வயநாடு: நிலச்சரிவில் பலியான குடும்பம் – மீண்டு வர முயலும் ஸ்ருதியின் தற்போதைய நிலை

வயநாடு: நிலச்சரிவில் பலியான குடும்பம் – மீண்டு வர முயலும் ஸ்ருதியின் தற்போதைய நிலை

ஸ்ருதி, கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சூரல்மலையைச் சேர்ந்த 24 வயது இளம்பெண். கடந்த ஜூலை 30 ஆம் தேதியன்று நடந்த நிலச்சரிவில், ஸ்ருதியின் தாய் சிவண்ணா, தந்தை சபிதா மற்றும் தங்கை ஸ்ரேயா ஆகியோர் உயிரிழந்து விட்டனர். கோழிக்கோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்ததால், இந்த இயற்கைப் பேரிடரிலிருந்து உயிர் தப்பியிருக்கிறார்.

ஜென்சன் என்ற இளைஞரைக் காதலித்துள்ளார் ஸ்ருதி. வெவ்வேறு மதமாக இருந்தபோதிலும், இரு வீட்டாரும் சம்மதித்து, வரும் டிசம்பரில் திருமணம் செய்வதாக முடிவு செய்து, அதற்கான நிச்சயதார்த்த நிகழ்வும் வெகு விமரிசையாக நடந்துள்ளது. ஸ்ருதியின் குடும்பத்தில், அவருடைய தாய், தந்தை, தங்கை மட்டுமின்றி, பெரியப்பா, பெரியம்மா, சித்தப்பா, சித்தி மற்றும் அவர்களின் இரு பேரன்கள் என மொத்தம் ஒன்பது பேர், நிலச்சரிவில் மரணமடைந்துள்ளனர்.

இவர்களுக்கு 40-வது நாளில் காரியம் செய்வதற்காக, ஸ்ருதி மற்றும் அவருடைய தந்தையின் தாய் மாதேவி மற்றும் அவருடைய அண்ணன், தம்பி, தங்கை குடும்பத்தினர் என ஒன்பது பேர், ஒரு மாருதி ஆம்னி வேனில் பயணம் செய்திருக்கின்றனர். அதே வேனில் ஜென்சனும் வந்திருக்கிறார். அப்போது நடந்த விபத்தில் ஜென்சன் உயிரிழந்துவிட, ஸ்ருதியின் இடது காலில் பலத்த காயம் ஏற்ப்டடிருக்கிறது. அவருடைய பாட்டிக்கும் கை உடைந்துள்ளது. மற்றவர்களும் காயம் அடைந்துள்ளனர்.

ஏற்கெனவே குடும்ப உறவுகளை இழந்திருந்த ஸ்ருதிக்கு, புதிய உறவாகக் கிடைத்த தன் காதலனுடன் திருமண வாழ்வில் புதிய வாழ்க்கையைத் துவங்கலாம் என்ற கனவு இருந்திருக்கலாம். அந்தக் கனவும் விபத்தில் நொறுங்கிப் போனது. இப்போது ஸ்ருதியும், அவருடைய பாட்டியும், தந்தை வழி சகோதரன், ஒரு சகோதரி குடும்பத்தினர் என பலரும் கல்பெட்டாவிலுள்ள அம்பலேரி என்ற பகுதியில் ஒரே வீட்டில் வாடகைக்கு குடியிருக்கின்றனர். தன்னுடைய மூன்று மகன்களையும், மூன்று மருமகள்களையும், இரண்டு பேரன்கள் மற்றும் ஒரு பேத்தியையும் இழந்து விட்ட 73 வயது பாட்டி மாதேவிதான் இப்போது ஸ்ருதிக்கு அருகில் இருக்கிறார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு