சீக்கியரை கொல்ல முயன்றதாக அமெரிக்காவில் ரா அதிகாரி மீது குற்றச்சாட்டு – யார் இந்த விகாஷ் யாதவ்?

அமெரிக்காவில் காலிஸ்தான் ஆதரவாளரை கொல்ல இந்திய அதிகாரி சதித் திட்டம் தீட்டியதாக நியூயார்க் நீதிமன்றம் குற்றப்பத்திரிகை தாக்கல்

பட மூலாதாரம், US Justice Department

படக்குறிப்பு, அமெரிக்க நீதித்துறை வெளியிட்டுள்ள விகாஷ் யாதவின் புகைப்படம்

காலிஸ்தானுக்கு ஆதரவாகச் செயல்பட்ட அமெரிக்க குடிமகனான குர்பத்வந்த் சிங் பன்னுனை படுகொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக, முன்னாள் இந்திய உளவுத்துறை அதிகாரி மீது அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

குர்பத்வந்த் சிங் பன்னுனை கொல்ல முயன்றதற்காக முன்னாள் இந்திய அரசு அதிகாரி விகாஷ் யாதவ் மீது “ஆள் வைத்துக் கொலை செய்தல் மற்றும் பணமோசடி” ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நியூயார்க்கின் தெற்கு மாகாணத்திற்கான அமெரிக்க வழக்கறிஞர் அலுவலகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

விகாஷ் யாதவ் மீதான குற்றப்பத்திரிகை, ஒரு படுகொலை முயற்சியில் இந்திய அரசை நேரடியாகச் சம்பந்தப்படுத்தாக உள்ளது.

அமெரிக்காவின் விசாரணைக்கு ஒத்துழைப்பதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால் விகாஷ் யாதவ் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து இந்திய அரசு இன்னும் பதிலளிக்கவில்லை.

இந்த ஆண்டு தொடக்கத்தில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இந்தியர் நிகில் குப்தா, பிராக் (Prague) சிறையில் இருந்து அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

அமெரிக்கா, கனடா என இரட்டைக் குடியுரிமை பெற்ற பன்னுன் மீதான கொலை முயற்சியில் இந்திய பிரமுகர்கள் ஈடுபட்டதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

காலிஸ்தானுக்கு ஆதரவாகச் செயல்படும் ஆர்வலர் என்பதால் பன்னுனை இந்திய அரசு `பயங்கரவாதி’ என்று முத்திரை குத்தியது. இந்திய அரசின் குற்றச்சாட்டுகளை பன்னுன் மறுத்தார்.

இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், “அமெரிக்க நீதித்துறையின் குற்றப் பத்திரிகையில் ‘சிசி-1’ என்று குறிப்பிடப்பட்ட நபர் தற்போது இந்திய அரசால் பணியமர்த்தப்பட்ட ஒருவர் இல்லை” என்று கூறினார். இருப்பினும், அவர் இந்தக் கருத்தை சம்பந்தப்பட்ட நபரின் பெயரைக் குறிப்பிடாமல் கூறினார். எனவே அவர் யாதவைதான் குறிப்பிடுகிறார் என்று யூகிக்கப்பட்டது.

விகாஷ் யாதவ் மீதான குற்றச்சாட்டு என்ன?

அமெரிக்காவில் காலிஸ்தான் ஆதரவாளரை கொல்ல இந்திய அதிகாரி சதித் திட்டம் தீட்டியதாக நியூயார்க் நீதிமன்றம் குற்றப்பத்திரிகை தாக்கல்

பட மூலாதாரம், Gurpatwant Pannun/FB

குற்றப் பத்திரிகையின்படி, விகாஷ் யாதவ் என்பவர் பன்னுனை கொலை செய்வதற்கான சதித் திட்டத்தின் பின்னணியில் இருந்தவர். மேலும் இந்தக் கொலைத் திட்டத்தைச் செயல்படுத்த அவர் குப்தா என்பவரை நியமித்தார்.

“மே 2023இல் குப்தாவுக்கு எதிராக இந்தியாவில் தொடரப்பட்ட வழக்கைத் தள்ளுபடி செய்வதற்கு ஈடாக இந்தப் படுகொலையைச் செயல்படுத்த அவரை விகாஷ் யாதவ் பணியமர்த்தியதாக” குற்றப் பத்திரிகை கூறுகிறது.

அதோடு, “ஜூன் 2023இல் அல்லது அதற்குப் பிறகு, படுகொலைக்கான சதித் திட்டத்தைச் செயல்படுத்த, குப்தாவிடம் விகாஷ் யாதவ் குர்பத்வந்த் சிங் பன்னுன் பற்றிய தனிப்பட்ட தகவல்களை வழங்கினார்.

இந்தத் தனிப்பட்ட தகவல்களில், நியூயார்க் நகரில் இருக்கும் பன்னுனின் வீட்டு முகவரி, அவருடன் தொடர்புடைய தொலைபேசி எண்கள், அவரின் தினசரி விவரங்கள் ஆகியவை அடங்கும்” என்று குற்றப் பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

சீக்கிய பிரிவினைவாதத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்திய அதிகாரிகளின் தலையீடு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியுள்ள நிலையில், யாதவ் மீதான குற்றச்சாட்டு வெளிவந்துள்ளது.

யார் இந்த விகாஷ் யாதவ்

அமெரிக்காவில் காலிஸ்தான் ஆதரவாளரை கொல்ல இந்திய அதிகாரி சதித் திட்டம் தீட்டியதாக நியூயார்க் நீதிமன்றம் குற்றப்பத்திரிகை தாக்கல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, குர்பத்வந்த் சிங் பன்னுனை கொல்லச் சதி செய்ததாக முன்னாள் இந்திய அதிகாரி விகாஷ் யாதவ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

விகாஷ் யாதவ் மீதான குற்றப் பத்திரிகை, “இந்திய குடிமகன், இந்தியாவில் வசிப்பவர்” என்று அவரை விவரிக்கிறது. அவரை விகாஸ் மற்றும் அமானத் என்ற பெயர்களிலும் குறிப்பிட்டுள்ளனர்.

அவர் இந்திய அரசின் அமைச்சரவை செயலகத்தில் பணியில் இருந்தார். அதன் கீழ்தான் இந்தியாவின் உயர் புலனாய்வு அமைப்பான `ரா’ (RAW) செயல்படுகிறது. `ரா’ உளவு அமைப்பு பிரதமர் அலுவலகத்தினுடைய (PMO) அதிகாரத்தின் கீழ் செயல்படுகிறது.

“பாதுகாப்பு மேலாண்மை” மற்றும் “உளவுத்துறை” ஆகிய பிரிவுகளில் பணி புரியும் “மூத்த கள அதிகாரி” (Senior Field Officer) என்று யாதவ் தனது பதவியை விவரித்ததாகக் குற்றப் பத்திரிகை கூறுகிறது.

அவர் இந்தியாவின் துணை ராணுவ மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (CRPF) பணியாற்றியதாகவும், “போர்க் கருவிகள் மற்றும் ஆயுதங்களில்” பயிற்சி பெற்றதாகவும் கூறப்பட்டுள்ளது.

`படுகொலை சதி’ என்று கூறப்படும் இந்த வழக்கு விசாரணையில் இந்தியாவின் ஒத்துழைப்பு திருப்தி அளிப்பதாக அமெரிக்க வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், இந்தியா, கனடா ஆகிய இரு நாடுகளும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளைச் சுமத்திக் கொண்டிருப்பதால் கனடா உடனான இந்தியாவின் உறவு தொடர்ந்து மோசமடைந்து வருகிறது.

கனடா குறிப்பிடும் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலில் சில நபர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அந்த நபர்களை நாடு கடத்துமாறு கனடாவிடம் இந்தியா பலமுறை கேட்டுக் கொண்டதாகவும், ஆனால் அதற்கு கனடா தரப்பில் எந்தப் பதிலும் வரவில்லை என்றும் ஜெய்ஸ்வால் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அரசு அதிகாரிகள், பிஷ்னோய் கும்பலைப் பயன்படுத்தி “கொலைகள், மிரட்டிப் பணம் பறித்தல், வன்முறைச் செயல்கள்” மற்றும் காலிஸ்தான் ஆதரவு இயக்கத்தின் ஆதரவாளர்களைக் குறிவைத்தல் ஆகிய குற்றங்களைச் செய்வதாக கனடிய காவல்துறை குற்றம் சாட்டியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள இந்தியா, இந்தக் குற்றங்கள் தொடர்பான எந்த ஆதாரத்தையும் கனடா வழங்கவில்லை என்று கூறியுள்ளது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு