கடந்த ஆட்சிக் காலத்தில்; புதிய மதுபானசாலைக்கான அனுமதியை அரசிடமிருந்து பெற்றுக் கொண்டதாக பல்வேறு தரப்புகளாலும் முன்வைக்கப்படுகிற ஆதாரப்பூர்வமற்ற தகவல்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்க தயாராகி வருகிறோம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
எனினும் தனது தந்தையார் ஏற்கனவே வைத்திருந்த 3 மதுபானச்சாலை அனுமதிப்பத்திரங்களை அண்மையில் புதுப்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அங்கயன் தெரிவித்துள்ளார்.
எனது தந்தையார் ஒரு தொழிலதிபர். அவருக்கு நான் ஆறு வயதில் இருக்கும்போதே மதுபானசாலை அனுமதிப் பத்திரம் இருந்தது.
எனக்கு 17 வயதாகும் போது எனது தந்தையாருக்கு நான்கு மதுபானசாலைகளுக்கான அனுமதிப் பத்திரம் இருந்தன. யுத்தகாலத்தில் அவை இயங்காத நிலையில் புதுப்பிக்கப்படாமல் இருந்தன.
நீண்டகாலமாக இயங்காத மதுபான சாலைகளுக்கான அனுமதி பத்திரங்களை புதுப்பித்தல் செய்வதற்கு, அப்போதைய அரச கொள்கைகளுக்கமைய சட்ட ஏற்பாடுகள் இல்லாத நிலை காணப்பட்டது.
இந்நிலையில் 2021ம் ஆண்டு மதுபான சாலைகளுக்கான புதிய அனுமதிகள், மற்றும் பழைய அனுமதி பத்திரங்களை புதுப்பித்தல் தொடர்பான அரச கொள்கை மாற்றங்களைத் தொடர்ந்து, எனது தந்தையாரால் கடந்த 2021 ஆம் ஆண்டு ஏற்கனவே இருந்த மதுபான சாலைகள் இரண்டினை புதுப்பிக்க மேல்முறையீடு செய்யப்பட்டு அதில் ஒரு அனுமதி பத்திரம் புதுப்பிக்கப்பட்டுள்ளது மற்றையது பரிசீலனையில் உள்ளதெனவும் அங்கயன் தெரிவித்துள்ளார்.