- எழுதியவர், லூயிஸ் ஆடம்ஸ் & டெபி டப்பி
- பதவி, பிபிசி நியூஸ், எசக்ஸ்
-
[எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உள்ள சில விவரங்கள் உங்களுக்குச் சங்கடத்தை ஏற்படுத்தலாம்.]
காவல்துறையினர் தனது வீட்டின் கதவை உடைத்து ஏன் உள்நுழைந்தார்கள் என விர்ஜினியா மெக்கல்லாவிற்கு (Virginia McCullough) தெரியும். ஆனால், அதற்குக் காவல்துறை இவ்வளவு நாட்களை எடுத்துக்கொண்டது ஏன் என அவர் ஆச்சர்யப்பட்டார்.
“உற்சாகமாக இருங்கள், குறைந்தபட்சம் நீங்கள் குற்றவாளியைப் பிடித்துவிட்டீர்கள்,” என தனக்குக் கைவிலங்கு மாட்டிய அதிகாரிகளிடம் அவர் அமைதியாகக் கூறினார்.
ஜான் (John) மற்றும் லூயிஸ் மெக்கல்லா (Lois McCullough) இருவரும் கடலோரத்தில் வசித்து வருவதாக அவர்களின் அண்டை வீட்டார் நினைத்திருந்தனர். ஆனால், உண்மையில் இருவரும் தன் மகளால் இரக்கமற்ற வகையில் விஷம் கொடுக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கின்றனர்.
பிரிட்டனில் இருக்கும் செல்ம்ஸ்ஃபோர்ட், எசக்ஸ் (Chelmsford, Essex) அருகில் உள்ள கிரேட் பேடோ (Great Baddow) என்ற பகுதிக்கு அருகில் உள்ள மெக்கல்லாவின் குடும்ப வீடு பெரும் ரகசியமானதாகவே இருந்து வந்தது.
மெக்கல்லா தம்பதி அவர்களது உறவினர்களிடம் தங்களிடமிருந்து விலகி இருக்குமாறு கூறியிருந்தனர். இந்நிலையில், அவர்கள் கிளாக்டன் பகுதியில் உள்ள எசக்ஸ் சன்ஷைன் கடற்கரை பகுதியில் வசிப்பதாக நண்பர்களிடம் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த பயங்கரமான உண்மைச் சம்பவம் மிகவும் வித்தியாசமானது. பம்ப் ஹில் (Pump Hill) குடியிருப்புப் பகுதியின் மூடிய கதவுகளுக்கு உள்ளே நடந்த இந்தச் சம்பவத்தை கண்டுபிடிக்க 4 வருடங்கள் ஆகியிருக்கிறது.
எப்போதும் திரையால் மூடப்பட்ட வீடு
கொடிய விஷம் கொடுக்கப்பட்டு கொல்லப்பட்ட ஜான் மெக்கல்லா ஓய்வு பெற்ற வணிகவியல் விரிவுரையாளர். 70 வயதான அவரது உடலை வீட்டில் போர்வைகள், மணல், மற்றும் சிமென்ட் கலவையாலான இலகுரகக் கற்களைக் கொண்டு கல்லறை போன்ற அமைப்பில் மறைத்து வைக்கப்பட்டது.
71 வயதான அவரது மனைவி லூயிஸ்-இன் உடல் மாடியில் உள்ள அலமாறியின் படுக்கை விரிப்புக்குப் பின் மறைத்து வைக்கப்பட்டது.
லூயிஸ் மெக்கல்லா சுத்தியலால் தாக்கப்பட்டார். அதனுடன், அவருடைய மகள் அவருக்கு பரிந்துரைக்கபட்ட மருந்துகளுடன் விஷத்தையும் கலந்து கொடுத்திருக்கிறார்.
வெள்ளிக்கிழமையன்று (அக்டோபர் 11), 36 வயதான விர்ஜினியா மெக்கல்லாவிற்கு, இந்தக் கொலைகளைச் செய்ததற்காக செல்ம்ஸ்ஃபோர்ட் க்ரௌன் (Chelmsford Crown) நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அதன்படி, அவர் குறைந்தபட்சம் 36 ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும்.
“அவரது வீடு எப்போதும் திரையால் மூடப்பட்டிருக்கும், உள்ளே யார் இருக்கிறார்கள் என்பதைக்கூடப் பார்க்க முடியாது,” என மெக்கல்லாவின் வீட்டிற்கு அருகில் 20 ஆண்டுகளாக வசிக்கும் ஃபில் சார்ஜெண்ட் (Phil Sargeant) தெரிவிக்கிறார்.
தன்னுடைய அண்டை வீடு ஏன் இவ்வளவு ரகசியமாக இருந்தது என்பதற்கான காரணத்தை சார்ஜெண்ட் இப்போது தெரிந்து கொண்டார்.
“விர்ஜினியா தனது பெற்றோரைக் கொலை செய்து விட்டார் என்பதைச் சொல்லக் கூட மிகவும் கடினமாக இருக்கிறது,” என்கிறார் சார்ஜெண்ட்.
“அவள் அமைதியாகவும் இனிமையாகவும் இருந்தார். அவர் வேடிக்கையான ஒரு நபர். எதிலும் தலையிட மாட்டார்”, என்கிறார் சார்ஜெண்ட்.
‘கற்பனை உலகில் சஞ்சரிப்பவர்’
2023-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் எசக்ஸ் பாதுகாப்புக் குழுவிடம் இருந்து எசக்ஸ் காவல்துறைக்கு ஒரு ஃபோன் அழைப்பு வந்தது.
மெக்கல்லா தம்பதியின் நலனில் அக்கறை கொண்ட குடும்ப மருத்துவர் அவர்களைச் சில காலம் பார்க்கவில்லை என்பதால் அதுகுறித்துக் கவலையை வெளிப்படுத்தியுள்ளார். ஒவ்வொரு சந்திப்பின் போதும், வெவ்வேறு காரணங்களைக் கூறி தனது பெற்றோரால் மருத்துவப் பரிசோதனைக்கு வர முடியாது என அவர்களது சார்பாக விர்ஜினியா கூறியுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா பொதுமுடக்கம் நிலவியதும் அவருக்குச் சாதகமாக அமைந்தது. அதனால், அவருடைய பெற்றோர் நீண்ட காலமாக வெளியே தென்படவில்லை.
ஆனால், காவல்துறை மெக்கல்லாவிடம் பேசியபோது, அவர் எதையோ மறைக்கிறார் என்பது தெரியவந்தது. ஏன் அவரது பெற்றோர்கள் எப்போதும் நகரை விட்டு வெளியே இருக்கிறார்கள் என்பது தெளிவாகியது.
மெக்கல்லாவிற்குத் தொலைக்காட்சியை வாடகைக்குக் கொடுத்த ஆலன் தாம்சன் என்பவருக்கும் சந்தேகம் ஏற்பட்டது.
அவரது பெற்றோர்கள் சார்பாக, விர்ஜினியா மெக்கல்லா திடீரென ஃபோன் செய்து தொலைக்காட்சியை உரிமையாளரான ஆலன் தாம்சனிடமே கொடுத்து விடுவதாக கூறியுள்ளார்.
தொலைக்காட்சியைப் பெற தாம்சனின் பணியாளர் அவரது வீட்டிற்கு வந்தபோது, வீட்டுக்குள் நுழையக் கூடாது என்றும் தொலைக்காட்சி முன்வாசலில் தயாராக வைக்கப்பட்டிருக்கிறது என்றும் விர்ஜினியா கூறியுள்ளார்.
“அவர் ஓரளவுக்குக் கற்பனையிலேயே வாழ்பவர் என நினைத்தேன். ஆனால் ஒரு கொலைகாரர் என்று நான் நினைக்கவே இல்லை,” என்கிறார் தாம்சன்.
‘நான் இதற்கு தகுதியானவள் தான்’
விர்ஜினியாவின் வீட்டுக்கு காவல்துறை விசாரணைக்ககச் சென்றபோது, அவர்கள் அங்கு செல்வது முதல்முறை அல்ல.
உடல்கள் கண்டுபிடிக்கப்படுவதற்கு சில வாரங்களுக்கு முன்பு, தான் தாக்குதலுக்கு உள்ளானதாகக் கூறிக் காவல்துறையினரை விர்ஜினியா தன் வீட்டுக்குள் அழைத்தார்.
காவல்துறையினரை அழைத்ததன் நோக்கம் அவருக்குத் தான் தெரியும். ஆனால், நிலைமையைச் சோதித்துப் பார்க்க காவல்துறையினரை வீட்டுக்குள் அழைத்ததாகச் சிலர் கருதினர்.
இறுதியில், தான் தாக்கப்பட்டதாக அவர் கூறியது உண்மையில்லை என தெரியவந்தது.
2023-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் காவல்துறையினர் வீட்டுக்கு வந்தபோதும் மெக்கல்லா முன்கூட்டியே தயாராக இருந்தார்.
“இந்த நாள் எப்படியும் வரும் என எனக்கு தெரியும்,” என்று அவர் ஒப்புக்கொண்டார்.
“இந்தத் தீர்ப்பு எனக்குக் கிடைக்க வேண்டியது தான், அதை ஏற்கிறேன். அதை ஏற்பதுதான் சரி. அது எனக்கு கொஞ்சம் அமைதியைத் தரும்,” என்று அவர் கூறினார்.
அவரது வீட்டிலிருந்து எடுக்கப்பட்ட ஆவணங்கள் மூலம் விர்ஜினியா தன் பெற்றோரிடம் நிதி சம்பந்தமானப் பிரச்னையை மறைக்கத் தீவிரமாக முயற்சித்தது தெரிய வந்தது.
அவர்களது நம்பிக்கையை கெடுக்கும் வகையில், வாடகை இல்லாமல் வாழ்ந்துள்ளார். அவர்களது பணத்தைப் பயன்படுத்தியும், அவர்களது கிரெடிட் கார்டையும் அதிகமாகப் பயன்படுத்தியுள்ளார்.
மோசடியால் பணம் இழந்துவிட்டீர்கள் என்று போலியான கடிதங்களைக் காட்டித் தனது பெற்றோரை மெக்கல்லா நம்ப வைத்துள்ளார். உண்மையில், அந்த பணம் விர்ஜினியாவால்தான் ‘ஏமாற்றப்பட்டது’.
எதற்காக கொலை செய்தார்?
அவரது பெற்றோர்களைப் பொறுத்தவரை, விர்ஜினியா நல்ல தகுதி உடையவர், பொருத்தமான வேலையில் இருப்பவர், மேலும், கலைஞராக வருவதற்குக் கடுமையாக உழைத்தார் என்று நினைத்தனர். மேலும், பிற்காலத்தில் நிதி சார்ந்த உதவிகளைத் தனது பெற்றோருக்கும் செய்வதாக அவர்களிடம் கூறியிருந்தார் விர்ஜினியா.
அதற்குப் பதிலாக, விர்ஜினியா சூழ்ச்சியுடன் தன் பெற்றோரின் பணத்தைப் பயன்படுத்தி வந்தார். தன் பெற்றோரின் இரக்கத்தை நன்றாகப் பயன்படுத்தியும், துஷ்பிரயோகம் செய்தும் வந்துள்ளார்.
அவர்களது ஓய்வூதியம், கிரெடிட் கார்ட் பயன்பாடு, சொத்துக்களை விற்றல் என மொத்தமாக விர்ஜினியா தனது பெற்றோரைக் கொலை செய்ததன் மூலம் 1,49,697 பவுண்டுகள் (தோராயமாக 1.6 கோடி ரூபாய்) பயனடைந்துள்ளார்.
2019 – 2023 ஆண்டுக்கிடையில் அவர் ஆன்லைன் சூதாட்டத்திற்காக 21,000 பவுண்டுகள் (தோராயமாக 23 லட்சம் ரூபாய்) செலவழித்ததையும் நீதிமன்றம் விசாரித்தது.
தான் கூறிய பொய்கள் மற்றும் மாட்டிக் கொள்வோமோ என்ற பயம் காரணமாக, இறுதியில் தனது பெற்றோரை கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.
அவரது வீட்டிற்கு அருகில் உள்ள வினியார்ட்ஸ் வணிக மையத்தில் காய்கறிக் கடை வைத்திருக்கும் பால் ஹேஸ்டிங்ஸ் (Paul Hastings) என்பவரும் விர்ஜினியாவின் பெற்றோர் வெளியே வராததை கவனித்துள்ளார்.
அவருடைய கடையில் பொருட்கள் வாங்கும் தனது பெற்றோர், தற்போது கிரேட் பேட்டோவில் வாழவில்லை என்று கடைக்காரரிடம் விர்ஜினியா தெரிவித்துள்ளார்.
எந்த விஷயத்தையும் சந்தேகப்படாத அளவிற்கு அவரால் சொல்ல முடியும் என்பதுதான் அவருடைய தனித்துவம் வாய்ந்த இயல்பு என ஹேஸ்டிங் தெரிவித்தார்.
“விர்ஜினியா, என் கடைக்கு வந்து, ‘காவல்துறை என்னை பின் தொடர்கிறார்கள், நான் என் அம்மா, அப்பாவைக் கொலை செய்திருக்கலாம் என அவர்கள் நினைக்கின்றனர்’ என தெரிவித்தார்,” என அவர் கூறினார்.
“எனக்கு அது வித்தியாசமாக தோன்றியது. ஆனால் அதைப்பற்றி வேறு எதையும் நான் யோசிக்கவில்லை. அது அவருடைய விசித்திரமான இயல்பு என்று நான் நினைத்தேன்,” என்கிறார் ஹேஸ்டிங்.
சில சமயங்களில் அவர் தனது கடைக்கு ஒரு நாளைக்கு நான்கு முறை வருவார், அடுத்த 15 நாட்கள் காணமல் போவார் என ஹேஸ்டிங் கூறுகிறார்.
‘கர்ப்பிணி போல நடித்தார்’
அவர் தனது கடைக்கு வந்து உணவு உள்ளிட்ட பொருட்களை வழங்குவார் என்று விர்ஜினியாவின் விட்டருகே பூக்கடை நடத்தி வரும் டெப்பி பொல்லார்ட் (Debbie Pollard) கூறிகிறார்.
“அவர் வித்தியாசமானவர் என எங்களுக்குத் தெரியும். ஆனால், அவர் இப்படிச் செய்வார் என்று நாங்கள் கனவிலும் நினைத்ததில்லை,” என்கிறார் டெப்பி.
“அவருடைய அம்மா, அப்பாவின் சடலங்களுடன் இத்தனை ஆண்டுகள் அவர் வாழ்ந்திருக்கிறார். நினைத்தாலே பயமாக இருக்கிறது,” என்கிறார்.
விர்ஜினியா கர்ப்பிணியைப் போன்று கூட நடித்திருக்கிறார் என்றும் தன் ஆடையின் உள்ளே போலியான பொருள் மூலம் தனது வயிற்றைப் பெரிதாகக் காட்டியிருக்கிறார் என்றும் ஹேஸ்டிங்ஸ் மற்றும் டெப்பி கூறுகின்றனர்.
தீர்ப்பு வழங்கப்பட்ட அக்டோபர் 11 அன்று விர்ஜினியா பெரும்பாலும் எவ்வித உணர்ச்சியும் இன்றி தரையையே பார்த்துக் கொண்டிருந்தார்.
தன் தாயை எப்படிக் கொலை செய்தேன் என காவல்துறையினரிடம் தான் கூறியதன் பதிவைப் பின்னர் கேட்கும் போதுதான் அவர் அழத் துவங்கினார்.
“அவர் (தாய்) மிகவும் அப்பாவியாக இருந்தார். வானொலியைக் கேட்டுக்கொண்டு அமர்ந்திருப்பார்,” என்று அவர் அதிகாரிகளிடம் கூறினார்.
“தைரியத்தை வரவைக்க மூன்றுமுறை உள்ளே சென்றேன். பின்னர் தயங்காமல் இதை செய்தாக வேண்டும் என்று முடிவெடுத்தேன். அவர் (தாய்) நம்ப முடியாமல் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்,” என்றார் விர்ஜினியா.
எசக்ஸ் காவல்துறையின் துப்பறிவுக் கண்காணிப்பாளர் ராப் கிர்பி (Rob Kirby), நீதிமன்றத்தில் அவரது அமைதியானச் செயல்பாடுகள், ஒரு ‘திட்டமிட்டக் கொலைகாரரது செயல்பாடுகள் போல’ அமைதியாக இருந்தன என்கிறார்.
“அவர் செய்த வஞ்சகம், துரோகம், மோசடி ஆகியவை குறித்த பரந்த அளவிலான விசாரணையை நாங்கள் மேற்கொண்டோம்,” என்கிறார் அவர்.
“இது அதிர்ச்சியூட்டும் வகையிலும், பெரிய அளவிலும் இருந்தது. விர்ஜினியா தனது வாழ்க்கையின் ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் பொய் சொல்லியிருக்கிறார். அவரைச் சுற்றியுள்ள அனைவரையும் ஏமாற்றியிருக்கிறார். கேலிக்கூத்தாக்கி இருக்கிறார். மேலும், தெளிவாக அவரது பெற்றோரின் நம்பிக்கையை பயன்படுத்தியிருக்கிறார்,” என்கிறார்.
“தனது பெற்றோர்களைப் பற்றியோ, அல்லது அவர்களது இழப்பால் பாதிக்கப்படுபவர்களைப் பற்றியோ யோசிக்காமல் கொடூரமாக அவர்களைக் கொலை செய்துள்ளார். அவர் ஒரு புத்திசாலி, விஷயங்களைத் திறமையாக கையாளுபவர்,” என்றார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு