நாட்டில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் சம்பவங்களுக்கு எதிராக உள்ளக பொறிமுறை ஊடாகவே சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மீள் நிகழாமையை உறுதிப்படுத்துவதற்காக தேசிய பொறிமுறைக்கு சர்வதேச மனித உரிமை பொறிமுறையின் ஆலோசனை பெறப்படக்கூடும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் மனித உரிமைகளை பாதுகாப்பதற்காக புதிய ஆட்சியின்கீழ் சாதகமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.தேர்தலுக்கு பின்னர் எவ்வித தேர்தல் வன்முறைச் சம்பவங்களும் பதிவாகவில்லை.
கடந்த காலங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தேசிய பொறிமுறை ஊடாக உரிய தலையீடுகள் மேற்கொள்ளப்படும். ஜெனிவா கூட்டத்தொடரிலும் இது தொடர்பில் எமது நிலைப்பாடு தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் எமது நாட்டு அரசமைப்பு, குற்றவியல் சட்டம் உட்பட ஏனைய சட்டங்களுக்கு அமைய உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதுமட்டுமல்ல எதிர்காலத்தில் அவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் இருப்பதற்குரிய நடவடிக்கையும் எடுக்கப்படும்.
சர்வதேச மனித உரிமை சட்ட திட்டம், பொறிமுறைகளின் உதவிகளும் பெறப்படும். எது எப்படி இருந்தாலும் தேசிய பொறிமுறை ஊடாகவே நடவடிக்கை இடம்பெறுமெனவும் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே தமிழ் மக்களிற்கு 13வது திருத்தம் தேவையில்லையென நேற்றைய தினம் விஜித ஹேரத் தெரிவித்துள்ளமை சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.