசின் அமைச்சருமான ஓம் பிரகாஷ் ராஜ்பர், என்கவுன்டர் செய்த போலீசாரை பாராட்டியுள்ளார்.

“போலிஸ் மீது யாராவது தோட்டாக்களை ஏவினால் போலீசார் அவர்களுக்கு மாலை அணிவிப்பார்களா? அவர்கள் மீது மலர் மழை பொழிவார்களா?” என்றார்.

இதற்கிடையில், பாஜக தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறுகையில், “கலவரக்காரர்கள் மீது நடத்தப்படும் தடியடி சமுதாயத்தின் நல்லிணக்கத்திற்கு நல்லது” என்று கூறியுள்ளார்.

பஹ்ரைச்சில் உள்ள மஹ்சி தொகுதி எம்எல்ஏ சுரேஷ்வர் சிங் கூறுகையில், என்கவுன்டர் எப்படி நடந்தது என்பது விசாரிக்க வேண்டும் என்றார்.

யோகி அரசின் என்கவுன்டர்?

உத்தர பிரதேசத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.

காவல்துறையின் கூற்றுப்படி, மார்ச் 2017 முதல் செப்டம்பர் 2024 வரை, உ.பி.யில் சுமார் 12,964 போலீஸ் என்கவுன்டர்கள் நடந்துள்ளன, இதில் 207 பேர் இறந்துள்ளனர்.

இந்தக் காலப்பகுதியில் 27 ஆயிரத்து 117 குற்றவாளிகள் பிடிபட்டுள்ளதுடன் 6 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளனர். இந்த காலப்பகுதியில், பிக்ரு சம்பவத்தில் கொல்லப்பட்ட 8 போலிசார் உட்பட 1,601 போலிசார் காயமடைந்துள்ளனர் மற்றும் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த மாதம், சுல்தான்பூரில் நடந்த என்கவுன்டரில் மங்கேஷ் யாதவ் இறந்த பிறகு, உ.பி காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படையினர் (STF) மீது கேள்விகள் எழுப்பப்பட்டன.

சிறப்பு அதிரடிப்படையினர் தகவலின்படி, பாஜக ஆட்சியின் ஏழரை ஆண்டுகளில், அதாவது செப்டம்பர் 22 வரை, இந்த படை 49 பேரை என்கவுன்டர் செய்துள்ளது. உள்ளூர் காவல்துறையின் புள்ளிவிவரங்களை சேர்த்தால், இந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம்.

சிறப்பு அதிரடிப்படை ஏடிஜி அமிதாப் யாஷ் கூறுகையில், “கடந்த ஏழரை ஆண்டுகளில் எஸ்டிஎஃப் 7 ஆயிரம் குற்றவாளிகளை கைது செய்துள்ளது, அவர்களில் 49 பேர் என்கவுன்டர்களில் இறந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரை அறிவிக்கப்பட்டது.” என்றார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு