வளிமண்டலத் தளம்பல் நிலையால் கடல் பிரதேசங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை ! on Wednesday, October 16, 2024
இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் ஏற்பட்ட வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மழையுடன் கூடிய வானிலை குறைந்துள்ள போதிலும் கடற்பரப்பு அபாயகரமானதாகவே காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று (16) காலை 8 00 மணிக்கு வெளியிடப்பட்ட அறிவிப்பு நாளை (17) காலை 8.00 மணிவரை செல்லுபடியாகும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
மறு அறிவிப்பு வரும் வரை கடலில் பயணம் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மத்திய வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு – வடமேற்கு திசையில் வட தமிழகம், புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திரா கடற்கரையை நோக்கி நாளை நகரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அவ்வாறு ஆந்திர கடல் பகுதியை நோக்கி நகரும் போது மழை குறையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் விளைவாக, கொழும்பிலிருந்து காலி மற்றும் மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் கடல் அலைகள் 2.5 – 3.0 மீற்றர் உயரம் வரை மேலெழும்பக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
எனவே, கடலில் பயணம் செய்வோரும், மீனவ சமூகமும் புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் மறு அறிவித்தல் வரை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.