தமிழ்நாடு: புயல், மழை தொடர்பாக அவசியம் அறிய வேண்டிய முக்கிய அறிவியல் சொற்கள்
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் அதிகனமழை எச்சரிக்கை இந்த வாரத் தொடக்கத்தில் இருந்தே வானிலை ஆய்வு மையத்தால் வழங்கப்பட்டு வந்தது.
ஒவ்வொரு முறையும் மழை குறித்த எச்சரிக்கைகளை வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கும்போது, அதற்காக, மழைப்பொழிவு, புயல் எச்சரிக்கை, ரெட், ஆரஞ்சு அலர்ட், பருவமழை எனப் பல அறிவியல் சொற்களைப் பயன்படுத்துவார்கள்.
இத்தகைய சொற்களின் பொருள் என்ன, அவை குறிக்கும் வானிலை முன்னறிவிப்புகள் என்ன என்ற சந்தேகம் நம்மில் பலருக்கும் இருக்கும். இந்தக் கட்டுரை, இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள கலைச் சொற்களின் தொகுப்பு மற்றும் அதன் இணையதளத்தில் அளிக்கப்பட்டுள்ள விளக்கங்களின் அடிப்படையில், அந்தச் சந்தேகங்களைத் தெளிவுபடுத்த முயல்கிறது.
பருவமழை (Monsoon Rain) என்றால் என்ன?
காற்றின் திசையில் ஏற்படும் பருவகால மாற்றத்தின் விளைவாக நிகழும் மழைப்பொழிவே பருவமழை எனப்படுகிறது. பருவ மழைக்காலம், வருடாந்திர மழைப்பொழிவில் பெரும் பங்கை வகிக்கிறது.
பருவமழை என்பது பெரும்பாலும் இந்தியப் பெருங்கடலுடன் தொடர்புடையது என்றாலும், அவை அமெரிக்காவின் பல பகுதிகள் உட்பட பல வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டலப் பகுதிகளிலும் நிகழும்.
உதாரணத்திற்கு, தாய்லாந்தில் மே முதல் அக்டோபர் வரை, மாலத்தீவு, வியட்நாமில் மே முதல் டிசம்பர் வரை, வடக்கு பிரேசிலில் டிசம்பர் முதல் மார்ச் வரை, வடக்கு ஆஸ்திரேலியாவில் டிசம்பர் முதல் மார்ச் வரை பருவமழை பெய்கிறது.
தமிழ்நாட்டைப் பொருத்தவரை, ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்குப் பருவமழையும், அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்குப் பருவமழையும் பெய்கிறது.
காற்றழுத்தம் (Depression) என்றால் என்ன?
காற்றழுத்தம் என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியில், அதைச் சுற்றியுள்ள பகுதிகளைவிட காற்றின் அழுத்தம் குறைவாக இருக்கும் ஒரு வானிலை அமைப்பு. இந்தக் குறைந்த காற்றழுத்தம் உள்ள பகுதியில் காற்று மேல்நோக்கி உயர்வதால், மேகங்கள் உருவாகி அடிக்கடி மழை பொழியும்.
காற்றழுத்தத் தாழ்வுநிலையில், குறைந்த அழுத்தம் காரணமாக காற்று மேல்நோக்கி உயர வழிவகுக்கிறது. இதன் விளைவாக, மேகங்கள் உருவாகின்றன, அவை மழைப்பொழிவைத் தருகின்றன. இது, லேசான மழை முதல் அதிகனமழை வரை கொண்டு வரக்கூடும்.
உதாரணமாக, வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுநிலை உருவாகும்போது, அது கடலில் இருந்து ஈரமான காற்றை இழுத்துக்கொள்ளும். அந்த ஈரக்காற்று மேகங்கள் உருவாக வழிவகுக்கிறது. அதன் விளைவாக கனமழை பெய்கிறது.
புயல் (Cyclone) என்றால் என்ன?
காற்றழுத்தம் தீவிரமடையும்போது, சூழல் ஏதுவாக இருப்பின், அது வெப்பமண்டல புயலாக உருப்பெறக்கூடும். இதற்கு 2016ஆம் ஆண்டின் வர்தா புயலை உதாரணமாகக் கூறலாம்.
புயல், பொதுவாக கண் (Eye) எனப்படும் ஓர் அமைதியான மையப்பகுதியைக் கொண்டிருக்கும். இங்கு தெளிவான வானமும் லேசான காற்றும் இருக்கும். புயலின் மற்ற பகுதிகளுடன் ஒப்பிடும்போது, கண் பகுதி மிக அமைதியானதாக இருக்கும். இதன் விட்டம் ஒரு சில கிலோமீட்டர்களில் இருந்து 30 கிலோமீட்டர் வரை இருக்கக்கூடும். 2016ஆம் ஆண்டில் உருவான வர்தா புயலின் விட்டம் சுமார் 30 கி.மீ வரை இருந்ததாக மதிப்பிடப்பட்டது.
புயலின் கண் பகுதியை, பலத்த காற்றும் கனமழையும் நிறைந்த கண்சுவர் (Eye Wall) சூழ்ந்திருக்கும். இங்கு மிகத் தீவிரமான வானிலை நிலவும். இந்தப் பகுதியில் பலத்த காற்று, இடியுடன் கூடிய கனமழை இருக்கும். இது பெரும்பாலும் புயலின் மிகவும் ஆபத்தான பகுதியாக வரையறுக்கப்படுகிறது.
கண்சுவர் பகுதியின் வெளிப்புறத்தைச் சுற்றி சுழல் மழைப்பட்டைகள் சூழ்ந்திருக்கும். அதன் வெளிப்புறத்தைச் சுழல் மழைப் பட்டைகள் (Spiral Rainbands) சூழ்ந்திருக்கும். இங்கு லேசான முதல் மிதமான அளவுக்கு மழை பெய்யலாம். இங்கு புயலின் தீவிரம், கண்சுவரைவிடக் குறைவாகவே இருக்கும்.
மழைப்பொழிவு குறித்த வானிலை முன்னறிவிப்பு சொற்கள்
- ஈர்ப்பதம் (Humidity): ஈரப்பதம் என்பது காற்றிலுள்ள நீராவியின் அளவைக் குறிக்கிறது.
- வெப்பநிலை (Temperature): காற்று எவ்வளவு சூடாக அல்லது குளிர்ச்சியாக உள்ளது என்பதை வெப்பநிலை குறிக்கிறது.
- மழைப்பொழிவு (Rainfall): ஒரு குறிப்பிட்ட பகுதியில், ஒரு குறிப்பிட்ட கால அளவில் பதிவாகும் மழையின் அளவு.
- மேகமூட்டம் (Cloud Cover): மழை மேகங்கள் சூழ்ந்த வான் பகுதியைக் குறிக்கப் பயன்படுகிறது.
- காற்றின் திசை மற்றும் வேகம் (Wind Speed and Direction): காற்று எவ்வளவு வேகமாக வீசுகிறது, எந்தத் திசையில் வீசுகிறது என்பதைக் குறிக்கிறது. தமிழ்நாட்டில் புயல்களின்போது, காற்றின் திசையும் வேகமும் முக்கியத்துவம் பெறுகின்றன. குறிப்பாக, கடலோரப் பகுதிகளில் புயலின் தாக்கத்தைத் தீர்மானிக்க உதவுகின்றன.
- இடியுடன் கூடிய மழை (Thunderstorms): இது குறுகிய கால, ஆனால் தீவிரமாக நிகழும் வானிலை நிகழ்வு. இதன்போது இடி, மின்னலுடன் கூடிய கனமழை இருக்கும்.
- ஒட்டுமொத்த மழைப்பொழிவு (Cumulative Rainfall): ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் பெய்யும் மழையின் மொத்த அளவைக் குறிக்கிறது. ஒரு பருவமழைக் காலத்தில், தமிழ்நாட்டில் எவ்வளவு மழை பொழிந்தது என்பதைக் குறிக்க இந்தப் பதம் பயன்படுத்தப்படுகிறது.
புயல் எச்சரிக்கை தொடர்பான சொற்கள் என்ன?
- பலத்த காற்று (Squall): காற்றின் வேகம் நிமிடத்திற்குக் குறைந்தபட்சம் 16 முதல் 22 நாட்ஸ் வரை அதிகமாக இருக்கும் சூழ்நிலை.
- வெப்பமண்டலப் புயல் (Tropical Storm): வெப்பமண்டல புயல் என்பது மணிக்கு 62 முதல் 118 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடிய ஒரு வானிலை நிகழ்வு. இது சூடான கடல் நீரில் உருவாகிறது. இது அதிக மழையை உருவாக்கக்கூடியது. அதேவேளையில் தீவிர புயல்களாக வலுப்பெறுவதற்கு முன்பாக இது உருவாகக்கூடும்.
- புயல் சுழற்சி (Cyclonic Circulation): புயல் சுழற்சி என்பது குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலையில் இருக்கும் காற்றின் சுழற்சியைக் குறிக்கிறது. இந்தக் காற்று சுழற்சி, வடக்கு அரைக்கோளத்தில் எதிர்கடிகார திசையிலும், தெற்கு அரைக்கோளத்தில் கடிகார திசையிலும் இருக்கும்.
- கடலில் இருந்து நிலம் நோக்கி நகரும் புயல் குறித்த எச்சரிக்கை (Landfall warning): கடலில் உருவாகும் புயல், நிலப்பகுதியை நோக்கி நகர்ந்து வருவதை இது குறிக்கிறது. இதன்போது, கடுமையான வானிலை நிலவும். பலத்த காற்றும், கனமழையும் இருக்கும் என்பதால், வெள்ள அபாயங்கள் அதிகமாகவே முன்கணிக்கப்பட்டு, எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
- புயலின் முன்கணிக்கப்பட்ட பாதை (Forecast Track): அதாவது ஒரு புயலின் நகர்வைக் கணித்து, அது எந்தப் பகுதிகளைக் கடந்து வரும், எங்கு கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படும் தோராயமான பாதையே புயலின் முன்கணிக்கப்பட்ட பாதை எனப்படுகிறது. இது புயல் எங்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைக் கணித்து, அதற்கேற்ப தயார்நிலையைக் கொண்டுவர உதவுகிறது.
- மழை எச்சரிக்கை அமைப்பு: மழை அளவுகள் மற்றும் வெள்ள அபாயம் குறித்துக் கண்காணித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை வழங்க மழை எச்சரிக்கை அமைப்பு உதவுகிறது.
- மஞ்சள் எச்சரிக்கை (Yellow Alert): அபாயங்களை விளைவிக்கக்கூடிய நிலைமை உடனடியாக இல்லையென்றாலும், கடுமையான வானிலைக்கு வழிவகுக்கும் நிலைமைகள் உருவாகி வருவதை மஞ்சள் எச்சரிக்கை உணர்த்துகிறது. தோராயமாக, 6 செ.மீ முதல் 11 செ.மீ வரை மழை பதிவாகும் நிலை இருந்தால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்படும்.
- ஆரஞ்சு எச்சரிக்கை (Orange Alert): குறிப்பிடத்தக்க இடையூறுகள், ஆபத்துகளை ஏற்படுத்தக்கூடிய கடுமையான வானிலை நிலவும் என்று எச்சரிக்கிறது. சாத்தியமான பாதிப்புகளுக்குத் தயாராகவும், வானிலை நிலவரம் குறித்துத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டிய அவசியத்தை உணரவும் இதுவோர் எச்சரிக்கையாகச் செயல்படுகிறது. மழை அளவு 11 முதல் 20 செ.மீ வரை பெய்யும் எனக் கணிக்கப்பட்டால், ஆரஞ்சு எச்சரிக்கை வழங்கப்படுகிறது.
- சிவப்பு எச்சரிக்கை (Red Alert): தீவிர வானிலை நிலைமைகள் விரைவில் நிகழப் போகிறது என்பதைக் குறிக்க சிவப்பு எச்சரிக்கை பயன்படுத்தப்படுகிறது. சிவப்பு எச்சரிக்கை என்னும்போது உயிர் மற்றும் உடைமைகளுக்குக் கடுமையான பாதிப்புகள் ஏற்படக்கூடிய ஆபத்து இருப்பதாகப் பொருள். மக்கள் உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும், அவசரகால அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும் இதன்போது அறிவுறுத்தப்படுகிறார்கள். 20 செ.மீ.க்கு மேற்பட்ட அளவில் அதிகனமழை பெய்யும் எனக் கணிக்கப்பட்டால், சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
வானிலை முன்னிறிவிப்பில் பயன்படுத்தும் பொதுவான சொற்கள் யாவை?
- மிக லேசான மழை மற்றும் லேசான மழை: 2.4மி.மீ வரையிலான மழைப்பொழிவு மிக லேசான மழை எனவும், 2.5 முதல் 15.5 மி.மீ வரையிலான மழைப்பொழிவு லேசான மழை எனவும் அழைக்கப்படுகிறது.
- மிதமான மழை: 15.6 முதல் 64.4 மில்லிமீட்டர் வரையிலான மழைப்பொழிவு மிதமான மழை என்றழைக்கப்படுகிறது.
- கனமழை மற்றும் மிகக் கனமழை: 7 செ.மீ முதல் 11 சென்டிமீட்டர் வரையிலான மழைப்பொழிவு கனமழை என்றும் 12 முதல் 20 செ.மீ வரையிலான மழைப்பொழிவு அதி கனமழை எனவும் குறிப்பிடப்படுகிறது.
- அதி கனமழை: 21 செ.மீட்டருக்கும் அதிகமான மழைப்பொழிவு
- இயல்புக்கு மாறான மழை: ஒரு மாதத்தில் அல்லது ஒரு பருவகாலத்தில் ஓரிடத்தில் இதுவரை பெய்த அதிக அளவு மழையை மீறும் அளவுக்கு மழைப்பொழிவு பதிவானால் இயல்புக்கு மாறான மழை எனப்படுகிறது. ஆனால், மழைப்பொழிவு குறைந்தபட்சம் 12 செ.மீ இருந்தால் மட்டுமே இதன்கீழ் வரையறுக்கப்படும்.
- மேகவெடிப்புப் பெருமழை: மணிக்கு 10 செ.மீட்டருக்கு மேல் மழை கொட்டித் தீர்ப்பது.
- ஆலங்கட்டி மழை: ஆலங்கட்டி மழை என்பது வளிமண்டலத்தில் இருந்து பனித் துகள்கள் விழக்கூடிய வானிலை நிகழ்வு. இது பெரும்பாலும் இடியுடன் கூடிய மழையின்போது ஏற்படும். வட இந்தியாவுடன் ஒப்பிடுகையில், தமிழ்நாட்டில் ஆலங்கட்டி மழை பெய்யும் விகிதம் குறைவுதான். இருப்பினும் சமீபத்திய ஆண்டுகளில், பருவமழைக்கு முந்தைய காலத்திலோ அல்லது பருவமழைக் காலங்களிலோ ஆலங்கட்டி மழை பெய்வது அதிகம் பதிவாகியுள்ளது.
இவைபோக, 24 மணிநேரத்தில் இரு மழைப்பொழிவுகளுக்கு மேற்பட்டு, ஆனால் இடையிடையே முற்றிலும் மழை இல்லாமலும் இருக்கக்கூடிய சரமழை (shower), 24 மணிநேரத்தில் இரு மழைப்பொழிவுகளுக்கு மேற்பட்டும் ஆனால் விட்டு விட்டுப் பெய்யக்கூடிய விட்டு விட்டு மழை (intermittent rain), 24 மணிநேரமும் தொடர்ந்து பெய்துகொண்டிருக்கும் தொடர் மழை (continuous rain) ஆகியவை வானிலை முன்னறிவிப்பில் பொதுவாகப் பயன்படுத்தக்கூடிய கலைச்சொற்களாக உள்ளன.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு