கனடா வாழ் தமிழர்கள் இந்தியா உடனான உறவில் நிலவும் பதற்றம் குறித்துக் கூறுவது என்ன?
- எழுதியவர், சாரதா வி
- பதவி, பிபிசி தமிழ்
இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான ராஜ்ஜீய உறவுகளில் பதற்றம் நிலவி வருகிறது. இந்த மோதல் தற்காலிகமானது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
காலிஸ்தான் ஆதரவு தலைவர் படுகொலைக்கு இந்திய முகவர்கள் காரணம் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டும் நிலையில், இந்தக் குற்றச்சாட்டுகள் அபத்தமானவை என்றும் அரசியல் நோக்கம் கொண்டவை என்றும் இந்தியா நிராகரித்துள்ளது.
உயர்மட்ட மோதல்கள் இருந்தாலும், தங்கள் அன்றாட வாழ்க்கையில் உடனடி தாக்கத்தை உணரவில்லை என, கனடாவில் வசிக்கும் இந்தியர்கள் கூறுகின்றனர். உயர் கல்வியைத் தொடரும் மாணவர்களில் இருந்து திறன் மிக்க தொழிலாளர்கள் வரை, பெரும்பாலானவர்கள் இந்த நெருக்கடியை இரு அரசுகளுக்கு இடையிலான ஒரு விஷயமாகவே பார்க்கிறார்கள்.
“சில நிச்சயமற்ற தன்மை உள்ளது, ஆனால் நாங்கள் எந்தப் பிரச்னையையும் எதிர்கொள்ளவில்லை” என்று பிராம்ப்டனில் உள்ள பொறியாளர் முகமது இஷ்ரத் கூறுகிறார்.
கனடாவின் தொழிலாளர் மற்றும் குடியேற்ற தேவைகளில் இந்தியா முக்கியப் பங்கு வகிக்கிறது. இரு நாடுகளும் பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் நெருக்கமாக இருப்பதால் நீண்டகால பதற்றம் நிலவ வாய்ப்பில்லை என்று குடியேற்ற நிபுணர்கள் நம்புகின்றனர்.
இந்தியா – கனடா பதற்றம் தினசரி வாழ்வை பாதிக்கிறதா?
கனடாவில் பல ஆண்டுகளாக வசித்து வரும் குடும்பங்களைவிட, தற்காலிகமாக அங்கிருக்கும் மாணவர்கள், புதிதாக வேலையில் சேர்ந்தவர்கள், வேலை தேடுபவர்கள், ஆகியோருக்கு சமீபத்திய விவகாரங்கள் அதிக கவலை அளித்துள்ளது.
கனடாவில் 2 ஆண்டுகள் முதுகலை படிப்பை முடித்து அங்கேயே பொறியியல் துறையில் பணி செய்யத் தொடங்கியிருக்கும் முகமது இஷ்ரத், இரு நாடுகளுக்கும் இடையிலான கடும் வார்த்தைப் போரினால் உடனடி பாதிப்புகள் ஏதும் அங்கு படிப்பவர்களுக்கோ பணிபுரிபவர்களுக்கோ இல்லை என்கிறார்.
ஆனால், ஒரு நிச்சயமற்ற தன்மை குறித்த பயம் எழுந்திருப்பதாகவும் நிரந்தரக் குடியுரிமை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கனடா வந்த நிறைய இந்தியர்களிடம் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற பயம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
“நான் பணி செய்யும் இடத்தில் எனக்கு எந்தவிதமான சிரமமும் இல்லை. அரசுகளுக்கு இடையில்தான் கருத்து வேறுபாடுகளும் கடுமையான வார்த்தைகளும் இருக்கின்றன.”
பஞ்சாப் மக்கள் அதிகம் வசிக்கும் ப்ராம்டனில் தங்கியிருக்கும் இஷ்ரத், அந்தப் பகுதியில் மட்டுமே இது பெரிய விஷயமாக பார்க்கப்படுவதாகத் தெரிவித்தார்.
சென்னையைச் சேர்ந்த ப்ருத்வி பெரியசாமி கடந்த இரண்டு ஆண்டுகளாக கனடாவில் திரைப்படப் படிப்பு படித்து வருகிறார். இஷ்ரத் கூறுவது போல, இவரும் தினசரி வாழ்வில் எந்தப் பிரச்னையும் இல்லை என்கிறார்.
நவம்பர் 1ஆம் தேதி முதல் முதுகலை மாணவர்களுக்கு வழங்கப்படும் பணி உரிமத்துக்கான விதிகளை கனடா கடுமையாக்கியுள்ளது. இதனால், புதிதாக வரும் மாணவர்களுக்கு வேலை கிடைப்பது கடினமாக இருக்கலாம் என்கிறார் ப்ருத்வி.
“இரண்டு ஆண்டுகள் முதுகலை படிக்கும் மாணவர்களுக்கு மூன்று ஆண்டுகள் பணிபுரிய உரிமம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால், இப்போது வேளாண், சுகாதாரம், அறிவியல் தொழில்நுட்பம், பொறியியல், கணிதம், வர்த்தகம், போக்குவரத்து ஆகிய துறை சார்ந்த படிப்புகளைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே இந்த உரிமம் வழங்கப்படும்” என்றார்.
கனடாவில் பல ஆண்டுகளாக வசித்து, ‘கதம்பம்’ என்ற தமிழ் இலக்கிய சங்கத்தை நடத்தி வரும், கனட அரசு அங்கீகாரம் பெற்ற குடியேற்ற ஆலோசகர் ஸ்ரீராம் இந்தக் கசப்பான நிலைமை வெகு நாட்கள் நீடிக்காது என்கிறார்.
“தற்போதைய பிரதமர் மீது நிறைய அதிருப்திகள் உள்ளன. அவரது பதவிக் காலம் சீக்கிரம் முடிவடையப் போகிறது. அவரது நடவடிக்கைகள் தேர்தல் அரசியலுக்கானது என்றே பலரால் பார்க்கப்படுகிறது. தேர்தலுக்குப் பின் தலைவர்கள் மாறினால், இரு நாடுகளின் உறவுகளிலும் மாற்றம் வரும்” என்றார்.
மேலும், “அமெரிக்கா கூறியபோது இந்தியா பதில் அளிக்கவில்லை, கனடாவுக்கு பதில் அளிக்கிறது” என்று கூறும் அவர் , மக்கள் எப்போதும் ஸ்திரத்தன்மையை விரும்புகிறார்கள் என்றார் ஸ்ரீராம்.
சலசலப்புகளை ஏற்படுத்திய சமீபத்திய நிகழ்வுகள்
“இந்த கொலைகள் பஞ்சாபி அல்லாதவர்களை நேரடியாகப் பாதிக்கவில்லை. ஆனால் இந்திய மாணவர்களுக்கான விசா கிடைப்பதில் கவலை உள்ளது. 2024ஆம் ஆண்டில் மட்டும் குறைந்தது 10,000 மாணவர்கள் தென்னிந்தியாவில் இருந்து வந்துள்ளனர். அவர்களுக்கு நிரந்தர குடியுரிமை கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம்” என்கிறார் கனடாவில் வசிக்கும் திருச்சியை சேர்ந்த மாணவர்.
மேலும், “பெரும்பான்மையான இந்தியர்கள் காலிஸ்தான் இயக்கத்தை ஆதரிப்பதில்லை. நமக்கு வசிப்பிடம் கொடுத்துள்ள நாட்டில் ஏன் பிரச்னையை ஏற்படுத்த வேண்டும் என்று கேள்வி எழுப்புகின்றனர். நான்கு மாதங்களுக்கு முன் பயணிகள் விசா வழங்குவதில் சிக்கல்கள் ஏற்பட்டிருந்தன, கனடா வரத் திட்டமிட்டிருப்பவர்களுக்கு அது ஒரு கவலையாக உள்ளது” என்றார்.
சமீபத்தில் கனட குடியுரிமை பெற்ற கோவையைச் சேர்ந்த இளைஞர், “கனடா குடியேற்ற மக்களின் நாடு. அவர்கள் மிகுந்த வரவேற்புடன் சேர்த்துக் கொண்டுள்ளனர். ஆனால் சமீபத்திய நிகழ்வுகள் சில சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளன. பலர் காலிஸ்தானிகளை ஏற்றுக் கொள்வதில்லை, அதே நேரம் இந்தியா மீதான குற்றச்சாட்டுகளையும் ஏற்றுக் கொள்வதில்லை.
அதேவேளையில், இந்தப் பிரச்னைகள் ட்ரூடோ மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டுள்ள நேரத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன என்பதையும் கவனிக்க வேண்டும்” என்கிறார் அவர்.
‘கனடாவுக்கு இந்தியர்கள் முக்கியம்’
கடந்த 23 ஆண்டுகளாக கனடாவில் வசித்து வரும் கனடிய அரசின் அங்கீகாரம் பெற்ற ஹைதராபாத்தை சேர்ந்த குடியேற்ற ஆலோசகர் கௌதம் கொலுரி, கனடாவுக்கு எல்லா வகையிலும் இந்தியர்களின் வருகை அவசியம் என்கிறார்.
“கனடாவில் பிறப்பு சதவிகிதம் குறைவு, வரி செலுத்த ஆட்கள் வேண்டும். கனடாவில் உள்ள குடியேற்ற சமூகங்களில் ஆங்கிலம், நல்ல திறன், கல்விக் கடன் வசதிகளைப் பெற்றவர்கள் இந்தியர்கள்.”
எனவே இரு நாடுகளுக்கு இடையே நிகழும் இந்த சூடான விவாதங்கள், விசா அலுவலகங்களை மூடுவது போன்ற அதிரடி நடவடிக்கைகளுக்கு இட்டுச் செல்லாது என்று நம்புகிறார். கடந்த ஆண்டும் இதேபோன்ற நிலைமை உருவானபோது குடியேற்றத்தில் பிரச்னைகள் ஏற்படவில்லை என்கிறார் அவர்.
கனடாவில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த ஊடகவியலாளர் ரமணன் சந்திரசேகரமூர்த்தி அங்கு வாழும் தமிழர்களுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் எந்தவித பாதிப்பும் இருக்காது என்று நம்புகிறார்.
இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலத்தில் இருந்து இன்று வரை இருந்துகொண்டிருக்கும் நீண்ட காலப் பிரச்னை இது எனக் கூறும் அவர், குறிப்பாக லிபரல் கட்சி ஆட்சிக்கு வரும்போது காலிஸ்தான் தரப்பிற்கு ஆதரவு அதிகமாக இருப்பதாகத் தெரிவித்தார்.
“கடந்த 1980களில் தனிநாடு கோரி பிரச்னை வரும்போது கனடாவிற்கு தமிழர்கள் எவ்வாறு புலம் பெயர்ந்தார்களோ, அப்படி காலிஸ்தான் ஆட்களும், பஞ்சாபி ஆட்களும் புலம்பெயர்ந்து, இங்கு பெரிய சமூகமாக வளர்ந்திருக்கிறார்கள். அரசியல் கட்சிகளுக்குள் ஆதிக்கம் செலுத்தும் வகையில் அவர்கள் ஸ்திரமடைந்து இருக்கிறார்கள்” என்கிறார் ஊடகவியலாளர் ரமணன்.
‘அதிரடி நடவடிக்கைகள் இருக்காது’
இரு நாடுகளுக்கு இடையே இப்போது நடைபெறும் உரசல்கள் நீண்ட காலம் நீடிக்காது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்தியாவுக்கான முன்னாள் தூதர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசனை வாரியத்தின் முன்னாள் உறுப்பினரான டி.பி.ஸ்ரீனிவாசன், “வரலாற்றில் முதல் முறையாக இந்தியா மீது இப்படியொரு குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. காலிஸ்தானிகளின் ஆதரவு இல்லாமல் கனடாவில் ஆட்சி நடத்துவது கடினம்.
இந்திய அமைச்சரவையில் இருப்பதைவிட கனடாவில் அதிக சீக்கியர்கள் அமைச்சர்களாக உள்ளனர். அவர்கள் அரசியல் ரீதியாக மிகவும் தாக்கம் செலுத்தக் கூடியவர்கள். அவர்களை அதிருப்திப்படுத்தும் வகையில் அங்கு எதையும் செய்ய முடியாது,” என்று தெரிவித்தார்.
டி. பி ஸ்ரீனிவாசன் கடந்த 1986ஆம் ஆண்டு முதல் 1989ஆம் ஆண்டு வரை ஃபிஜி உள்ளிட்ட 8 பசிஃபிக் தீவுகளின் இந்திய தூதராக இருந்தார். அவர் 1989ஆம் ஆண்டில் ஃபிஜி அரசால் வெளியேற்றப்பட்டார். வெளிநாட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட முதல் இந்திய தூதர் டி.பி.ஸ்ரீனிவாசன்.
தூதர்களை வெளியேற்றுவது பற்றி அவர் கூறுகையில், “இரு நாட்டு அதிகாரிகளை வெளியேற்றுவது பல நூற்றாண்டுகளாக அரசுகளுக்கு இருக்கும் வழக்கம். இது ராஜ்ஜீய சலுகைகளில் ஒன்று. இதுதான் குறைந்தபட்ச நடவடிக்கை, இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளைத் தவிர இரு நாடுகளுக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை” என்று விளக்கினார்.
மேலும், “நான் தூதராக இருந்தபோது, அங்கு ராணுவ சூழ்ச்சி நடைபெற்றது. அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி அதற்கு எதிரான நிலைப்பாட்டை எதிர்த்தார். நானும் அந்த அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை வெளிப்படையாகவே அறிவித்தேன். அதன் பின்னும் இரண்டு ஆண்டுகள் பணியாற்றினேன்.
பிறகு புதிய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்படும்போது என்னை அங்கிருந்து 72 மணிநேர கெடு கொடுத்து வெளியேற்றினர். அதன் தலைவர் என்னை அவர்கள் நாட்டுக்கு அழைத்து என்னிடம் எந்தத் தனிப்பட்ட வெறுப்பும் இல்லை என்று கூறினார்,” என்று தனக்கு நடந்ததை விவரித்தார்.
கனடா இந்தியர்களை வரவேற்கும் நாடாக இருந்து வருவதாகக் குறிப்பிடும் அவர், இந்தியாவும் கனடாவும் மிக நெருக்கமான உறவைக் கொண்டுள்ளதால் வேறு எந்த அதிரடி நடவடிக்கைகளையும் எடுப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு எனவும் இந்த சர்ச்சை மெல்ல மெல்ல ஓய்ந்துவிடும் என்வும் தெரிவித்தார்.
‘காலப்போக்கில் சீராகிவிடும்’
நெதர்லாந்துக்கான இந்தியாவின் முன்னாள் தூதரும் தற்போது ஓ.பி.ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான வேணு ராஜாமணி, இது துரதிஷ்டவசமானது என்றாலும் தற்காலிகமானதுதான் என்றார்.
“இந்தியாவுக்கு கனடாவுடன் நீண்டகால ராஜ்ஜீய உறவுகள் உள்ளன. இரு நாட்டின் நலன்களும் இந்தக் குறுகிய கால சம்பவத்தைத் தாண்டி காக்கப்படும். அதேநேரம் கனடா வைத்திருக்கும் குற்றச்சாட்டுகளின் முக்கியத்துவத்தை குறைத்துக் கூறவில்லை. அந்த விவகாரம் குறித்து முழு விசாரணை நடத்த வேண்டும். ராஜ்ய உறவுகளில் ஏற்ற இறக்கங்கள் இருக்கத்தான் செய்யும். காலப்போக்கில் சீராகிவிடும்,” என்றார்.
கனடாவின் குற்றச்சாட்டுகளைத் தீவிரமாக எடுத்துக் கொள்ளுமாறு அமெரிக்கா இந்தியாவை வலியுறுத்தியுள்ளது. இதேபோன்ற ஒரு விவகாரம் அமெரிக்காவுடன் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. நியூ யார்க் நகரில் குர்பத்வந்த் சிங் பன்னூன் என்ற காலிஸ்தான் ஆதரவாளரைக் கொலை செய்யும் முயற்சியில் இந்தியர்கள் ஈடுபட்டிருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. பன்னூனை தீவிரவாதி என்று 2020ஆம் ஆண்டு இந்தியா அறிவித்தது.
இந்த விவகாரத்தைக் குறுப்பிட்டுப் பேசும் ஸ்ரீராம், “கனடா கூறும் குற்றச்சாட்டுக்குப் பதில் கூறுவது போல், ஏன் அமெரிக்கா வைக்கும் குற்றச்சாட்டுக்கு இந்தியாவால் பதில் அளிக்க முடியவில்லை?” எனக் கேள்வி எழுப்புகிறார்.
இந்த விவகாரத்தில் இந்தியாவும் கனடாவும் ஒன்றாக இணைந்து பணியாற்றுவதாகத் தெரிகிறது எனக் கூறும் டி.பி.ஸ்ரீனிவாசன், “அமெரிக்காவில் விசாரணை நடத்த இந்திய அதிகாரிகள் சென்றுள்ளனர். அதேபோலத்தான் கனடா விவகாரத்தையும் கையாள வேண்டும்” என்றார்.
– இந்தக் கட்டுரைக்காக கூடுதல் தகவல்களை இலங்கை செய்தியாளர் ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக வழங்கியுள்ளார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு