எஸ்.சி.ஓ உச்சி மாநாடு: இந்தியாவைவிட சீனாவுக்கு பாகிஸ்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறதா?

இந்தியா, பாகிஸ்தான், சீனா, எஸ்சிஓ உச்சிமாநாடு, காஷ்மீர்

பட மூலாதாரம், @DrSJaishankar

படக்குறிப்பு, பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃபுடன் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்
  • எழுதியவர், ஜுபைர் அகமது
  • பதவி, பிபிசிக்காக

இறுக்கமான முகத்துடன் வணக்கம் வைத்து, அரை மனதுடன் தலையசைத்து, தங்களுக்குப் பிடிக்காத ஒரு செயலைச் செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதைப் போல் இரு நாட்டின் பிரமுகர்கள் விலகி நிற்கிறார்கள்.

கடந்த ஆண்டு கோவாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் எஸ்சிஓ உச்சி மாநாட்டில், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் பாகிஸ்தானின் பிலாவல் பூட்டோ சர்தாரி ஆகியோர் சந்தித்த காட்சியை மேற்கூறியவாறு விவரிக்கலாம்.

முழு சந்திப்பும் ஒரு நிமிடத்திற்கு மேல் நீடிக்கவில்லை. ஆனால் அப்போது எடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ புகைப்படம், அடிக்கடி மோதிக்கொள்ளும் இரண்டு அணுசக்தி அண்டை நாடுகளுக்கு இடையிலான கசப்புணர்வை விவரித்தது. வார்த்தை மோதலும் நடந்தது.

பலதரப்புக் கூட்டங்களில் அடிக்கடி நிகழும் இந்தியா-பாகிஸ்தான் அரசியல் மோதலின் ஓர் உன்னதமான காட்சி அது.

ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வது என 2019ஆம் ஆண்டில் இந்தியா எடுத்த முடிவை விமர்சிக்க இந்தக் கூட்டத்தைப் பயன்படுத்திக் கொண்ட பூட்டோ, ‘பேச்சுவார்த்தைக்கான எந்தவொரு நம்பிக்கையையும் இந்திய அரசு சிதைப்பதாக’ குற்றம் சாட்டினார்.

இதற்கு பதிலடி கொடுத்த ஜெய்சங்கர், பூட்டோவை ‘பயங்கரவாத தொழில்துறையின் செய்தித் தொடர்பாளர்’ என்று அழைத்தார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இந்தியா மற்றும் பாகிஸ்தானின் எஸ்சிஓ உச்சிமாநாட்டு அறிக்கைகள் என்பவை இருநாட்டு அரசுகளுக்கான செய்திகள் மட்டுமல்ல. அந்தந்த உள்நாட்டு மற்றும் சர்வதேச பார்வையாளர்களுக்கும் சில விஷயங்களை புரிய வைப்பதற்காக கவனமாகத் தயாரிக்கப்படுகின்றன.

“இரு நாடுகளுக்கும் அழுத்தம் ஊடகங்களிடம் இருந்து வருவதாக நான் நினைக்கிறேன், அதுவும் அரசியல் விளையாட்டின் ஓர் அங்கமாக மாறியுள்ளது.

அவர்கள் நிமிடத்திற்கு நிமிடம் தகவல்கள் மற்றும் விமர்சனங்களை வழங்குகிறார்கள், அது தலைவர்களுக்கு அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இதுவே ஒரு பெரிய கவலையாக உள்ளது” என்று கூறுகிறார் உலகளாவிய விவகாரங்களின் நிபுணர் (குறிப்பாக தெற்காசியாவில் நிபுணத்துவம்) மற்றும் பாஸ்டன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஆதில் நஜாம்.

ஒரு வருடத்தில், சூழ்நிலைகள் மாறிவிட்டன. இந்த முறை, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டை நடத்துவது பாகிஸ்தான். இந்தியாவின் ஜெய்சங்கர் அங்கு ஒரு விருந்தினர். எல்லோர் மனதிலும் உள்ள கேள்வி இதுதான், நாடகத்தின் இரண்டாவது காட்சி அல்லது மறுபக்கம் நமக்குக் காட்டப்படுமா?

‘அற்புதங்கள் நடக்கும்’

இந்தியா, பாகிஸ்தான், சீனா, எஸ்சிஓ உச்சிமாநாடு, காஷ்மீர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியா, சீனா, ரஷ்யா, இரான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகியவை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் முக்கிய உறுப்பு நாடுகள்.

இந்த உச்சிமாநாட்டிற்கு பாகிஸ்தான் தயாராகிக் கொண்டிருக்கையில், கடந்த ஒன்பது ஆண்டுகளில் முதல்முறையாக, இந்தியாவின் ஒரு உயர்மட்ட அரசியல் பிரமுகர் (எஸ்.ஜெய்சங்கர்) பாகிஸ்தான் சென்றுள்ளார். இதனால், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சாத்தியமான இருதரப்பு பேச்சுவார்த்தை குறித்து இந்திய ஊடகங்கள் பல்வேறு ஊகங்களை வெளியிடத் தொடங்கின.

ஆனால், இரு நாடுகளும் அத்தகைய சந்திப்புக்கான சாத்தியக்கூறுகளை ஏற்கெனவே மறுத்துள்ளன. இருந்தபோதிலும் அது ஊடக பரபரப்பைத் தடுக்கவில்லை. லண்டனில் வாழ்ந்து வரும், பாகிஸ்தான் விவகார நிபுணர், முனைவர் ஆயிஷா சித்தீகா உள்படப் பெரும்பாலான அரசியல் ஆய்வாளர்கள் அத்தகைய சந்திப்பிற்கு சாத்தியமில்லை என்றே கருதுகின்றனர்.

ராஜ்ஜீய நெறிமுறைகளின்படி, விருந்தினர் நாடுதான் இருதரப்பு சந்திப்பைக் கோர வேண்டும் என்றும் இந்தியா அத்தகைய கோரிக்கை எதையும் விடுக்கவில்லை என்பதையும் முனைவர் சித்தீகா சுட்டிக்காட்டினார்.

“விருந்தினர் நாடு இருதரப்பு சந்திப்பைக் கோருவதுதான் நெறிமுறை. இருதரப்பு சந்திப்பை இந்தியா கோரவில்லை. எனவே, அப்படி எதுவும் நடக்காது” என்கிறார் அவர்.

பாகிஸ்தானுக்கான முன்னாள் இந்திய தூதர் சரத் சபர்வால், “அற்புதங்கள் நடக்கும்” என்று கூறுகிறார். ஆனால் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில் இந்திய வெளியுறவு அமைச்சர் கலந்து கொண்டதைத் தவிர, இருதரப்பு பேச்சுவார்த்தைக்கான வேறு எந்தச் சாதகமான சூழ்நிலையும் இருப்பதாக அவர் நம்பவில்லை.

“இந்தியா-பாகிஸ்தான் உறவுகளின் தன்மை என்னவென்றால், அமைச்சர்கள் வருகை நடக்கும் போதெல்லாம் உடனடியாக நிறைய ஊகங்கள் வெளியாகத் தொடங்கிவிடும். ஊடக ஆர்வம் அதிகரிக்கும்” என்று சரத் சபர்வால் கூறினாலும், உச்சிமாநாட்டின்போது நடந்த சில அதிகாரபூர்வமற்ற உரையாடல்களையும் அவர் மறுக்கவில்லை.

“சமீபத்தில் ஐ.நா பொதுச் சபையில் (UNGA- யு.என்.ஜி.ஏ) இந்தியாவும் பாகிஸ்தானும் கடுமையான வார்த்தைப் போரில் ஈடுபட்டன. அப்போது ஷாபாஸ் ஷெரீஃப் ஒரு கடுமையான அறிக்கையை வெளியிட்டார். அதற்கு இந்தியாவின் அமைச்சர் பதிலளித்தார். இதைப் பார்க்கும்போது, (இருதரப்புகளுக்கு இடையிலான) பேச்சுவார்த்தை சாத்தியமற்றதாகத் தெரிகிறது. ஆனால் நான் கூறியது போல் அற்புதங்கள் நடக்கலாம் என்பதையும் நிராகரிக்க முடியாது” என்றார்.

பாகிஸ்தான் குறித்த பல புத்தகங்களை எழுதிய முனைவர் சித்தீகா, ஜெய்சங்கரின் பாகிஸ்தான் வருகையை வரவேற்கிறார். ஆனால் இந்தியாவோ அல்லது பாகிஸ்தானோ இருதரப்பு பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதில் ஆர்வம் காட்டவில்லை என்றும் கூறுகிறார்.

“அரசியல் ரீதியாக இருநாடுகளுக்கும் இது சரியான தருணமல்ல. மகாராஷ்டிரா தேர்தல் போல, இந்தியாவில் சில மாநிலத் தேர்தல்கள் நடக்கவுள்ளன. ஐ.நா.வில் இரு நாடுகளுக்கும் இடையிலான சமீபத்திய மோதலுக்குப் பிறகு, இரு தரப்பினரும் கடுமையான குற்றச்சாட்டுகளை பரிமாறிக் கொண்டனர். இருதரப்பு பேச்சுவார்த்தைக்கான மனநிலையில் பாகிஸ்தான் இல்லை. இந்தியாவும் அப்படித்தான் உள்ளது. நேரம் சரியில்லை” என்று கூறினார் முனைவர் சித்தீகா.

இந்தியா, பாகிஸ்தான், சீனா, எஸ்சிஓ உச்சிமாநாடு, காஷ்மீர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இஸ்லாமாபாத் நகரில், எஸ்சிஓ உச்சி மாநாடு நடக்கும் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள பாகிஸ்தான் ராணுவ வீரர்கள்

மேம்போக்காக மட்டுமல்லாது, ஜெய்சங்கரின் விஜயம் குறித்து நாம் இன்னும் ஆழமாகத் தெரிந்துகொள்ள வேண்டுமா? அவரது வருகை இருதரப்புக்கான இறுக்கத்தைக் குறைக்க வழி உள்ளது என்பதற்கான குறியீடாக இருக்க வேண்டும் என்று பல ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

பாகிஸ்தானில் பரவலாகப் பேசப்படும் மற்றும் மதிக்கப்படும் ஜெய்சங்கரின் இந்த அரிய வருகை, அந்த இறுக்கத்தைக் குறைக்கும் என்று பேராசிரியர் ஆதில் நஜாம் கூறுகிறார்.

“இந்தப் பயணத்தில் எதுவும் வெளிவராது, ஆனால் எல்லாம் சரியாக நடந்தால், இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் விரும்பத்தகாத கருத்துகளைத் தெரிவிப்பதைத் தவிர்த்தால், இருதரப்பு உறவுகளில் முன்னேற்றத்திற்கான ஒரு வாய்ப்பு தோன்றும்.”

பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று முனைவர் சித்தீகா வலியுறுத்துகிறார். “நாடுகள் வெவ்வேறு விளையாட்டுகளை விளையாடலாம். ஒரு நாடு உங்கள் ஆதரவுக் குழுவின் ஒரு பகுதியாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் அதற்காக அந்த நாட்டைப் பொருத்தமற்ற நாடாக மாற்றுவது இன்னும் கடினம். ஒரு நாட்டுடன் நட்புறவு கிடையாது என்று நீங்கள் கருதினாலும்கூட, அதனுடன் ஒரு பேச்சுவார்த்தை நடத்துவது முக்கியம்” என்று அவர் கூறுகிறார்.

ஜெய்சங்கரின் பாகிஸ்தான் பயணத்தின் நோக்கம்

இந்தியா, பாகிஸ்தான், சீனா, எஸ்சிஓ உச்சிமாநாடு, காஷ்மீர்

பட மூலாதாரம், @ForeignOfficePk

படக்குறிப்பு, இந்த பயணத்தில் பாகிஸ்தானுடனான இருதரப்பு உறவுகள் குறித்து விவாதிக்கப் போவதில்லை என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்

இருப்பினும், இந்தியா பின்தங்கிவிடக்கூடாது என்பதை உறுதிப்படுத்தவா அல்லது வெறுமனே கடமைக்காக மட்டுமே ஜெய்சங்கர் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்கிறாரா என்பது நிச்சயமாகத் தெரியவில்லை.

இந்த ஆண்டு மார்ச் வரை பாகிஸ்தானின் தகவல், ஒளிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சராக இருந்த முர்தாசா சோலங்கி, இந்திய வெளியுறவு அமைச்சர் இரண்டு காரணங்களுக்காக உச்சி மாநாட்டில் கலந்து கொண்டதாகக் கூறுகிறார்.

அவரது கூற்றின்படி, முதலாவதாக, “ஜெய்சங்கரின் வருகை, கடந்த ஆண்டு பிலாவல் பூட்டோவின் இந்திய வருகைக்கான பதில்.”

இரண்டாவது காரணம், “இது தனிமைப்படுத்தப்படாமல் இருப்பதற்கான முயற்சி. வங்கதேசம், மாலத்தீவு, இலங்கை மற்றும் சீனா போன்ற பிற அண்டை நாடுகளுடன் அவ்வளவு சுமூகமான உறவுகள் இல்லாத நிலையில், மற்ற எஸ்சிஓ நாடுகளிடம் இருந்து, குறிப்பாக மத்திய ஆசிய நாடுகள் மற்றும் ரஷ்யாவிடம் இருந்து தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்ள இந்தியா விரும்பவில்லை.”

டெல்லியில் உள்ள ஃபோர் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட்டின் சீன விவகாரங்களுக்கான நிபுணர், முனைவர் பைசல் அகமது, இந்தப் பயணத்தின் போது இந்திய வெளியுறவு அமைச்சர் சில முக்கியமான பிரச்னைகளை எழுப்பப் போவதாக நம்புகிறார்.

ஜெய்சங்கரின் வருகை குறித்த அவரது கருத்து இது: “பயங்கரவாதம் தொடர்பான பிரச்னைகளையும், பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்பு, ஜனநாயக மதிப்புகள், உள்கட்டமைப்பு, இணைப்பு மற்றும் காலநிலை மாற்றம் போன்ற பிற முக்கிய எஸ்சிஓ பிராந்திய பிரச்னைகளையும் முன்னிலைப்படுத்தும் வகையில் ஜெய்சங்கரின் பயணம் அமையும் என்று நான் நினைக்கிறேன்.”

பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதில் பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் சீனா மற்றும் ரஷ்யாவால் 2001ஆம் ஆண்டில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உருவாக்கப்பட்டது.

ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா அதில் இணைந்தது, அதுவரை சீனாவின் ஆதிக்கத்தில் இருந்த அந்த அமைப்பிற்கு ஓரளவு எதிர் சமநிலையை வழங்கியது என்று கூறும் முனைவர் பைசல் அகமது, “ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் சீனா மீது ஒரு புவிசார் அரசியல் ஈர்ப்பு உள்ளது. ஆனால் இந்தியாவின் புவிசார் பொருளாதார இருப்பு மத்திய ஆசிய உறுப்பு நாடுகள் மற்றும் இரானால் மிகவும் விரும்பப்படுகிறது” என்கிறார்.

இந்தியா, சீனா, ரஷ்யா, இரான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகியவை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் முக்கிய உறுப்பு நாடுகளாகும்.

இஸ்லாமாபாத்தில் கடுமையான கட்டுப்பாடுகள்

இந்தியா, பாகிஸ்தான், சீனா, எஸ்சிஓ உச்சிமாநாடு, காஷ்மீர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இஸ்லாமாபாத் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 10,000க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினர் பணியில் ஈடுபட்டுள்ளதாககக் கூறப்படுகிறது

அக்டோபர் 15, 16 உச்சிமாநாட்டிற்காக பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ஆனால் சீன குடிமக்களைக் குறிவைத்து கராச்சி உள்பட சில இடங்களில் சமீபத்தில் நடந்த தாக்குதல்களைத் தொடர்ந்து, அந்த நகரத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

நகரத்திற்கு வருகை தரும் பிரமுகர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளில் அதிகாரிகள் எந்த சமரசத்தையும் செய்யவில்லை. இஸ்லாமாபாத் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 10,000க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இம்ரான் கானின் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியிடம் இருந்து, திட்டமிட்ட ஆர்ப்பாட்டங்களுடன் உச்சி மாநாட்டை சீர்குலைப்பதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. ஆனால் உச்சி மாநாட்டிற்கு முன்னதாக அது தனது அறிவிப்புகளைத் திரும்பப் பெற்றது.

ஜெய்சங்கரின் வருகையைவிட சீன பிரதமரின் வருகை முக்கியமானதா?

சீன பிரதமர் லீ சியாங் திங்கள்கிழமை மாலை இஸ்லாமாபாத் சென்றடைந்தார். 11 ஆண்டுகளில் ஒரு சீன பிரதமர் பாகிஸ்தானுக்கு செல்வது இதுவே முதல் முறை, எனவே உச்சிமாநாட்டில் அவர் கலந்து கொள்வது கவனம் பெறுகிறது.

தனது நான்கு நாள் பயணத்தின்போது, பிரதமர் லி சியாங் எஸ்சிஓ அமைப்பின் விவாதங்களில் ஈடுபடுவது மட்டுமின்றி, பாகிஸ்தான் நாட்டிற்குள் சீன சொத்துகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்து பாகிஸ்தானுடன் முக்கியமான பேச்சுவார்த்தைகளையும் நடத்தவுள்ளார்.

இந்தியா, பாகிஸ்தான், சீனா, எஸ்சிஓ உச்சிமாநாடு, காஷ்மீர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கடந்த 11 ஆண்டுகளில் ஒரு சீன பிரதமர் பாகிஸ்தானுக்கு செல்வது இதுவே முதல்முறை

சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் மூலோபாய உறவுகள் வளர்ந்து வரும் நிலையில், இந்த விஜயம் முக்கியத்துவம் வாய்ந்தது. ஜெய்சங்கரின் வருகையைவிட, சீன பிரதமரின் வருகை பாகிஸ்தானுக்கு முக்கியமானது என்று பேராசிரியர் ஆதில் நஜாம் கூறுகிறார்.

“பாகிஸ்தானை பொறுத்தவரை ஜெய்சங்கரின் வருகை அல்ல, எஸ்சிஓ உச்சி மாநாடே அதற்கு ஒரு பிரச்னைதான். அதன் உண்மையான பிரச்னை சீன பிரதமரின் வருகை.”

‘எஸ்சிஓ உச்சிமாநாடு – பாகிஸ்தானுக்கு மிகப் பெரிய சவால்’

பாதுகாப்பு குறித்த கவலைகள் மற்றும் அரசியல் பதற்றம் காரணமாக பாகிஸ்தானில் ஓர் உலகளாவிய உச்சி மாநாடு நடப்பது அரிதானது. மேலும், சமீபத்திய தேர்தல்களில் தில்லுமுல்லு நடந்ததாக இம்ரான் கானின் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டியதால், அந்தத் தேர்தல் குறித்த சந்தேகங்களும் உள்ளன.

ஷாபாஸ் ஷெரீப் அரசாங்கத்தை அதிகாரபூர்வமானது என்று அவர்கள் ஏற்கவில்லை. இந்தப் பின்னணியில், இந்த உச்சிமாநாடு பாகிஸ்தானுக்கும் அதன் தற்போதைய அரசாங்கத்திற்கும் ஒரு பெரிய விஷயமாக மாறுகிறது.

பேராசிரியர் ஆதில் நஜாம் கூறுகையில், “பாதுகாப்பு குறித்த கவலைகள் மற்றும் அரசியல் பதற்றம் ஆகியவை பாகிஸ்தானின் எதார்த்தங்கள். பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்பட்டதாக உணர்வதாக நான் நினைக்கிறேன். இதுபோன்ற உச்சி மாநாடுகளை நடத்துவது பாகிஸ்தானுக்கு மிகவும் முக்கியமானது.

ஏனென்றால் இதுபோன்ற சந்திப்புகள் அரிதானவை. இந்தியா உட்பட சில தரப்புகள் பாகிஸ்தானை ஓரங்கட்டுவதாக ஒரு உணர்வு உள்ளது. பாகிஸ்தானை பொறுத்தவரை இதுபோன்ற உச்சிமாநாடுகள் அதிக கவனத்தை ஈர்க்கும். எனவே அதன் அரசுக்கும் இது முக்கியம்” என்றார்.

இந்த உச்சி மாநாடு வெற்றிகரமாக நடந்தால், அது உலகளவில் பாகிஸ்தானின் நற்பெயரை மேம்படுத்தும் என்று முர்தாசா சோலாங்கி நம்புகிறார்.

“தேர்தல் முடிந்து சில மாதங்களே முடிந்துள்ள நிலையில், இதுபோன்ற ஒரு பலதரப்பு மாநாட்டை நடத்துவது பாகிஸ்தானுக்கு உண்மையில் பெருமைக்குரிய விஷயம். பொருளாதாரக் குறியீடுகள் சிறப்பாக இருப்பதால், இந்த நிகழ்வு தற்போதைய அரசாங்கத்திற்கு உண்மையில் உதவுகிறது.”

இந்தியா- பாகிஸ்தான் இடையிலான உறவு

இந்தியா, பாகிஸ்தான், சீனா, எஸ்சிஓ உச்சிமாநாடு, காஷ்மீர்

பட மூலாதாரம், @DrSJaishankar

படக்குறிப்பு, பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக வளாகத்தில் நடைபயிற்சி மேற்கொள்ளும் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

பாகிஸ்தானின் சில வட்டாரங்களில், இந்தியா குறித்த விவகாரங்கள் பாகிஸ்தானுக்கு முக்கியமில்லை என்றும், அது பாகிஸ்தான் அரசியலுக்கு இனி பொருந்தாது என்ற உணர்வு உள்ளதாகவும் கூறுகின்றன. ஆனால் சரத் சபர்வால் அத்தகைய கூற்றுகளை நிராகரிக்கிறார்.

“பாகிஸ்தான் இதைக் கடந்து செல்கிறது என்பது சரியான மதிப்பீடு அல்ல. சில நேரங்களில் இந்தியாவிலும்கூட பாகிஸ்தான் குறித்து ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு விவாதங்கள் எழாது. ஆனால் இந்த இரண்டு அண்டை நாடுகளும் ஒன்றுக்கொன்று புறக்கணித்துக் கொள்ள முடியாது. கடந்து செல்வது சாத்தியமில்லை. நிச்சயமாக, பாகிஸ்தானை பொறுத்தவரை இது உண்மையாக இருக்கக்கூடாது. ஏனென்றால் இந்தியாவின் பொருளாதாரம் 10 மடங்கு பெரியது மற்றும் அதன் பொருளாதார வளர்ச்சி விகிதம் வேகமாக உள்ளது. எனவே இருதரப்பு விவகாரங்களும் ஏதோ ஒரு வகையில் பொருந்தி இருக்கும்” என்கிறார்.

பாகிஸ்தான் உருவாக்கப்பட்டதில் இருந்தும், 1947இல் இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்தும் இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையிலான ராஜ்ஜீய வரலாற்றில் பகைமை நிலவுகிறது. 370வது பிரிவை ரத்து செய்வதற்கான இந்தியாவின் 2019ஆம் ஆண்டு முடிவுக்குப் பிறகு பதற்றங்கள் மேலும் அதிகரித்தன.

இரு நாடுகளும் எதிர்ப்பை வெளிப்படுத்த, தங்கள் தூதர்களைத் திரும்ப அழைக்க இது வழிவகுத்தது. காஷ்மீர் மற்றும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் போன்ற முக்கியப் பிரச்னைகளுக்குத் தீர்வு காணாமல், இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவிற்கு சாத்தியம் குறைவு என்பதை இரு தரப்பிலும் உள்ள அரசியல் பார்வையாளர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.

இரு நாடுகளுக்கும் இடையிலான நம்பிக்கையை மீட்டெடுக்க ஒரு வழியைக் கண்டுபிடிக்குமாறு பலர் வலியுறுத்துகின்றனர். எஸ்சிஓ உச்சி மாநாட்டில் ஒரு சுமூகமான கருத்துப் பரிமாற்றம்கூட, இந்தியா-பாகிஸ்தான் இடையிலான இறுக்கத்தைக் குறைப்பதற்கான முதல் படியாக இருக்கலாம்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு