யுக்ரேன் போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக வடகொரியா களமிறங்குகிறதா? – உண்மை என்ன?
- எழுதியவர், ஜேம்ஸ் வாட்டர்ஹவுஸ் மற்றும் ஓல்கா இவ்ஷினா
- பதவி, பிபிசிக்காக
வடகொரியர்களை உள்ளடக்கிய சுமார் 3,000 பேர் கொண்ட ஒரு படைப்பிரிவை ரஷ்ய ராணுவம் உருவாக்கி வருவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. யுக்ரேன் ராணுவத்தின் உளவுத்துறை வட்டாரங்கள் இந்தத் தகவலை பிபிசி-யிடம் தெரிவித்துள்ளனர்.
யுக்ரேன் ராணுவத்தின் சமீபத்திய உளவுத்துறை அறிக்கைகள், ரஷ்யாவுடன் வடகொரியா நெருக்கமான ராணுவக் கூட்டணியை உருவாக்கி வருவதாகக் கூறுகிறது. இருப்பினும், ரஷ்யாவில் இருந்து வெகு தொலைவில் இருக்கும் கிழக்கு பகுதியில், இவ்வளவு பெரிய படைப் பிரிவு உருவாகி வருகிறது என்பதற்கான எந்த உறுதியான தகவலும் இன்னும் பிபிசிக்கு கிடைக்கவில்லை.
ஆனால், ரஷ்ய அரசின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், ரஷ்யா- யுக்ரேன் போரில் வடகொரியா ஈடுபடுவது குறித்து வெளியான செய்திகளை நிராகரித்துள்ளார்.
பெஸ்கோவின் கூற்றுபடி, “பிரிட்டிஷ் புலனாய்வு அமைப்பு மட்டுமல்ல, அமெரிக்க உளவு நிறுவனமும் இதுபோன்ற செய்தி அறிக்கைகளை வெளியிடுகிறது. இது போன்ற தகவல்களை வழங்குவதே இந்த அமைப்புகளின் வேலை. ஆனால் இதுகுறித்து எந்த ஆதாரத்தையும் அவர்கள் முன்வைப்பதில்லை,” என்றார்.
இருப்பினும், சமீபத்திய மாதங்களில் ரஷ்யாவிற்கும் வட கொரியாவிற்கும் இடையிலான ஒத்துழைப்பு அதிகரித்து வருகிறது என்பதில் சந்தேகமில்லை.
ரஷ்யா – வட கொரியா இடையே அதிகரிக்கும் ஒத்துழைப்பு
வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் கடந்த வாரம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் பிறந்தநாளுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியதோடு, அவரை ‘நெருங்கிய தோழர்’ என்றும் குறிப்பிட்டார்.
ரஷ்யா-யுக்ரேன் போரில் வடகொரியா தலையிடுவது குறித்து யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஸெலென்ஸ்கி ஆலோசனை நடத்தியுள்ளார். மேலும், தென்கொரியாவின் பாதுகாப்பு அமைச்சரும் இந்த மாதம், யுக்ரேனில் வடகொரிய படைகள் நிலைநிறுத்தப்பட்டிருப்பதறகான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகக் கூறினார்.
ஆனால், இந்தப் படையில் எத்தனை வீரர்கள் இருக்கிறார்கள் என்பது தான் மிகப் பெரிய கேள்வி. ரஷ்யாவின் கிழக்குக் கோடியில் இருந்து ஒரு ராணுவ தொடர்பான பிரமுகர் பிபிசி-யின் ரஷ்ய சேவையிடம், “பல வடகொரிய வீரர்கள் விளாடிவோஸ்டாக் (Vladivostok) நகரத்திற்கு வடக்கே உசுரிஸ்க் அருகே உள்ள ராணுவத் தளங்களுக்கு வந்துள்ளனர்,” என்று கூறினார்.
ஆனால் உண்மையில் எத்தனை வீரர்கள் உள்ளனர் என்பதை நமக்கு தகவல் கொடுத்த நபர் கூறவில்லை. “இந்த எண்ணிக்கை நிச்சயமாக 3,000 ஆக இருக்காது,” என்று அவர் கூறினார்.
ஒரு ராணுவ ஆய்வாளர், ரஷ்ய ராணுவம் ஆயிரக்கணக்கான வடகொரிய வீரர்களைத் தங்கள் ராணுவத்திற்குள் வெற்றிகரமாகப் பணியமர்த்த வைக்க முடியுமா என்று சந்தேகிப்பதாகக் கூறினார்.
வட கொரிய வீரர்களை ரஷ்யா எப்படி கையாளும்?
ரஷ்யாவில் உள்ள ஆய்வாளர் ஒருவர், (பெயர் கூற விரும்பாமல்) பிபிசி-யிடம் பேசுகையில், “ஆரம்பத்தில், நூற்றுக்கணக்கான ரஷ்யக் கைதிகளை ராணுவத்தில் சேர்ப்பதே ரஷ்ய ராணுவத்திற்குக் கடினமாக இருந்தது. இத்தனைக்கும் அந்த கைதிகள் அனைவரும் ரஷ்ய மொழி பேசுபவர்கள்,” என்றார்.
அதாவது, வடகொரியப் படைகளை நிர்வகிக்கும் பணி அவ்வளவு எளிதானது அல்ல.
ஒருவேளை அவர்கள் 3,000 வடகொரிய வீரர்களைச் சேர்த்திருந்தாலும் கூட, அது போர்க்களத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது. ஆனால் யுக்ரேனைப் போலவே அமெரிக்காவும் இதைப் பற்றி கவலைப்படுவதாகத் தெரிகிறது.
அமெரிக்க வெளியுறவுத்துறைச் செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறுகையில், “ரஷ்யா, வடகொரிய வீரர்களைச் சேர்த்திருப்பது ரஷ்யாவிற்கும் வடகொரியாவிற்கும் இடையேயான உறவுகள் கணிசமாக மேம்பட்டுள்ளதைக் காட்டுகிறது,” என்றார்.
இருப்பினும், மில்லரின் பார்வையில், இந்தச் செயல்பாடு, ரஷ்யா போர்க்களத்தில் இழப்புகளைச் சந்தித்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட அமைதியின்மையை பிரதிபலிக்கிறது.
இந்த ஆண்டு ஜூன் மாதம், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், கிம் ஜாங் உன்-உடன் ரஷ்யா மற்றும் வடகொரியா இடையே பாதுகாப்பு மற்றும் பிற துறைகளில் பரஸ்பர ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்திட்டார்.
இதைத் தொடர்ந்து, வட கொரியா ரஷ்யாவிற்கு ஆயுதங்களை வழங்கியதற்கான ஆதாரங்கள் வெளிவந்தன. யுக்ரேனின் பொல்டாவா பிராந்தியத்தில் அண்மையில் மீட்கப்பட்ட ஏவுகணை மூலம் நிரூபிக்கப்பட்டது.
2023-ஆம் ஆண்டு டிசம்பரில் வட கொரியாவிடமிருந்து ரஷ்யா வெடிபொருட்கள் மற்றும் குண்டுகள் வாங்கியதற்கான ஆதாரங்கள் வெளியே கசிந்தது. இந்தத் தகவல்கள் ரஷ்ய ராணுவத்தில் இருக்கும் ஊழியர்களிடையே நடந்த டெலிகிராம் சேட் மூலமாகக் கசிந்தது.
தரமற்ற வடகொரிய ஆயுதங்கள்
யுக்ரேனில் நிலைநிறுத்தப்பட்டுள்ள ரஷ்ய வீரர்கள் இந்த ஆயுதங்களின் தரம் குறித்து அடிக்கடி புகார் கூறினர். இந்த ஆயுதங்களால் தங்களது ராணுவ வீரர்கள் பலர் காயம் அடைந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
குர்ஸ்க் மாகாணத்தில் ரஷ்யாவை நிலைநிறுத்துவதற்கு முன்னதாக, மங்கோலிய எல்லைக்கு அருகில் உள்ள உலன்-உடே பகுதியில் வடகொரியப் படைகள் பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக யுக்ரைன் சந்தேகித்துள்ளது.
சமீபத்தில் ரஷ்யாவின் குர்ஸ்க் மாகாணத்தில் யுக்ரேன் ராணுவம் தாக்குதல் நடத்தியது. யுக்ரேனிய ஊடகமான ‘டிஃபென்ஸ் எக்ஸ்பிரஸின்’ ஆசிரியர் வலேரி ரெபெக் கூறுகையில், “இந்த வடகொரிய வீரர்கள் ரஷ்யா-யுக்ரேன் எல்லையின் சில பகுதியைப் பாதுகாக்க அனுப்பப்படலாம். வட கொரிய வீரர்கள் இவ்வளவு சீக்கிரமாக முன் வரிசையில் நிறுத்தப்பட மாட்டார்கள்,” என்றார்.
ரெபெக்கை போன்று பல வல்லுனர்கள் இதே கருத்தை முன்வைத்துள்ளனர்.
மொழி தெரியாத வீரர்களால் என்ன பயன்?
வடகொரியாவில் 12.8 லட்சம் வீரர்கள் இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் ரஷ்யாவைப் போன்று வடகொரிய ராணுவத்திற்குச் சமீபத்திய போர் நடவடிக்கைகளில் அனுபவம் இல்லை.
வடகொரியா தனது ஆயுதப் படைகளில் பழைய சோவியத் மாதிரியைப் பின்பற்றி வருகிறது, ஆனால் அதன் முக்கியப் படையான காலாட்படை பிரிவுகள் யுக்ரேன் உடனான போருக்கு எவ்வாறு பொருந்தும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
ரஷ்யா-வடகொரியா படைகள் இடையே மொழித் தடையும் இருக்கும். வட கொரிய வீரர்களும் ரஷ்ய அமைப்பைப் பற்றி அறிந்திருக்க மாட்டார்கள். இது தற்போதைய போரில் ரஷ்யாவிற்கு சிக்கல்களையே உருவாக்கும்.
ஆனால் இந்த விஷயங்கள் ரஷ்யா-யுக்ரேன் போரில் வட கொரிய வீரர்கள் பங்கேற்பதைத் தடுக்க வாய்ப்பில்லை.
அதே சமயம், வடகொரியர்கள் பொறியியல் மற்றும் கட்டுமான திறன்களுக்கு பெயர் பெற்றவர்கள் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் அவர்கள் போரில் திறன் பெற்றவர்கள் அல்ல என்பது தான் பிரச்னை.
வடகொரியாவுக்கு பணமும் தொழில்நுட்பமும் தேவை. ரஷ்யாவிற்கு ராணுவ வீரர்களும் ஆயுதங்களும் தேவை.
வடகொரியாவுக்கு என்ன ஆதாயம்?
கொரியா ரிஸ்க் குழுமத்தின் இயக்குநர் ஆண்ட்ரே லாங்கோவ், “வட கொரியா ரஷ்யாவிடமிருந்து நல்ல வருவாய் பெறலாம், ஒருவேளை அவர்கள் ரஷ்ய ராணுவ தொழில்நுட்பத்திற்கான அணுகலையும் பெறலாம். வடகொரியாவிடம் ராணுவ உதவிகளைப் பெறவில்லை எனில், ரஷ்யா இந்த தொழில்நுட்பத்தை வழங்கத் தயங்கும்,” என்றார்.
“இது வடகொரியாவுக்கு உண்மையான போர் அனுபவத்தைத் தரும். அதே சமயம் வடகொரியாவை விட வளமான மேற்கத்திய நாடுகளில் வாழ்வதன் நன்மையை அவர்களது வீரர்கள் பெறுவார்கள்,” என்றார்.
அதேசமயம், கடந்த இரண்டரை ஆண்டுகாலப் போரில் ரஷ்யா இழந்தவைகளுக்கு விரைவில் ஈடு செய்ய வேண்டும் என்று புதின் விரும்புகிறார்.
பிரிட்டனைத் தளமாகக் கொண்ட ‘Conflict Studies’ ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த வலேரி அகிமென்கோ, வடகொரியப் படைகள் நிலைநிறுத்தப்படுவது புதினுக்கு உதவும், என்கிறார். “இதற்கு முன்னர் அவர் முன்னெடுத்தக் கட்டாய ராணுவ அணி சேர்க்கை தோல்வியில் முடிந்தது. எனவே இம்முறை அவரது முயற்சிகளுக்கு வடகொரிய வீரர்க உதவுவார்கள்,” என்று நம்புகிறார்.
“யுக்ரேன் ராணுவ வீரர்களுடன் ஒப்பிடும்போது ரஷ்ய வீரர்கள் எண்ணிக்கையில் குறைந்து வருகிறார்கள் என்று புதின் நினைக்கிறார். எனவே, வடகொரிய வீரர்களை போரில் ஈடுபடுத்துவது சிறந்த வழியாக கருதுகிறார்,” என்றார்.
ஆனால், யுக்ரேன் அதிபர் இரு நாட்டின் கூட்டணி பற்றி கவலையை வெளிப்படுத்தியுள்ளார். ரஷ்யாவுக்கும் யுக்ரேனுக்கும் இடையிலான மோதல் களத்தில் இதுவரை மேற்கத்திய நாடுகளின் வீரர்கள் களமிறங்கவில்லை.
ரஷ்யாவுக்காக நூற்றுக்கணக்கான வடகொரியப் படைகள் நிலைநிறுத்தப்பட்டதற்கான சான்றுகள் வெளிப்படும் நிலையில், போர்க்களத்தில் நுழையும் வெளிநாட்டு (மேற்கத்திய) வீரர்கள் பற்றி புதின் அதிகமாகக் கவலைப்பட வாய்ப்பில்லை.
(கூடுதல் செய்தி அறிக்கை : பால் கிர்பி, கெல்லி என்ஜி மற்றும் நிக் மார்ஷ்)
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.