வளிமண்டலவியல் திணைக்களத்தின் ஒழுங்கற்ற வேலைத்திட்டம் வானிலை முன்னறிவிப்பு தொடர்பான சிக்கல்களுக்கு காரணம் ! on Saturday, October 19, 2024
வளிமண்டலவியல் திணைக்களத்தின் ஒழுங்கற்ற வேலைத்திட்டம் காரணமாகவே, முன்னறிவிப்புகள் மற்றும் கணிப்புகளின் துல்லியம் தொடர்பில் சிக்கல்கள் தோன்றுவதற்கு வழிவகுத்துள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.
அதிகாரிகளின் முறையற்ற வேலைத்திட்டம் காரணமாக, ஜப்பானில் இருந்து நன்கொடையாக வழங்கப்பட்ட நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய டொப்ளர் ரேடார் அமைப்பையும் நாடு இழந்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.
உலகில் வானிலை முன்னறிவிப்புகளின் துல்லியத்தை பராமரிக்க அதிநவீன உபகரணங்கள் இன்றியமையாதவை, ஆனால் இந்த நாட்டின் வளிமண்டலவியல் திணைக்களம் அத்தகைய கருவிகளைக் கொண்டிருக்கவில்லை.
வளிமண்டலவியல் திணைக்களத்தினால் நாடளாவிய ரீதியில் நிறுவப்பட்டுள்ள 122 தானியங்கி மழைமானிகளில் 70 மழைமானிகள் மாத்திரமே 2023 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி வரை செயற்படுகின்றன.
அதன்படி கடந்த ஆண்டு நவம்பர் 30ம் தேதி வரை சுமார் 52 மழை மானிகள் செயல்படாமல் இருந்த நிலையில் 36 மழை மானிகள் மட்டுமே பராமரிக்கப்பட்டு வந்தன.
மேலும், நாடளாவிய ரீதியில் நிறுவப்பட்டுள்ள 453 வழக்கமான மழை மானிகளில் 44 தொடர்ச்சியாக தரவுகளை வழங்குவதில்லை மற்றும் அவற்றின் பராமரிப்புப் பணிகள் கூட செய்யப்படவில்லை என தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் வானிலை முன்னறிவிப்பில் இன்றியமையாத தொழிநுட்பமான டொப்ளர் ரேடார் முறைமை இன்றி இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் 15 வருடங்களாக முன்னறிவிப்புகள் மற்றும் கணிப்புகளை வழங்கி வருகின்றமை குறித்தும் கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டளவில் புத்தளம் மற்றும் பொத்துவில் வானிலை ஆய்வு தளத்தில் 2 டொப்ளர் ரேடார் அமைப்புகளை நிர்மாணிப்பதற்கு, ஜப்பானின் JICA நிறுவனத்துடன் வளிமண்டலவியல் திணைக்களம் 2017 ஆம் ஆண்டு உடன்படிக்கை செய்துள்ளது.
அதற்கான உதவித் தொகையாகக் கிடைத்த தொகை 563.58 மில்லியன் ரூபாவாகும்.
ஆனால் நிர்ணயிக்கப்பட்ட ஒப்பந்த காலம் முடியும் வரை 370,161 ரூபா மட்டுமே செலவிடப்பட்டுள்ளது.
ஒப்பந்த காலத்துக்குள் 2 டொப்ளர் ரேடார் அமைப்புகளின் கட்டுமானப் பணியை முடிக்காததால், அது தொடர்பான உபகரணங்கள் மற்றும் பொருட்களின் விலை அதிகரிப்பு பிரச்னையும் எழுந்துள்ளது.
அதன்படி, 2 டொப்ளர் ரேடார் சிஸ்டம்களை நிறுவாமல், 2022இல் ஒன்றை மட்டும் நிறுவ JICA ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.