தனிநபர் நிதி: நிரந்தர வைப்புத் தொகையில் அதிக வட்டி வழங்கும் திட்டங்கள் என்ன?

நிரந்தர வைப்புத் தொகை: அதிக வட்டி வழங்கும் திட்டங்கள் என்ன?

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், நாகேந்திர சாய் குந்தவரம்
  • பதவி, வணிக ஆய்வாளர், பிபிசிக்காக

அக்டோபர் 9ஆம் தேதியன்று, இந்திய ரிசர்வ் வங்கி அதன் கடன் கொள்கை மதிப்பாய்வின்போது வட்டி விகிதங்களில் எந்த மாற்றத்தையும் அறிவிக்கவில்லை. ஆனால், முக்கிய வட்டி விகிதங்களைக் குறைப்பது தொடர்பாகப் பரிசீலித்து வருவதாகத் தெளிவுபடுத்தியுள்ளது.

அந்த அறிக்கையை வைத்துப் பார்த்தால், வரும் டிசம்பர் மற்றும் பிப்ரவரி கூட்டங்களில் வட்டி விகிதங்கள் குறைந்தது அரை சதவீதம் குறைய வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

இதனால், வீடு, வாகனம், தனிநபர் கடன் ஆகியவற்றின் வட்டி மற்றும் வங்கிகள் நிரந்தர வைப்புத் தொகைக்கு அளிக்கும் வட்டி விகிதம் குறையும்.

அதனால்தான், சில வங்கிகள் யாரேனும் நிரந்தர வைப்புத் தொகை வைக்க விரும்பினால், இப்போதே அதிகபட்ச வட்டி விகிதத்திற்கு டெபாசிட் செய்யுமாறு அவசரப்படுத்துகின்றன.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ரிசர்வ் வங்கி மதிப்பீட்டின்படி, இந்த நிதியாண்டில் பணவீக்கம் 4.5 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும். இந்த ஆண்டு, நாட்டில் ஏராளமாக மழை பெய்துள்ளது, பெரும்பாலான அணைகள் மற்றும் ஆறுகளில் தண்ணீர் அதிகமாக உள்ளது. காய்கறிகள், அத்தியாவசியப் பொருட்களின் விலை சீராக உள்ளது. சர்வதேச அளவிலும் அமெரிக்கா வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளது. கச்சா எண்ணெய் விலையில் மாற்றமில்லை. இவையனைத்துமே நாட்டில் வட்டி விகிதங்களைக் குறைப்பதற்குச் சாதகமான காரணிகளாக உள்ளன.

இருப்பினும், இஸ்ரேல் – லெபனான் பதற்றங்கள், சீனாவில் முதலீட்டாளர் வட்டி அதிகரிப்பு ஆகிய எதிர்பாராத விஷயங்களால், ரிசர்வ் வங்கி வட்டி குறைப்பு குறித்து இரண்டு மாதங்களில் முடிவெடுக்கும் எனத் தெரிகிறது.

இந்த முறை நடந்த நிதிக் கொள்கைக் கூட்டத்தில் வட்டி குறைப்பு குறித்த அறிவிப்பு வரவில்லை என்றாலும், வரும் நாட்களில் குறைக்க வாய்ப்பிருப்பதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த் தாஸ் சமிக்ஞை கொடுத்துள்ளார்.

நிரந்தர வைப்புத்தொகை முதலீடு செய்ய விரும்புவோருக்கு இதுவொரு நல்ல வாய்ப்பு. ஏனெனில், இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்திலோ வட்டி விகிதத்தில் குறைந்தது அரை சதவீதம் வித்தியாசம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரெப்போ ரேட் 6.5 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாகப் படிப்படியாகக் குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வைப்புத் தொகையில் லாபம் கிடைக்குமா?

நிரந்தர வைப்புத் தொகை: அதிக வட்டி வழங்கும் திட்டங்கள் என்ன?

பட மூலாதாரம், Getty Images

நிரந்தர வைப்புத்தொகை, கார்ப்பரேட் பத்திரங்கள், மியூச்சுவல் ஃபண்ட் போன்றவை சிறந்த வட்டி விகிதத்தை வழங்குகின்றன.

இதற்கிடையில், சில்லறை முதலீட்டாளர்கள் வங்கிகள் மீதான தங்கள் ஆர்வத்தைக் குறைத்து வருகின்றனர். பணவீக்கத்தை வெல்லக்கூடிய வருமானத்தை வங்கிகள் வழங்காததால், வங்கிகள் மீது அவர்கள் அதிக ஆர்வம் காட்டவில்லை. ஆபத்தானதாக இருந்தாலும், பங்குச் சந்தைகளை நோக்கி நகர்வது, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு பணப் புழக்கச் சிக்கலை, அதாவது நிதிப் பற்றாக்குறையை ஏற்படுத்துகிறது.

அதனால்தான், எஸ்பிஐ வங்கியும் அதிகபட்ச வட்டி கொடுத்து வாடிக்கையாளர்களை ஈர்க்கத் தயாராக இருக்கிறது. எஸ்பிஐ ‘அம்ரித் கலாஷ்’ என்ற புதிய நிரந்தர வைப்புத்தொகை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டம் ஆரம்பத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே தொடங்கப்பட்டது. இதில் அதிகபட்சமாக 7.10 சதவீத வட்டி 400 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும், மூத்த குடிமக்களுக்கு, அரை சதவீதம் கூடுதல் வட்டி, அதாவது 7.6% வழங்கப்படுகிறது.

இதேபோல், ஜூலையில் தொடங்கப்பட்ட புதிய திட்டமான ‘அம்ரித் விருஷ்டி’ 7.25% வட்டி வழங்குகிறது. மூத்த குடிமக்களுக்கு 7.75% வரை வட்டி வழங்கப்படுகிறது. எஸ்பிஐ இப்போது செப்டம்பர் 30, 2024 வரையிலான திட்டங்களை மார்ச் 31, 2025 வரை நீட்டித்துள்ளது.

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தின் கீழ் இந்த மையம் அதிகபட்ச வட்டியை வழங்குகிறது. வேறு எந்த சிறு சேமிப்புத் திட்டமும் இந்த அளவுக்கு வட்டி விகிதத்தை வழங்கவில்லை. இந்தத் திட்டத்தின் கீழ் 8.2% வட்டி கிடைக்கும். இதில் அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை முதலீடு செய்யும் வசதி உள்ளது.

ரிஸ்க் எதுவும் வேண்டாம் என்று நினைப்பவர்கள், இந்தத் திட்டத்தைத் தேர்வு செய்யலாம். எதிர்காலத்தில் வட்டி விகிதங்கள் திருத்தப்பட்டாலும், திட்டத்தில் நுழையும்போது நிலவும் வட்டி விகிதங்கள் அப்படியே திட்டம் முதிர்ச்சியடையும் வரை தொடரும் என்பது இதில் பயனுள்ள விஷயமாக பார்க்கப்படுகிறது.

வங்கிகளின் வட்டி விகிதங்கள்

நிரந்தர வைப்புத் தொகை: அதிக வட்டி வழங்கும் திட்டங்கள் என்ன?

பட மூலாதாரம், Getty Images

தற்போது வங்கிகள், நிதி நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு நிதி இடைவெளி அதிகமாக உள்ளது. ஆகவே, தனியார் வங்கிகள் அதிகபட்ச வட்டி விகிதங்களை வழங்குகின்றன.

யெஸ் வங்கி, எஸ்பிஎம் வங்கி, ஆர்பிஎல் வங்கி, பந்தன் வங்கி, ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி ஆகியவை இந்தப் பட்டியலில் உள்ளன. இந்த வங்கிகள் ஓராண்டுக்கும் மேலான நிரந்தர வைப்புத் தொகைக்கு 7.25 முதல் 8.1 சதவீதம் வரை வட்டி வழங்குகின்றன. மூத்த குடிமக்களுக்கும் 8.6 சதவீதம் வரை வட்டி வழங்குகிறார்கள்.

பல்லாண்டுக் காலமாக, வழக்கமான நிரந்தர வைப்புகளைப் பார்த்து வருகிறோம். இவை குறைந்த ஆபத்து, குறைந்த வெகுமதி என்ற அணுகுமுறையைக் கொண்டவை. ஆனால், மாறி வரும் காலங்களுக்கு ஏற்ப, கடன் நிதிகள், கார்ப்பரேட் பத்திரங்கள், என்.பி.எஃப்.சி பத்திரங்கள் போன்றவை கொஞ்சம் ரிஸ்க் எடுக்கத் தயாராக இருப்பவர்களுக்குச் சிறந்த வருமானத்தை அளிக்கின்றன.

எடுத்துக்காட்டாக, ஸ்ரீராம் ஃ பைனான்ஸ் 9.45%, பஜாஜ் ஃபைனான்ஸ் 8.6%, மஹிந்திரா ஃபைனான்ஸ் 8.3%, ஆக்சிஸ் வங்கி 7.6% எனப் பல்வேறு திட்டங்களில் இரண்டு ஆண்டுகள் வரை வட்டி விகிதங்களை வழங்குகின்றன. ஆனால், இவற்றில்கூட ஆபத்து நிலை மிதமான, குறைந்த மற்றும் தீவிரமான என மூன்று வகைகளில் உள்ளது. நமது வயது, ரிஸ்க் எடுக்கும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் ஏதுவான திட்டத்தைத் தேர்வு செய்வது நல்லது.

எதற்கு முன்னுரிமை வழங்குவது?

நிரந்தர வைப்புத் தொகை: அதிக வட்டி வழங்கும் திட்டங்கள் என்ன?

பட மூலாதாரம், Getty Images

உச்சகட்ட வட்டி விகிதங்களின் சுழற்சி மெதுவாகக் குறைந்து வருகிறது. பொருளாதாரம் நிலையானதாக, வலுவாக மாறும்போது, பணவீக்கம் கட்டுக்குள் வரும்போது, வட்டி விகிதமும் மாறும். அது நீண்டகாலத்திற்கு அதிகபட்சமாகவே இருக்க முடியாது.

ஆகவே, நம் நாட்டில் வட்டி விகிதம் நிச்சயம் குறையப் போகிறது என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். ஆகையால், ஃப்ளோடிங் ரேட் (floating rate) சேமிப்புப் பத்திரங்களில் முதலீடு செய்யவதைத் தவிர்ப்பது நல்லது என்று ரிசர்வ் வங்கி கூறுகிறது.

தற்போது இந்தப் பத்திரங்கள் 8.05% வட்டி வழங்குகின்றன. தேசிய சேமிப்புச் சான்றிதழ் 7.7% வட்டியை மட்டுமே வழங்கும் இந்த நாட்களில் ஃப்ளோடிங் ரேட் சேமிப்புப் பத்திரங்கள் 0.35 அதிகமாக வழங்குகின்றன. ஆனால், வட்டி விகிதம் குறையக்கூடிய சுழற்சி தொடங்கும்போது, இது தவிர்க்கப்பட வேண்டும்.

ஏனெனில், வட்டி விகிதங்கள் குறையும்போது அதற்கேற்ப அவையும் குறையும். இத்தகைய சூழ்நிலைகளில், ஃப்ளோடிங் ரேட்டில் வீட்டுக் கடன் பெறுவது நல்லது.

ஒட்டுமொத்த நிதித் திட்டமிடலில் சொத்து ஒதுக்கீடு மிகவும் முக்கியமானது. இளம் வயதில் நமது முதலீடுகள் நிரந்தர வைப்புத் தொகைகள் மற்றும் பத்திரங்களைவிட பங்குகளில் அதிகமாக இருக்க வேண்டும். இந்த வயதில் ரிஸ்க் எடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

நடுத்தர வயதில் ஹைப்ரிட் முறையைத் தேர்வு செய்ய வேண்டும். அதாவது கடனுக்காகவும் ஓரளவு ஒதுக்க வேண்டும்.

அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள் தமது பாதுகாப்பிற்காக அதிகபட்ச சேமிப்புகளை வைக்க வேண்டும். ரிஸ்க் எடுக்கும் வகையிலான திட்டங்களில் இருந்து விலகி, அரசாங்க பத்திரங்கள், திட்டங்களுக்கு அதிக முன்னுரிமை கொடுக்க வேண்டும். அதே நேரத்தில் வரி திட்டமிடலும் முக்கியமானது.

அதிகரிக்கும் நிரந்தர வைப்புத்தொகை முதலீடு

நிரந்தர வைப்புத் தொகை: அதிக வட்டி வழங்கும் திட்டங்கள் என்ன?

பட மூலாதாரம், Getty Images

இந்தக் காலத்தில் யார் நிரந்தர வைப்புத்தொகையில் சேமிக்கிறார்கள் என்று பலரும் நினைப்பதுண்டு.

பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் போன்ற மற்ற முதலீட்டு வழிகளை நோக்கி அனைவரும் நகர்ந்து கொண்டிருப்பதாக நம்மில் பலரும் நினைக்கலாம். ஆனால் சுவாரஸ்யமான விஷயம் என்னவெனில், கடந்த 3 ஆண்டுகளில் நிரந்தர வைப்புத்தொகையில் முதலீடு செய்வோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.

கடந்த 1997ஆம் ஆண்டில், ரூ.5 லட்சம் கோடியாக இருந்த நிரந்தர வைப்புத்தொகை, 2001இல் ரூ.10 லட்சம் கோடியையும், 2006இல் ரூ.20 லட்சம் கோடியையும், 2009இல் ரூ.40 லட்சம் கோடியையும் எட்டியது. அதுவே, 2016ஆம் ஆண்டில், ரூ.100 லட்சம் கோடி என்ற அளவை அடைந்தது.

ஆனால், அதிலிருந்து படிப்படியாக மியூச்சுவல் ஃபண்ட் மீது மக்களின் கவனம் மாறியது. இருந்தாலும், மார்ச் 2024 கணக்கீடுகளின்படி, வங்கிகள் நிரந்தர வைப்புத் தொகையாகப் பெருமளவு நிதியைப் பெறுகின்றன. எனவே, நிரந்தர வைப்புத்தொகை மீதான மக்களின் ஆர்வம் முழுமையாகக் குறையவில்லை என்பதை இதன்மூலம் புரிந்துகொள்ளலாம்.

(குறிப்பு: இதில் பேசப்பட்டுள்ள விவரங்கள் அனைத்தும் புரிதலுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. நீங்கள் நிதி சார்ந்த முடிவுகளை எடுக்கும்போது அது தொடர்பான நிபுணர்களை அணுகலாம்.)

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு