இந்தியா vs நியூசிலாந்து டெஸ்ட் போட்டி: 46 ரன்களில் சுருண்ட இந்திய அணி
பெங்களூருவில் இன்று தொடங்கிய நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் அந்த அணியின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 46 ரன்களில் சுருண்டது.
முதல் இன்னிங்ஸில் 31.2 ஓவர்கள் மட்டுமே பேட் செய்த இந்திய அணி 46 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது, சராசரியாக 1.46 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இந்திய அணியில் விராட் கோலி, சர்ஃப்ராஸ் கான், ரவிச்சந்திர அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, கே.எல்.ராகுல் ஆகியோர் டக்அவுட்டில் ஆட்டமிழந்தனர்.
உள்நாட்டில் குறைந்தபட்சம்
உள்நாட்டில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சேர்த்த மிகக் குறைந்தபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன் உள்நாட்டில் கடந்த 1987-ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய 75 ரன்களுக்கு சுருண்டிருந்ததே குறைந்தபட்ச ஸ்கோராக இருந்தது. அதைவிட குறைவான ரன்னில் இன்று இந்திய அணி ஆட்டமிழந்தது.
ஒட்டுமொத்தத்தில் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் 3வது குறைந்தபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன் 2020-ஆம் ஆண்டு அடிலெய்டில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 36 ரன்களிலும், 1974-ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக 42 ரன்களிலும் இந்திய அணி ஆட்டமிழந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சுப்மான் கில் கழுத்துவலி காரணமாக இந்த டெஸ்ட் போட்டியில் விளையாடாததால், கடந்த 8 ஆண்டுகளுக்குப்பின் 2016-ஆம் ஆண்டுக்குப்பின் டெஸ்ட் போட்டியில் 3-வது வரிசையில் விராட் கோலி பேட் செய்ய இன்று (அக்டோபர் 17) களமிறங்கினார். ஆனால், 9 பந்துகளைச் சந்தித்த கோலி, ரூர்கே பந்துவீச்சில் டக்அவுட்டில் ஆட்டமிழந்தார்.
இந்திய அணியில் ரிஷப் பந்த் சேர்த்த 20 ரன்கள்தான் ஒரு பேட்ஸ்மேன் சேர்த்த அதிகபட்ச ஸ்கோராகும். அடுத்தார்போல் ஜெய்ஸ்வால் 13 ரன்கள் சேர்த்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில், டக்அவுட்டிலும் ஆட்டமிழந்தனர்.
3 வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டும்தான்
நியூசிலாந்து தரப்பில் 3 வேகப்பந்துவீச்சாளர்கள் மட்டுமே பந்துவீசினர். இதில் மேட் ஹென்றி 13.2 ஓவர்கள் வீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். குல்தீப் யாதவ் விக்கெட்டை வீழ்த்தியபோது அவர் டெஸ்ட் போட்டியில் அவரது 100-வது விக்கெட்டை எடுத்தார்.
இந்திய அணிக்கு எதிராக முதல் டெஸ்டில் விளையாடிய வில்லியம் ரூர்கே 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
அதிகபட்சம் 20 ரன்கள்தான்
இந்திய அணியில் டாப்-4 பேட்டர்களில் அதிகபட்சமாக சேர்க்கப்பட்டதே ரோஹித் சர்மா சேர்த்த 13 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியின் முதல்இன்னிங்ஸ் நண்பகல் உணவு இடைவேளை முடிந்த அடுத்த தேநீர் இடைவேளைக்குள் முடிந்துவிட்டது.
2-வது செஷனில் மின்னல் வேகத்தில் பந்துவீச்சில் மிரட்டிய நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் 12 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் ஆட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்தனர்.
பெங்களூருவில் நேற்று (அக்டோபர் 16) தொடங்க இருந்த டெஸ்ட் போட்டி மழையால் முதல் நாள் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து 2-வது நாளான இன்று டெஸ்ட் போட்டி தொடங்கியது.
டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங் செய்யத் தீர்மானித்தார்.
விக்கெட்டை கணிக்கத் தவறினாரா ரோஹித்
பெங்களூருவில் கடந்த சில நாட்களாகப் பெய்த மழையாலும், காலநிலையில் இருந்த குளிர்ந்த நிலையாலும் வேகப்பந்துவீச்சுக்கு நன்றாகவே பிட்ச் சாதகமாக இருந்தது. இதைப் பயன்படுத்திய நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர்கள் முதல் செஷனில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியா அணையை பெரிய நெருக்கடிக்குள் தள்ளினர்.
முதல் ஓவரில் இருந்தே நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர்கள் எதிர்பார்த்ததைவிட பந்து நன்றாக ஸ்விங் ஆகியது. தொடக்கத்தில் 2 ஸ்லிப் பீல்டர்களை வைத்திருந்த நியூசிலாந்து அணி, வேகப்பந்துவீச்சுக்கு பிட்ச் ஒத்துழைப்பதைப் பார்த்து 3-வது ஸ்லிப்பை அமைத்தனர்.
பெங்களூரு ஆடுகளம் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு நன்கு ஒத்துழைக்கக்கூடியது என்று முன்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இன்றைய ஆட்டத்தில் நியூசிலாந்து அணியில் ஒரு சுழற்பந்துவீச்சாளர்கள்கூட பந்துவீசவில்லை.
3 வேகப்பந்துவீச்சாளர்கள் சேர்ந்து இந்திய அணியின் முதல் இன்னிங்ஸை முடித்துவிட்டனர். காலநிலையை கணித்த நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் 3 வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கினார்.
ஆனால், இந்திய அணியோ பும்ரா, சிராஜ் ஆகிய இரு வேகப்பந்துவீச்சாளர்களுடனும், 3 சுழற்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கியது.
34 ரன்களுக்குள் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து அடுத்து எந்தவகையான உத்தியைக் கையாள்வது என்று தவித்தது. ஆனால் 2-வது செஷன் உணவு இடைவேளைக்குப்பின் தொடங்கியதும், 12 ரன்கள் மட்டுமே எடுத்து மீதமிருந்த 4 விக்கெட்டுகளையும் இழந்து இந்திய அணி ஆட்டமிழந்தது.
குறிப்பாக மேட் ஹென்றி வீசிய 24-வது ஓவரில் அடுத்தடுத்து ஜடேஜா, அஸ்வின் ஆட்டமிழந்தனர், அடுத்து ஹென்றி வீசிய 25-வது ஓவரில் ரிஷப் பந்த் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து விக்கெட்டைப் பறிகொடுத்தார்.
இந்திய அணி தடுமாற்றம்
நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள தயாராகி வரவில்லை என்பது தொடக்கத்திலேயே ரோஹித் சர்மா, ஜெய்ஸ்வால் பேட்டிங்கில் தெரிந்தது. இருவரும் நியூசிலாந்து பந்துவீச்சைச் சமாளித்து ரன்களைச் சேர்க்க தடுமாறினர், பதிலடி கொடுக்க இருவரும் முயன்றும் இயலவில்லை.
டிம் சவுதி வீசிய 7-வது ஓவரில் ரோஹித் சர்மா 2 ரன்களில் க்ளீன் போல்டாகி ஆட்டமிழந்தார். ஏற்கெனவே ஹென்றி பந்துவீச்சில் கால்காப்பில் ரோஹித் சர்மா வாங்கினார், ஆனால், அதற்கு நடுவர் அவுட் வழங்கவில்லை. அடுத்த வாய்ப்பில் சவுதியிடம் விக்கெட்டை ரோஹித் இழந்தார்.
தோனியின் சாதனையை முறியடித்த கோலி
தோனியின் சர்வதேச சாதனையையும் கோலி இந்த ஆட்டத்தில் முறியடித்தார். தோனி 535 சர்வதேச போட்டிகளில் களமிறங்கி இருந்தநிலையில், கோலி தனது 536-வது சர்வதேச போட்டியில் இன்று விளையாடி தோனியின் சாதனையை முறியடித்தார்.
இதன் மூலம் அதிகமான போட்டிகளில் சச்சினுக்கு அடுத்தார்போல் ஆடிய வீரர் என்ற பெருமையை கோலி பெற்றார்.
விக்கெட் சரிவு
அடுத்ததாக களமிறங்கிய சர்ஃப்ராஸ் கான் 3 பந்துகளைச் சந்தித்த நிலையில் ஹென்றி பந்துவீச்சில் கான்வேயிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். உள்நாட்டுப் போட்டிகளில் இதுவரை 4வது இடத்தில் களமிறங்கிப் பழகாத சர்ஃப்ராஸ் கான் சர்வதேச போட்டியில் களமிறங்கினார்.
12.4 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் திடீரென மழை குறுக்கிடவே ஆட்டம் சற்றுநேரம் நிறுத்தப்பட்டு பின்னர் தொடங்கியது. இந்த இடைவெளியே நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் நன்கு பயன்படுத்திக் கொண்டு, அடுத்தக் கட்ட தாக்குதலுக்கு தயாராகினர்.
சிறிய இடைவெளிக்குப்பின் ஆட்டம் தொடங்கியபின், இந்திய அணி சார்பில் ஜெய்ஸ்வால் முதல் பவுண்டரியை அடித்தார். ஆனால் ஜெய்ஸ்வால் நீண்டநேரம் நிலைக்கவில்லை 13 ரன்னில் ரூர்கே பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
உணவு இடைவேளைக்குச் செல்லும் முன்பாக ரூர்கே பந்துவீச்சில் கே.எல்.ராகுல் விக்கெட் கீப்பர் பிளன்டெலிடம் கேட்ச் கொடுத்து டக்அவுட்டில் ஆட்டமிழந்தார்.
உணவு இடைவேளை முடிந்து இந்திய அணி வந்தபின் அடுத்த 12 ரன்களுக்குள் மீதமிருந்த 4 விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.