இந்தியா vs நியூசிலாந்து டெஸ்ட் போட்டி: நியூசிலாந்து அணி வலுவான முன்னிலை, இந்திய அணியின் உத்தி என்ன?
- எழுதியவர், போத்திராஜ். க
- பதவி, பிபிசி தமிழுக்காக
ரச்சின் ரவீந்திராவின் அற்புதமான சதத்தால் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 402 ரன்களுக்கு ஆட்டமிழந்து இந்திய அணியைவிட 356 ரன்கள் முன்னிலை பெற்று வலுவாக இருக்கிறது.
2-வது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி 3வது நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் சேர்த்துள்ளது. விராட் கோலி 70 ரன்களில் ஆட்டமிழந்தார், சர்ஃப்ராஸ்கான் 70 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 46 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது குறிப்பிடத்தக்கது.
நியூசிலாந்து அணியைவிட இந்திய அணி 125 ரன்கள் பின்தங்கியுள்ளது. இன்னும் நாளை (அக்டோபர் 19) மற்றும் நாளை மறுநாள் (அக்டோபர் 20) மட்டுமே மீதமிருக்கும் நிலையில் ஆட்டத்தை இந்திய அணி எப்படி கையில் எடுக்கப்போகிறது என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது.
இந்திய அணியின் வியூகம் என்ன?
இந்திய அணி விக்கெட் வீழ்ச்சியைத் தடுத்து நியூசிலாந்து அணியின் முன்னிலை ரன்களைவிட கூடுதலாக 300 ரன்கள் சேர்த்து 5வது நாள் உணவு இடைவேளைவரை பேட் செய்தால் ஆட்டத்தை வெல்வதற்கு சாத்தியமுண்டு.
ஒருவேளை விக்கெட்டுகளை சீரான இடைவெளியில் இழந்து நியூசிலாந்துக்கு குறைந்த இலக்கை நிர்ணயிக்க நேர்ந்தால், இந்திய அணி தோல்வியை நோக்கிச் செல்ல வேண்டியதிருக்கும்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கு இந்த ஆட்டத்தில் வெற்றி பெறுவது இந்திய அணிக்கு அவசியம் என்பதால் நெருக்கடியான நிலையில் இந்தியா இருக்கிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில்தான் இந்திய அணி வீரர்களின் பேட்டிங் பாணி உள்ளன.
குறிப்பாக கேப்டன் ரோஹித் சர்மாவின் அரைசதம், விராட் கோலி, சர்ஃப்ராஸ் கானின் அதிவேக அரைசதமும், பேட் செய்தவிதமும் விரைவாக ரன்களைச் சேர்க்க வேண்டும் அதேநேரத்தில் விக்கெட்டையும் இழந்துவிடக்கூடாது என்பதை நோக்கமாக வைத்து ஆடினர்.
இருவரும் மிகவிரைவாக 3வது விக்கெட்டுக்கு 100 ரன்களைச் சேர்த்து, 136 ரன்கள் பார்னர்ட்ஷிப் அமைத்துப் பிரிந்தனர்.
வலுவான பார்ட்னர்ஷிப்
நியூசிலாந்து அணி 91.3 ஓவர்களில் 402 ரன்கள் சேர்ப்பதற்கு ரச்சின் ரவீந்திரா, டிம் சௌதி ஆகியோரின் பார்ட்னர்ஷிப் முக்கியக் காரணமாகும்.
8-வது விக்கெட்டுக்கு ரச்சின் ரவீந்திரா, டிம் சௌதி ஆகியோரின் 133 ரன்கள் பார்ட்னர்ஷிப் அணியை பெரிய ஸ்கோருக்கு எடுத்துச் சென்றது.
ரச்சின் ரவீந்திராவுக்கு 2-வது சதம்
ரச்சின் ரவீந்திரா 88 பந்துகளில் அரைசதம் அடித்தநிலையில் அடுத்த 36 பந்துகளில் இன்னும் 50 ரன்களை எட்டி, சதம் அடித்தார்.
பெங்களூருவை பூர்வீகமாகக் கொண்ட ரவீந்திரா சர்வதேச டெஸ்ட் அரங்கில் அடித்த 2வது சதமாகும். இதற்கு முன் 2023 ஐசிசி உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அவர் சதம் அடித்திருந்தார்.
சேவாக்கை முந்திய சௌதி
டிம் சௌதி 57 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
டெஸ்ட் அரங்கில் இதுவரை அதிகபட்சமாக 91 சிக்ஸர்களை அடித்த இந்திய வீரரான விரேந்திர சேவாக் உடைய சாதனையை டிம் சௌதி முறியடித்துள்ளார். இந்த போட்டியில் அவர் 4 சிக்சர்கள் அடித்து மொத்தம் 93 சிக்சர்கள் உடன் சேவாக்கை விட முன்னிலையில் உள்ளார்.
விக்கெட் சரிவு
முன்னதாக 2-வது நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் சேர்த்து, இந்திய அணியைவிட 134 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.
ரச்சின் ரவீந்திரா 22 ரன்களுடனும், மிட்ஷெல் 14 ரன்களுடனும் இன்றைய 3-வது நாள் ஆட்டத்தைத் தொடங்கினர்.
ஆடுகளத்தின் ஈரப்பதத்தைப் பயன்படுத்திய பும்ரா, சிராஜ் இருவரும் தொடக்கத்திலேயே புதியபந்தை நன்கு ஸ்விங் செய்ததால், ரன் சேர்க்க நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் திணறினர்.
ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே மிட்ஷெல் 18 ரன்னில் சிராஜ் பந்துவீச்சில் ஜெய்ஸ்வாலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்த வந்த டாம் பிளென்டன் 5 ரன்னில் பும்ரா பந்துவீச்சில் ஸ்லிப்பில் நின்றிருந்த ராகுலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதன்பின் களமிறங்கிய பிலிப்ஸ் 14 ரன்களிலும், மேட் ஹென்றி 8 ரன்களிலும் ஜடேஜா பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி பெவிலியன் திரும்பினர்.
ஆட்டம் தொடங்கி தேநீர் இடைவேளைக்குள் 3 விக்கெட்டுகளை நியூசிலாந்து இழந்தது. 53 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை நியூசிலாந்து பறிகொடுத்தது. இதனால் 300 ரன்களுக்குள் நியூசிலாந்து அணி ஆட்டமிழந்துவிடும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
வலுவான கூட்டணி
ஆனால், 8-வது விக்கெட்டுக்கு டிம் சௌதி, ரச்சின் ரவீந்திரா கூட்டணி ஆட்டத்தை கையில் எடுத்தனர்.
புதிய பந்தை உணவு இடைவேளைக்குப் பின் எடுத்தபின் நியூசிலாந்து ரன்ரேட் வேகமெடுத்தது. ரச்சின் ரவீந்திராவும் அரைசதம் அடித்தபின் அடுத்த 50 ரன்களை 36 பந்துகளில் சேர்க்கவும் புதிய பந்து காரணமாக இருந்தது. சௌதியும் 3 சிக்ஸர்களை விளாசி அரைசதம் அடிக்கவும் புதிய பந்து உதவியது.
அஸ்வின் டெஸ்ட் வாழ்க்கையில் மோசமான ஓவர்
அதிலும் குறிப்பாக அஸ்வின் 80-வது ஓவரை வீசி அந்த ஓவரில் மட்டும் 3 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 20 ரன்களை வாரி வழங்கினார். அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு ஓவரில் அதிகபட்சமாக வழங்கிய ரன்கள் இதுதான்.
சிராஜ் வீசிய ஓவரில் ஸ்லோவர் பாலில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து 65 ரன்களில் சௌதி ஆட்டமிழந்தார். அதைத் தொடர்ந்து வந்த அஜாஸ் படேல் 4 ரன்னில் குல்தீப் யாதவ் ஓவரில் கால்காப்பில் வாங்கி விக்கெட்டை இழந்தார்.
சதம் அடித்து பேட் செய்து வந்த ரச்சின் ரவீந்திரா 134 ரன்களில் குல்தீப் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் ஜூரெலிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் சென்றார்.
நியூசிலாந்து அணி 402 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்து, இந்திய அணியைவிட 356 ரன்கள் முன்னிலை பெற்றது.
ரோஹித் சர்மா அரைசதம்
இந்திய அணி பிற்பகலில் தனது 2-வது இன்னிங்ஸைத் தொடங்கியது. ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா நிதானமாக ஆட்டத்தைத் தொடங்கி, சில பந்துகளை மட்டும் பவுண்டரிக்கு விரட்டினர்.
ஜெய்ஸ்வால் பொறுமையாக பேட் செய்ய, ரோஹித் சர்மா இயல்பான ஆட்டத்துக்குத் திரும்பி பவுண்டரிகளாக விளாசியதால் ஸ்கோர் சீராக உயர்ந்தது.
ஜெய்ஸ்வால் 35 ரன்கள் சேர்த்தநிலையில் அஜாஸ் படேல் பந்துவீச்சில் கீப்பர் பிளென்டலால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். அடுத்துவந்த கோலி, ரோஹித்துடன் சேர்ந்தார். 59 பந்துகளில் அரைசதம் அடித்து நல்ல ஃபார்மில் ரோஹித் சர்மா விளையாடி வந்தார்.
ஆனால், அஜாஸ் படேல் வீசிய ஓவரில் பந்து ரோஹித் சர்மா பேட்டில் பட்டு எதிர்பாராதவிதத்தில் ஸ்டெம்பில் மெதுவாகப் பட்டதால் போல்டாகி ரோஹித் சர்மா 52 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். 3வது விக்கெட்டுக்கு சர்ப்ஃராஸ் கான், விராட் கோலி கூட்டணி சேர்ந்தனர்
கோலி, சர்ஃப்ராஸ் அதிரடி ஆட்டம்
முதல் இன்னிங்ஸில் ஏமாற்றம் அளித்த இருவரும் 2வது இன்னிங்ஸில் நியூசிலாந்து பந்துவீச்சை வெளுத்தனர். குறிப்பாக உள்நாட்டுப் போட்டிகளில் அதிகம் ஆடி நன்கு அனுபவம் பெற்ற சர்ஃப்ராஸ் கான் நியூசிலாந்து பந்துவீச்சை அனாசயமாக ஆடி பவுண்டரி, சிக்ஸர் என பறக்கவிட்டார்.
அதிலும் அஜாஸ் படேல் பந்துவீச்சில் ஸ்வீப் ஷாட்டில் தொடர்ந்து 2 பவுண்டரிகளையும், மற்றொரு ஓவரில் இரு சிக்ஸர்களையும் பறக்கவிட்டார்.
இருவரின் அதிரடியான பேட்டிங்கால் அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. சர்ஃப்ராஸ் கான் கோலி இருவரும் அரைசதம் அடித்தனர்.
3வது விக்கெட்டுக்கு இருவரும் விரைவாகவே 100 ரன்களை எட்டினர். 41 ஓவர்களில் இந்திய அணி 200 ரன்களை எட்டியது.
நிதானமாக பேட் செய்த வந்த விராட் கோலி இன்றைய ஆட்டத்தின் கடைசி ஓவரை பிலிப்ஸ் வீசியநிலையில் கடைசி பந்தில் கோலி 70 ரன்கள் சேர்த்தநிலையில் விக்கெட் கீப்பர் பிளென்டலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
3வது விக்கெட்டுக்கு சர்ஃப்ராஸ் கான், கோலி இருவரும் 136 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துப் பிரிந்தனர்.
இந்திய அணி 3-வது நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் குவித்துள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.