இந்தியா ‘பெரும் தவறு செய்துவிட்டது’ என்று கூறிய ட்ரூடோ – இந்திய அரசின் பதில் என்ன?

இந்தியா - கனடா பதற்றம்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறிய கனடா பிரதமர், அதற்கான ஆதாரம் இல்லை எனக் கூறியுள்ளார்

காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அது இந்தியாவின் ‘மிகப்பெரிய தவறு’ என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். அந்தத் தவற்றை கனடாவால் கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கனடா மண்ணில் இந்திய எதிர்ப்பாளர்களைக் குறிவைத்து கொலைகள், மிரட்டி பணம் பறித்தல், மற்றும் பிற வன்முறைச் செயல்களில் இந்தியா ஈடுபட்டதாகக் கனடா அதிகாரிகள் குற்றம் சாட்டிய இரண்டு நாட்களுக்குப் பிறகு ட்ரூடோ இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.

கனடாவின் இந்தக் குற்றச்சாட்டுகள் ‘அபாண்டமானவை’ என்று கூறியிருக்கும் இந்தியா, அவற்றை நிராகரித்திருக்கிறது. அரசியல் ஆதாயத்திற்காகக் கனடாவின் சீக்கியச் சமூகத்தை மகிழ்விக்க ட்ரூடோ முயல்வதாக இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.

கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூன் மாதம் கனடா பிரஜையான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டார். அதன் பிறகு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அந்தக் கொலைக்கு இந்தியாதான் காரணம் என்று குற்றம் சாட்டினார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

மேலும், இந்த விவகாரத்தில் வெளிநாட்டு தலையீடு தொடர்பான விசாரணையின்போது கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆஜரானார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நிஜ்ஜார் கொலையில், இந்தியாவின் தலையீடு இருப்பதாகக் கிடைத்த உறுதியான உளவுத் தகவலின் அடிப்படையிலேயே இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்ததாகவும் இதுதொடர்பாக ஆதாரங்கள் எதையும் புலனாய்வு அமைப்பு வழங்கவில்லை,” எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில், தாங்கள் வலியுறுத்தி வரும் கூற்றை ஆமோதிக்கும் வகையில் ட்ரூடோவின் கூற்று இருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.

இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் பதில்

இந்நிலையில் இந்தப் பிரச்னை குறித்து, வியாழக்கிழமை (அக்டோபர் 17) அன்று பேசிய இந்திய வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. அதில், ‘கனடா இந்தியா மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது, ஆனால் அதற்கான ஆதாரங்களை வழங்கவில்லை’ என்று கூறியிருக்கிறது.

இதுகுறித்து இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறும்போது, ​​“இந்தப் பிரச்சினையில் நாங்கள் ஏற்கனவே எங்கள் நிலைப்பாட்டை தெளிவாகக் கூறியுள்ளோம். கடந்த இரண்டு நாட்களாக இது தொடர்பாகப் பல செய்திக்குறிப்புகளை வெளியிட்டுள்ளோம், அதில் எங்களது நிலைப்பாடு தெளிவாக உள்ளது,” என்றார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “கடந்த செப்டம்பர் மாதம் முதல் கனடா அரசு ஒரு சிறு தகவலைக் கூட எங்களுடன் பகிர்ந்து கொள்ளவில்லை. நேற்று நாங்கள் மீண்டும் ஒரு அறிக்கையை வெளியிட்டோம். கனடா கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது, ஆனால் அதற்கு தை ஆதரிக்க எந்த உறுதியான ஆதாரத்தையும் வழங்கவில்லை,” என்றார்.

“எங்கள் இராஜதந்திரிகளுக்கு எதிரான பொய்யான குற்றச்சாட்டுகளை நாங்கள் நிராகரிக்கிறோம்,” என்று அவர் கூறினார்.

‘இந்திய அரசு தவறு செய்துவிட்டது’

இந்தியா - கனடா பதற்றம்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, கனடிய அரசின் குற்றச்சாட்டுகளுக்கு வலு சேர்க்கும் வகையில் கனடா இதுவரை எந்த ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை என இந்தியா தெரிவித்துள்ளது

ஹர்தீப் சிங் நிஜ்ஜார், காலிஸ்தான் பிரிவினைவாத தலைவரான இவரை இந்தியா பயங்கரவாதி என்று அறிவித்துள்ளது. அவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம், பிரிட்டிஷ் கொலம்பியாவில் இருக்கும் சர்ரே பகுதியில், ஒரு வாகன நிறுத்துமிடத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த விவகாரம் குறித்த ஜஸ்டின் ட்ரூடோவின் சமீபத்திய அறிக்கைக்குப் பிறகு, இந்தியா மற்றும் இந்திய தூதர்கள் மீது சுமத்தப்பட்ட கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு வலு சேர்க்கும் வகையில் கனடா இதுவரை எந்த ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்திருந்தது.

நிஜ்ஜாரின் மரணம் இந்தியாவுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுப்பப்பட்டதைத் தொடர்ந்து, நிஜ்ஜார் கொலையை விசாரிக்கப் புலனாய்வு அமைப்புகளைக் கேட்டுக் கொண்டதாக கனடா பிரதமர் தெரிவித்தார்.

ஆனால், “இந்தக் கொலையை உளவுத்துறையினர் ஏற்கெனவே கண்காணித்து வருவதைத் தாம் பின்னர் அறிந்ததாகவும்” கூறினார்.

இந்தியா - கனடா பதற்றம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கனடா பிரதமரின் பேச்சு, “நாங்கள் தொடர்ந்து பேசி வருவதை உறுதிப்படுத்துவதாக” இந்தியா தெரிவித்துள்ளது

இந்த விஷயத்தில் இந்தியா மிகப்பெரிய தவறு செய்துவிட்டதாகக் கூறிய அவர், “கடந்த ஆண்டு கனடா மண்ணில் சீக்கிய பிரிவினைவாதத் தலைவர் கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்தியா இருந்தால், அந்தக் குற்றச்சாட்டை கனடாவால் புறக்கணிக்க முடியாது,” என்றார்.

“நாங்கள் இந்தியாவை தூண்டிவிடவோ அல்லது சண்டையிடவோ நினைக்கவில்லை. அதேவேளையில், கனடாவின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையில் தலையிடலாம் என்று நினைத்து இந்திய அரசு மிகப்பெரிய தவறு செய்துவிட்டது. கனடியர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய நாங்கள் எதிர்வினையாற்ற வேண்டியுள்ளது,” என்று கூறினார்.

ஜஸ்டின் ட்ரூடோவின் பேச்சுக்கு எதிர்வினையாற்றியுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், கனடா பிரதமரின் பேச்சு, “நாங்கள் தொடர்ந்து பேசி வருவதை உறுதிப்படுத்துவதாக” தெரிவித்துள்ளது.

“இந்தியா மற்றும் இந்திய தூதர்கள் மீது சுமத்தப்பட்ட கடுமையான குற்றச்சாட்டுகளை ஆதரிக்க கனடா எந்த ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை. பிரதமர் ட்ரூடோ மட்டுமே இதற்குப் பொறுப்பு. இந்தப் பொறுப்பற்ற செயல் இந்தியா – கனடா உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது,” என்று குறிப்பிட்டுள்ளது.

இந்தியா – கனடா உறவில் விரிசல்

இந்தியா - கனடா பதற்றம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜி20 உச்சிமாநாட்டின்போது பிரதமர் மோதியிடம் இந்தப் பிரச்னையை எழுப்பியதாக ட்ரூடோ கூறினார்

இதனுடன், இந்தியா ஆறு கனடிய தூதரக அதிகாரிகளை நாட்டைவிட்டு வெளியேற்றியது. ஆனால், கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைநகர் ஒட்டாவாவில் செய்தியாளர் சந்திப்பில், தனது அரசு, ஆறு இந்திய தூதர்களை நாட்டைவிட்டு வெளியேற்றியதாகக் கூறினார்.

இதுதவிர, கனடாவின் ராயல் மௌன்ட் போலீசார், திங்களன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில், இந்திய ஏஜென்டுகள் தெற்காசிய வம்சாவளியைச் சேர்ந்தவர்களை, குறிப்பாக காலிஸ்தான் ஆதரவாளர்களை, கனடாவில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவான பிஷ்னோய் குழுவின் உதவியுடன் குறிவைப்பதாகக் கூறியது.

ஜி20 மாநாட்டில் ஜஸ்டின் ட்ரூடோ என்ன செய்தார்?

இந்தியா - கனடா பதற்றம்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, “மோதி இப்பிரச்னை தொடர்பாக தனது வழக்கமான பாணியில் பதிலளித்தார்” என ட்ரூடோ தெரிவித்தார்

இந்தியாவில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டிற்கு முன்னதாக நிஜ்ஜார் கொலை குறித்த விவரங்களைப் பகிரங்கப்படுத்த வேண்டாம் என்று தனது அரசு முடிவு செய்ததாக விசாரணையின்போது ட்ரூடோ தெரிவித்தார்.

“நாங்கள் நினைத்திருந்தால், உச்சிமாநாட்டிற்கு முன்னதாகவே இதைப் பகிரங்கப்படுத்தி, இந்தியாவிற்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் அப்படிச் செய்யவில்லை. இந்தியா எங்களுடன் ஒத்துழைக்க வேண்டும் என்பதற்காக, இதுதொடர்பாக நாங்கள் பின்னால் இருந்து வேலைகளை தொடர்ந்தோம். இதற்கான ஆதாரங்கள் குறித்து இந்தியா எங்களிடம் கேட்டது. உங்களின் (இந்தியா) பாதுகாப்பு முகமைகள் அதுகுறித்து தெரிவிக்கும் என கூறினோம். ” என்று கூறினார்.

மேலும், இந்தியாவில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டின்போது பிரதமர் நரேந்திர மோதியிடம் இந்தப் பிரச்னையை எழுப்பியதாகவும் ஜஸ்டின் ட்ரூடோ கூறினார்.

இதில் இந்தியாவுக்கு தொடர்பிருப்பதைத் தான் அறிந்திருப்பதாக அவரிடம் கூறியதாகவும் அதுகுறித்த தனது கவலையை வெளிப்படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார். “மோதி தனது வழக்கமான பாணியில் பதிலளித்தார். கனடாவில் இந்திய அரசுக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்கள் இருப்பதாகவும் அவர்கள் கைது செய்யப்பட வேண்டுமென்றும் தெரிவித்தார்” என்றும் ஜஸ்டின் ட்ரூடோ குறிப்பிட்டார்.

ஜி20 உச்சிமாநாட்டில் இருந்து நாடு திரும்பிய பிறகு கனடா நாடாளுமன்றத்தில் நிஜ்ஜார் கொலை குறித்த குற்றச்சாட்டுகளைப் பகிரங்கப்படுத்தினார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு