இந்தியா – கனடா விரிசல் பற்றி கனடிய எதிர்க்கட்சி தலைவர்கள் கூறுவது என்ன?
தற்போது கனடாவில் பேசுபொருளாக மாறியுள்ளது இந்திய வம்சாவளியான ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலை வழக்கு.
இந்த விவகாரத்தை உன்னிப்பாகக் கவனித்து வரும் மக்கள் பலரும், இந்த விவகாரம் தொடர்பான கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் நிலைப்பாட்டை அவருடைய உள்நாட்டு அரசியலுடன் பொருத்திப் பார்க்கின்றனர்.
ஜஸ்டின் ட்ரூடோ வாக்கு வங்கிக்காக இந்த நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாக இந்தியா குற்றம் சாட்டுகிறது. இந்தியாவுக்கு எதிரான ட்ரூடோவின் நிலைப்பாட்டை அந்நாட்டு எதிர்க்கட்சியினர் எவ்வாறு பார்க்கின்றனர்?
இந்திய எதிர்க்கட்சித் தலைவர்கள் மத்தியிலும் இந்தியா கனடா இடையில் சிக்கலாகி வரும் உறவு பற்றிய தங்கள் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். ஆனால் மோதி அரசின் நிலைப்பாட்டிற்கு எதிராக எந்தவிதமான கருத்துகளும் நிலவவில்லை.
ஆனால் கனடாவில் ட்ரூடோவின் கருத்தை இதர கனடிய அரசியல் கட்சித் தலைவர்களும் எதிர்க்கட்சித் தலைவர்களும் ஏற்றுக் கொண்டனரா?
ஜஸ்டின் ட்ரூடோ அரசின் நிலைப்பாடு என்னவென்று எதிர்க்கட்சியினர் கேள்விகளை எழுப்பினார்கள். பலர், இந்த விவகாரத்தில் ஆதாயம் அடைய அவர் முயல்கிறார் என்று கூறினார்கள். அதே நேரத்தில் பலர் ட்ரூடோவுக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.
நிஜ்ஜார் கொலை வழக்கு விவகாரத்தை முறையாகக் கையாளத் தவறிவிட்டது என்று கனடாவின் எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் பியர் பொலியெவ்ரா ( Pierre Poilievre) கூறியுள்ளார்.
இந்திய தூதரக அதிகாரிகளுக்கு தலையீடு நிஜ்ஜாரின் கொலை வழக்கில் தொடர்பு இருப்பதாக ட்ரூடோ கூறுவதற்கான ஆதாரங்களை வெளியிட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்தார்.
மற்றொரு எதிர்க்கட்சியான கனடா மக்கள் கட்சியின் (People’s Party of Canada) தலைவர் மாக்ஸிம் பெர்னியர் மற்ற விவகாரங்களில் மடைமாற்றம் செய்ய நிஜ்ஜார் விவகாரத்தைப் பயன்படுத்துவதாக குற்றம் சுமத்தினார்.
அதே நேரத்தில், கனடாவில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினரான சந்திரா ஆர்யா கனடாவில் இந்துக்களின் பாதுகாப்பு குறித்து நிறைய கேள்விகளை எழுப்பியுள்ளார்.
கனடாவின் எதிர்க்கட்சித் தலைவர் கூறியது என்ன?
எதிர்க்கட்சித் தலைவர் பியர் இந்திய அதிகாரிகளின் பங்கு குறித்து கனடிய காவல்துறை குற்றம் சுமத்திய பிறகு செவ்வாய்க்கிழமை அன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அதில்,”ஆர்.சி.எம்.பி (Royal Canadian Mounted Police) சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் கவலை அளிக்கின்றன. அதை மிகவும் கவனமாகக் கையாள வேண்டும்,” என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும், “இந்தியா உள்ளிட்ட பிறநாடுகளின் தலையீடுகள் பொறுத்துக் கொள்ளப்பட மாட்டாது. இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். வெளிநாடுகளில் இருந்து வரும் அச்சுறுத்தல்களில் இருந்து கனடிய மக்களைப் பாதுகாப்பது அரசின் கடமை,” என்று பியர் குறிப்பிட்டிருந்தார்.
எந்தவொரு கனடிய பிரஜையையும் யாராவது தாக்கியிருந்தாலோ, கொலை செய்தாலோ உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டுமென்று தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
ட்ரூடோ அரசு மீது குற்றம் சுமத்திய பியர், “கடந்த 9 ஆண்டுகளாக ட்ரூடோ அரசு நம் நாட்டு குடிமக்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டது. தேசிய பாதுகாப்பையும், வெளிநாட்டினர் தலையீடுகளையும் தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை. அதனால்தான் தற்போது இதுபோன்ற (கொலை) நடவடிக்கைளின் கூடாரமாக கனடா மாறிவிட்டது,” என்று விமர்சித்தார்.
அவர் மறுநாள் வெளியிட்ட மற்றோர் அறிக்கை அவரது நிலைப்பாட்டை மிகவும் தெளிவாக்கியது. “வெளிநாட்டுத் தலையீடல்களில் தொடர்புடைய எம்.பிக்களின் பெயர்களை பிரதமர் அறிவிக்க வேண்டும்,” என்று அந்த அறிக்கையில் பியர் கோரிக்கை வைத்தார்.
“இந்த விவகாரத்தில் ஈடுபட்டுள்ள எம்.பிக்களின் பட்டியலை வெளியிட வேண்டும் என்று ட்ரூடோவுக்கு நான் செய்தி அனுப்பினேன். ஆனால் அவர் இதைச் செய்யமாட்டார். முன்பு செயல்பட்டதைப் போலவே இப்போதும் செயல்படுவார். அதாவது பொய்களை மட்டுமே கூறுவார்,” என்று கூறினார்.
அக்டோபர் 14ஆம் தேதியன்று இந்தியாவின் தலையீடு தொடர்பாக கனடா பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரையும், வெளியுறவுத் துறை துணைச் செயலாளரையும், சி.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் இயக்குநரையும் சந்தித்துப் பேசியதாக கூறுகிறார் பியர்.
“ட்ரூடோவிடம் ஆதாரங்கள் இருந்தால் அதை வெளியிட வேண்டும். ஆதாரங்களை பொது மக்கள் பார்வைக்கு வெளியிடுவதற்குப் பதிலாக விசாரணைக் குழுவிடம் ஒப்படைப்பதாக ட்ரூடோ கூறுகிறார். ஆனால் அவர் அவ்வாறு செய்யமாட்டார். இந்த விவகாரத்தை ஊதிப் பெரிதாக்குகிறார்,” என்றும் பியர் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
ட்ரூடோவின் அரசின் நிலைப்பாட்டை எதிர்க்கும் எதிர்க்கட்சித் தலைவர்கள்
பல்வேறு பிரச்னைகளில் இருந்து கவனத்தைத் திருப்புவதற்காக இந்தப் பிரச்னையை ட்ரூடோ பயன்படுத்துவதாக கனடா மக்கள் கட்சியின் தலைவர் மேக்ஸின் பெர்னியர் குற்றம் சாட்டினார்.
“இந்திய தூதரக அதிகார்கள் கனடிய மண்ணில் குற்றச்செயலில் ஈடுபட்டிருப்பதாக கனடிய காவல்துறை மற்றும் ட்ரூடோ அரசின் குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தால், இது மிகவும் தீவிரமான விவகாரம். அதை அவ்வாறே கையாள வேண்டும்,” என்று கூறினார் மேக்ஸிம்.
ஆனால், “இதுவரை இந்த விவகாரம் தொடர்பாக எந்தவிதமான ஆதாரங்களையும் ட்ரூடோ அரசு முன்வைக்கவில்லை. இந்த விவகாரத்தை, மற்ற பிரச்னைகளில் இருந்து கவனத்தைத் திசை திருப்புவதற்காக ட்ரூடோ தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது,” என்று குற்றம் சாட்டினார் மேக்ஸிம்.
பிரிவினைவாத ஆதரவாளர் ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் குடியுரிமை பற்றிக் கேள்வி எழுப்பிய மேக்ஸிம், கனடா தன்னுடைய தவறை சரி செய்துகொள்ள வேண்டும் என்றும் கூறினார். மேலும் இந்தியாவுடன் சேர்ந்து இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும் என்று கூறினார் அவர்.
நிஜ்ஜாரின் குடியுரிமை பற்றிப் பேசும்போது,”காலிஸ்தானி ஆதரவாளரான நிஜ்ஜாரை ஒரு கனடா பிரஜை என்று கூறும் கட்டுக்கதையை முதலில் உடைக்க வேண்டும். உண்மையில் அவர் வெளிநாட்டைச் சேர்ந்தவர். போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி, 1997ஆம் ஆண்டு முதல் கனடாவில் புகலிடம் தேடிய நபர்,” என்று அவர் கூறினார்.
இது தொடர்பான அவரின் மனுக்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டன. ஆனால் இந்த நாட்டில் வாழ அனுமதி வழங்கப்பட்டது. 2007ஆம் ஆண்டு அவருக்கு எப்படியோ குடியுரிமை வழங்கப்பட்டிருக்கிறது என்றும் குறிப்பிட்டார்.
நிஜ்ஜாரின் குடியுரிமையை திரும்பப் பெற வேண்டும் என்று கூறிய மேக்ஸிம், “முதலில் நிஜ்ஜார் ஒரு கனடா பிரஜையே இல்லை. இந்த நிர்வாகத் தவறைச் சரிசெய்ய அவரது கொலைக்குப் பிறகு அவருடைய குடியுரிமையை திரும்பப் பெற்றிருக்க வேண்டும். முதன்முறையாக போலியான ஆவணங்களைக் கொண்டு குடியுரிமைக்கு விண்ணப்பித்த போதே அவரை நாடு கடத்தியிருக்க வேண்டும்,” என்றும் அவர் மேற்கோள் காட்டினார்.
“தற்போது கனடாவில் லட்சக்கணக்கான நபர்கள் போலியான அகதிகள் உள்ளனர்,” என்று குறிப்பிட்டார். “இவை அனைத்தும் நடப்பதற்குக் காரணம் கனடா இதுபோன்ற நபர்களை வேண்டுமென்றே இந்த நாட்டிற்கு அழைத்து வந்ததுதான்,” என்று கூறினார்.
“இதுவொரு மிகப்பெரிய தவறு. வளர்ந்து வரும் சக்தி வாய்ந்த மற்றும் முக்கியமான கூட்டணி நாடான இந்தியாவுடனான உறவை சிக்கலாக்கிக் கொள்வதற்குப் பதிலாக, இந்திய அரசுடன் சேர்ந்து பணியாற்றி இதற்கு ஒரு தீர்வு வழங்க வேண்டும்,” என்றும் அவர் கூறினார்.
மேக்ஸிம் வெளியுறவுக் கொள்கை குறித்தும் ஜஸ்டின் ட்ரூடோவை விமர்சித்துப் பேசினார். சமூக ஊடக பதிவு ஒன்றில் ஜஸ்டின் ட்ரூடோவையும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் பியரையும் அவர் விமர்சித்தார்.
“ஜஸ்டினும் பியரும் வெளிநாட்டுத் தலையிடல் குறித்து மாறி மாறி பேசிக் கொள்வது சிரிப்பை வரவழைக்கிறது,” என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டிருந்தார். மேலும், “அவர்கள் இருவரும் மிகவும் வெளிப்படையாகவும் தொடர்ச்சியாகவும் வெளிநாட்டினரின் தலையிடல்களை அனுமதித்தனர்,” என்று கூறினார்.
“இந்த இரண்டு தலைவர்களின் அரசியல் உத்திகளும் வெளிநாட்டினரைச் சார்ந்தே இருக்கிறது. இவர்கள் அவர்களை வரவேற்றனர், கனடாவின் உண்மையான மக்களைவிடவும் அதிகமான முன்னுரிமையை இவர்களுக்கு அளித்தனர். வெளிநாட்டு மோதல்களை இங்கே நிகழ்த்த வழிவகை செய்தனர், அவர்களைச் சமாதானம் செய்து அவர்களின் வாக்குகளையும் பெற்றனர்,” என்ற விமர்சனத்தை அவர் முன்வைத்தார்.
இந்து எம்.பி. கூறியது என்ன?
கனடா நாடாளுமன்ற உறுப்பினரான சந்திர ஆர்யா, இது தொடர்பாகத் தனது சமூக ஊடக பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில்,”சமீபத்திய மாற்றங்கள் தொடர்பாக கனடாவின் இந்துக்கள் மத்தியில் ஏற்பட்டு வரும் கவலைகள் குறித்து நான் கேள்விப்பட்டேன். ஒரு இந்து எம்.பியாக என்னாலும் இதை உணர முடிகிறது,” என்று கூறினார்.
“திங்கள் கிழமையன்று கனடிய காவல்துறையின் துணை ஆணையர் ப்ரிகிட்டி காவின், தேசிய சிறப்புப் படை காலிஸ்தானி இயக்கத்தின் பயங்கரவாதம் மற்றும் இதர அச்சுறுத்தல்கள் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகக் கூறினார். கனடா நாட்டு மக்களாக நாங்கள், இந்த அரசும் அதன் முகமைகளும் பாதிக்கப்பட்ட நாட்டினருடன் இணைந்து காலிஸ்தானி இயக்கத்திற்கு எதிராக நம்முடைய மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம்,” என்று கூறினார்.
“சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய காவல்துறை ஆணையர் மைக்கேல் துஹெமும் இதையே கூறினார். கனடாவில் வன்முறை மற்றும் பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதாகவும், இந்தியாவும் கனடாவும் பல ஆண்டுகளாக இதை எதிர்த்துச் செயல்பட்டு வருவதாகவும் ஆணையர் துஹெம் கூறினார்,” என்று மேற்கோள் காட்டியதாக சந்திர ஆர்யா குறிப்பிட்டார்.
“காலிஸ்தானி பயங்கரவாதத்தால் ஏற்பட்டுள்ள எல்லை தாண்டிய அச்சுறுத்துல்களை நீக்குவதன் முக்கியத்துவத்தை நாம் உணர வேண்டும். அதை முறையாகக் கையாள நம்முடைய பங்களிப்பை இரட்டிப்பாக்க வேண்டும்” என்று கூறிய சந்திர ஆர்யா, “அரசியல் ஆதரவு இருக்கின்ற காரணத்தால்தான் இங்கே காலிஸ்தானி பயங்கரவாதம் நீடித்து வருகிறது,” என்றும் குறிப்பிட்டார்.
“பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாத செயல்களை ஆதரவளிக்கும் பேரணிகளில் கனடிய தலைவர்கள் பங்கேற்றனர் என்று கடந்த ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி அன்று ஆண்ட்ரூ கோய்னே, தி க்ளோப் அண்ட் மெயிலில் எழுதினார். இந்த நாட்டின் தலைவர்கள் வன்முறையை ஆதரிக்கும், ஈடுபடும் பிரிவினைவாத இயக்கங்களை ஊக்குவிக்கக் கூடாது என்றும் அவர் எழுதியதாக,” சந்திர ஆர்யா மேற்கோள் காட்டினார்.
மேலும், “துரதிர்ஷ்டவசமாக, சமீபத்திய நிகழ்வுகளால் கவலை அடைந்துள்ள இந்து கனடிய மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் எந்தத் தலைவரும், அரசு அதிகாரிகளும் பேசியதை நான் கேட்கவில்லை,” என்றும் மேற்கோள் காட்டினார்.
“கனடாவின் இந்து மக்கள் அனைவருக்கும் நான் ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகிறேன். நாம் இந்த நாட்டில் அதிகம் படித்த, வளர்ந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள். கனடாவின் வளர்ச்சிக்குப் பெரிய பங்களிப்பை வழங்குகிறோம். ஆனால் நாம் அமைதியாக, விலகி இருப்பதை (Low Profile) அரசியல்வாதிகள் பலவீனமாகக் கருகின்றனர்,” என்று கூறினார்.
உங்களுக்காக என்னால் இயன்ற அளவு வாதாடுவேன். இருப்பினும் என்னுடைய குரல் மட்டும் இதில் போதுமானதாக இல்லை என்று தெரிவித்தார்.
மேலும் இந்துக்களிடம், “நம்முடைய பிரச்னைகளுக்குத் தீர்வு காண ஒரே வழி நாம் ஒரே குரலாக ஒலிப்பதும் தலைவர்களைப் பொறுப்பேற்க வைப்பதும்தான். ஒன்றிணைந்து நம்முடைய பாதுகாப்பு மற்றும் நலன்களைப் பாதுகாப்பதை உறுதி செய்வோம்,” என்று கூறினார்.
ட்ரூடோவுக்கு ஆதரவு அளிக்கும் ஜக்மீத் சிங்
கனடாவின் புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜக்மீத் சிங் இந்த முழு சர்ச்சையில் ட்ரூடோவுக்கு ஆதரவாக உள்ளார். ஜக்மீத் பல்வேறு காலங்களில் இந்தியாவை கடுமையாக விமர்சனம் செய்த கனடிய தலைவர்.
ஜக்மீத் சிங், இந்திய அதிகாரிகளை வெளியேற்றியதற்கு ஆதரவு தெரிவித்து தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
ராஜ்ஜீய ரீதியாகத் தடைகள் விதிக்கவும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மீது தடைகள் விதிக்கவும் அவர் கனடா அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
இன்று வெளிச்சத்திற்கு வந்த நிகழ்வுகள் மோதியின் அரசு திட்டமிட்ட குற்றங்களான கொலை, மிரட்டிப் பணம் பறித்தல், கனடிய மக்களுக்குத் தீங்கு விளைவித்தல் போன்றவற்றில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளதாக அவர் எழுதியுள்ளார்.
“கனடிய காவல் ஆணையர் இன்று வெளியிட்டிருக்கும் தகவல் மிகவும் வருத்தமளிக்கிறது. கனடா மக்கள் குறிப்பாக கனடாவில் வாழும் சீக்கியர்கள் அச்சுறுத்தல், சுரண்டல் மற்றும் வன்முறைக்கு ஆளாகியுள்ளனர். அவர்களுக்கு எதிராகத் தேர்தலில் தலையீடு, மிரட்டிப் பணம் பறித்தல் போன்றவை தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இவை அனைத்தும் இந்திய அதிகாரிகளால் குற்றம் சுமத்தப்பட்ட நிகழ்வுகளாகும்,” என்று ஜக்மீத் சிங் குறிப்பிட்டுள்ளார்.
ட்ரூடோ அரசுக்கு அளித்து வந்த ஆதரவை இந்த ஆண்டு அவருடைய கட்சி திரும்பப் பெற்றது. இந்திய வம்சாவளியான ஜக்மீத்தின் கட்சி கடந்த பொதுத் தேர்தலில் 24 இடங்களில் வெற்றி பெற்றது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு