மசூதிக்குள் ‘ஜெய் ஸ்ரீராம்’ என கோஷமிடுவது தவறில்லையா? கர்நாடக நீதிமன்றத் தீர்ப்பு சர்ச்சையாவது ஏன்?

கர்நாடகா, நீதிமன்றம், முஸ்லிம்கள்

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், இம்ரான் குரேஷி
  • பதவி, பெங்களூரில் இருந்து, பிபிசி ஹிந்திக்காக

‘இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தலமான மசூதியில் ராமரைப் போற்றி கோஷங்கள் எழுப்புவதில் தவறில்லை’ என்று கர்நாடக உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை பிரபல வழக்கறிஞர்கள் சிலர் விமர்சித்துள்ளனர்.

நீதிபதி எம்.நாகபிரசன்னா, “ஜெய் ஸ்ரீராம் என்று கோஷங்களை எழுப்பினால், அது பிற மதப் பிரிவினரின் மத உணர்வுகளைப் புண்படுத்துமா என்பதை உறுதியாக சொல்ல முடியாது,” என்றார்.

கர்நாடகாவில் உள்ள ‘தட்சிண கன்னடா’ என்னும் மாவட்டத்தில் தான் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. அங்கு கடபா தாலுக்காவில் உள்ள பெனெல்லி என்னும் கிராமத்தில், செப்டம்பர் 2023-இல் இந்தச் சம்பவம் தொடர்பாக இரண்டு பேர் மீது பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆரை நீதிபதி எம்.நாகபிரசன்னா ரத்து செய்தார்.

குற்றம்சாட்டப்பட்ட இருவரும் இரவில் மசூதிக்குள் நுழைந்து ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று முழக்கங்களை எழுப்பிய காட்சிகள் சி.சி.டி.வி-யில் பதிவாகி இருந்தது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

தீர்ப்பின் மீது விமர்சனங்கள்

கர்நாடகாவின் முன்னாள் அட்வகேட் ஜெனரல் பி.வி. ஆச்சார்யா பிபிசி ஹிந்தியிடம், “என்னுடைய பார்வையில், மக்கள் பிரார்த்தனை செய்யும் இடத்திற்குள் இதுபோன்ற கோஷங்களை எழுப்பியவர்கள் எதற்காக, என்ன நோக்கத்துடன் இந்த செயலை செய்தார்கள் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்,” என்று கூறினார்.

“ஒரு முஸ்லிம் அல்லது கிறிஸ்தவர் ஒரு பண்டிகை நாளில் கோவிலுக்குள் நுழைந்து குரான் அல்லது பைபிளைப் படித்தால், ‘அது தவறில்லை, அவர்கள் குற்றமற்றவர்கள்’ என்று சொல்ல முடியுமா? எனவே இந்த வழக்கில் நீதிமன்றம் எடுத்த முடிவு தவறானது,” என்றார்.

உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே இந்தப் பிரச்னையைச் சற்று வித்தியாசமான கண்ணோட்டத்தில் பார்க்கிறார்.

அவர் பிபிசி ஹிந்தியிடம் பேசுகையில், “பிரிவு 295-இன் கீழ், எந்தவொரு நபராக இருந்தாலும் அவரது மதம் அல்லது மத நம்பிக்கைகளை அவமதிப்பது/அவமதிக்க முயற்சிப்பது தண்டனைக்குரிய குற்றம். ஒருவேளை வைணவக் கோவிலில், சிவன் நாமத்தை போற்றும் கோஷங்கள் எழுப்பப்பட்டால், அது இந்தப் பிரிவின் கீழ் குற்றமாக கருதப்படுமா?” என்றார்.

முன்னாள் அரசு வழக்கறிஞர் பி.டி.வெங்கடேஷ் பிபிசி ஹிந்தியிடம், “புகாரில் விவரிக்கப்பட்டுள்ள சூழலை கருத்தில் கொள்ளாமல் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது,” என்று கூறினார்.

புகாரில் கூறப்பட்டது என்ன?

2023-ஆம் ஆண்டு செப்டம்பர் 24-ஆம் தேதி இரவு 10:50 மணியளவில், கடபா-மர்தாலாவில் உள்ள மசூதிக்குள் சில அடையாளம் தெரியாத நபர்கள் நுழைந்து ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று முழக்கங்களை எழுப்பினர். அதுமட்டுமின்றி அவர்கள் சம்பந்தப்பட்டச் சமூகத்தினரை குறிப்பிட்டு ‘உங்களை விட்டு வைக்க மாட்டோம்’ என்று மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

ஹைதர் அலி அளித்த புகாரின் அடிப்படையில், சி.சி.டி.வி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. அதில் சில இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் மசூதியை சுற்றி வட்டமிடுகின்றனர். ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று கோஷம் எழுப்புகின்றனர்.

மசூதி இருக்கும் பகுதியில் இந்துக்களும், முஸ்லிம்களும் மிகுந்த அமைதியுடன் சமாதானமாக வாழ்ந்து வருவதாகவும், அவர்களிடையே பிளவை ஏற்படுத்த இவர்கள் முயற்சிப்பதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது.

அதன் பிறகு, கீர்த்தன் குமார் மற்றும் என்.எம்.சச்சின் குமார் மீது சில பிரிவிகளின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. ஐ.பி.சி பிரிவுகள் 447 (அத்துமீறல்), 295-ஏ ( மத நம்பிக்கைகள் அல்லது மதத்தை அவமதிக்கும் நோக்கில் செய்யப்பட்ட செயல்), 505 (பொது அமைதியின்மையைத் தூண்டும் செயல்), பிரிவுகள் 503 ( மிரட்டல்), 506 ( மிரட்டல் விடுத்ததற்கான தண்டனை) மற்றும் 34 (பொது நோக்கம்) ஆகியப் பிரிவிகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

தீர்ப்பில் கூறப்பட்டிருப்பது என்ன?

நீதிபதி நாகபிரசன்னா, “பிறரின் மத நம்பிக்கைகள் அல்லது மதத்தை அவமதிக்கும் நோக்கில் செய்யப்பட்ட செயலுக்கு ‘பிரிவு 295A’ என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதியப்படும். மத உணர்வுகளை வேண்டுமென்றே புண்படுத்த, ஒடு செய்யும் தீங்கிழைக்கும் செயல்களை இதுக் குறிக்கிறது,” என்று தெரிவித்திருந்தார்.

“ஆனால், ‘ஜெய் ஸ் ரீராம்’ என்று யாராவது கோஷங்களை எழுப்பினால் அது எப்படி மற்றவர்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் என்பது புரியவில்லை. அப்பகுதியில் இந்துக்களும், முஸ்லிம்களும் நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருவதாக புகார்தாரரே கூறியுள்ள நிலையில், இந்தச் சம்பவத்தை எந்த வகையிலும் வெறுப்புணர்வை ஏற்படுத்துவதாகக் கூற முடியாது,” என்றார்.

இதற்கு முன்னதாக மகேந்திர சிங் தோனிக்கு எதிராக ஷியாம்சுந்தர் என்பவர் 2017-இல் தொடுத்த வழக்கைக் குறிப்பிட்டு, “அமைதி அல்லது சமூக ஒழுங்கை பாதிக்காத வகையில் இருக்கும் எந்தச் செயலும் ஐபிசியின் ‘295 A’ பிரிவின் கீழ் குற்றமாகாது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது,” என்பதை நீதிபதி நாகபிரசன்னா கூறியுள்ளார்.

சட்டப்பிரிவு 505-ஐ குறிப்பிட்டு, இந்தச் சம்பவத்தில் பொதுமக்களுக்கு இடையூறு அல்லது அவர்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்தியதாக எந்த குற்றச்சாட்டும் இல்லை என்றும் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

“பிரிவு 506-இன் கீழ் மிரட்டல் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. ஆனால் புகார்தாரரே குற்றம்சாட்டப்பட்டு இருக்கும் நபர்கள் மிரட்டுவதை நேரில் பார்க்கவில்லை என்று புகாரிலேயே எழுதப்பட்டிருக்கிறது,” என்று உயர் நீதிமன்றம் குறிப்பிட்டது.

நீதிபதி நாகபிரசன்னா, “இந்தப் புகார் ஐ.பி.சி பிரிவு 503 அல்லது பிரிவு 447 இன் கீழ் குற்றச் செயல்கள் நடந்ததற்கான அந்த ஆதாரமும் இல்லை. புகாரில் கூறப்படும் குற்றங்களில் ஏதேனும் ஒரு கூறுகளைக் கண்டறிந்து, இந்த மனுதாரர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு அனுமதிப்பது என்பது சட்டத்தின் செயல்முறையை தவறாகப் பயன்படுத்துவதை குறிக்கும்,” என்றார்.

கர்நாடகா, நீதிமன்றம், முஸ்லிம்கள்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே

தீர்ப்பு விமர்சிக்கப்படுவது ஏன்?

மூத்த வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா வேறு சில கேள்விகளையும் முன்வைக்கிறார்.

அவர் கூறுகையில், “மசூதி என்பது பொது இடம் என்பதால், எந்த நேரத்திலும் அந்த இடத்திற்குள் யார் வேண்டுமானாலும் நுழையாலாம் என்பது தவறு. அதன் பின்னணியில் உள்ள நோக்கத்தைப் பார்க்க வேண்டும். அதேபோல, மசூதிக்குள் நுழைந்தவர்கள் எழுப்பிய கோஷங்கள் மற்றொரு மதத்தினரின் உணர்வுகளைப் புண்படுத்துகிறதா இல்லையா என்பது அவர்களின் நோக்கம் மற்றும் சூழலைப் பொறுத்தது,” என்கிறார்.

ஆச்சார்யா மேலும் கூறுகையில், “எனவே, மசூதி போன்ற மத தலத்திற்குள் நுழைந்து, அங்கு ஜெய் ஸ்ரீராம் என்று கோஷமிடுவது, நிச்சயமாக அந்தச் சமூகத்தின் உணர்வுகளைப் புண்படுத்தும் நோக்கத்தை மட்டும் பிரதிபலிக்கிறது. தார்மீக ரீதியா இந்த தீர்ப்பு சரி என்று கருதப்பட்டால் அது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும்,” என்றார்.

சஞ்சய் ஹெக்டே குறிப்பிட்டதைப் போலவே, ஒவ்வொரு வழக்கிலும் அடிப்படை உண்மைகள் வேறுபடும். எனவே வேறு வழக்கோடு இதனை ஒப்பிட முடியாது என்று ஆச்சார்யா கூறினார்.

“எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த விவகாரத்தில் ஒரு முழுமையான விசாரணை தேவைப்படுகிறது. முழு உண்மைகளும் நீதிமன்றத்தின் முன் சமர்பிக்கப் படவில்லை. எஃப்.ஐ.ஆர் அடிப்படையில் மட்டும் இந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய முடியாது. இந்த வழக்கில் தீங்கிழைக்கும் நோக்கம் இருப்பதாகத் தெரிகிறது. இந்த வழக்கை மேலும் விசாரிக்க முன்னரே நீதிமன்றம் அனுமதி அளித்திருக்க வேண்டும்,” என்றார்.

மேற்கொண்டு விசாரணைக்கு அனுமதி வழங்கப்படாதது ஏன்?

முன்னாள் அரசு வழக்கறிஞர் பி.டி.வெங்கடேஷ், “ஜெய் ஸ்ரீ ராம் என்று முழக்கமிட்டதைத் தவிர, புகார்தாரர் மனுவில் பல விஷயங்களைக் குறிப்பிட்டுள்ளதால், இவ்வழக்கில் விரிவான விசாரணை அவசியம்,” என்று கூறினார்.

சம்பவம் நடந்த கடபா பகுதிக்குட்பட்ட காவல் நிலையத்தில் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே உள்ள நல்லிணக்கத்தைப் புகாரில் குறிப்பிட்டுள்ளதாக வெங்கடேஷ் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், “இந்தப் புகாரில் இந்துக்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாக வாழும் சூழ்நிலைகள் குறித்து புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. டஸ்டர் கார் மற்றும் இரண்டு இரு சக்கர வாகனங்களில் சென்றவர்கள் சந்தேகிக்கும் வகையில் மசூதியை சுற்றி வந்ததாக புகாரில் கூறப்பட்டுள்ளது.

“இதைத் தொடர்ந்து ‘ஜெய் ஸ்ரீ ராம்’ கோஷங்கள் எழுப்பப்பட்டுள்ளன. பின்னர் கோஷங்கள் மூலம், ‘பெரி’ என்னும் சமூகத்திற்கு எதிராக அச்சுறுத்தும் வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது,” என்றார்.

வெங்கடேஷ் கூறுகையில், “பெரி சமூகம் என்பது கர்நாடகாவின் கடலோரப் பகுதிகளில் வாழும் முஸ்லிம் சமூகத்தின் ஒரு பிரிவாகும். அன்று மசூதிக்குள் வந்தவர்கள் பெரி முஸ்லிம் சமூகத்தை குறிப்பிட்டு ‘அவர்களை விட மாட்டோம்’ என்று மிரட்டல் விடுத்துள்ளனர்.

“அத்துமீறி நுழைதல் மற்றும் கோஷமிடுதல் ஆகிய குற்றங்களைத் தவிர, இது தெளிவாக மிரட்டல் குற்றச்சாட்டையும் உள்ளடக்கிய சம்பவம். இந்திய தண்டனைச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் தண்டனைக்குரிய குற்றம். இது திட்டமிட்ட செயல். தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்ற நீதிபதி சூழலை கருதாமல் தீர்ப்பு வழங்கி இருக்கிறார். ஒரு பெரிய தவறு செய்துவிட்டார்,” என்று குறிப்பிட்டார்.

சமூக ஊடகங்களில் தனது கருத்தை வெளிப்படுத்திய உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பிரிஜேஷ் கலப்பா , “எனவே இந்த தீர்ப்பு படி, ஒரு மசூதிக்குச் சென்று ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று முழக்கங்களை எழுப்புவதில் தவறில்லை. அப்படியெனில், ஒரு முஸ்லிம் கோயிலுக்குள் நுழைந்து ‘அல்லா ஹூ அக்பர்’ என்று கோஷமிடலாமா? நியாயத்தைச் சொல்லும் அதிகாரத்தை நீதிமன்றம் இழந்துவிட்டதா?” என்று பதிவிட்டார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு