வீழ்ச்சியுற்ற வர்த்தகங்களை வலுப்படுத்த அனைத்து வங்கிகளிலும் வர்த்தக மறுமலர்ச்சி பிரிவு ! on Saturday, October 19, 2024
நாட்டில் வீழ்ச்சியடைந்துள்ள வர்த்தகங்களை மீண்டும் வலுப்படுத்துவதற்கு வாடிக்கையாளர்களுக்கு உதவுவதற்காக அனைத்து வங்கிகளிலும் வர்த்தக மறுமலர்ச்சி பிரிவுகளை அமைக்குமாறு இலங்கை மத்திய வங்கி அறிவுறுத்தியுள்ளது.
வர்த்தகங்களுக்கு புத்துயிர் அளிக்க நிதி வழங்குதல், கடனுக்கான வட்டியை குறைத்தல், கடனை திருப்பிச் செலுத்தும் காலத்தை நீடித்தல் போன்ற பல சேவைகள் இந்தப் பிரிவுகள் ஊடாக முன்னெடுக்கப்படுகின்றன.
இலங்கை மத்திய வங்கி ஒவ்வொரு வங்கிக்கும் புதிய பிரிவுகளை அமைக்குமாறு அறிவுறுத்தல்கள் வழங்குவதற்கு முன்னரே சில வங்கிகளில் இப்பிரிவுகள் செயற்பாட்டில் இருந்தன.
முன்னர் நிறுவப்பட்ட இப்பிரிவுகளை மேம்படுத்துவதுடன், மிகவும் திறமையான மற்றும் மக்கள்நேய சேவையை வழங்குவதற்கு புதிய முறையின் கீழ் செய்யப்படுகிறது.
இலங்கை மத்திய வங்கி தனது கொள்கை வட்டி விகிதங்களை பல சந்தர்ப்பங்களில் குறைத்துள்ளது. இந்த வகையில் மத்திய வங்கியின் கொள்கை வட்டி வீத குறைப்பின் பலனை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவது வங்கிகளின் பொறுப்பாகும். இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி பி.நந்தலால் வீரசிங்க, பல சந்தர்ப்பங்களில் கொள்கை வட்டி வீத குறைப்பின் அனுகூலத்தை பயன்படுத்தி கடன் வட்டியை குறைக்க உதவுமாறு வங்கி முறைமையிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
அதன்படி வங்கிகள் வர்த்தகத்துறையை எளிதாக்கும் வகையில் குறைந்த வட்டியில் கடன் வழங்கத் தொடங்கியுள்ளன. இது தொடர்பாக இலங்கை வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் பொது முகாமையாளருமான ரசல் பொன்சேகாவிடம் கேட்ட போது, இலங்கை வங்கியின் மாகாண மட்டத்திலுள்ள கிளைகளில் ஏற்கெனவே இவ்வாறான 11 நிலையங்கள் இயங்கி வருவதாக தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள தலைமையகத்தில் இவ்வாறு ஒரு பிரிவு இயங்குகிறது. அதன் ஊடாக வாடிக்கையாளர்களுக்கு மிகவும் வினைத்திறன் மிக்க நட்புறவான சேவை வழங்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.