தமிழ்நாடு: சாதி, பணம், பாலியல்ரீதியாக, ஆய்வு மாணவர்கள் மீது ‘சுரண்டல்’ என்ற புகாரின் பின்னணி
- எழுதியவர், சேவியர் செல்வகுமார்
- பதவி, பிபிசி தமிழ்
‘‘காய்கறி வாங்கி வருவது, துணிமணிகளைத் துவைப்பது, குழந்தைகளை பள்ளியிலிருந்து அழைத்து வருவது என வழிகாட்டி பேராசிரியர்கள் (Guide) சொல்கிற அனைத்து வேலைகளையும் ஆய்வு மாணவர்கள் செய்துதான் ஆக வேண்டும். அதேபோல, அவர்கள் கேட்கும் போதெல்லாம் பணம் கொடுக்க வேண்டும்.’’
ஆங்கிலத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ள பிரகாஷ் என்ற மாணவரின் குற்றச்சாட்டு இது. இவர்தான், கடந்த அக்டோபர் 14 அன்று, கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில், தடைகளை மீறி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் புகார் மனுவைக் கொடுத்தவர்.
‘‘ஆய்வு மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்த புகாரின் மீது, கண்டிப்பாக விசாரணை நடத்தி தீர்வு காணப்படும்’’ என்று உறுதியளித்திருக்கிறார் தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி செழியன்.
‘‘உயர் கல்வித்துறையில் பணம் வாங்கிக் கொண்டு, பேராசிரியர்களை நியமிக்கும் வரை, இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணவே முடியாது’’ என்கிறார் சென்னை பல்கலைக்கழகத்தின் முன்னாள் தமிழ்த்துறை தலைவரும், மக்கள் கல்வி கூட்டியக்கத்தின் நிர்வாகியுமான வீ.அரசு.
இந்தியாவின் கல்வி ஆற்றல் மையமாக தமிழகம் தொடர்ந்து மின்னுவதாக தமிழக முதல்வர் ஸ்டாலின், சமீபத்தில் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். ‘தேசிய கல்வி நிறுவன தரவரிசை 2024இல் அதிக எண்ணிக்கையிலான உயர்கல்வி நிறுவனங்களுடன், தமிழகம் முன்னோக்கி நிற்கிறது. நான் முதல்வன், புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் போன்ற திட்டங்களின் மூலம் நமது மாணவர்கள் உயர் கல்வியில் புதிய உச்சங்களைத் தொடுவார்கள்’ என்றும் அவர் அதில் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
இதற்கடுத்த சில நாட்களில்தான், தமிழகத்தில் உயர் கல்வித்துறை சார்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் சந்திக்கும் பிரச்னைகளைப் பட்டியலிட்டு ஒரு மாணவர் ஆளுநரிடம் புகார் மனு கொடுத்துள்ளார்.
“சில வழிகாட்டி பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்களை ஆராய்ச்சி மாணவர்களாகவே நடத்துவதில்லை. கல்விப் பணியைத் தவிர்த்து, வீட்டு வேலைகளைச் செய்யச் சொல்லிக் கட்டாயப்படுத்துகிறார்கள்.”
“ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்கும்போது ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை செலவிடுமாறு ஆய்வு மாணவர்களிடம் கேட்கின்றனர். ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்த பிறகு சில ஆய்வு மாணவர்கள், தங்களின் வழிகாட்டி பேராசியர்களுக்குப் பணம், தங்கம் தர வேண்டியுள்ளது.”
இதுதான் அந்தப் புகாரின் சாராம்சம்.
‘ஆராய்ச்சி மாணவர்களின் பொதுப் பிரச்னை’
பிபிசி தமிழிடம் பேசிய பிரகாஷ், ‘‘அது என்னுடைய தனிப்பட்ட புகார் கிடையாது. இது ஆய்வு மாணவர்களின் பொதுப் பிரச்னை” என்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர், “பெரும்பாலான வழிகாட்டி பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்களை அடிமை போலவே நடத்துகின்றனர். அவர்களுக்கு வரும் கல்வி உதவித் தொகையை, எல்லோருக்கும் பகிர்ந்து கொடுக்கச் சொல்கிறார்கள். மாணவர்களின் தொகையை வாங்கி, அவர்களுக்குப் பிடித்த மாணவிகளுக்கு செலவு செய்கிறார்கள். கலைத்துறை மாணவர்களைவிட, அறிவியல் துறை மாணவர்களின் நிலைமை இன்னும் மோசம்’’ என்று ஆளுநரிடம் தான் கொடுத்த புகார் மனுவுக்கான காரணங்களை விவரித்தார் பிரகாஷ்.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு புதுப்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ், பாரதியார் பல்கலைக்கழகத்தில் விடுதியில் மூன்றரை ஆண்டுகள் தங்கி, ஆராய்ச்சிப் படிப்பை முடித்துள்ளார்.
வழிகாட்டி பேராசிரியர்கள் பலரும், அதற்கான தகுதி இல்லாமலே இருப்பதாகக் குற்றம் சாட்டும் பிரகாஷ், ‘‘பாரதியார் பல்கலைக் கழகத்தில் ஆங்கிலத் துறையில் பிஎச்.டி.,யே முடிக்காத ஒருவருக்கு உதவிப் பேராசிரியராக பதவி உயர்வு தரப்பட்டுள்ளது. அவர் இதுவரை பல மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார்’’ என்ற அதிர்ச்சித் தகவலையும் தெரிவித்தார்.
பிரகாஷ் புகாரிலுள்ள தகவல்களை உறுதி செய்யும் பல்கலைக் கழக ஆசிரியர்கள் சங்க துணைத்தலைவர் திருநாவுக்கரசு, ‘‘அந்த ஆங்கிலத் துறை பேராசிரியரின் பிஎச்.டி.,யை சமர்ப்பிக்கச் சொல்லி, நாங்கள் பல ஆண்டுகளாகப் போராடிய பின்பு, இப்போதுதான் விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது’’ என்றார்.
பாரதியார் பல்கலைக் கழகத்தில் மட்டுமின்றி, எல்லாப் பல்கலைக் கழகங்களிலும் ஆய்வு மாணவர்களுக்கு இத்தகைய பிரச்னைகள் இருப்பதாகச் சொல்லும் அகில இந்திய மாணவர் சங்கத்தின் மதுரை மாவட்டச் செயலாளர் தேவராஜ், ‘‘பெரும்பாலான ஆய்வு மாணவர்கள், வழிகாட்டி பேராசிரியர்களுக்கு எடுபிடி போலத்தான் இருக்கிறார்கள். பேராசிரியரின் அறையைச் சுத்தம் செய்வது, கார் கதவைத் திறந்து விடுவது, டீ வாங்கி வருவது என எல்லா வேலைகளையும் செய்கிறார்கள்” என்று கூறுகிறார்.
தொடர்ந்து பேசிய அவர், “பேராசிரியர்கள் வீடு மாற்றினால், மாணவர்கள்தான் லோடு மேன் வேலையையும், துப்புரவுப் பணிகளையும் செய்ய வேண்டியிருக்கிறது. வேலை செய்துகொண்டு, பகுதி நேரமாக பி.எச்.டி., படிப்போருக்கும் சேர்த்து முழு நேர மாணவர்கள் ஆய்வுக் கட்டுரை தயாரிக்க வேண்டியுள்ளது. அதற்கு ஒரு ‘பேக்கேஜ்’ போட்டு, வழிகாட்டி பேராசிரியர்கள் பணம் வாங்கிக் கொள்வார்கள். அதனால் ஒரு மாணவர், இரு வேலைகளைச் செய்ய வேண்டியுள்ளது’’ எனக் கூறுகிறார் தேவராஜ்.
ஆய்வு மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறதா?
பெயர் தெரிவிக்க விரும்பாத ஆய்வு மாணவர் ஒருவர், ‘‘மத்திய பல்கலைக் கழகங்களில், துறை நிர்வாகமே, ஒரு மாணவருக்கான வழிகாட்டி பேராசிரியரை நியமிக்கிறது. தமிழகப் பல்கலைக் கழங்களில் நுழைவுத் தேர்வு முடித்து தேர்ச்சி பெற்ற பிறகு, மாணவரே அவருக்கான வழிகாட்டி பேராசிரியரைத் தேர்வு செய்ய வேண்டியுள்ளது.
அப்படிப் போகும்போது, அவர்கள் என்ன சாதி, எவ்வளவு பணம் கொடுப்பாய் என்று கேட்டு, பின்புலம் பார்த்தே ‘வழிகாட்டி பேராசிரியராக’ ஒப்புக் கொள்கிறார்கள். அதனால் வழிகாட்டி பேராசிரியர்களை பல்கலைக்கழகமே நியமித்தால் நன்றாயிருக்கும்’’ என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் ஆய்வு மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகச் சொல்லும் தேவராஜ், ‘‘கடந்த 2016இல் இருந்து, என்.என்.எஃப் (Non Net Fellowship) உதவித்தொகையை மத்திய அரசு முற்றிலும் நிறுத்தி விட்டதே அதற்குக் காரணம். பட்டியலினத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு, தமிழக அரசின் உதவித் தொகை கிடைக்கிறது.”
தமிழ்நாட்டில் ஆய்வு மாணவர்கள் குறைவது தொடர்பாக அறிய சேர்க்கை எண்ணிக்கை தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கோரியிருக்கிறோம். ஆனால் அரசின் தரப்பில் இருந்து தரவுகள் எதுவும் உரிய காலக்கட்டத்தில் தரப்படவில்லை. அதனால் மேல்முறையீடு செய்து இருக்கிறோம் என்று பிபிசியிடம் அவர் தெரிவித்தார்.
“ஆனால் ‘ஓபிசி’ எனப்படும் பிற வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை கிடைக்காத காரணத்தால், பி.ஹெச்.டி. படிக்கவே வருவதில்லை. ஏனெனில் பி.ஹெச்.டி. படிக்க நிறைய செலவு செய்ய வேண்டியுள்ளது. வைவாவுக்கு, ஆர்.ஏ.சி. எனப்படும் ‘ரிசர்ச் அட்வைசரி கமிட்டி’க்கு விருந்து, வருபவர்களுக்கு ஓட்டல் ரூம், கவர் என ஏகப்பட்ட செலவாகிறது’’ என்றார்.
‘வெளியில் வராத புகார்கள்’
பாலியல் தொந்தரவுகள் காரணமாகவும், மாணவியர் பலர் ஆய்வுப் படிப்பைக் கைவிட்டுவிட்டதாகச் சொல்கிறார், பெயர் தெரிவிக்க விரும்பாத ஒரு மாணவி.
பெயர் தெரிவிக்க விரும்பாத சென்னை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வு மாணவர் ஒருவர், ‘‘மாணவிகள் மட்டுமின்றி, மாணவர்களும் இத்தகைய பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர்,’’ என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
பிபிசி தமிழிடம் பேசிய மற்றொரு மாணவி, ‘‘தாங்கள் புகார் தெரிவிக்கும் வழிகாட்டி பேராசிரியரிடம் இருந்து வேறு பேராசிரியரிடம் மாற்றிக் கொள்வதற்கு, யார் மீது புகார் தெரிவிக்கிறார்களோ, அவரிடமே என்ஓசி வாங்க வேண்டுமென்பது மிகவும் அபத்தமானது’’ என்றார்.
நேரடியான பாலியல் தொந்தரவைத் தாண்டி, வார்த்தைகள் வாயிலாக மேற்கொள்ளும் பாலியல் சீண்டல்கள் அதிகம் நடப்பதாக பிபிசி தமிழிடம் தெரிவித்தார் இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் சம்சீர் அகமது.
‘‘மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக வந்த புகாரில் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது. ஜனநாயக மாதர் சங்கம் தலையிட்ட பின், அந்தப் பேராசிரியர் கைது செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட மாணவிகள் வெளியில் சொல்ல விரும்புவதில்லை என்பதுதான் இந்த பேராசிரியர்கள் தவறு செய்வதற்கு முக்கியக் காரணம்’’ என்றார் அவர்.
இவை எல்லாவற்றையும்விட, ஆய்வு மாணவர்களிடம் பேராசிரியர்கள் சாதிப் பாகுபாடு அதிகம் பார்ப்பதாகச் சொல்கிறார் பிரகாஷ்.
பட்டியலினத்தைச் சேர்ந்த ஒரு மாணவரை, சயின்ஸ் லேப்க்கு உள்ளேயே அனுமதிப்பதில்லை என்று கூறும் அவர், ‘‘தமிழ் சினிமாக்களில் சாதியை வைத்து கதாபாத்திரங்களை அழகாகவும், அழுக்காகவும் காண்பிப்பது பற்றி ஆய்வு மாணவர் ஒருவர், ‘தெறி’ படக் காட்சிகளை வைத்து விளக்கியபோது, அவர் பட்டியலினத்தைச் சேராத மாணவராக இருந்தும், ‘இதுபோன்ற மாணவர்களை வளர விடக்கூடாது’ என்று அங்கிருந்த ஒரு பேராசிரியர் பகிரங்கமாகக் கூறினார். இதே காரணத்தால்தான், என்னுடைய சிறுகதைத் தொகுப்பை பல்கலைக்கழகத்தில் வெளியிடுவதற்கு எழுத்துப்பூர்வமாக அனுமதி கோரியும் எனக்கு அனுமதி வழங்கப்படவில்லை’’ என்று குற்றம் சாட்டினார்.
‘உயர் கல்வித்துறையில் நடக்கும் ஊழல்’ – கல்வியாளர் வீ.அரசு
இதற்கெல்லாம் காரணம், உயர் கல்வித்துறையில் நடக்கும் ஊழல்தான் எனக் குற்றம் சாட்டுகிறார் கல்வியாளர் வீ.அரசு.
‘‘பணம் கொடுத்து பணிக்கு வரும் ஒரு பேராசிரியர், எந்த அறத்தையும் பார்க்காமல் அந்தப் பணத்தை மீண்டும் எடுக்கவே முயற்சி செய்வார்.”
“நீண்ட இடைவெளிக்குப் பிறகு பச்சையப்பன் கல்லுாரியில் சமீபத்தில் நியாயமான முறையில் பணி நியமனம் நடந்தது. அதே போல தகுதி அடிப்படையில் பல்கலைக்கழகங்களிலும் நேர்மையாக நியமனம் நடந்தால் இந்தப் பிரச்னைகள் குறையலாம்’’ என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
பிபிசி தமிழிடம் பேசிய மூத்த கல்வியாளர் பிச்சாண்டி, ‘‘கல்லுாரிகளில் இந்தப் புகார்கள் குறைவு. பல்கலைக் கழகங்களில்தான் அதிகம் வருகிறது. எல்லா பேராசிரியர்களும் அப்படியில்லை. எல்லோரும் சாதி பார்ப்பதில்லை; பணம் வாங்குவதில்லை. ஆனால் சமீப காலமாக இத்தகைய வழிகாட்டி பேராசிரியர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவது உண்மைதான்,” என்றார்.
அதற்கு மாணவர்களும் ஒரு விதத்தில் காரணமாக இருப்பதாகக் கூறும் அவர், பணம் கொடுத்தாவது முனைவர் பட்டம் வாங்கிவிட வேண்டுமென்று நினைப்பவர்கள் அதிகமாகி வருவதும் இதற்கு ஒரு காரணம் எனவும் இது மற்ற மாணவர்களையும் பாதிப்பதாகவும் கூறினார்.
‘தமிழகத்தில்தான் இந்த ஆதிக்கம் அதிகம்’
புது டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆய்வுப் படிப்பை மேற்கொண்டு வரும் தமிழக மாணவர் நாசர், ‘‘இது தமிழகத்தில்தான் அதிகமாக இருப்பதாகத் தெரிகிறது. அண்ணா பல்கலைக் கழகத்திலும் ஆய்வு மாணவர்கள் இது போன்ற பாதிப்புக்கு ஆளாகி வந்தார்கள். அதற்கு எதிராக ஓர் அமைப்பைத் திரட்டவும் முயற்சி செய்தார்கள். ஆனால் அது முழுமையடையவில்லை’’ என்றார்.
வழிகாட்டி பேராசிரியர்களுக்கான அதிகாரம் அதிகம் தரப்பட்டிருப்பதால்தான், அவர்களின் ஆதிக்கம் அதிகம் இருப்பதாகச் சொல்லும் நாசர், ‘‘நிதித் தன்னிறைவு இல்லாத மாணவர்கள்தான், இதில் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதில் ஆய்வு மாணவர்களுக்கு தமிழக அரசு தரும் உதவித்தொகை பெரிதும் பலன் தரும்” என்கிறார்.
வழிகாட்டி பேராசிரியர்களை நம்பியிருக்க வேண்டிய சூழலை மாற்றியமைத்தால், இந்த ஆதிக்கம் கொஞ்சம் குறையலாம் என்று பரிந்துரைக்கிறார் நாசர். மேலும், டெல்லியை பொறுத்தவரை பல்கலைக்கழகங்களில் வழிகாட்டி பேராசிரியர்கள் அந்தளவுக்கு ஆதிக்கம் செலுத்த முடியாது என்றும் அங்கு மாணவர்களிடம் விழிப்புணர்வும், ஒருங்கிணைப்பும் அதிகமாக இருப்பதே முக்கியக் காரணம் என்றும் தெரிவித்தார்.
மாணவர்களின் குற்றச்சாட்டுகளை ஓரளவுக்கு ஏற்றுக் கொள்ளும் அகில இந்திய பல்கலைக்கழகம் மற்றும் கல்லுாரி ஆசிரியர்கள் அமைப்பின் (AIFUCTO–All India Federation of University & College Teachers’ Organisations) தலைவர் நாகராஜன், மாணவர்களும் இதற்கு அதிமுக்கியக் காரணம் என்கிறார்.
‘‘ஆய்வு மாணவர்கள் பலரும் பிஎச்டி படிக்க வேண்டும் என்ற நோக்கில் வராமல், எப்படியாவது வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் வருகின்றனர். தகுதியும், தயாரிப்பும் இல்லாமல் வரும் மாணவர்களே, குறுக்கு வழிகளை நாடுகின்றனர். இந்தச் சீரழிவைச் சரிசெய்வது மிக அவசியம். அதற்கு முதலில் நேர்மையான முறையில் ஆசிரியர்கள் நியமனம் நடக்க வேண்டும். அங்கேதான் இந்த ஊழலும் முறைகேடும் துவங்குகிறது” என்று தெரிவித்தார்.
“இப்போது அதற்கான பணியைத் துவக்கினால்தான், இன்னும் பத்து ஆண்டுகளில் தகுதியான பேராசிரியர்கள் எண்ணிக்கையும், உயர் கல்வியின் தரமும் அதிகரிக்கும். இந்தப் பிரச்னைகள் குறையும்’’ என்று பிபிசி தமிழிடம் கூறினார் நாகராஜன்.
ஆய்வு மாணவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து விசாரித்து உரிய தீர்வு காணப்படும் என்று பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்புக்குப் பின், செய்தியாளர்களிடம் தெரிவித்தார் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன்.
அவரிடம் இதுதொடர்பாக விரிவான பதிலை பிபிசி தமிழ் கேட்டபோது, பதில் அனுப்புவதாகத் தெரிவித்தார். ஆனால் அவரிடமிருந்து இதுவரை எந்த பதிலும் பிபிசி தமிழுக்கு வரவில்லை.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.