பரீட்சை வினாத்தாள் கசிவு மோசடிகளை தடுக்க புதிய முறை : பரீட்சை ஆணையாளர் நாயகம் !

by adminDev

பரீட்சை வினாத்தாள் கசிவு மோசடிகளை தடுக்க புதிய முறை : பரீட்சை ஆணையாளர் நாயகம் ! on Thursday, October 17, 2024

இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் எதிர்காலத்தில் அரை தானியங்கி முறையில் (semi-automatic method) பரீட்சை வினாத்தாள்களை உருவாக்கும் புதிய முறையை பின்பற்றவுள்ளதாக, பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் வினாத்தாள்கள் கசிவு போன்ற மோசடிகள் குறையுமென்றும், வினாத்தாள் தயாரிப்பில் தனிநபர்களின் பங்களிப்பைக் குறைத்து, அரை தானியங்கி முறையில், கணினி மயமாக்கப்பட்ட முறையில் வினாத்தாள் உருவாக்கம் மேற்கொள்ளப்படுமென்றும் அவர் கூறினார்.

இந்த புதிய முறையின் கீழ், மோசடி மற்றும் ஊழலை குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய கல்வி சீர்திருத்தங்களால், வினாத்தாள்கள் தயாரிக்கும் பணியில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அதன் விளைவாக இந்த புதிய முறைகள் பின்பற்றப்படுமென்றும் அவர் கூறினார்.

பரீட்சை வினாத்தாள் தயாரிக்கும் பணியை தனி நபர்களை கொண்டு மேற்கொள்ளும் வரை, நூறு வீதம் மோசடி மற்றும் ஊழலை தவிர்க்க முடியாதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைப் பரீட்சை திணைக்களத்தின் பொறிமுறையில் கடந்த காலங்களில் வினாத்தாள்கள் கசிந்தமை ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. தனிப்பட்ட நபர்களின் நம்பிக்கை தொடர்பான பிரச்சினையே பரீட்சை வினாத்தாள்கள் கசிந்தமைக்கான காரணமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

1968 ஆம் ஆண்டு 25 ஆம் இலக்க பொதுப் பரீட்சைகள் சட்டத்தின் விதிகள் மற்றும் குற்றவியல் சட்டக்கோவையின் விதிகளின்படி, பரீட்சை மோசடியில் ஈடுபட்ட நபர்களுக்கு தண்டனை மற்றும் பிடியாணை இன்றி கைது செய்யும் அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது.

(Public Examinations Act) பொதுப் பரீட்சைகள் சட்டம் முழுக்க முழுக்க கிரிமினல் குற்றங்களைக் குறிப்பிடும் சட்டமாகும் என்றும் அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்