யாஹ்யா சின்வார்: ஹமாஸ் அமைப்பினரே கண்டு அஞ்சிய இவர் யார்?
- எழுதியவர், ஃபிராங்க் கார்ட்னர்
- பதவி, பிபிசி பாதுகாப்பு செய்தியாளர்
கடந்த ஆண்டு அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வாரை தங்கள் படையினர் கொன்றுவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. சின்வாரை கடந்த ஓராண்டுக்கும் மேலாக இஸ்ரேல் தீவிரமாகத் தேடி வந்தது.
ஹமாஸின் அக்டோபர் 7 தாக்குதலைத் தொடர்ந்து தொடங்கப்பட்ட இஸ்ரேல் போரின் ஆரம்பக் கட்டத்தில் சின்வார் தலைமறைவானார். ஹமாஸ் தாக்குதலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர், 251 பேர் பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்டனர்.
ட்ரோன்கள், ஒட்டுக்கேட்பு கருவிகள், உளவாளிகள் மூலம் ஆயிரக்கணக்கான இஸ்ரேலிய துருப்புகள் சின்வாரின் இருப்பிடத்தைக் கண்டறிய முயற்சி செய்த நிலையில், அவர் கொல்லப்பட்டது எந்த ஆச்சர்யத்தையும் அளிக்கவில்லை.
“(ஹமாஸின்) தளபதி யாஹ்யா சின்வார் தற்போது இறந்துவிட்டார்,” என்று இஸ்ரேல் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார்.
காஸாவுக்குள் எங்கோ பூமிக்கு அடியில் உள்ள சுரங்கப்பாதைகளில் தனது மெய்க்காப்பாளர்களுடன், கடந்த ஆண்டின் பெரும்பகுதியை அவர் கழித்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. தன் இருப்பிடத்தை அடையாளம் காணலாம் என்ற பயத்தால் வெகு சிலருடன் மட்டுமே அவர் தொடர்பில் இருந்ததாகக் கருதப்பட்டது. இஸ்ரேல் பணயக் கைதிகளை மனித கேடயமாக பயன்படுத்திக்கொண்டு அவர் இருந்திருக்கலாம் என்றும் அஞ்சப்பட்டது.
ஆனால், தெற்கு காஸாவில் பணயக் கைதிகள் இருப்பதற்கான எவ்வித அறிகுறியும் இல்லாத ஒரு கட்டடத்திற்குள் சின்வார் இஸ்ரேல் படையினரால் கொல்லப்பட்டதாக, இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது. விரல் ரேகை மற்றும் பற்களின் ஆதாரங்களை வைத்து இறந்தது சின்வார்தான் என்பதை இஸ்ரேல் அறிவித்தது.
“இனப்படுகொலை வரலாற்றுக்குப் பின்னர், இஸ்ரேல் மக்களின் வரலாற்றில் மோசமான படுகொலையை அவர் நிகழ்த்தினார். ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்களின் கொலை மற்றும் நுற்றுக்கணக்கானோர் கடத்தப்பட்டதற்கு மூளையாகச் செயல்பட்ட பயங்கரவாதி, இன்று எங்களின் வீரமிக்க படையினரால் கொல்லப்பட்டார். நாங்கள் ஏற்கெனவே உறுதியளித்தது போன்று இன்று அவரைப் பழிதீர்த்துவிட்டோம்,” என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார்.
காஸாவில் ஏற்கெனவே ஹமாஸின் மூத்த தலைவர்கள் பலரை இஸ்ரேல் கொன்றுள்ளது. அஸிஸடின் அல் அசம் எனும் ஹமாஸ் ராணுவ பிரிவின் தலைவர் முகமது டைஃப் அப்படி கொல்லப்பட்டவர்களுள் ஒருவர். கடந்த ஜூலை மாதம் நடந்த வான்வழித் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.
வெளிநாட்டு உறவுகளுக்கான ஐரோப்பிய கவுன்சிலின் மூத்த கொள்கை ஆய்வாளர் ஹியூ லாவிட் கூறுகையில், அக்டோபர் 7 தாக்குதல் ராணுவ நடவடிக்கை என்பதால், முகமது டைஃப்தான் அதன் மூளையாகச் செயல்பட்டதாக நம்பப்பட்டது என்றும், “ஆனால், அந்தத் தாக்குதலைத் திட்டமிட்ட குழுவின் ஒரு பகுதியாக சின்வார் இருந்திருக்கலாம், அக்குழுவில் அவர் செல்வாக்கு செலுத்தியிருக்கலாம்” என்றும் தெரிவித்தார்.
மேலும் கடந்த ஜூலை மாதம் டெஹ்ரானில் ஹமாஸின் ஒட்டுமொத்த தலைவர் இஸ்மாயில் ஹனியேவை இஸ்ரேல் கொன்றதாக ஹமாஸ் குற்றம் சாட்டியது. தலைமறைவாக இருந்தபோதிலும் அடுத்த மாதமே சின்வார் தலைவராக அறிவிக்கப்பட்டார்.
இளமைக் காலமும் கைது நடவடிக்கையும்
அபு இப்ராஹிம் எனப் பரவலாக அறியப்படும் 61 வயதான சின்வார், காஸா முனையின் கடைக்கோடி தெற்கில் கான் யூனிஸில் உள்ள அகதிகள் முகாமில் பிறந்தார். அவருடைய பெற்றோர் ஆஷ்கெலான் நகரை சேர்ந்தவர்கள்.
ஆனால், 1948ஆம் ஆண்டு இஸ்ரேல் நிறுவப்பட்டதைத் தொடர்ந்து, பாலத்தீனத்தில் பெருந்திரளான பாலத்தீனர்கள் தங்களின் முன்னோர்களின் வீடுகளில் இருந்து புலம்பெயர்ந்தனர்.
அதையடுத்து அவர்கள் அகதிகளாகினர். பாலத்தீனர்கள் இதை, “அல்-நக்பா” (al-Naqba) பேரழிவு என்று அழைக்கின்றனர்.
கான் யூனிஸ் ஆடவர் மேல்நிலைப் பள்ளியில் அவர் படித்தார். பின்னர், காஸாவில் உள்ள இஸ்லாமிய பல்கலைக் கழகத்தில் அரபு மொழியில் இளங்கலை பட்டம் பெற்றார்.
அந்த நேரத்தில் கான் யூனிஸ் ‘முஸ்லிம் சகோதரத்துவம்’ ( Muslim Brotherhood) எனும் சன்னி இஸ்லாமிய அமைப்பின் “ஆதரவு கோட்டையாக” திகழ்ந்ததாக, ‘நியர் ஈஸ்ட்’ கொள்கைக்கான வாஷிங்டன் மையத்தின் ஆய்வாளரான எஹூட் யாரி (Ehud Yaari) தெரிவித்தார். இவர், யாஹ்யா சின்வாரை சிறையில் நான்கு முறை நேர்காணல் செய்தார்.
‘நியர் ஈஸ்ட்’ என்பது மேற்கு ஆசியா, பால்கன் மற்றும் வட ஆப்பிரிக்காவின் சில பகுதிகளை உள்ளடக்கிய கிழக்கு மத்திய தரைக் கடலைச் சுற்றியுள்ள பகுதி. அந்தப் பகுதிக்கான அமெரிக்க வெளியுறவுக் கொள்கைகளை கவனப்படுத்தும் மையமே ‘நியர் ஈஸ்ட்’ மையம்.
“அகதிகள் முகாமில் வறுமையான சூழலில் மசூதிகளுக்குச் செல்லும் இளம் வயதினருக்கான பெரும் இயக்கமாக” இஸ்லாமிய அமைப்பு திகழ்ந்ததாக யாரி கூறுகிறார். இது ஹமாஸ் அமைப்புக்கு முக்கியத்துவம் வாய்ந்த இயக்கமாகக் கருதப்பட்டது.
கடந்த 1982ஆம் ஆண்டில் தனது 19வது வயதில் “இஸ்லாமிய நடவடிக்கைகளுக்காக” சின்வார் முதன்முறையாகக் கைது செய்யப்பட்டார். அதன்பின், 1985இல் மீண்டும் கைது செய்யப்பட்டார். அந்த நேரத்தில்தான் ஹமாஸ் அமைப்பின் நிறுவனர் ஷேக் அகமது யாசினின் நம்பிக்கையை சின்வார் பெற்றார்.
அந்தச் சூழலில் இருவரும் “மிகவும் நெருக்கமாகினர்” என, டெல் அவிவில் உள்ள தேசிய பாதுகாப்பு இயல் மையத்தின் மூத்த ஆராய்ச்சியாளர் கோபி மைக்கேல் தெரிவித்தார். ஹமாஸ் அமைப்பின் மதத் தலைவருடனான உறவு “அந்த இயக்கத்திற்குள் சின்வாருக்கு நல்லெண்ணம் ஏற்பட வழிவகுத்ததாகவும்” மைக்கேல் தெரிவித்தார்.
கடந்த 1987ஆம் ஆண்டு ஹமாஸ் நிறுவப்பட்டு, இரண்டு ஆண்டுகள் கழித்து, அந்த அமைப்பினருக்கே பயத்தை ஏற்படுத்தக்கூடிய அல்-மஜ்த் (al-Majd) அமைப்பிற்கு உள்ளேயே செயல்படும் பாதுகாப்பு அமைப்பை உருவாக்கினார். அப்போது அவருக்கு வயது 25 மட்டுமே.
நன்னடத்தை விதிகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டவர்களை தண்டிக்கும் நடவடிக்கைக்காக அல்-மஜ்த் அமைப்பு பரவலாக அறியப்பட்டது. “பாலியல் ரீதியான காணொளிகள்” அடங்கிய கடைகளை சின்வார் குறிவைத்ததாக மைக்கேல் தெரிவித்தார். மேலும், இஸ்ரேலுடன் இணைந்து செயல்படுவதாக சந்தேகிக்கப்படும் எவராக இருந்தாலும் அவர்கள் கொல்லப்பட்டனர்.
இஸ்ரேலுக்கு ஒத்துழைப்பதாக சந்தேகிக்கப்பட்ட ஏராளமானோரின் “கொடூரமான கொலைகளுக்கு” சின்வார் பொறுப்பானவர் என்றும் யாரி தெரிவித்தார். மேலும், “சிலர் அவருடைய கைகளாலேயே கொல்லப்பட்டனர். அதுகுறித்து என்னிடமும் மற்றவர்களிடமும் அவர் பெருமையுடன் பேசினார்” என்றார்.
உளவாளி என சந்தேகிக்கப்பட்ட நபர் ஒருவரை அவருடைய சகோதரரை வைத்தே உயிருடன் அடக்கம் செய்ய வைத்ததாக சின்வார் பின்னர் ஒப்புக் கொண்டதாக இஸ்ரேல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
“தன்னைப் பின்பற்றுபவர்கள், தன் மீது பயம் கொண்டவர்கள், தன்னுடன் எந்த சண்டைக்கும் செல்லாத பலரும் சூழ இருக்கும் ஒரு நபர்தான் யாஹ்யா சின்வார்” என்கிறார் யாரி.
இஸ்ரேலிய வீரர்கள் இருவரை கடத்திக் கொலை செய்யத் திட்டமிட்டதாக, கடந்த 1988ஆம் ஆண்டு அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அதே ஆண்டு, பாலத்தீனர்கள் 12 பேரை கொலை செய்ததாக குற்றம் நிரூபிக்கப்பட்டு, நான்கு ஆயுள் தண்டனைகள் விதிக்கப்பட்டு, அதே ஆண்டில் அவர் கைது செய்யப்பட்டார்.
சின்வாரின் சிறை நாட்கள்
தன்னுடைய இளம் பருவத்தின் பெரும்பகுதியை, 1988-2011 வரையிலான 22 ஆண்டுகளை அவர் இஸ்ரேலிய சிறைகளிலேயே கழித்தார். சில காலத்தை அவர் தனிமை சிறையிலும் கழித்தார். அப்போது அவர் தன்னுடைய அமைப்பு சார்ந்து மேலும் ஊக்கம் பெற்றதாகத் தெரிகிறது.
அவர் “தன்னுடைய அதிகாரத்தை இரக்கமின்றிப் பயன்படுத்தியதாக,” கூறுகிறார் யாரி. சிறைவாசிகளிடையே தன்னை ஒரு தலைவராக நிலைநிறுத்தினார். சிறை அதிகாரிகளுடன் அவர்களின் சார்பாகப் பேச்சுவார்த்தை நடத்தி, நன்னடத்தை ரீதியான நடவடிக்கைகளைச் செயல்படுத்தினார்.
சிறையில் அவர் இருந்த நேரத்தில், சின்வார் குறித்த இஸ்ரேல் அரசின் மதிப்பீடு, “கொடூரமான, அதிகாரமிக்க, செல்வாக்கு கொண்டவர். வழக்கத்திற்கு மாறான சகிப்புத் தன்மை, கபடம் மற்றும் தவறாகச் சித்தரித்தல் ஆகிய குணங்களைக் கொண்டவர். சிறைக்குள் மற்ற சிறைவாசிகள் மத்தியிலும் ரகசியங்களைக் காத்தவர். பெருந்திரளான கூட்டத்தைச் சமாளிக்கும் திறன் கொண்டவர்” என்பதாக இருந்தது.
சின்வாருடன் நிகழ்ந்த சந்திப்புகள் மற்றும் உரையாடல்களின் அடிப்படையில், அவர் ஒரு மூர்க்க குணம் கொண்ட மனநோயாளி (psychopath) என்று யாரி மதிப்பிட்டுள்ளார்.
“ஆனால், சின்வாரை ‘மனநோயாளி’ என்பதோடு நிறுத்தினால் அது தவறாகிவிடும்” எனக் கூறிய அவர், “அப்படி மட்டும் நினைத்தால் அவருடைய மிகவும் விநோதமான, சிக்கலான குணத்தைத் தவறவிட்டு விடுவீர்கள்” என்றார்.
யாரி கூறுகையில், “சின்வார் மிகவும் தந்திரமான, சூட்சும புத்தி கொண்டவர். தன்னுடைய தனிப்பட்ட வசீகரத்தைத் தேவையான நேரத்தில் கொண்டு வரவும் பின்னர் மறைக்கவும் தெரிந்த நபர் அவர்” என்று விவரித்தார்.
இஸ்ரேல் அழித்தொழிக்கப்பட்டு, பாலத்தீனத்தில் யூதர்கள் வாழ்வதற்கு இடமிருக்காது எனக் கூறும்போது, “வேண்டுமானால் உங்களை மட்டும் விட்டு வைக்கிறோம்’ என நகைச்சுவையாகக் கூறுவார்” எனத் தெரிவித்தார்.
இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்ட சின்வார், ஹீப்ரு மொழியை சரளமாகக் கற்றார், இஸ்ரேல் செய்தித்தாள்களையும் அவர் வாசித்தார். தனக்கு அரபு மொழி தெரிந்திருந்தாலும், தன்னுடன் பேசும்போது அவர் ஹீப்ரு மொழியில் பேசுவதையே சின்வார் விரும்பியதாக யாரி தெரிவித்தார்.
“ஹீப்ரு மொழியில் பேசுவதை மேம்படுத்திக் கொள்ள அவர் நினைத்தார். சிறைப் பாதுகாவலர்களைவிட ஹீப்ரு மொழியை நிபுணத்துவத்துடன் பேசும் யாரோ ஒருவரிடம் இருந்து அவர் ஏதோவொன்றை அடைய விரும்பியதாக நினைக்கிறேன்,” என்கிறார் யாரி.
இஸ்ரேலிய பணயக் கைதி ஒருவரை விடுவிப்பதற்குப் பதிலாக, பாலத்தீன, இஸ்ரேலிய அரபு சிறைக் கைதிகள் 1,027 பேரை விடுவிக்கும் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, சின்வார் 2011ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டதாக இஸ்ரேல் ராணுவத்தைச் சேர்ந்த கிலாட் ஷாலிட் கூறுகிறார்.
ஹமாஸின் மூத்த படைத் தளபதியான சின்வாரின் சகோதரர் தன்னை, மற்றவர்களுடன் சேர்ந்து கடத்தி, ஐந்து ஆண்டுகள் சிறைபிடித்ததாக, ஷாலிட் கூறுகிறார். இஸ்ரேலிய வீரர்கள் பலரைக் கடத்த வேண்டும் என சின்வார் பின்னர் அழைப்பு விடுத்தார்.
அந்த நேரத்தில், காஸா முனையில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு முடிவுக்கு வந்தது. தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து, யாச்செர் அராஃபதா கட்சியைச் சேர்ந்த தன்னுடைய எதிரிகள் பலரை உயரமான கட்டடங்களில் இருந்து தூக்கி எறிந்து ஹமாஸ் கொன்றது.
கொடுமையான நன்னடத்தை விதிகள்
சின்வார் மீண்டும் காஸாவுக்கு திரும்பியபோது, அவர் உடனடியாக தலைவராக ஏற்றுக்கொள்ளப்பட்டதாக மைக்கேல் தெரிவித்தார். ஹமாஸின் நிறுவன தலைவராக இஸ்ரேலிய சிறைகளில் தனது பெரும்பகுதி வாழ்க்கையைக் கழித்த பெருமைக்காக அவர் தலைவராக ஏற்றுக்கொள்ளப்பட்டார்.
ஆனால், “தன் கைகளாலேயே பலரை கொன்ற நபர் அவர். பலரும் அவரைப் பார்த்து பயந்தனர். அவர் மிகவும் கொடூரமான, ஆக்ரோஷமான, அதேசமயம் வசீகரிக்கக்கூடிய நபராகவும் இருந்தார்,” என்கிறார் மைக்கேல்.
“அவர் நன்றாக சொற்பொழிவாற்றக்கூடிய நபர் அல்ல” எனக் கூறும் யாரி, “மக்களை நோக்கி அவர் பேசும்போது கூட்டத்தில் இருந்து ஒருவர் பேசுவதாகவே தோன்றும்” என்கிறார்.
சிறையிலிருந்து வெளிவந்த உடனேயே, அஸிஸடின் அல் அசம் படைப்பிரிவு மற்றும் அதன் தலைவர் மார்வான் இசாவுடன் ஒரு கூட்டணியை உருவாக்கினார். கடந்த 2013ஆம் ஆண்டு, காஸா முனையில் ஹமாஸின் அரசியல் பிரிவு உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். பின்னர், 2017ஆம் ஆண்டு அதன் தலைவரானார்.
சின்வாரின் இளைய சகோதரர் முகமதுவும் ஹமாஸில் முக்கியப் பங்கு வகித்தார். இஸ்ரேலின் பல தாக்குதல் முயற்சிகளில் இருந்து தான் உயிர் பிழைத்ததாக அவர் கூறினார். இதையடுத்து, 2014ஆம் ஆண்டு அவர் உயிரிழந்ததாக ஹமாஸால் அறிவிக்கப்பட்டார். அப்போதிருந்து, அவர் இன்னும் உயிரோடு இருக்கலாம் என்றும், காஸாவில் பூமிக்கு அடியில் உள்ள சுரங்கப் பாதையில் ஹமாஸ் ராணுவப் பிரிவில் அவர் செயல்படலாம் என்றும், அக்டோபர் 7 தாக்குதலில்கூட அவர் பங்கு வகித்திருக்கலாம் என்றும் ஊடக செய்திகள் வலம் வந்தன.
தன்னுடைய இரக்கமின்மை மற்றும் வன்முறை குணம் காரணமாக சின்வார், கான் யூனிஸின் கசாப்புக்காரர் (Butcher) என்ற பட்டப்பெயரை பெற்றார்.
“சின்வார் கொடுமைமிக்க நன்னடத்தை விதிகளைச் செயல்படுத்தியதாக” கூறிய யாரி, அவற்றுக்குக் கட்டுப்படாவிட்டால், “தங்கள் உயிருக்கு ஆபத்து இருக்கும் என்பதை” ஹமாஸ் படையினர் அறிவார்கள் என்றார்.
கையாடல் மற்றும் தன்பாலின உறவில் ஈடுபட்டதாக, ஹமாஸ் தளபதி மஹ்மூத் இஷ்டிவி-யை (Mahmoud Ishtiwi) சிறைப்படுத்தி, கொடுமைப்படுத்தி கொலை செய்ததாக சின்வார் பரவலாக அறியப்படுகிறார்.
கடந்த 2018ஆம் ஆண்டில், சர்வதேச ஊடக சந்திப்பு ஒன்றில், அமெரிக்க தூதரகத்தை டெல் அவிவில் இருந்து ஜெருசலேமுக்கு மாற்றுவதற்கான எதிர்ப்புகளின் ஒரு பகுதியாக, இஸ்ரேலில் இருந்து காஸா பகுதியைப் பிரிக்கும் எல்லை வேலியைத் தகர்க்கும் ஆயிரக்கணக்கான பாலத்தீனர்களுக்குத் தனது ஆதரவை குறிப்பால் உணர்த்தினார்.
கடந்த ஆண்டு மேற்குக் கரையில் பாலத்தீன அதிகார அமைப்பை (PA) ஆதரிக்கும் பாலத்தீனர்களால் மேற்கொள்ளப்பட்ட கொலை முயற்சியில் இருந்து தான் உயிர் பிழைத்ததாக அவர் கூறியிருந்தார்.
எனினும், இஸ்ரேலுடன் தற்காலிக சண்டை நிறுத்தத்திற்கு ஆதரவு, கைதிகள் பரிமாற்றம் மற்றும் பாலத்தீன அதிகார அமைப்புடன் நல்லிணக்கம் என, நடைமுறைக்கேற்ப முடிவுகளை அவர் எடுத்துள்ளார். தன் எதிரிகளால் அவர் மிதவாதி எனவும் விமர்சிக்கப்பட்டுள்ளார்.
இரானுடன் நெருக்கம்
கைதிகளைப் பரிமாறிக்கொள்ளும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் சின்வாரை சிறையில் இருந்து விடுதலை செய்தது மோசமான தவறு என இஸ்ரேல் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த பலரும் கருதினர்.
அதிகளவிலான பணி அனுமதிகள் மற்றும் பொருளாதார ரீதியிலான ஊக்கம் காரணமாக, ஹமாஸ் போர் மீதான தனது நாட்டத்தை இழந்திருக்கும் என்ற தவறான நம்பிக்கையால் தாங்கள் ஏமாற்றப்பட்டதாக இஸ்ரேலியர்கள் கருதுகின்றனர். இது நிச்சயமாக ஒரு பேரழிவு தரும் தவறான நம்பிக்கையாக மாறியது.
“பாலத்தீனத்தை விடுதலை செய்ய விதிக்கப்பட்ட நபர்” என சின்வார் தன்னைத் தானே கருதியதாக யாரி கூறுகிறார். மேலும், அவர், “காஸாவில் பொதுளாதார நிலைமை மற்றும் சமூக நிலைமைகளை மேம்படுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை” என்றும் அவர் கூறினார்.
கடந்த 2015ஆம் ஆண்டு அமெரிக்க வெளியுறவுத் துறை சின்வாரை “உலகளாவிய பயங்கரவாதி” (Specially Designated Global Terrorist) என அறிவித்தது. கடந்த மே 2021இல் காஸா முனையில் உள்ள இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் அவரது வீடு மற்றும் அலுவலகம் இலக்கு வைக்கப்பட்டது.
அஸிஸடின் அல் அசம் எனும் ஹமாஸின் ராணுவப் பிரிவுடன் அதன் அரசியல் பிரிவை இணைப்பதில் முக்கிய நபராக அவர் இருந்ததாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அஸிஸடின் அல் அசம் படை அக்டோபர் 7 தாக்குதலை வழிநடத்தியது.
கடந்த அக்டோபர் 14, 2023 அன்று, இஸ்ரேல் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர், சின்வாரை “தீய சக்தியின் உருவம்” எனக் கூறியிருந்தார். மேலும், “அவரும் அவருடைய குழுவினரும் எங்களின் கண்காணிப்பில் உள்ளனர். விரைவில் அவரை அடைவோம்” என்றார்.
சின்வார் இரானுடனும் நெருக்கமான நபராக இருந்தார். சன்னி அரபு அமைப்பானது, ஷியா நாட்டுடன் கூட்டணி வைத்துக் கொள்வது வழக்கமானது அல்ல. ஆனாலும், இஸ்ரேலை அழித்து, அதன் ஆக்கிரமிப்பில் இருந்து ஜெருசலேமை “சுதந்திரப்படுத்துவது” எனும் ஒரே இலக்கை அவர்கள் கொண்டிருந்தனர்.
அவர்கள் ஒன்றாக இணைந்து வேலை செய்தனர். ஹமாஸுக்கு நிதியுதவி, பயிற்சி மற்றும் ஆயுதங்களை இரான் வழங்கியது. அதன் ராணுவ திறன்களை மேம்படுத்தவும், இஸ்ரேலிய நகரங்களைக் குறிவைத்துத் தாக்கவல்ல ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளையும் வழங்கியது.
அந்த ஆதரவுக்கு சின்வார் தனது நன்றியுணர்வை 2021ஆம் ஆண்டு தன்னுடைய உரையில் தெரிவித்தார். “இரான் இல்லாமல் இருந்திருந்தால், பாலத்தீனத்தின் எதிர்க்கும் திறன் தற்போதைய நிலையை அடைந்திருக்காது” என்றார்.
யாஹ்யா சின்வாரை இழந்தது ஹமாஸுக்கு பெருத்த அடியாக இருக்கும்.
கடந்த ஆகஸ்ட் மாதம் ஹனியேவுக்கு பதிலாக ஹமாஸின் ஒட்டுமொத்த தலைவராகத் தேர்வு செய்யப்பட்டபோது, சவால்களைக் கடந்து, மீண்டு வருவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகக் கருதப்பட்டது. அவரைவிட சமரசமற்ற ஒரு தலைவரை அக்குழுவால் தேர்வு செய்திருக்க முடியாது.
காஸா முனையை அழித்தொழித்த இஸ்ரேலின் ஓராண்டு ராணுவ நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டு வரும் ஒப்பந்தத்தை ஏற்படுத்துவது குறித்து ஹமாஸ் ஆயுதக்குழு தற்போது முடிவெடுக்க வேண்டும். அல்லது, அதற்கு முரணாக, இந்த மோதலால் பாலத்தீன மக்கள் ஏராளமானோர் உயிரிழந்துள்ள போதிலும், இஸ்ரேலை எதிர்த்துச் சண்டையிட வேண்டுமா என்பது குறித்து முடிவு செய்ய வேண்டும்.
அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன், காஸாவுடனான போர் நிறுத்த ஒப்பந்தம் “90% எட்டப்பட்டதாக” சமீபத்தில் தெரிவித்திருந்தார். சின்வார் கொலையின் மூலம் அந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு, இஸ்ரேலிய பணயக் கைதிகள் நாடு திரும்பலாம்.
இல்லையேல் அதற்கு மாறாக, முன்னெப்போதையும்விட கோபமான ஹமாஸ் உறுப்பினர்களை எந்தவிதமான சமரசத்தில் இருந்தும் விலக்கி வைக்கவும் வாய்ப்புகள் உள்ளது.
ஜான் கெல்லி வழங்கிய கூடுதல் தகவல்களுடன்
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.