ஸ்ரீலங்கன் விமான சேவையை விற்பனை செய்யும் திட்டத்தை கைவிட புதிய அரசாங்கம் ! on Wednesday, October 16, 2024
ஸ்ரீலங்கன் விமான சேவையை விற்பனை செய்யும் திட்டத்தை கைவிட இலங்கையின் புதிய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக, நிறுவனத்தின் புதிய தலைவர் சரத் கனேகொடவை மேற்கோள்காட்டி TTG Asia இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
நிறுவனத்தை அதிக இலாபம் ஈட்டும் விமான சேவையாக மாற்றுவதற்கு தேவையான மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்படும் என புதிய தலைவர் கனேகொட தெரிவித்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பல வருடங்களாக நட்டத்தை சந்தித்து வந்த நிலையில், அதில் ஒரு பங்குகளை கொள்வனவு செய்யவும் நிர்வகிப்பதற்கும் கடந்த அரசாங்கம் விலைமனுக்களை கோரியிருந்தது.
அந்த திட்டத்தின் கீழ், விமான நிறுவனத்தின் 51% பங்குகள் அரசாங்கத்திடம் இருக்க வேண்டும், மீதமுள்ள 49% முதலீட்டாளர்களுக்கு விற்கப்பட வேண்டும்.
அதற்கு, 6 தரப்பினர் தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தியிருந்தனர், ஆனால் அவர்கள் யாரும் முறைமையின் அடுத்த கட்டத்திற்கு தகுதி பெறவில்லை.
இதற்கிடையில், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஏப்ரல் 2022 முதல் மார்ச் 2023 வரையிலான காலப்பகுதியில் இலாபத்தை பதிவு செய்திருந்தது.
அதன் திரட்டப்பட்ட கடன் 1.2 பில்லியன் டொலர்களாகக் காணப்படுகிறது.
இந்நாட்டின் சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கு ஸ்ரீலங்கன் விமான சேவை மிக முக்கியமான காரணிகளில் ஒன்றாகும் என கனேகொட தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் 50% வீதமானவர்கள் ஸ்ரீலங்கன் விமான சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.
2024 இல் 2.3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை இலக்காகக் கொண்ட இலங்கை, 2030 ஆம் ஆண்டளவில் அந்த எண்ணிக்கையை 3 மில்லியனாக உயர்த்த திட்டமிட்டுள்ளது.