நான் இந்த அரசாங்கத்தை பொறுப்பேற்கும்போது நாட்டில் பொற்காலம் கிடையாது – ஜீவன் தொண்டமான் !

by adminDev

நான் இந்த அரசாங்கத்தை பொறுப்பேற்கும்போது நாட்டில் பொற்காலம் கிடையாது – ஜீவன் தொண்டமான் ! on Friday, October 18, 2024

நான் வரலாற்றை வைத்துக்கொண்டு உங்களிடம் வாக்கு கேட்டு வரவில்லை. எனது பாட்டனாரின் பெயரையோ, எனது தந்தையின் பெயரையோ இங்கு பயன்படுத்தவில்லை. நான் உங்களுக்கு செய்த சேவையின் பொருட்டே நாங்கள் உங்களிடம் வருகின்றேன். நான் இந்த அரசாங்கத்தை பொறுப்பேற்கும்போது நாட்டில் பொற்காலம் கிடையாது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

தலவாக்கலை கிறேட்வெஸ்டன் ஸ்கல்பா பகுதியில் நேற்று (17) நடைப்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான்,

கடந்த நான்கு வருடகாலமாக மக்களுக்காகவே  நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தேன். அதேபோல் மக்களின் பிரச்சினைகளுக்குக் களத்தில் இறங்கியிருக்கின்றேன். அப்போது நான் செய்தது அராஜக அரசியல் என்றும், நான் கெட்டவன் என்றும் சித்தரித்தார்கள். எமது மக்களை அடிமைகளாக வழிநடத்தியவர்களையே நான் களத்தில் இறங்கி கேள்வி எழுப்பினேன். எந்த இடத்திலும் நான் ஓடி ஒழியவில்லை. நாடு வங்குரோத்து அடைந்த போது கூட, மலையகத்தைப் பொறுத்தவரையில் இரண்டு சம்பள உயர்வுகளைப் பெற்றுக் கொடுத்துள்ளோம். 2020 ஆண்டு சொன்னதுபோல ரூ. 1000 சம்பளத்தையும், 2024ஆம் ஆண்டு சம்பள நிர்ணய சபை ஊடாக ரூ.1350 சம்பளத்தை பெற்றுக் கொடுத்தோம்.

இது கூட்டு ஒப்பந்தத்தினூடாக அல்ல. சம்பள நிர்ணய சபையில் தொழிலாளர்களுக்கு ரூ.1350 சம்பளம் கொடுக்க கூடாது என தற்போதைய ஜனாதிபதியின் தொழிற்சங்கமே எமக்கு எதிராக வாக்களித்தார்கள். நுவரெலியா மாவட்டத்தில் இந்த முறை 30 சுயாதீன கட்சிகள் சுயேட்சையாக களமிறங்கியுள்ளன. எந்தக் கட்சியாக இருந்தாலும் தமிழ் பிரதிநிதித்துவத்தை பாதிக்கும் வகையிலேயே களமிறக்கப்பட்டுள்ளன. நுவரெலியா மாவட்டத்தில் இந்த முறை தேர்தலில் போட்டியிடுகின்ற பட்டியலை எடுத்து நோக்கினால் புரொட்டொப் தோட்டப் பகுதியில் முகாமையாளராக இருந்து தொழிலாளர்களை தாக்கியவர் தான் நுவரெலியா மாவட்டத்தில் பிரதான வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸால் மட்டுமே மலையகத்தில் பல்வேறு அரச நியமனங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் ஆசிரியர் நியமனங்கள், உதவி ஆசிரியர் நியமனங்கள், கிராம உத்தியோகத்தர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பல்வேறு நியமனங்களை நாமே பெற்றுக் கொடுத்தோம். இத்தேர்தலில் மலையக மக்களுடைய வாக்குகளைச் சிலர் சிதறடிக்க முயற்சிக்கின்றனர். குடும்ப அரசியலுக்கு எதிர்ப்பு என கூறியவர்கள் களுத்துறை மாவட்டத்தில் தந்தையும், மகனும் போட்டியிடுகின்றனர். எனது குடும்பத்தில் நான் மட்டுமே போட்டியிடுகின்றேன். இது குடும்ப அரசியல் கிடையாது.

இ.தொ.கா என்பது ஒரு பொது நிறுவனம். இத்தேர்தலில் எமது மக்கள் நன்கு சிந்தித்து செயற்பட வேண்டும். தமிழ் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்கும் வகையில் உங்களை வாக்குகளை அளிக்க வேண்டும். எமது வாக்குகளை சிதறடிக்க இங்கே பலர் வந்திருக்கின்றார்கள். அவர்களுக்கு நாம் இடமளிக்க கூடாது. கடந்த நான்கரை வருடகாலமாக நாட்டில் ஏற்பட்ட பொருளாதார சிக்கலுக்கு மத்தியில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்துள்ளோம். தற்போதைய ஜனாதிபதி அதிக வாக்குகளால் வெற்றி பெறவில்லை. அவர் 44% வீத வாக்குகளையே பெற்றார். ஜனாதிபதியால் 113 பெரும்பான்மையை பாராளுமன்ற தேர்தலில் பெறமுடியாது. அதனாலேயே சிறுபான்மை கட்சிகளை உடைக்க முயற்சிக்கின்றார்.

வடக்கு கிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பையே இல்லாமல் போய்விட்டது. வடக்கு கிழக்கில் தமிழ் பிரதிநிதித்துவம் கிடைப்பதே பெரும் கேள்விக் குறியாகியுள்ளது. எனவே, நுவரெலியா மாவட்டத்தில் எமது தமிழ் பிரதிநிதித்துவத்தை நாம் பாதுகாக்க வேண்டும். யானையுடன் பயணம் செய்த சேவல் இன்று யானையை வழிநடத்துகின்றது. எனவே, நுவரெலியா மாவட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் யானை சின்னத்தில் ஜீவன் தொண்டமானாகிய நானும், பழனி சக்திவேல் மற்றும் மருதபாண்டி ரமேஸ்வரன் ஆகியோர் போட்டியிடுகின்றோம்.

எனவே, உங்கள் வாக்குகளை எமக்கு அளித்து எம்மை நுவரெலியா மாவட்டத்தில் அமோக வெற்றி பெறச் செய்யுங்கள் என்றார்.

தொடர்புடைய செய்திகள்