சர்ஃபிராஸ் – ரிஷப் அதிரடியால் வலுவாக மீண்டு வந்த இந்தியா – கடைசி நாள் ஆட்டம் யாருக்கு சாதகமாக இருக்கும்?
- எழுதியவர், போத்திராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
இளம் வீரர் சர்ஃபிராஸ் கானின் முதல் டெஸ்ட் சதம் மற்றும் ரிஷப் பந்தின் அற்புதமான பேட்டிங்கால் இந்திய அணி 2வது இன்னிங்ஸில் 462 ரன்களைக் குவித்துள்ளது. இதையடுத்து, நியூஸிலாந்து அணி வெற்றி பெற 107 ரன்களை இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது.
இந்த இலக்கு சற்று குறைவானதாக தோன்றினாலும், இந்திய மைதானங்களில் ஐந்தாவது மற்றும் கடைசி நாளில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதையே வரலாறு கூறுகிறது. இந்திய அணியின் பந்துவீச்சு பலத்தால் நாளை ஆட்டம் எப்படி வேண்டுமானாலும் திரும்பலாம் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கூறுகின்றனர். ஆட்டத்தை திருப்பக் கூடிய பந்துவீச்சாளர்கள் இந்திய அணியிடம் இருப்பதால் ஆட்டத்தின் முடிவு என்பது மதில்மேல் பூனையாகவே இருப்பதாக கணிக்கப்படுகிறது.
டெஸ்டில் சர்ஃபிராஸ் கான் முதல் சதம்
231 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தநிலையில் இந்திய அணி இன்றைய 4வதுநாள் ஆட்டத்தைத் தொடங்கியது. சர்ஃபிராஸ் கான் 70 ரன்களிலும், ரிஷப் பந்தும் களமிறங்கினர். 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் இந்திய அணியில் இருவரும் இடம் பெற்றிருந்த நிலையில் இப்போது மீண்டும் இணைந்து ஆடினர்.
புதிய பந்தில், காலை நேரச் சூழலைப் பயன்படுத்தி விக்கெட்டுகளை வீழ்த்திவிடலாம் என நியூஸிலாந்து பந்துவீச்சாளர்கள் நினைத்தனர்.
ஆனால், அவர்களின் நினைப்புக்கு மாறாக ரிஷப்பந்த், சர்ஃபிராஸ் கான் இருவரும் அதிரடியாக பேட் செய்து ரன்களைச் சேர்த்தனர். சர்ஃபிராஸ்கான் பவுண்டரி அடித்து 110 பந்துகளில் டெஸ்ட் அரங்கில் தனது முதலாவது சதத்தை நிறைவு செய்தார். இவரின் கணக்கில் மட்டும் 13 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் அடங்கும். சர்ஃபிராஸ் கான் சதம் அடித்தவுடன் தனது ஹெல்மெட்டைக் கழற்றி, பேட்டை சுழற்றி துள்ளிக் குதித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
இருவரும் சேர்ந்து நியூஸிலாந்து பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து ரன்களைச் சேர்த்தனர். 63 ஓவர்களில் இந்திய அணி 300 ரன்களை எட்டியது. ரிஷப் பந்த் 55 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்தார்.
அரங்கிற்கு வெளியே சிக்ஸர் அடித்த ரிஷப் பந்த்
நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர் டிம் சவுத்தி வீசிய ஒரு ஓவரில் ரிஷப் பந்த் 107 மீட்டர் உயரத்துக்கு சிக்ஸர் விளாசி பறக்கவிட்டார். ரிஷப் பந்த் அடித்த சிக்ஸரில் பந்து, பெங்களூரு சின்னச்சாமி அரங்கிற்கு வெளியே சென்றது. சர்பிஃராஸ் கான், ரிஷப் பந்த் கூட்டணி 100 ரன்களைக் கடந்து அபாரமாக ஆடியது.
மழை குறுக்கிட்டதால், முன்கூட்டியே உணவு இடைவேளை அறிவிக்கப்பட்டு ஆட்டம் நிறுத்தப்பட்டது. அதன்பின் நீண்டநேரம் கழித்து மழை நின்றபின் ஆட்டம் மீண்டும் தொடங்கியது.
மழைக்குப் பின்பும் இருவரின் அதிரடி ஆட்டத்தையும் நியூஸிலாந்து பந்துவீச்சாளர்களால் நிறுத்த முடியவில்லை. இருவரின் அற்புதமான ஆட்டத்தில் இந்திய அணி 400 ரன்களை எட்டியது. சர்ஃபிராஸ் கான் 194 பந்துகளில் 150 ரன்கள் எட்டினார்.
நியூஸி. பந்துவீச்சாளர்கள் திகைப்பு
இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 46 ரன்களுக்கு ஆல்அவுட் ஆகிய நிலையில் 2வது இன்னிங்ஸில் மிகப்பெரிய அளவுக்கு ரன்களைக் குவித்ததைப் பார்த்து நியூஸிலாந்து பந்துவீச்சாளர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தனர்.
குறிப்பாக ரிஷப் பந்த், சர்ஃபிராஸ் கான் இருவரையும் பிரிக்க முடியாமல் நியூஸிலாந்து பந்துவீச்சாளர்கள் திணறினர். இருவரும் சேர்ந்து நியூஸிலாந்து பந்துவீச்சை அடித்தாடி, ரன்மழை பொழிந்து அவர்களை திக்குமுக்காட வைத்தனர்.
சர்ஃபிராஸ், ரிஷப் அற்புத ஆட்டம்
அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இளம் வீரர் சர்ஃபிராஸ் கான் டெஸ்ட் அரங்கில் முதல் சதத்தை எட்டி 150 ரன்களில் ஆட்டமிழந்தார். கார் விபத்துக்குப்பின் டெஸ்ட் போட்டிகளில் மீண்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ரிஷப் பந்த் ஒரு ரன்னில் சதத்தை தவறவிட்டார். 2-வது இன்னிங்ஸில் 99 ரன்கள் சேர்த்து அவர் ஆட்டமிழந்தார். இருவரும் சேர்ந்து 4வது விக்கெட்டுக்கு 177 ரன்கள் சேர்த்து இந்திய அணி பெரிய ஸ்கோரை எட்டுவதற்கு முக்கியக் காரணமாக அமைந்தனர்.
திருப்புமுனை ஏற்படுத்திய புதிய பந்து
80-வது ஓவரில் புதிய பந்து எடுக்கப்பட்டது. புதிய பந்தில் நியூஸிலாந்து பந்துவீச்சாளர்கள் பந்துவீசிய போதுதான் ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்பட்டது. புதிய பந்தில் வீசப்பட்ட 10.2 ஓவர்களில் இந்திய அணி சர்ஃபிராஸ் கான்(150), ரிஷப் பந்த்(99), கே.எல்.ராகுல் (12) ஆகியோரின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தது.
டிம் சவுத்தி பந்துவீச்சில் கவர் திசையில் அஜாஸ் படேலிடம் கேட்ச் கொடுத்து சர்ஃபிராஸ் கான் 150 ரன்களில் ஆட்டமிழந்தார். ரிஷப் பந்த் சதம் அடிக்க ஒரு ரன் இருக்கையில் ரூர்கே பந்துவீ்ச்சில் கிளீன் போல்டாகி 99 ரன்களில் ஆட்டமிழந்தார். டெஸ்ட் போட்டிகளில் ரிஷப் பந்த் 90 ரன்களுக்கு மேலாக குழித்து சதம் அடிக்கமுடியாமல் ஆட்டமிழப்பது இது 7-வது முறையாகும். கே.எல்.ராகுலும் 12 ரன்களில் ரூர்கே பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
இந்த 3 முக்கிய பேட்டர்கள் ஆட்டமிழந்தது நியூஸிலாந்து அணிக்கு புதிய தெம்பை, உற்சாகத்தை அளித்தது. பின் வரிசையில் ரவீந்திர ஜடேஜாவை(5) ரூர்கே வீழ்த்த, அஸ்வின்(15), பும்ரா(0), சிராஜ்(0) ஆகியோரின் விக்கெட்டுகளை ஹென்றி வீழ்த்தினார்.
54 ரன்களுக்கு 7 விக்கெட்
இந்திய அணி 408 ரன்கள் வரை 3 விக்கெட்டுகளை இழந்து வலுவாகத்தான் இருந்தது. ஆனால், 2வது புதிய பந்துவீச எடுத்தபின் கடைசி 54 ரன்களுக்குள் மீதமிருந்த 7 விக்கெட்டுகளையும் இந்திய அணி பறிகொடுத்து ஆட்டமிழந்தது.
இந்திய அணி 99.3 ஓவர்களில் 462 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. நியூஸிலாந்து தரப்பில் ஹென்றி, ரூர்கே தலா 3 விக்கெட்டுகளையும், அஜாஸ் படேல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
கடைசி நாளில் ஆடுகளம் எப்படி இருக்கும்?
நியூஸிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 402 ரன்கள் என பெரிய ஸ்கோர் செய்தாலும், கடைசி நாளில் ரன்களை சேஸிங் செய்வது சின்னசாமி மைதானத்தில் மிகக் கடினமாக இருக்கும்.
ஏனென்றால், ஆடுகளத்தின் தன்மை முற்றிலும் மாறி சுழற்பந்து வீச்சாளர்களுக்குச் சாதகமாக இருக்கும் என்று கடந்த கால வரலாறு உணர்த்துகிறது. இந்திய அணியில் இருக்கும் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் ஆகியோரின் சுழற்பந்துவீச்சையும், பும்ராவின் வேகப்பந்துவீச்சையும் எதிர்கொண்டு இந்த மைதானத்தில், டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில் 107 ரன்கள் இலக்கை சேஸ் செய்வது எளிதானதாக இருக்காது.
கடைசி நாள் ஆட்டம் யாருக்கு சாதகமாக இருக்கும்?
டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த 74 ஆண்டுகளில் முதல் இன்னிங்ஸில் 100 ரன்களுக்கும் குறைவாக எடுத்து சுருண்ட ஒரு அணி 6 முறை மட்டுமே அதில் இருந்து மீண்டு வந்து, ஆச்சர்யகரமான வெற்றியை பெற்றுள்ளது.
2012-ஆம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிராக முதல் இன்னிங்ஸில் 99 ரன்களில் சுருண்ட பாகிஸ்தான் அணி, அந்த டெஸ்டை 71 ரன்களில் வென்றது. 2019-ஆம் ஆண்டில் லார்ட்ஸ் மைதானத்தில் அயர்லாந்து அணிக்கு எதிராக முதல் இன்னிங்ஸில் 85 ரன்களில் ஆட்டமிழந்த இங்கிலாந்து அணி 143 ரன்கள் வித்தியாசத்தில் அந்த ஆட்டத்தில் வென்றது. 2019-ஆல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக முதல் இன்னிங்ஸில் 67 ரன்களில் சுருண்ட இங்கிலாந்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் போட்டியை வென்றது.
இந்திய அணியைப் பொருத்தவரை வரலாறு அதற்கு சாதகமாக இல்லை. 100 ரன்களுக்கும் குறைவாக 27 முறை இந்திய அணி முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்துள்ளது. அதில் 5 முறை மட்டுமே இந்தியா டிரா செய்துள்ளது. ஆனால், முதல் இன்னிங்ஸில் 100 ரன்களுக்கும் குறைவாக சேர்த்த டெஸ்டில் இந்திய அணி ஒருமுறை கூட வென்றது இல்லை.
அது மட்டுமல்லாமல் உள்நாட்டில் எதிரணி 300 ரன்களுக்கும் மேலாக முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்ற டெஸ்ட் போட்டிகள் அனைத்திலும் இந்திய அணி தோற்றுள்ளது. 2008-ஆல் ஆமதாபாத்தில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட், 1985-இல் சேப்பாக்கத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட், 2009-இல் ஆமதாபாத்தில் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் , 1959-இல் டெல்லியில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் ஆகியவற்றில் எதிரணி ஆகிய, 300க்கும் அதிகமான ரன்களை முன்னிலை பெற்ற டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி தோற்றுள்ளது.
இந்த டெஸ்ட் போட்டியிலும் நியூஸிலாந்து அணி 300 ரன்களுக்கும் மேலாக முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றுள்ளதால், இந்திய அணி தோல்வியடையுமா? அல்லது இந்திய அணி வரலாற்றை மாற்றி எழுதுமா? என்பது நாளை தெரியும்.
இந்திய அணி தோற்றால் என்ன ஆகும்?
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறுவதற்கு இந்திய அணிக்கு இன்னும் 5 வெற்றிகள் தேவைப்படுகிறது. நியூஸிலாந்துடன் 3 மற்றும் ஆஸ்திரேலியாவுடன் 5 டெஸ்ட் என மொத்தம் 8 போட்டிகளில் இந்திய அணி விளையாட உள்ளது. இதில் குறைந்தபட்சம் 5 வெற்றிகளை இந்திய அணி பெற வேண்டும். அப்போதுதான் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியும்.
தற்போது இந்திய அணி புள்ளிப்பட்டியலில் 98 புள்ளிகளுடன் 74.24 சதவீதத்துடன் முதலிடத்தில் இருக்கிறது. ஆஸ்திரேலிய அணி 90 புள்ளிகளுடன் 62.50 சதவீதத்துடன் 2வது இடத்தில் இருக்கிறது. நியூஸிலாந்துக்கு எதிரான இந்த முதலாவது டெஸ்டில் இந்திய அணி தோற்றால்கூட, இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் செல்வதில் உடனடியாக எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாது.