ஜெனீவாவில் நடைபெற்ற 149ஆவது அனைத்து பாராளுமன்ற ஒன்றிய பேரவையில் இலங்கை பங்கேற்பு !

by guasw2

on Saturday, October 19, 2024

ஜெனீவா நகரில் கடந்த 13ஆம் திகதி முதல் 17ஆம் திகதிவரை நடைபெற்ற 149ஆவது அனைத்து பாராளுமன்ற ஒன்றியத்தின் (IPU) பேரவையில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கை பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மற்றும் பணியாட்தொகுதியின் பிரதானியும் பிரதி செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதில் பாராளுமன்ற ஒத்துழைப்பு மற்றும் நிர்வாகத்தை முன்னேற்றுவதற்கான உலகளாவிய அர்ப்பணிப்பை எடுத்துக் காட்டும் வகையில் 130 நாடுகளை சேர்ந்த 630 பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இதில் கலந்துகொண்ட இலங்கை பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மற்றும் பணியாட்தொகுதியின் பிரதானியும் பிரதி செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன ஆகியோர் முக்கியமான கூட்டங்களிலும் சந்திப்புகளிலும் பங்குபற்றினர்.

இம்முறை பேரவையில் 54 பாராளுமன்ற சபாநாயகர்கள், 36 பிரதி சபாநாயகர்கள், 36% பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 45 வயதுக்கு குறைந்த 25% பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். பாராளுமன்ற வகிபங்கில் உள்ளடங்கிய தன்மை மற்றும் பிரதிநிதித்துவத்தை மேம்படுத்துவதற்கான கூட்டு அர்ப்பணிப்பை பலதரப்பட்ட பிரதிநிதிகளின் பங்களிப்பு கோடிட்டுக் காட்டுகின்றது.

பொது மாநாடு, பாராளுமன்ற செயலாளர் நாயகங்களின் சங்கத்தின் (ASGP) கூட்டம், ஆசிய-பசுபிக் குழுக் கூட்டம், நிலைபேறான அபிவிருத்தி பற்றிய நிலைக்குழுக் கூட்டம் மற்றும் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் மன்றம் உள்ளிட்ட பிரதான கூட்டங்களில் இலங்கை பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இலங்கை பிரதிநிதிகளின் பங்கேற்பு உலகளாவிய பாராளுமன்ற நடைமுறைகள் மற்றும் சவால்கள் தொடர்பில் பெறுமதியான பங்களிப்பை ஏற்படுத்தியது.

இதன்போது இலங்கை பிரதிநிதிகள் அனைத்து பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் கலாநிதி டுலியா அக்சன் (Tulia Ackson), பாலின கூட்டு நிகழ்ச்சித்திட்ட ஆலோசகர் பிரிகிட் பிலியோன் (Brigitte Filion), IPU வின் SDG நிகழ்ச்சித்திட்ட அதிகாரி இஸபெல் ஒபாடியாரு (Isabel Obadiaru) ஆகியோருடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர். அத்துடன் சர்வதேச அணுசக்தி நிறுவனத்தின் அணுசக்தி பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர் கலாநிதி எலெனா பக்லொவாவை (Elena Buglova) சந்தித்ததுடன், பூட்டான் தேசிய பேரவையின் செயலாளர் நாயகம் டுபாவுடன் (Mr. Duba) இரு தரப்பு சந்திப்பிலும் இலங்கை பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்