தஞ்சை: மராட்டிய மன்னர்களின் கொடூர தண்டனை முறை – கல்வெட்டு கூறும் முக்கிய தகவல்கள்

சரபோஜி மன்னர் நில உரிமை விவகாரங்களுக்கு அளித்த தண்டனை என்ன?

பட மூலாதாரம், Special Arrangement

படக்குறிப்பு, சரபோஜி மன்னர்
  • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
  • பதவி, பிபிசி தமிழ், சென்னை

தஞ்சையை மராட்டிய மன்னர்கள் ஆட்சி செய்தபோது வழங்கப்பட்ட தண்டனை முறைகள் குறித்து, இந்திய தொல்லியல் துறையின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மராட்டியர்களின் கல்வெட்டுகள் குறித்து முன்பே ஆய்வு செய்யப்பட்டு இருந்தாலும் முழு விவரங்களும் தற்போதுதான் தெரிய வந்ததாகக் கூறுகிறார், இந்திய தொல்லியல் துறையின் கல்வெட்டுப் பிரிவு இயக்குநர் முனிரத்தினம் ரெட்டி.

அவர்களின் வம்சம், ஆட்சி முறை, கொடை என அனைத்து விவரங்களையும் மராட்டிய மன்னர்கள் கல்வெட்டில் பொறித்து வைத்துள்ளதாகக் கூறுகிறார், வரலாற்று ஆய்வாளர் செல்வராஜ்.

தஞ்சையில் மராட்டிய மன்னர்களின் ஆட்சியில் குற்றங்களுக்கு வழங்கப்பட்ட தண்டனைகள் உள்ளிட்ட நீதி அமைப்பு மற்றும் அதன் நடைமுறைகள் குறித்த தகவல்கள் சுமார் 300 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவருவது ஏன்? இந்தத் தாமதத்திற்கு என்ன காரணம்?

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

மராட்டிய மன்னர்களின் ஆட்சி

தஞ்சாவூரை சோழர், பாண்டியர், நாயக்கர்களுக்குப் பின்னர் மராட்டிய மன்னர்கள் ஆட்சி செய்தனர். தஞ்சையை ஆண்ட விஜயரகுநாத நாயக்கரிடம் இருந்து மராட்டியத்தைச் சேர்ந்த வெங்கோஜி ராவ் போன்ஸ்லே எனும் ஏகோஜியின் கைகளுக்கு 1674ஆம் ஆண்டு தஞ்சாவூர் வந்து சேர்ந்தது.

“இவர்கள் எந்தப் போரிலும் வெற்றி பெற்று தஞ்சையைக் கைப்பற்றவில்லை. மதுரையை ஆண்ட சொக்கலிங்க நாயக்கருக்கும் தஞ்சாவூரின் விஜயரகுநாத நாயக்கருக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாகவே உள்ளே வந்தனர்” என்கிறார் வரலாற்று ஆய்வாளர் செல்வராஜ்.

தஞ்சாவூர் விஜயரகுநாத நாயக்கர் மீது மதுரை சொக்கலிங்க நாயக்கர் படையெடுத்து வந்தபோது, தன்னிடம் படை பலம் இல்லாததால் பிஜப்பூர் சுல்தானிடம் தஞ்சை நாயக்கர் உதவி கேட்டதாகக் கூறுகிறார் செல்வராஜ்.

“பிஜப்பூர் சுல்தானின் நம்பிக்கைக்குரிய ஒருவராக இருந்த ஜாகீர்தாரர் ஏகோஜியை அனுப்பி வைத்தார். இவர் மராட்டிய மன்னர் சிவாஜியின் சகோதரர் முறையைச் சேர்ந்தவர். இவரது படைக்கும் மதுரை நாயக்கருக்கும் இடையில் தஞ்சை அய்யம்பேட்டையில் போர் நடந்தது.

இதில் தஞ்சை நாயக்கருக்கு வெற்றி கிடைத்தது. இதற்கான போர் செலவை ஏகோஜி கேட்டதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக தஞ்சை கோட்டைக்குள் கடும் மோதல் ஏற்பட்டதாகவும் இதில் விஜயரகுநாத நாயக்கர் கொல்லப்பட்டதாகவும் பல்வேறு தகவல்கள் வெளிவந்துள்ளதாகக் கூறுகிறார் செல்வராஜ்.

ஏகோஜி ஆட்சிக்கு வந்த பின்னர், அவருக்கு அடுத்து ஷாஜி, முதலாம் சரபோஜி, துக்கோஜி, ஏகோஜி, சுஜன் பாய், பிரதாப சிம்மன், இரண்டாம் சரபோஜி ஆகியோர் தஞ்சாவூரை ஆண்டனர். இவர்களில் முதலாம் சரபோஜி தஞ்சாவூரை கி.பி. 1712 முதல் கி.பி 1728 வரை ஆட்சி செய்தார்.

கல்வெட்டின் சிறப்பு என்ன?

சரபோஜி மன்னர் நில உரிமை விவகாரங்களுக்கு அளித்த தண்டனை என்ன?

பட மூலாதாரம், Muniratnam Reddy

படக்குறிப்பு, மோடி எழுத்துருவில் இடம் பெற்றுள்ள சரபோஜி காலத்து கல்வெட்டு

இந்தக் காலகட்டத்தில் நடைபெற்ற வழக்கு குறித்தும் அதற்கு மன்னர் வழங்கிய தண்டனை குறித்தும் கல்வெட்டு ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கல்வெட்டு, தஞ்சை பெரிய கோவில் வளாகத்தில் உள்ள விநாயகர் கோவிலின் வடமேற்கு திசையில் இருந்துள்ளது.

மராட்டிய மொழியில் உள்ள இந்தக் கல்வெட்டு, தேவநாகரி மற்றும் மோடி வரி வடிவம் ஆகிய எழுத்து முறைகளைக் கையாண்டு பொறிக்கப்பட்டுள்ளது.

மராட்டிய மன்னர்களின் காலத்தில் நடைமுறையில் இருந்த மோடி எழுத்துருவில் எழுதப்பட்ட ஆவணங்கள், தஞ்சை சரஸ்வதி மகால் நூல் நிலையத்தில் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருவதாக செல்வராஜ் தெரிவித்தார்.

“மோடி எழுத்துரு வடிவம் என்பது மராட்டிய எழுத்துகளை விரைவாக எழுதுவதற்காகப் பயன்படுத்தப்பட்ட வடிவம். சுருக்கெழுத்து பாணியிலான இந்த எழுத்துகளை எழுதுகோலை எடுக்காமலேயே வேகமாக எழுத முடியும்” என்று அவர் விளக்கினார்.

சரபோஜி மன்னரிடம் வந்த வழக்கு

மராட்டிய மன்னர் சரபோஜி வழங்கிய தண்டனைகள்

பட மூலாதாரம், Special Arrangement

படக்குறிப்பு, மோடி எழுத்துருவில் எழுதப்பட்ட ஆவணங்கள் இன்றும் சரஸ்வதி மகால் நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது

தஞ்சையில் இந்திய தொல்லியல் துறை படியெடுத்த மராட்டிய கல்வெட்டுகள் சுமார் 40 வரை உள்ளதாகக் கூறுகிறார், இந்திய தொல்லியல் துறையின் கல்வெட்டுப் பிரிவு இயக்குநர் முனிரத்தினம் ரெட்டி.

அதில் இடம் பெற்றிருந்த முதலாம் சரபோஜி காலத்தில் நடந்த வழக்கு ஒன்றின் சுவாரஸ்யமான தகவல்களை முனிரத்தினம் பகிர்ந்துகொண்டார்.

“இந்தக் குறிப்பிட்ட கல்வெட்டை 1724ஆம் ஆண்டு பொறித்துள்ளனர். கலி ஆண்டு 4903, துந்துபி ஆண்டு ஆடி மாதம் 8ஆம் நாள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. துளஜா மன்னரின் மகன் சரபோஜி மன்னர் காலத்தில் இவை பொறிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இடுகாடு நிலம் தொடர்பானது. தகனம் செய்யும் நபர்களின் காணியின் உரிமைக்காக கோடியான், சினான், தஞ்சினான், கல்வாட்டி ஆகிய சமூகத்தினருக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கு மன்னரிடம் சென்றுள்ளது.”

“மன்னரோ, கொதிக்கும் நெய் பாத்திரத்தில் நான்கு பேரையும் கைகளை விடுமாறு கூறி, இந்த வழக்கின் முடிவில் தஞ்சியான் என்பவருக்குச் சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது என்று கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது, என்று தெரிவித்தார் முனிரத்தினம் ரெட்டி.

இதை பிபிசி தமிழிடம் தெரிவித்த முனிரத்தினம் ரெட்டி, “தஞ்சியானுக்கு கொதிக்கும் நெய்யில் கையை விட்டும் எதுவும் ஆகாததால் அவர் விடுதலை செய்யப்பட்டதாக கல்வெட்டு கூறுகிறது. மராட்டிய மன்னர்களின் தண்டனை முறையை அறிந்துகொள்ள இந்தக் கல்வெட்டு உதவுகிறது” என்றார்.

ஒருவர் தவறு செய்யாமல் இருந்தால் அவருக்கு எதுவும் ஆகாது என்பதைத் தங்களின் நம்பிக்கையாக மராட்டிய மன்னர்கள் வைத்திருந்ததாகக் கூறுகிறார் முனிரத்தினம் ரெட்டி.

கவனம் பெறும் மராட்டிய கல்வெட்டுகள்

மராட்டிய மன்னர் சரபோஜி வழங்கிய தண்டனைகள்

பட மூலாதாரம், Muniratnam Reddy

படக்குறிப்பு, இந்திய தொல்லியல் துறையின் கல்வெட்டுடுப் பிரிவு இயக்குநர் முனிரத்தினம் ரெட்டி

மராட்டிய மன்னர்களின் கல்வெட்டுகள் படிக்கப்பட்டாலும் அவை பெரிதாக எடுத்துக் கொள்ளப்படவில்லை என்று கூறிய முனிரத்தினம் ரெட்டி, அதற்கு ஓர் உதாரணத்தையும் குறிப்பிட்டார்.

இந்திய தொல்லியல் துறையில் ஆண்டறிக்கை வெளியிடப்படுவது வழக்கமாக உள்ளது. அதில் கல்வெட்டுகளைப் பற்றிய விவரங்கள் இடம் பெற்றிருக்கும். 1921ஆம் ஆண்டு வெளியான குறிப்புகளில், ஒரு விவகாரத்தில் குற்றத்தை நிரூபிக்க கொதிக்கும் நெய்யில் விரல்களை விடுமாறு மராட்டிய மன்னர் தண்டனை கொடுத்ததாகக் கூறப்பட்டுள்ளது.

“ஆனால் இதில் தொடர்புடைய நபர்கள் யார் என்ற விவரம் அதில் சொல்லப்படவில்லை. எங்களுக்குத் தற்போது கிடைத்த கல்வெட்டு தகவல்களை மகாராஷ்ட்ராவில் உளள பேராசிரியர் அபிஜித் பண்டார்கருக்கு அனுப்பி வைத்தேன். அவர் இந்த தண்டனை முறைகளைப் பற்றிக் கூறிய பின்னர்தான், இதில் இன்னும் பயணிக்க வேண்டியிருப்பதை அறிந்தோம்” என்கிறார் முனிரத்தினம் ரெட்டி.

தஞ்சை பெரிய கோவில் சுவர்கள் மற்றும் தூண்களில் ஏராளமான கல்வெட்டுகள் உள்ளன. இவற்றை இந்திய தொல்லியல் துறை படியெடுத்து வைத்துள்ளது. தமிழ் கல்வெட்டுகள் பலரால் படிக்கப்பட்டு நூல்களாக வெளிவந்துள்ளன.

ஆனால், மராட்டிய கல்வெட்டுகளுக்குப் போதிய கவனம் கொடுக்கப்படாமல் இருந்துள்ளதாகக் கூறுகிறார் முனிரத்தினம் ரெட்டி. மராட்டிய கல்வெட்டுகளைப் படித்து நூல்களாகக் கொண்டு வரும் பணியில் இந்திய தொல்லியல் துறை ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், “தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர்கள் குறித்து தமிழில் நிறைய புத்தகங்கள் வந்துவிட்டன. தமிழ்நாட்டில் மட்டும் மராட்டிய மன்னர்கள் தொடர்பாக 34க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் படி எடுக்கப்பட்டுள்ளன. தற்போது புதிதாக 15 கல்வெட்டுகள் வந்துள்ளன. இவை ஒவ்வொன்றும் 6 முதல் 12 அடி அளவில் உள்ளன” என்று கூறினார்.

மராட்டிய கல்வெட்டுகளை ஆய்வு செய்வதில் தாமதம் ஏன்?

மராட்டிய மன்னர் சரபோஜி வழங்கிய தண்டனைகள்

பட மூலாதாரம், Selvaraj

படக்குறிப்பு, வரலாற்று ஆய்வாளர் செல்வராஜ்

“மராட்டிய மன்னர் கையாண்ட வழக்கு குறித்த கல்வெட்டு ஆய்வு செய்யப்பட்டு, அதன் விவரங்கள் வெளியாவதில் நீண்ட இடைவெளி நிலவியது ஏன்?” என்று முனிரத்தினம் ரெட்டியிடம் பிபிசி தமிழ் கேட்டது.

அவர் அதற்கு, “இந்தத் துறையிலுள்ள ஊழியர் பற்றாக்குறை ஒரு காரணம்” என்றார்.

மேலும், “இந்தப் பற்றாக்குறை நாடு முமுவதும் பரவலாக உள்ளது. எங்களுக்கு உள்ள கட்டமைப்பை வைத்துக்கொண்டு செயல்படுகிறோம். தகவல் தொழில்நுட்பம் பெரிய அளவில் கை கொடுக்கிறது. தனிப்பட்ட ஆர்வம் காரணமாகவும் பல தகவல்களை வெளிக்கொண்டு வர முடிகிறது” என்றார்.

ஆட்சி முறை எப்படி இருந்தது?

“சோழர்களின் ஆட்சிக் காலம் என்பது சுமார் 140 ஆண்டுகளாக இருந்துள்ளது. நாயக்க மன்னர்களும் இதே கால அளவில் ஆட்சி செய்துள்ளனர். ஆனால், இவர்களைவிட அதிக காலம் தஞ்சையை ஆட்சி செய்தது மராட்டிய மன்னர்கள்தான். இவர்கள் சுமார் 170 ஆண்டுகளுக்கும் மேல் ஆட்சி செய்துள்ளனர்” என்கிறார் வரலாற்று ஆய்வாளர் செல்வராஜ்.

இவர்களின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளாக கிழக்கில் காரைக்கால், மேற்கில் திருச்சி எல்லை, தெற்கில் அறந்தாங்கி, வடக்கில் கொள்ளிடம் வரையில் இருந்ததாகக் கூறும் செல்வராஜ், “தங்களின் ஆட்சிக் காலத்தில் மராட்டிய மன்னர்கள் மிக நியாயமாக நடந்து கொண்டுள்ளனர். கிறிஸ்துவர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுத்துள்ளனர்” என்கிறார்.

இதுகுறித்து, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் ‘போன்ஸ்லே வம்ச சரித்திரம்’ என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளது.

“கோவில் புனரமைப்பு, வாகனங்கள் ஏற்பாடு செய்து கொடுத்தது, பூஜை தட்டுகளைக் கொடுத்தது எனத் தங்கள் ஆட்சியில் நடந்த அனைத்தையும் மராட்டிய மன்னர்கள் கல்வெட்டாக வடித்து வைத்துள்ளதாகவும்” தெரிவித்தார் வரலாற்று ஆய்வாளர் செல்வராஜ்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு